Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சிறுபான்மையினர் உரிமைகள் பறிபோன வரலாறு
Posted By:Mohamedris On 5/1/2007

lasix

lasix ttvmerwestad.nl
சிறுபான்மையினர் உரிமைகள் பறிபோன வரலாறு
நெல்லை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை

நெல்லையில் வான்முகில் அமைப்பு சார்பில் சிறுபான்மையினர் உரிமைகளும், சச்சார் கமிட்டி அறிக்கையும் என்ற தலைப்பில் 10.3.2007 அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. பாளையங் கோட்டை அருண்ஸ் மகாலில் நடந்த கருத்தரங் கிற்கு சுப. சீத்தாராமன் (பாளை மண்டல தி.மு.க. தலைவர்) தலைமை தாங்கினார். வான்முகில் நிறுவன இயக்குநர் எம்.ஏ. பிரிட்டோ வரவேற்புரை யாற்றினார். சம்சுல்து ஹா ரஹ்மானி (மாநிலச் செயலாளர் தவ்ஹித் அமைப்பு) உரையினைத் தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறுபான்மையினர் உரிமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பேராசிரியர் அ.மார்க்ஸ், சச்சார் குழு பரிந்துரைகளை விரிவாக விளக்கி உரையாற்றினார். கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரை:

பெரும்பான்மை - சிறுபான்மை என்ற கருத்தாக்கம் - மதவாத சக்திகளால் தவறான கண்ணோட்டத்தில் முன் வைக்கப்படுகிறது. ஒரு ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மை வாக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பதைத் தீர்மானிக்கின்றன. அந்தப் பெரும்பான்மையைக் காட்டும் வாக்குகளில் சிறுபான்மையினரின் வாக்குகளும் அடங்கியிருக்கின்றன. பெரும்பான்மையின் அடிப்படையில் செயல்படுவது தான் ஜனநாயகம் என்று முடிவு செய்து விட்டால், பெரும்பான்மையினராக வாழும் ஏழைகளை, அவர்கள் ஏழைகளாகவே இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொருள் சொல்ல முடியுமா? ஒரு ஜனநாயகத்தில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற சொல்லாடல்களை முன் வைக்கப்படுவதன் நோக்கமே அனைத்துப் பிரிவினரும் சமத்துவமாகக் கருதப்பட வேண்டும் என்பதுதான். பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்று கூறிக் கொண்டு, இதுவே இந்துக்களின் தேசம் என்று பேசுவது, ஜனநாயகத்துக்கே எதிரானது.

உண்மையில் பெரும்பான்மையாகக் கட்டமைக்கப்படும் இந்து சமூகம் எனும் கற்பித்ததில், சிறுபான்மையின் ஆதிக்கமே உயிர்த் துடிப்போடு பெரும்பான்மையை இயக்கி, சிறுபான்மைக்கு, பெரும்பான்மையை சமூக, கலாச்சார அடிப்படையில் ஒடுக்கி வருகிறது. பார்ப்பனர்கள் என்ற மைனாரிட்டிப் பிரிவுதான் இவர்கள் கூறும் பெரும்பான்மை இந்துக்களுக்கு கலாச்சாரத்தை, அரசியலை, நிர்ணயிக்கும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கோரத்தாண்டவமாடுகிறது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மதச் சிறுபான்மையினர். இவர்கள் பார்ப்பனியம் உருவாக்கிய சாதிய சமூக அமைப்பிலிருந்து, பல தலைமுறைகளுக்கு முன்பு தங்களை விடுவித்துக் கொண்ட, இந்த மண்ணின் மைந்தர்கள்.
இதில் - கிறிஸ்துவத்தை பார்ப்பனியம் ஓரளவு உள்வாங்கிக் கொண்டது. இவர்களின் வழிபாடும், மதமும் வேறாக இருந்தாலும், இந்து சமூக அமைப்பின் சாதியத்தை மட்டும் விடவில்லை. உலகம் முழுதும் பரவியுள்ள கிறிஸ்துவ மதம், இந்தியாவில் மட்டும் சாதி என்ற அடையாளத்தையும், தன்னுடன் சேர்த்துக் கொண்டு நிற்கிறது.
இஸ்லாமியர்களைப் பொருத்தவரை வட மாநிலங்களில், தலித் இஸ்லாமியர்கள், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் என்ற அமைப்புகள் வந்துவிட்டன. ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் இஸ்லாம் சாதியை ஊடுருவ விடாமல் ஓரளவுக்கு தடுத்து வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இதன் காரணமாகத்தான், அண்மையில் வெளிவந்துள்ள இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கான ராஜேந்திர சச்சார் குழு, தலித் முஸ்லீம்களைப் பற்றி தனியே ஆய்வுகளை நடத்தியிருக்கிறது. இங்கே தவ்ஹீத் அமைப்பைச் சார்ந்த தோழர் குறிப்பிட்டதைப் போல் இதை குறையாகப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. இஸ்லாம் சாதியை ஏற்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இஸ்லாமியர் நிலை பற்றி ஆராயும் சச்சார்குழு, வடநாட்டில், அவர்களிடையே நிலவும் சாதியை கவனத்தில் கெண்டிருக்கிறது சச்சார் குழு. இஸ்லாமியத்தைப் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட குழு அல்ல. மாறாக அது இஸ்லாமியர் நிலை பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு தான்.

