Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அரை(றை)ப்பங்கு
Posted By:sisulthan On 1/28/2009

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார்.

பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவர் வண்ணான் மடிப்புடன் துணிகளை அடுக்கிவைப்பதை வழமையாக்கியிருக்கிறார். அடுத்த படுக்கைக்காரர் ஊருக்குப் போவதற்காக வாங்கி வந்த பெரிய பெட்டியை வைக்க இடமின்றி அந்த இடைப்பட்ட இடத்தில் வைத்துவிட்டு இவரது துணிகளை இவருடைய கட்டிலின் மேல் வைத்திருக்கிறார். நான்கு நபர்கள் பங்குபோட்டுக்கொள்ளும் அறையில் இது எனது இடம் என்ற உரிமை கொண்டாட முடியாத நிலையில் நண்பர் இருந்தபோதும், தன்னிடம் ஒரு வார்த்தை அனுமதி கேட்காமல் தான் புழங்கிய இடத்தைப் பெட்டியால் மற்றவர் நிறைத்ததை இவரால் அப்போதைக்கு தாங்கிக்கொள்ள இயலவில்லை. வேறு வழியில்லாமல் அமைதியாக தனது பெட்டியில் கிடைத்த இடத்தில் துணிகளை அடைத்துவிட்டு வந்திருக்கிறார்.

அறைப்பங்கீடு தொடர்பான இப்படி ஏதாவது நிகழ்வை வாரத்தில் இரண்டு மூன்று முறைகள் கேட்கவேண்டியதாகி இந்த உரையாடல்களும் துபாயின் வாழ்க்கை முறைகளுள் ஒன்றாகிப்போனது. இப்படிப்பட்ட சகிப்புத் தன்மையை மனதில் ஏற்கச் செய்யும் அற்புதமான அந்த அறை வாழ்க்கையை துபாயில் 'பெட் ஸ்பேஸ்' என்பார்கள்.

எழுபதுகளின் இறுதியிலிருந்தே இந்த 'பெட் ஸ்பேஸ்' என்னும் படுக்குமிடவாழ்க்கை முறை துபாயில் இருந்தது, ஆனால், அது நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் தங்குமிடங்களிலும், தொழிலாளர் முகாம்களில் மட்டும் இருந்தது. வெளியிலென்றால் நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுப்பார்கள், அதற்கான கால அவகாசம் கிடைத்தது. இப்பொழுது அப்படியல்ல; அறிந்தோர், தெரிந்தோர், நண்பர்கள், ஒரே நிறுவனத்தில் பணிபுரிவோர் இவர்களிடையே மட்டும் புழங்கியிருந்த வழமை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அறிமுகமில்லாத புதிய மனிதர்களுடனும் அறையைப் பங்குபோட்டுக்கொள்ளும் அளவிற்கு மக்களை கட்டாயப்படுத்துகிறது.

போதிய வருமானம் இருந்தும் தனது வசதிகளைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு வாழ்ந்து அதிகமான பணத்தைச் சேமிக்கலாம் என்னும் எண்ணத்தில் இப்படி படுக்குமிடங்களைத் தேடுபவர்களின் சதவீதம் குறைவானது. வேறு வழியில்லாமல் இந்த கட்டாய வாழ்க்கைமுறையை ஏற்றிருப்போரே அதிகமான சதவீதம் உள்ளனர்.

