Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஏர்வாடி பெருநாள் நினைவுகள்:-
Posted By:peer On 4/29/2023 4:33:10 PM

ஏர்வாடி பெருநாள் நினைவுகள்:-
***********

ஷஅபானிலேயே ரமழானை வரவேற்கத்தயாராகிவிடுவோம்.
பராஅத் இரவு அன்னைக்கி கழுவி,மொழுவி,மதியமே விறகு அடுப்பைப்பத்தி ரொட்டியைச்சுட ஆரம்பித்துவிடுவார்கள் அடுப்படியின் கதாநாயகிகள்.

சுட்ட ரொட்டியோடு,பழமும்,பேரித்தம்பழமும் வைத்து ஃபாத்திஹா ஓத லெப்பைகளைக்கூப்பிட அவர்களோ ஒரே பிஸியாகத்தான் இருப்பார்கள்.எங்க வீட்ல முதல்ல ஓதிட்டுப்போங்க,நம்ம வீட்டுக்கு முதல்ல கூட்டிட்டு வான்னு சிறுமிகளாக இருந்த நாம்தான் லெப்பை பின்னாடியே திரியனும். அங்க ஓதி,இங்க ஓதி,கடைசியா நம்ம வீட்ல ஓதி முடிச்சதும் அந்த நேச்சையை வட்டாரம் முழுவதும் விளம்பும் வேலையும் நம்மையேச்சேரும்.ஆனால்,அதுவும் குதூகலமாத்தான் இருக்கும்.புது பாவாடை,சட்டை உடுத்தி,ரெட்டைச்சடைப்பின்னி,பூ வைத்து வண்ணத்துப்பூச்சிகளாகத்தான் வலம் வருவோம் வயதொத்த சிறுமிகளோடு.

பராஅத் இரவில் பள்ளிவாசல்களில் தொழுகையும்,திக்ரும் நடைபெறும்.அதைத்தொடர்ந்து கபர்ஸ்தானுக்குப்போய் ஜியாரத் செய்வார்கள்.நோன்பு வைக்க கூடியவர்கள் நோன்பு வைப்பார்கள்.
இப்படி மகிழ்ச்சியோடும்,சந்தோஷத்தோடும் ரமழானை வரவேற்க ச அபானிலேயே தயாராகிக்கொண்டிருப்பார்கள்.

அடுத்து,கூட்டஞ்சோறு.
நோன்புக்கு ஒருநாள் முன்பு எல்லா வீட்டிலும் வெள்ளையடித்து,விறகு அடுப்பில் கோலம்போட்டு அலங்கரித்து,பாச்சோறு ஆக்கி ஃபாத்திஹா ஓதி,புதுப்பெண்ணாக இருந்தாலும்,அல்லது புதிதாக பிறந்த முதல் வருட பெருநாளைக்கொண்டாடப்போகும் குழந்தைகளாக இருந்தாலும்,தாய் வீட்டிலிருந்து அரிசியும்,காய்கறிகளும் அன்பளிப்பாக கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவதும் ஏர்வாடியின் கலாச்சாரங்களில் ஒன்றாக இருந்தது.தயவுசெய்து யாரும் இதை மார்க்கத்தோடு குழப்பிக்கொள்ளவேண்டாம்.கலாச்சாரம் என்பது மண் சார்ந்த,மரபு சார்ந்த விசயம்.இதை மார்க்கத்தோடு தொடர்புபடுத்தியதால்தான்,இன்று இந்த மண்ணிலேயே நாம் அந்நியப்படுத்தப்பட்டு நிற்கிறோம்.திருவிழாக்களையும்,பண்டிகைகளையும்,பார்த்து,பார்த்து வாழ்ந்த மதத்திலிருந்து,மனம் மாறி இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்த மண்ணின் மைந்தர்களுக்கு ஒரு மாற்றாக கூட இந்த கலாச்சாரங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஒவ்வொரு மண்ணிற்கும்,ஒரு கலாச்சாரம் உண்டு.அரபுகள் ஒருபோதும் அவர்களின் கலாச்சாரத்தை விட்டுக்கொடுத்ததே இல்லை.இந்த நூற்றாண்டிலும்,அவர்களின் உடைக்கலாச்சாரத்தைக்கூட அவர்கள் விட்டுக்கொடுத்ததே இல்லை.பாரம்பரியத்தை பெருமையாக நினைப்பவர்கள் அவர்கள்.ஆக,மார்க்கம் வேறு,கலாச்சாரம் வேறு.

கூட்டஞ்சோறு ஆக்கி,கூட்டுக்குடும்பத்தோடு அதை உண்டு,கழித்து நோன்புக்கு ஆயத்தமாகிவிடுவோம் அந்த இரவில்.
நோன்பை வைத்துக்கொண்டு,வேணாப்பட்ட வெயிலோடு நடந்தே போவோம் பள்ளிக்கூடத்திற்கு.
உச்சி வெயில் மண்டைய பிளக்கும்,அந்த மத்தியான நேரத்தில்,நா வரண்டு தாகித்துக்கொண்டு,சோர்வாக வரும் அந்த நேரத்தில்,டீச்சர் வந்து கேட்பாங்க,"எடி நீ நோன்பா வச்சிருக்க,அப்ப கொஞ்சம் நேரம் படுத்துக்கடி"என்று மதம் பாராமல் மனிதம் பார்த்த ஆசிரியர்கள் வாழ்ந்த காலம்.