பிறக்கும்போது - எல்லோரும் குழந்தைகள் தான். எந்த மத அடையாளத்தையும் சுமந்து கொண்டு, குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வருவது இல்லை. இது பகுத்தறிவுடன் சிந்திக்கும் எவருமே, ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து. ஆனால், சங் பரிவார் மட்டுமே, இதை ஏற்க மறுக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தத்துவ நூலாக கொள்கைப் பிரகடனமாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள கொள்கை நூலில் (Bunch of thoughts) அந்த அமைப்புக்கு தத்துவத்தைத் தந்த கோல்வாக்கர் இவ்வாறு கூறுகிறார்.

எந்த மனிதனும் ஒரு இந்துவாகவோ, முஸ்லீமாகவோ அல்லது கிறிஸ்துவனாகவோ பிறக்கவில்லை என்றும், ஒரு சாதாரண மனித உயிராகத்தான் பிறப்பதாகவும் சில மேதாவிகள் இன்று நமக்குச் சொல்கிறார்கள். மற்றவர்களைப் பொறுத்தவரை வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். ஆனால் ஒரு இந்துவைப் பொறுத்தவரை, அவன் தனது முதல் தகனத்தைத் தாயின் கருவறைக்குள் இருக்கும்போது பெறுகிறான். அவன் உடல் எரியூட்டப்படும்போது, அவன் தனது கடைசி தகனத்தை சந்திக்கிறான்.

ஒரு இந்துவின் வாழ்நாளில் அவன் பதினாறு தகனங்களை எதிர் கொள்கிறான். அதனால்தான் அவன் இந்துவாக இருக்கிறான். உண்மையில் தாயின் கருப்பையிலிருந்து வெளிவருவதற்கு முன்னரே நாம் இந்துக்களாக இருக்கிறோம். எனவே நாம் இந்துக்களாகவே பிறக்கிறோம். மற்றவர்கள் எல்லாம் பெயர் இல்லாத மனித உயிர்களாகப் பிறக்கின்றனர். பின்னர் சுன்னத் சடங்கு செய்யப்பட்ட பிறகு அல்லது ஞானஸ்தானத்திற்குப் பிறகு முஸ்லீம்களாகவோ, கிறிஸ்துவர்களாகவோ மாறு கிறார்கள் என்கிறார் கோல்வாக்கர். இது தான் சிறுபான்மையினர் பற்றிய ஆர்.எஸ்.எஸ். கருத்து.