பிரம்மச்சாரியாக துபாய்க்கு வருகின்ற நடுத்தர வர்க்கத்தினர் முதலில் தேடுவது அறைப்பங்கீட்டைத்தான். செய்தித்தாள் விளம்பரங்களில் படுக்குமிடத்திற்கான விளம்பரம் வந்திருந்தால் அது உயர்நடுத்தரவர்க்கத்திபரிடம் இருந்துதான் வந்திருக்கிறது என திட்டவட்டமாகச் சொல்லலாம். செய்தித்தாள் விளம்பரங்களில் பெரும்பாலும் ஒரு அறையை இருவர் அல்லது அதிகபட்சமாக மூவர் பங்குபோட்டுக்கொள்வதான விளம்பரங்கள் வெளிவரும். இது ஒருவகையான படுக்குமிடம். இந்த வகையில் சிரமங்கள் அத்தனை இருக்காது. ஒரு அறையை இரண்டு பேர் பங்கிட்டுக்கொள்வதென்பது துபாய் பிரம்மச்சாரிய வாழ்க்கையில் ஆடம்பரமென்றால் அது பொய் கிடையாது. இருவரே அறையில் இருப்பதால் வாடகைக்கான தொகையும் அதிகமாகவே இருக்கும். அத்தனை தொகையைக் கொடுத்து வாடகைக்கு எடுக்கும் அளவிற்கு வசதியிருக்கும் உயர்நடுத்தரவர்க்கத்திடம் வாகன வசதி இருக்கும், கணினி, அகலப்பாட்டை, அறைத்திரையரங்கம் (ஹோம் தியேட்டர்), ஒலிஒளி அமைப்பு, தொலைக்காட்சி என சகல வசதிகளுடன் எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைமுறை உயர்நடுத்தரவர்க்கத்து அறைப்பங்கீடு.

இதற்கு சற்றே மாறுபட்டது நடுத்தரவர்க்கத்தினரின் அறைப்பங்கீடு. மேற்சொன்ன பங்கீடுகள் புதிய அடுக்குமாடிக்குடியிருப்புகளில் இருக்குமென்றால், நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கை பழைய கட்டடங்களில் ஒருபடுக்கையறைக் குடியிருப்பின் கூடத்தை இன்னொரு அறையாகப் பாவித்து அதை இரண்டுபேருக்கு வாடகைக்குவிட்டு, முறையான அறையில் இரண்டு பேர் தங்கிக்கொள்ள நான்கு பேராக மொத்தக் குடியிருப்பையும் பகிர்ந்துகொள்ளும் வழமை. இந்த வகையில் இருக்கும் ஒரே சிக்கல் குளியலறைப் பிரச்சனைதான். தங்கியிருக்கும் நால்வருக்கும் அலுவலக நேரம் ஒரே சமயத்தில் இருக்குமானால், அவர்களுக்குள்ளாகவே குளியலறை நேரத்தைப் பங்குபோட்டுக்கொண்டு அவரவர் நேரத்தில் அவரவர் சென்று காலைக்கடன்களை முடிக்கவேண்டியிருக்கும். இந்த வகைப் பங்கீட்டிற்கு புதியவரை அனுமதிக்கும் முன் கேட்கப்படும் கேள்விகளுள் முதல் கேள்வி, 'வேலை நேரம் எப்போது துவங்குகிறது?' என்பதுதான். அதன் பிறகே புதியவருடன் அரையைப் பங்கிட்டுக்கொள்வதா வேண்டாமா என்பதை மற்றவர் முடிவு செய்வர்.

இன்னொரு சிக்கலாக, மதிய நேரத்தில் மூடப்பட்டு மாலைவேளையில் திறக்கும் கடைகளில் வேலை செய்வோரை புதிய அறைத்தோழராக ஏற்பதில் பலருக்கு உவப்பில்லை. அதற்கான காரணம் சற்றே வித்தியாசமானது ஓய்வுநேரமான மதிய நேரத்தில் இவர் மட்டும் அறைக்கு வந்து ஓய்வெடுப்பார், கோடைக்காலங்களில் குளிர்மியை இயக்காமல் அறையில் இருக்க முடியாது. இரண்டு மணிநேர ஓய்வென்றால் இரண்டுமணிநேரம் குளிர்மி இயங்கும். கோடையில் நாளொன்றிற்கு இரவில் இயங்குவதல்லாமல் பகலிலும் இயங்குவதால் மற்றவர்களுக்கு செலவாகும் மின்சாரத்தை இவர்களுக்கு அதிகமாகச் செலவாகும். அதிக மின்சார உபயோகம் என்பது அதிகச் செலவு.

