Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது
Posted By:sisulthan On 5/10/2009

ல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஓவ்வொருவருடைய ஒவ்வொரு செய்கையும் அவன் கவனத்திற்கு வராமல் போவதில்லை. செயல்களைச் செய்யும் போதே, அவை தானாக அந்தப் பக்கத்தில் பதிவாகி விடும். மலக்குகள் கணக்கு, நீதித் தீர்ப்பு நாளில் படிக்கப்படும் கணக்கு என்பது போல வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் அப்படியொரு கணக்குப் புத்தகம் இருப்பதை பெரும்பாலான மதங்கள் ஒப்புக் கொள்கின்றன.

மனிதன் போடும் கணக்கிற்கும் இறைவன் போடும் கணக்கிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மனிதன் பெரியது என்று நினைக்கும் விஷயங்கள், இறைவன் கணக்கில் மதிப்பில்லாதவையாக குறிக்கப்பட்டு இருப்பதும் உண்டு. மனிதன் ஒன்றுமில்லை என்று நினைக்கும் விஷயங்கள் இறைவனின் புத்தகத்தில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படுவதும் உண்டு. எனவே ஒரு விஷயத்தில் தன் பங்கை மனிதன் நிர்ணயிப்பதற்கும், அதே விஷயத்தில் அவன் பங்கு இவ்வளவென்று இறைவன்
தீர்மானிப்பதற்கும் இடையே பெருத்த வித்தியாசம் இருக்கிறது. மனிதன் தன் வாழ்நாளில் இத்தனை சாதித்தோம் என்று எண்ணி இறைவனிடம் எடுத்துப் போகும் கணக்கும், இறைவன் வைத்திருக்கும் மனிதனின் கணக்கும் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை.

மனிதன் எதையும் பெரும்பாலும் பணத்தால் அளக்கிறான். இறைவன் மனத்தால் அளக்கிறான். மனிதன் ஒன்றிற்கு எவ்வளவு செலவானது என்று பார்த்து மதிப்பிடுகையில், இறைவன் அது எத்தனை ஆத்மார்த்தமாய் செய்யப்பட்டது என்பதை வைத்து மதிப்பிடுகிறான்.

மனிதன் எத்தனை மணி நேரம் தொழுகையில் செலவாகி உள்ளது என்பதை வைத்து தன் இறைபணியை அளக்கையில், இறைவன் அதில் எத்தனை மணித்துளிகள் தன் மீது முழு ஈடுபாட்டுடன் இருந்தது என்பதை மட்டுமே எடுத்துக் கொள்கிறான்.

சதா இறைநாமத்தை ஜபித்துக் கொண்டு இருந்தும் மற்றவர்களிடம் கடுமையாகவும், நியாயமற்றும் நடந்து கொள்பவன் கணக்கை பாவக் கணக்காக எழுதும் இறைவன், தன்னை வணங்காவிட்டாலும் நேர்மையாகவும், தர்மசிந்தனையுடனும் வாழ்பவன் கணக்கை புண்ணியக் கணக்காகத் தன் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறான்.

இறைவன் எல்லாம் அறிந்தவன். செயலை அது செய்யப்படும் நோக்கத்தை வைத்தே அளப்பவன்..

கட்டு கட்டாக பணத்தை சக்காத் கொடுத்துவிட்டு தான் பெரிய இறை சேவை செய்து விட்டதாக ஒருவன் இறுமாந்திருக்க, அதே பள்ளிவாசலில் ஒரு மூலையில் உட்கார்ந்து பெரும்பக்தியுடன் மனமுருக இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பவன் செயலை அதைவிட மேன்மையானதாக இறைவன் நினைக்க வாய்ப்புண்டு. தானே பசியில் இருக்கும் போது தனக்குக் கிடைத்த உணவை இன்னொரு பசித்தவனுக்குப் பங்கிட்டு சாப்பிடும் செயலை பெரிய இறை சேவையாக இறைவன் கணக்கில் குறித்துக் கொள்வான் என்பது உறுதி.

நீங்கள் நல்லவனாக இருந்தால் இறைவனின் கணக்கில் உங்கள் இடம் உயர்விலேயே இருக்கும். உங்கள் செயல்கள் பலருக்குத் தீமை தருவதாக இருந்தால் உங்கள் இடம் இறைவனின் கணக்கில் தாழ்ந்தே இருக்கும்.

ஈகோ உள்ள மனிதர்களுக்கு புகழ்பாடுவது ஆனந்தத்தை அளிக்கலாம். ஆசைகள் உள்ள மனிதனுக்குப் பணமும், பொருளும் கொட்டிக் கொடுப்பது ஆனந்தத்தை அளிக்கலாம். ஆனால், ஈகோ இல்லாத இறைவனை, விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை இவை திருப்திப்படுத்தாது. எனவே சக்காத் கொடுத்தும், தொழுதும் கடவுளருளைப் பெற்று விடலாம் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விட வேண்டாம். மனிதரின் ஆதரவு பெற இது போன்ற செயல்கள் பலன் தரலாம். ஆனால் இறைவனை இப்படிப்பட்ட தந்திரங்களால் ஏமாற்றி விட முடியாது.

இறையருள் வேண்டுபவர்களே! உங்கள் இதுநாள் வரையிலான செயல்களை மறு மதிப்பீடு செய்யுங்கள். உங்கள் கணக்கு இறைவன் கணக்கோடு ஒத்துப் போகுமா? ஒத்துப் போகாது என்றால் இனியாவது உங்கள் அளவுகோல்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் சொற்களும், செயல்களும், வாழ்க்கையும் அந்த அளவுகோல்களில் மேன்மையாக இருக்கட்டும். அப்படி வாழ்வீர்களேயானால் வாழ்க்கையின் முடிவில் உங்கள் கணக்கையும், இறைவன் கணக்கையும் ஒப்பிடும் போது உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்காது.

 




Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..