இப்படி இந்துவின் பிறப்பை தாயின் கருப்பையிலேயே தீர்மானிக்கிறது பார்ப்பனியம். அதனுடைய நீட்சியாகவே, கருப்பையில் இந்துவாகிவிட்ட குழந்தை, அது பிறக்கும்போது, அது எந்த சாதியைச் சார்ந்த தாயின் வயிற்றிலே பிறக்கிறதோ, அந்த சாதிக்குரியதாகி விடுகிறது. உழைப்பை, அறிவை அங்கீரிக்காமல், பிறப்பை மட்டுமே அங்கீகரிப்பதுதான் பார்ப்பனியம். அதுவே இந்துமதம். இதைத் தான் கோல்வாக்கரும் உறுதி செய்கிறார்.
முஸ்லீம்களாவதற்கு சுன்னத்தும், கிறிஸ்துவர்களாவதற்கு ஞானஸ்தானமும் தேவை என்றும், காரணம், இவர்கள் பெயரில்லாமலே பிறக்கிறார்கள் என்றும், பழித்துரைக்கும் கோல்வாக்கரைப் பார்த்து நாம் கேட்கிறோம், கருவிலே இந்துவாகிவிடும் குழந்தைக்கு, பிறகு காயத்ரி ஓதி ஏன் பூணூல் போடுகிறீர்கள்? நாமம் எதற்கு? விபூதி எதற்கு? கருவிலே இந்துவாகத் தீர்மானிக்கப்பட்ட குழந்தை, பிறந்த பிறகு இந்துக்கள் அனைவரும் சமம் என்ற சமத்துவம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தானே? பார்ப்பனியத்துக்கு அடிமையாகவே - ஒவ்வொரு இந்துவும் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ வேண்டும் என்பதற்குத் தானே, இந்த ஏற்பாடுகள்?

இப்போது - இந்தியா ஒரு நாடு என்றும், இந்த நாட்டில் வாழ்வோர் அனைவரும் இந்தியர்கள் என்றும், இந்தியாவை எதிர்ப்பதோ, இந்தியன் என்பதை ஏற்க மறுப்பதோ தேசத் துரோகம், தேச விரோதம் என்று இங்கே ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியன் அல்ல என்றால், அவர்களை தேச விரோதிகள் என்கிறார்கள். இதற்காகவே - தேசப் பாதுகாப்பு சட்டத்தை எல்லாம் வைத்திருக்கிறார்கள். அதுவும் - தமிழ்நாட்டில் நடக்கும், கலைஞர் ஆட்சி, இந்த தேச பக்தியில் முதல் வரிசையில் இடம் பிடிக்க, கடுமையாகப் போட்டிப் போட்டுக் கொண்டு நிற்கிறது. பார்ப்பனர்களின் பூணூலில் கைவைத்தால், பெரியார் தொண்டர்களாக இருந்தாலும் அவர்கள் தேச விரோதிகள்தான் என்று தோள் தட்டி, தொடை தட்டி நிற்கிறது. பூணூலை அறுத்தவர்கள் மீது தேச விரோத சட்டம் பாய வேண்டும் என்று பார்ப்பனர்களும், சங்பரிவார்களும், இந்த ஆட்சிக்கு தூபம் போடுகிறார்கள்.

ஆனால், இந்தியா என்பதையோ, இந்தியன் என்பதையோ ஏற்க மாட்டோம் என்று, தனது கொள்கைப் பிரகடனமாகவே எழுதி வைத்திருப்பவர்களே, இந்த ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன சக்திகள் தான். நாம் இந்துக்கள்; இந்தியர்கள் அல்ல; நமது தேசம் இந்துஸ்தான்; இந்தியாஅல்ல என்று கூறும் கோல்வாக்கர், கடந்த பல ஆண்டுகளாக நமது நாட்டைப் பீடித்துள்ள பல தீமைகளுக்கும், துன்பங்களுக்கும் இன்று நமது தேசிய வாழ்க்கையை அரித்து வரும் சூழ்நிலைகள் எல்லாவற்றுக்கும் காரணமாக அமைந்தது வாழும் பிரதேச எல்லையின் அடிப்படையில் தேசியத்தை ஏற்றுக் கொண்டதேயாகும் என்று வெளிப்படையாகவே கூறுகிறார். இப்படி, இந்தியா என்பதையும், இந்தியன் என்பதையும் ஏற்க மாட்டோம் என்ற கொள்கையை வைத்திருக்கும் கூட்டத்தைத் தான் - இந்த நாட்டின் உண்மையான தேச பக்தர்கள் என்று, பார்ப்பனர்களால் போற்றப்படுகிறார்கள். மானத்துக்கும், அறிவுக்கும் உரிமைக் குரல் கொடுத்த பெரியாரை - தமிழ்நாட்டில் அவமதிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கிளர்ந்தெழும் பெரியார் தொண்டர்களை தேச விரோதிகளாக அடையாளம் காட்டுகிறார்கள்.