இப்படியான இரண்டு வகைகளுடன் மூன்றாவதாக இயங்கும் அறைப்பங்கீடு குறித்த விவரங்கள் சிலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் உண்டாக்கலாம். முதலாவதாக இந்த மூன்றாவது வகை அறைகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலோ, பழைய கட்டடடங்களிலோ இருப்பதில்லை. 'வில்லா' என்றும் 'காம்பௌண்ட்' என்றும் அவரவர் புரிதலுக்கேற்ப அழைக்கப்பட்டு கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடங்களில் இருக்கும் தனி வீடுகளில் இருக்கும் அறைகளில்தான் இயங்குகின்றன. ஒரு வில்லாவில் இருக்கும் ஆறேழு அறைகளில் ஒன்றை யாரேனும் ஒருவர் வாடகைக்கு எடுப்பார். அவருக்குத் தோதுவான, அவரது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களாகப் பார்த்து அறைக்குச் சேர்ப்பார். ஒரு அறையில் குறைந்தபக்கமாக ஆறு நபர்கள் இருப்பார்கள். அதிகபக்கமாகச் சொல்வதென்றால் சில அறைகளில் பத்துக்குமேல் என்று மட்டும் சொல்லலாம். அநேகமாக படுக்கைகள் இரட்டை அடுக்கு கொண்டதாக இருக்கும். மேலே ஒருவர் கீழே ஒருவர் என்றும் இவர்கள் இறங்கி நடந்துபோக மட்டுமே இடையில் இடம் இருக்கும் என்பதாகவும் படுக்கை அமைப்புகள் இருக்கும்.

அறைக்குள் நுழைந்தால் 'வசதி' என்னும் வார்த்தை பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்காது. சில அறைகளில் சுவற்றை ஒட்டி போடப்பட்ட படுக்கைக்கு சுவரே எல்லாமுமாக ஆணிகள் அடிக்கப்பட்டோ ஒட்டிவைக்கப்பட்டோ பைகள் பைகளாக தொங்கிக்கொண்டிருக்கும். ஒரு பையில் சோப்பு, சீப்பு, கண்ணாடி இத்தியாதிகள், அடுத்த பையில் தேவைப்படும் காகிதங்கள், சிலருக்கு இன்னொரு பையில் மாத்திரை மருந்துகள் என்று அவரவர் தேவைக்கேற்ப பைகள்.

கிடைத்திருக்கும் ஆறடிக்கு இரண்டரையடி படுக்கைக்குள்ளாகவே 'ப' வடிவத்தில் மரத்தில் தாங்கி செய்து அத்னைத் திருப்பிப்போட்டு படுத்தால் கால்களை நுழைத்து நீட்டிப் படுக்கவும் எழுந்து அமர்ந்தால் பத்மாசனமிட்டு அதனை மேசையாகவும் உபயோகிக்கும் சிலரும் உண்டு. அநேகமாக எல்லா படுக்கைகளும் திரையிட்டு வைக்கப்பட்டிருக்கும். படுக்கைக்குள் ஏறி திரையை இழுத்துவிட்டுக்கொண்டால் ஆறடி நீளம் இரண்டரை அடி அகலம் மூன்றடி உயரமுள்ள கனசெவ்வகத்துக்குள் தனிமைச் சுதந்திரம் கிடைக்கும்.

