Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
இனி துபை வாழ்வு கடினம்தான்
Posted By:peer On 11/23/2008

இனி துபை வாழ்வு கடினம்தான்-ஆறு காரணங்கள் துபைதான் நாம் வாழ்வதற்கான சிறந்த இடம் என்று இது நாள் வரை நினைக்கத் தோன்றியது. ஊருக்குப் போனால் கூட வீட்டுக்கு வெளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் துபை மாதிரி வருமா என்று மனது நினைக்கும். ஆனால் துபையில் முளைக்கும் புதிய புதிய சட்டங்கள் இனி இங்கு வாழ்வது கடினமே என்ற மனநிலையையே பலருக்கும் தந்திருக்கிறது என்பது மிகையில்லை.

இங்கு வாழ்வது ஏன் சிரமமாகி விட்டது என்பதற்கு குறிப்பான ஆறு காரணங்கள்.

1. சாலிக் (SALIK)
 
துபையின் மின்னனு சுங்க வரி வசூலிப்புத் திட்டம். 'திறந்து விடப்பட்ட' அல்லது 'இடைஞ்சலற்ற' என்ற பொருள் தரக்கூடிய 'சாலிக்' என்ற பெயரில் அழைக்கப்படும் இம்முறை 2007ம் ஆண்டு நகரில் உள்ள சாலைப் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அறிமுகமானது. ஆனால் மனித, வாகன விகிதத்தில் உலகத்திலேயே அதிக வாகனங்களைக் கொண்ட இந்நாட்டில் இது பெயருக்குரிய பயனைத் தரவே இல்லை.

நகரின் நான்கு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள இம்மின்னனு முறையில் ஒரு தடவை ஒரு இடத்தைக் கடக்க நான்கு திர்ஹம் (இன்றைய மதிப்பில் சுமார் ரூ50)எடுத்துக் கொள்ளும். ஒரே சாலையிலுள்ள இரு சாதனங்களை ஒரு மணி நேரத்துக்குள் கடந்தால் ஒரு முறை மட்டுமே எடுக்கும்.

இதற்காக முன்பணம் செலுத்திப் பெற்ற அட்டையை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டி வைக்க வேண்டும். அட்டையை ஒட்டாது இப்பகுதியைக் கடந்த வாகனங்களுக்கு முதல் நாள் 100திர்ஹம் தண்டணை, அடுத்த நாளுக்கு 200திர்ஹம், மூன்றாம் நாளுக்கு 400திர்ஹம் தண்டனை. ஒட்டிய அட்டையில் அம்மின்னனு சாதனம் எடுக்க தொகை இல்லையென்றால் ஒவ்வொரு முறை வாகனம் கடந்ததற்கும் 50திர்ஹம் தண்டனை.

ஒரு நாள் வேலைக்குச் சென்று வர இம்முறைக்கு நான் குறைந்தது 16திர்ஹம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் கூடுதலாக 80கிமீ பயணம் செய்ய வேண்டும்.

2.வாகனம் நிறுத்த வரி

சாலிக் கொடுத்த பின்பும் எப்போதும் குறையாத வாகன நெரிசலில் வந்தாலும், ஒரு நிறுவனத்தின் முன்போ, ஒரு கடைக்கு முன்போ, ஒரு நண்பரின் வீட்டின் முன்போ சிறிது நேரம் வாகனத்தை நிறுத்த பணம் செலுத்த வேண்டும். வாகனம் நிறுத்த காசு போட வேண்டிய இயந்திரங்கள் நகரின் எல்லா பகுதியிலும் நிறுவப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு திர்ஹம்கள். இரண்டு மணி நேரமென்றால் ஐந்து திர்ஹம்கள். எவ்வளவு நேரம் வாகனம் நிறுத்த நேரிடும் என்பதைக் கணித்து முன்பணமாக செலுத்த வேண்டும். பணம் செலுத்திய குறிப்பிட்ட கால அளவை விட ஐந்து நிமிடம் தாமதித்தாலும் 100திர்ஹம் தண்டனை.