இப்படி - தேசம் -தேச பக்தி - நீதி - அநீதி - உரிமை - தகுதிகளுக்கெல்லாம் அர்த்தங்களைப் புரட்டிப் போட்டு, அதை சமூகத்தின் பொது புத்தியில் திணித்து, வெற்றியும் பெற்றவர்கள் பார்ப்பனர்கள். இதனால் தான் அய்வருக்கும் தேவி; அவளே அழியாத பத்தினி என்று பாஞ்சாலியைப் புகழ்கிறார்கள். இதே போல் தான், சிறுபான்மை சமூகத்துக்கான நியாயமான உரிமைகளை வழங்கக் கூடாது என்றும், அது அவர்களை திருப்திப் படுத்துவதற்கான வாக்கு வாங்கி அரசியல் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். வரலாறுகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

இந்தியாவிலே முதன்முதலாக, தங்களுக்காக 1909 ஆம் ஆண்டிலேயே தனித் தொகுதியைப் பெற்றவர்கள் முஸ்லீம்கள் தான். இதுவும் - பிரிட்டிசார், இந்தியர்களின் ஓட்டுகளை வாங்க நடத்திய அரசியல் விளையாட்டு என்று கூறுவார்களா? இதற்குப் பிறகு 1919 இல் தான் சீக்கியர்களுக்கும், இந்திய கிறிஸ்துவர்களுக்கும், தனித் தொகுதி வழங்கப்பட்டது. தலித் உட்பட 13 வகுப்பினருக்கு தனித் தொகுதி இந்தியா முழுமைக்கும் கிடைத்தது. 1935 ஆம் ஆண்டில் தான், அதே போல் வேலை வாய்ப்புகளில் முதன்முதல் 1925 ஆம் ஆண்டிலேயே தனி ஒதுக்கீடு பெற்றவர்கள் முஸ்லீம்கள் தான். மற்ற சமூகத்தினருக்கு இந்தியா முழுவதிலும் மத்திய அரசு பதவிகளில் 1934 இல் தான் தனி இட ஒதுக்கீடு வந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் - இத்தகைய உரிமைகளைப் பெற்ற முஸ்லீம்கள், சுதந்திர இந்தியாவில் கிடைத்த உரிமைகளை இழந்தார்கள். அவை சோகமானவை! துயரம் நிறைந்தவை!

1946 ஆம் ஆண்டிலிருந்து 1949 வரை இந்தியாவில் அரசியல் சட்டத்தை உருவாக்குவது பற்றி அரசியல் நிர்ணயசபையில் விவாதங்கள் நடந்தன. அதே கால கட்டத்தில் பாகிஸ்தான் தனிநாடு கோரியதற்காக, முஸ்லிம்கள் மீது மதவெறி சக்திகள், கலவரங்களைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தன. வெளியே மதத்தின் பெயரால் ரத்தக்களறி நடந்த சூழலில், உள்ளே அரசியல் நிர்ணய சபையின் விவாதம் நடந்தது. இஸ்லாமியர்கள் எல்லாம் தேச விரோதிகள் என்ற உணர்வுகள் கட்டமைக்கப்பட்ட சூழலில், அரசியல் நிர்ணய சபையில், முஸ்லீம்களுக்கு தரப்படும் எந்த உரிமையும் தேச விரோதமாகிவிடும் என்ற உணர்வுகளை சுமந்து கொண்டே அரசியல் நிர்ணய சபையில் விவாதங்கள் நடந்தன.

இந்திய அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்த கே.எம். முன்ஷி என்ற பார்ப்பனர், காந்தியிடமும், பட்டேலிடமும் நெருக்கமாக இருந்தவர். அரசியல் சட்டத்துக்கான வரைவு ஒன்றை அவரே தயாரித்தார். அதில் இடம் பெற்றிருந்த பல்வேறு பிரிவுகளை, சட்டத்தில் இணைப்பதற்கு, மிகவும் தந்திரமாக காய்களை நகர்த்தினார். அரசியல் சட்ட உருவாக்கத்தில் கே.எம்.முன்ஷி எப்படி, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கருத்துகளை உருவாக்கினார் என்பதை விளக்கி, பாரதிய வித்யாபவன் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவைகளை விரிவாக பேசுவதற்கு, இது நேரமல்ல.