இந்த இடங்களில் வசிப்போர்க்கு தலையாயப் பிரச்சனை குளியலறைப் பிரச்சனைதான். வாடகைக்கு எடுக்கப்பட்ட அறையில் பத்துப் பேர் தங்கட்டும் எட்டுப் பேர் தங்கட்டும் அதெல்லாம் வீட்டுக்காரருக்குத் தெரியாது, ஒரு அறைக்கு ஒரு குளியலறைதான். அதுவும் நான்கடிக்கு நான்கடி கிடைத்தால் பெரிய விடயம். அருகருகில் இருக்கும் குளியலறைக்கு பூட்டு போடப்பட்டு சாவியை அவரவர் அறையில் வைத்திருப்பார்கள். ஒரு ஆளுக்கு இருபது நிமிடம் என்னும் அடிப்படையில் குளியலறையை காலையில் உபயோகித்துக்கொள்ளலாம். பத்துப் பேர் தயாராகவேண்டுமென்றால் இருநூறு நிமிடங்கள், மூன்று மணி நேரம் இருபது நிமிடங்கள், கடைசி நபர் காலையில் எட்டு மணிக்கு குளித்து முடிக்கவேண்டுமென்றால் முதல் நபர் விடியற்காலை ஐந்து மணிக்கு முன்னதாகவே தனது காலைக்கடனை முடிக்கத் துவங்கியிருக்கவேண்டும். ஒருவேளை ஏதோ ஒரு காரணத்தால் தனது நேரத்தைத் தவற்விட்டவருக்கு இடையில் நுழையும் தகுதியெல்லாம் கிடையாது. கடைசி நபர் குளித்து முடித்த பிறகே இவர் போக முடியும். குளியலறை நேரம் ஆறுமணிக்குக் கிடைத்து எட்டு மணிக்கு வேலைக்குச் செல்பவர்கள் ஒன்றரை மணி நேரத்தை வேறு ஏதாவது காரியத்தில்தான் கழிக்கவேண்டும். இதனாலேயே வேண்டிய நேரத்திற்கும் முன்னதாகவே சிலர் அலுவலகத்திற்குப் புறப்படுவதும் உண்டு.

சில அறைகளில் சேர்ப்பதற்கு முன்னரே சொல்லப்படும் சட்டதிட்டங்களுள் எத்தனை பெட்டிகள் வைத்துக்கொள்ளலாம் என்பது அதிமுக்கியமான ஒன்று. ஒரு நபருக்கு ஒரு பெட்டியும் ஒரு கைப்பெட்டியும் மட்டுமே அனுமதிக்கப்படும் அறைகளும் உண்டு. இரட்டை அடுக்குப் படுக்கையில் கீழிருக்கும் படுக்கையின் கீழுள்ள தரைதான் அந்த இரண்டு படுக்கையிலும் தங்கும் நபர்களின் பெட்டியை வைக்கும் இடம். இந்த அறைகளின் பூதாகரமான பிரச்சனை மூட்டைப் பூச்சிகள். அழுக்குப் படிந்த படுக்கை விரிப்புகள் தலையணைகள் இவற்றை வைத்திருப்பதை அனுமதிக்கமாட்டார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஈரத்துணியுடன் அறைக்குள் வருவதை யாரும் அனுமதிக்கமாட்டார்கள். ஈரப்பதமும் அழுக்கும் மூட்டைப் பூச்சிகளின் பிறப்பிடம். தப்பித் தவறி மூட்டைப்பூச்சி வந்து விட்டாலோ, யார் அதனைக் கொண்டு வந்தார் அல்லது உண்டாக்கினார் என்பதில் வாய்த்தகராறு முற்றி ஒருவருடன் ஒருவர் பேசாதிருக்கும் அளவிற்கும் பிரச்சனைகள் செல்ல வாய்ப்பு உண்டு.

இப்படியான இடுக்கு அறைகளிலும் மடிக்கணினி உபயோகமும் அங்கும் இங்குமாக உண்டு, ஆனால், பெரும்பாலும் அது குறுவட்டுகளில் திரைப்படம் பார்ப்பதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பது ஆச்சரியப்படவைக்கும் உண்மை. குறைந்த வருமானம் உள்ளவர்களின் ஒரே புகலிடமாக இன்று வரையில் இந்த வில்லாக்கள் இருந்து வருகின்றன.

சில வில்லாக்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள்களில் காலையில் நுழைந்தால் குடியிருப்புக்குள் வந்திருக்கிறோமா அல்லது ஏதோ ஆற்றங்கரை குளத்தங்கரைக்கு வந்திருக்கிறோமா என்னும் சந்தேகம் வந்துவிடும். குறுக்காகக் கட்டப்பட்ட கயிற்றில் முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டிவைத்து நுரை தடவி சவரம் செய்துகொண்டிருப்பார் ஒருவர். இன்னொருவர் அப்போதுதான் அலசிப் பிழிந்த துணிகளைக் காயப்போட அங்கு வருவார். கொடிகட்டி வைத்திருப்பது துணி காயப்போடவா கண்ணாடி மாட்டி சவரம் செய்யவா என்னும் அங்கலாய்ப்போடு அவர் உரத்த குரலில் அருகில் இல்லாத நபருடன் சத்தமாக பேசிக்கொள்வார். துணிகள் காயாதபோது அதில் கண்ணாடியைத்தொங்கப்போடுவது என்ன தவறு என்று சவரம் செய்பவரும் பக்கத்தில் இல்லாதவருடன் உரத்த குரலில் பேசுவார்.