மாலை 9மணி முதல் காலை 8மணி வரை வரியில்லை. ஆனால் அந்நேரத்தில் வாகனம் நிறுத்த ஒரு இடம் கிடைக்க நீங்கள் நான்கு மணி நேரம் சுற்ற நேரிடும். இடம் கிடைக்காமலும் போகலாம்.

3. வாடகை மகிழுந்துகள் (TAXI)

காலையிலோ மாலையிலோ அலுவலக நேரத்தில் ஒன்று கிடைக்குமென்பது சற்றேறக்குறைய இயலாததுதான். இங்கு 3200 வாடகை மகிழுந்துகள் ஓடினாலும் இந்நேரங்களில் காணக் கிடைக்கும் ஒன்று பயணியுடன் இருக்கும் அல்லது காணவே முடியாது.

வாடகை மகிழுந்து ஓட்டுனர்கள் பயணிகளுக்கு நிறுத்த மறுத்தால் அபராதம் செலுத்த நேரும். எனினும் ஆளற்ற வாடகை மகிழுந்து ஒன்றைக் கண்டு, நீங்கள் கையை ஆட்டி வந்து நின்றாலும் உங்கள் போகுமிடத்தை சொன்ன பின் தலையை ஆட்டி விட்டு போய் விடுவர்.

தாறுமாறாக ஓட்டுபவர்களும், போகும் வழியறியாத ஓட்டுனர்களும் உண்டு.

4. VAT மதிப்புக் கூடுதல் வரி

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அமீரகத்தில் இதை அமல் படுத்த வழிமுறைகள் யோசிக்கப்பட்டு பல கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. சரியான நாள் குறிக்கப்படவில்லையாயினும் மற்ற வளைகுடா நாடுகளோடு இங்கும் தொடங்கப்படும்.

வளைகுடா நாடுகளில் முதலில் ஐந்து சதவீத மதிப்புக் கூடுதல் வரி அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இது நேரடி வரி விதிப்பு இல்லையென்றாலும் அதன் சுமை கடைசியில் வாங்குவோர் தலையில்தான்.

துபையின் முக்கிய கவர்ச்சியே வரி அற்ற நாடு tax-free என்பதுதான். எனவே எத்தகைய மறைமுக வரியும் மக்களின் பணத்தையும் மகிழ்ச்சியையும் அழிக்கும்.

5. தங்குமிடம்

தொடர்ந்து உயரும் வாடகை துபைகாரனின் மாறாத குற்றச்சாட்டு. அமீரகத்தில் இதைப் பற்றி பேசாதவர்களே இல்லை. வாடகை உயர்வு 7 சதவீதம்தான் இருக்கலாம் என்ற கட்டுப்பாடு இருந்தாலும் புதிய கட்டிடங்கள் மிக கூடுதலாக வாடகையை அறிவிக்கின்றன.

வீட்டு உரிமையாளருக்கு வாடகை உயர்த்தக் கட்டுப்பாடு அதனால் இனி வீட்டிலுள்ள வாகன நிறுத்துமிடங்களுக்கு (for Free Parking) ஆண்டு வாடகை 7500 திர்ஹம்கள்.

ஒரு வீட்டுக்கு ஒரு குடும்பம் என்ற புதிய முறை பல குடும்பங்களுக்கு கட்டுப்படியாகப் போவதில்லை. குடும்பமின்றி தனித்து வாழ்பவர்பாடோ (Bachelors) அதை விட திண்டாட்டமாகும்.

6. கலாச்சார மாற்றமும் அமீரகப்படுத்தலும்

பெருகி வரும் அனாச்சார அசிங்கங்களும் குற்றங்களும், அருகி வரும் நல்லொழுக்கமும் பண்புகளும் நம் நாடு தேவலாம் அதனால் இங்கிருந்து போய் விடுவதே நல்லதென நினைக்கச் செய்கிறது.

தனியார் துறையிலும் அமீரகக் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற திட்டம் முலம் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகளும் மிகவும் குறைந்து விட்டது.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..