முஸ்லீம்களுக்கும், தலித், கிறிஸ்துவர், சீக்கியர், பார்ப்பனரல்லாதாருக்கும், இந்திய அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்று, அதை அமுலாக்கியது பிரிட்டிஷ் ஆட்சி தான். அவர்களின் பிரதிநிதிகள் - அரசியல் நிர்ணய சபையிலோ, அதற்கான ஆலோசனைக் குழுவிலோ, இடம் பெற்றுவிடக் கூடாது என்பதில் முன்ஷி உறுதியாக இருந்தார். அவர்கள் இடம் பெற்றுவிட்டால் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்ந்திடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். அரசியல் நிர்ணய சபையை உருவாக்குவதில் உதவி செய்வதற்காக, பிரிட்டிஷ் அமைச்சரவை தூதுக் குழு ஒன்றை, வைஸ்ராய் அனுப்பியபோது, முன்ஷி காந்திக்கு கடிதம் எழுதி, எக்காரணத்தைக் கொண்டும், பிரிட்டிசார் எவரும், குழுவில் இடம் பெற்றுவிடக் கூடாது என்று வலியுறுத்தி, அதற்கு காந்தியின் ஒப்புதலையும் பெற்று விட்டார்.

படிப்படியாக - பார்ப்பனர்களின் சதித் திட்டங்கள் அரங்கேறின. 1948 ஆம் ஆண்டில் பிப்ரவரியில் அரசியல் சட்டத் துக்கான முதல் நகல் வெளியிடப்பட்டது. இந்த நகலில் மைனாரிட்டியினருக்கு சட்ட சபையில் வேலை வாய்ப்பில் அமைச் சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த மைனாரிட்டி மக்களின் உரிமைகளைக் கண்காணிக்கவும், அதை உறுதிப்படுத்தவும் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1948 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் நகலில் இடம் பெற்றிருந்த இந்தப் பிரிவுகள், 1949 இல் அரசியல் சட்டம் இறுதி வடிவம் பெற்ற போது, முழுமையாக நீக்கப்பட்டிருந்தன. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு மட்டுமே இடம் பெற்றிருந்தது.

அரசியல் சட்டத்தில் 16வது பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டதே சிறுபான்மை மக்களுக்காகத்தான்! ஆனால், பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையின் மீது எழுந்த வெறுப்பும், முஸ்லீம்கள் மீது கொண்டிருந்த கசப்பு உணர்வும், அரசியல் நிர்ணய சபையில் பிரதிபலித்தன. அதன் காரணமாக இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு உரிமைகள், அடையாளங்கள் மறுக்கப்படவேண்டும் என்பதில் பார்ப்பன சக்திகள் தீவிரம் காட்டின. முதல் நகலில் இடம் பெற்றிருந்த சிறுபான்மையினருக்கான உரிமைகள் இறுதியாக சட்டத்தில் இடம் பெறாமல், நிக்கப்பட்டது, திட்டமிட்ட சதியாகும். இது தொடர்பாக, ஆலோசனைக் குழுவில் நடந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைவர் மவுலானா அபுல்கலாம் ஆசாத் உட்பட பல முஸ்லீம் தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். சில முஸ்லீம் தலைவர்கள் சரிகட்டப்பட்டு அவர்களின் ஒப்புதலோடு இது நிறைவேறியது. அரசியல் நிர்ணய சபையில் இது பற்றி நடந்த விவாதம் என்ன?