பக்கத்தில் யாரோ இருவர் இறைச்சியை வெட்டிக்கொண்டிருப்பார்கள். இரண்டடி இடைவெளியில் நான்கைந்து அடுப்புகளில் ஏதாவது வேகின்ற வாசம் கலவையாக நாசியைத் தாக்கும். இரண்டு மூன்று நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வசிக்கும் வில்லா என்றால் சுவாரசியமான வேதனைக்குக் குறைவிருக்காது. எண்ணெய் வாடையும் இறைச்சி வாடையும் தூக்கலாக இருக்கும் பாக்கிஸ்தானி சமையலும், கடுகு, நல்லெண்ணை, கறிவேப்பிலை இத்தியாதிகளுடன் நமது உணவின் வாடையும் கலவையாகத் தாக்கும்போது 'பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை' கற்பனையெல்லாம் பஞ்சாகப் பறந்துவிடும். பத்து நிமிடம் இந்தக் கலவையான வாசனையை நுகர்ந்தால் அதன் பின்னர் இரண்டு மனி நேரத்திற்கு எந்த உணவையும் சாப்பிட முடியாத அளவிற்கு குமட்டல் இருக்கும். பதினோறு மணியளவில் தண்ணீர் வருவது நின்று போகலாம் என யாரேனும் புண்ணியவான் புரளியைக் கிளப்பிவிட்டால், தண்ணீர்ப்பஞ்சத்தில் ஆட்டம் கண்ட சென்னைவாசிகளையும் மிஞ்சும் வண்ணம் அவசாவரசமாக வேலைகளை முடிப்பதோடு விடுமுறை நாளில் இப்படி தண்ணீரை நிறுத்தும் வீட்டுக்காரரை வாயார வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள்.

எல்லாரும் ஒவ்வொரு மாதமும் வாடகை தரும்போது கூடியவிரைவில் நல்ல வில்லாவாக தேடிப்போகவேண்டும் என்றுதான் நினைத்துக்கொள்வார்கள், அந்த நினைப்பு பிரசவ வைராக்கியத்தை விடவும் பூஞ்சையானது.

துபாய் என்றவுடன் நினைவில் தோன்றும் விண்ணுயர் கோபுரங்கள் ஒருபுறம் என்றாலும், தேவைக்கும் குறைந்த வருமானத்தில் பிழைப்பு தேடி இங்கு வந்து இப்படி வாழும் அறைப்பங்கீடு வாழ்க்கையும் துபாயில் உண்டு. இது யாரும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கைமுறை அல்ல. ஒவ்வொருவரும் வரும்போது ஆயிரம் கனவுகளுடன் வசதியான வாழ்க்கையை எண்ணித்தான் வருகின்றார்கள். பிறகு மெதுவாக யதார்த்தத்திலிருந்து விலக இயலாமல் அதனை ஏற்று தனது வருமானத்தை எதிர்நோக்கி இருக்கும் குடும்பத்தாரின் நலனுக்காக தங்களது அடிப்படை வசதிகள் குறைந்திருப்பதையும் பொருட்படுத்தாமல் ஆறடிக்கு இரண்டரை அடிக்குள் தங்கள் எல்லையை அமைத்துக்கொண்டு கூட்டுக்குள் வாழ்கிறார்கள்.

இங்கே குறைக்கப்பட்ட இவர்களுடைய வசதிகள் தாயகத்தில் இவர்களுடைய உறவுகளுக்கு மூன்று வேளைக்கு வயிறாற உணவை மட்டுமே கொடுக்குமென்றாலும் அதிலும் மகிழ்வைக் காணும் இந்த அறைப்பங்குவாசிகளை தியாகிகள் என்று அழைத்தாலும் தவறில்லை.



General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..