சட்டத்தில் மைனாரிட்டிகளுக்கு என்று தனியாகக் குறிப்பிட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தவர் சி.ராஜ கோபாலாச்சாரி. மைனாரிட்டி என்ற சொல்லை நீக்கிவிட்டு, வகுப்புகள் என்று போடலாம் என்ற யோசனையை அவர் முன் வைத்தார். மத மைனாரிட்டிகள் மட்டுமல்ல, இந்து மதத்துக்குள்ளே உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறாத பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று போடலாம் என்ற யோசனையை முன் வைத்தார் கே.எம். பணிக்கர். அப்போது ஷியாம் பிரசாத் முகர்ஜி, மைனாரிட்டிகள் மற்றும் இதர வகுப்பினர் என்ற இரண்டு சொற்றொடரையும் சேர்க்கலாம் என்று யோசனை கூறினார். மற்றொரு உறுப்பினரான சர்சார் உஜ்ஜல் சிங் மைனாரிட்டிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று போடலாம். போதுமான பிரதிநிதித்துவம் என்ற சொற்றொடரை எடுத்துவிடலாம் என்றார், மற்றொரு உறுப்பினரான பிராங்க் அந்தோணி. வகுப்புகள் மற்றும் மைனாரிட்டிகள் என்றே இருக்க வேண்டும், மைனாரிட்டி என்ற சொல்லை நீக்கவே கூடாது என்றார், அப்போது ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்த பட்டேல். வகுப்புகள் என்று போட்டாலே போதும், வகுப்புகள் என்றாலே அதில் மைனாரிட்டிகளும் அடக்கம் தான் என்று கூறி, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். எதிர்காலத்தில் வகுப்புகள் என்பதில் மைனாரிட்டிகள் அடங்காது என்று எந்த முட்டாளும் கூறமாட்டான் என்றார் பட்டேல். ஆனால், என்ன நடந்தது? வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்படித்தான் சொன்னார். முஸ்லீம் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு செய்வதில் அரசியல் சட்டத்தில் இடமில்லை என்றார் வாஜ்பாய்.

இந்தியாவுக்கு - அதிகாரத்தை வழங்கிடுவதற்கு பிரிட்டிஷ் ஆட்சி ஒரு முன் நிபந்தனை விதித்தது. அந்த நிபந்தனையே மைனாரிட்டிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதேயாகும். அந்த நிபந்தனையோடு தான் அதிகார மாற்றத்துக்கே பிரிட்டிஷார் ஒப்புக் கொண்டனர். வாஜ்பாய் ஆட்சியில் அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் மதச் சிறு பான்மையினருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கு அரசியல் சட்டத்தில் இடம் உண்டு என்பதை, கடந்த காலங்களில் நடந்த விவாதங்களை கருத்தில் கொண்டு உறுதி செய்தது.

மாநில அரசுகள் விரும்பினால், சட்டத் திருத்தம் ஏதுமின்றி மைனாரிட்டி சமூகத் தினருக்கு இடஒதுக்கீடு செய்ய முடியும் என்று, வெங்கடாசலய்யா ஆணையம் தெளிவுபடுத்தியது. ஏற்கனவே வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தலித் சீக்கியர்களுக்கும், புத்தமதம் மாறிய தலித்துகளுக்கும் இடஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. ஆனாலும்கூட சில முஸ்லீம் பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் முஸ்லீம்களுக்கு ஒட்டு மொத்தமாக இடஒதுக்கீடு செய்யக்கூடாது என்றும், பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய முஸ்லீம்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றன.

ராஜேந்திர சச்சார் குழுவின் பரிந்துரை, இந்தியா முழுமையிலும் முஸ்லிம் மக்களின் கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்பில் மோசமான நிலைகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு என்று கூறுவதை விட, அனைத்துத் துறையிலும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படவேண்டும் என்று கூறுவதே சரியாகும். பெரியாரும், அம்பேத்கரும் வலியுறுத்தியது பிரதிநிதித்துவத்தையே தவிர, இடஒதுக்கீட்டை அல்ல. பெரியார் முன் மொழிந்தது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைத் தான். பிரதிநிதித்துவம் என்பதே உரிமைக்கான குரல். முஸ்லீம்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம், கடந்த 50 ஆண்டுகளாக மறுக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தப் பின்னணியில் ராஜேந்திர சச்சார் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோரி டெல்லியில் பேரணிகள் நடந்துள்ளன. நாடு முழுதும் ஆர்ப்பாட்டங்கள் கிளர்ச்சிகள் நடைபெறுகின்றன. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களும், இந்த உரிமைப் போராட்டத்தில் இணைந்து நிற்க வேண்டும் என்று விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.

 

source: http://keetru.com/periyarmuzhakkam/mar07/vidudhalai_rajendran.html  




Politics
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..