இரவில் தராவிஹ் தொழுகை பெண்களுக்கு பள்ளியோடு சேர்ந்த மதரஸாக்களிலும்,அந்தந்த வட்டாரங்களில் சில வீடுகளிலும் நடைபெறும்.
இப்படியாக இபாதத்களோடு நோன்பு கடந்துக்கொண்டிருக்க,பெருநாளுக்கான ஆயத்தங்களும் ஆரம்பமாகிவிடும்.

தெருவில்,வாசலில் வளையல்காரர் வளையல் கொண்டு வருவார்.அவர் திண்ணையில் அந்த பெரிய பெட்டியைக்கொண்டு இறக்கியதும்,நாங்கள் அதைச்சுற்றி ஆவலோடு நிற்போம்.அவர் பெட்டியைத்திறந்ததும் அந்த ரப்பர் வளையல்களின் வாசம் மணமாய் வீசும்.
ரப்பர் வளையல்,பிளாஸ்டிக் வளையல்,கண்ணாடி வளையல் என்று கலர்,கலராய் புட்டுக்குழலில் அடுக்கிவைத்ததுபோல் அடுக்கி இருக்கும் அழகே தனி.பெரும்பாலும்,ம்மாக்கள் அந்த கோல்டு நிறத்திலிருக்கும் ரப்பர் வளையலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.ஏன்னா,அதுதான் உடையாமல் நாள் கணக்கில் கிடக்கும் என்று.ஆனால்,எங்கள் உள்ளமோ அந்த சுத்து வளையல்களையேத்தான் சுத்தி,சுத்தி வரும்.அந்த சுத்து வளையல்களை உடையாமல் அப்படியே ஒவ்வொன்றாக சுத்தி,சுத்தி வளையல்காரரே போட்டுவிடுவார்.



வளையோசை கல,கலவென ஒலிக்க அன்றே பெருநாள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும்.கண்ணாடி வளையல்கள் கலர்,கலராக ஜொலிக்கும்.மெருன்,ஊதா,பச்சை என்று.பல்லாண்டு வாழ்கவளையல்,குர்பானி வளையல் என்று ஒவ்வொரு வளையலுக்கும் ஒவ்வொரு படத்தின் பெயரைச்சொல்வார் வளையல்காரர்.

பெருநாள் டிரெஸ் எடுப்பதற்கு எந்த வெளியூருக்கும் செல்வதுகிடையாது.நம் ஊரில் இருக்கும் அலி ஸ்டோர்,கொழும்பு ஸ்டோர்,வேல்முருகன் ஸ்டோர் போன்ற கடைகளில்தான் எடுப்பார்கள்.வீட்டில் ஆண்கள் சென்னையில் இருந்தால் அங்கிருந்து பார்சலில் துணிகள் வரும்.கனரா பேங்குக்கு பக்கத்திலிருந்த அலி ஸ்டோரில் பெண்கள் செல்வதற்கென்றே,பின்புறம் ஒரு பிரத்யேக வழி இருக்கும்.அந்த வாசல் வழியாகத்தான் பெண்கள் துணி எடுக்கச்செல்வார்கள்.
புனிதமிக்க "லைலத்துல் கத்ர்"இரவில் சிறப்புத்தொழுகைகள் நடைபெறும்.தொழுதுவிட்டு வந்து அந்த நடுச்சாமத்தில் சிறுமிகளும்,குமரிகளும் மரத்தில் போடப்பட்டிருக்கும் உலக்கை ஊஞ்சலில் ஆடுவோம்.பெருநாள் வருது என்றாலே எல்லாவீட்டுத்திண்ணைகளிலும் ஊஞ்சல்கள் போடப்பட்டுவிடும்.ஊஞ்சல்களில் ஆடாமல் எங்கள் பெருநாள் இரவுகள் கழிந்ததில்லை.

ஸகாத் பற்றிய விழிப்புணர்வு அந்தக்காலங்களில் இல்லை.அதிகமாக அதைப்பற்றி தெரிந்திருக்கவும் இல்லை.27அன்று வாசலில் நிறைய யாசகர்கள் வருவார்கள்.அவர்களுக்கு நாலணாவும்,ஐம்பது பைசாவும் கொடுப்பதுதான் ஸகாத் என்று நினைத்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால்,இன்று ஸகாத் பற்றி பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னும்,எல்லாக்கடமைகளையும் சரிவர நிறைவேற்றுபவர்கள் கூட இந்த ஸகாத் விசயத்தில் அலட்சியமாகத்தான் இருக்கிறார்கள். வசதிபடைத்தவர்கள் தங்கள் சேமிப்புகளிலிருந்து 2 1/2 % சரியாக கணக்கிட்டுக்கொடுத்தால் நிச்சயமாக நம்முடைய சமுதாயத்தை வளமுள்ள சமுதாயமாக மாற்றிடமுடியும்.முன்பு போல் இல்லாமல் இப்போது,ஓரளவுக்கு கொடுக்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள்தான் மறுப்பதற்கில்லை என்றாலும் கணக்குப்பார்த்து சரியான தொகையை கொடுப்பதில்லை.ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களே நிர்ணயித்துக்கொண்டு அப்படித்தான் பெரும்பாலும் கொடுக்கிறார்கள்.இந்த விசயத்தில் ஆலிம்கள் தான் பயான்மூலம் அறிவுறைச்சொல்லி,விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

27முடிந்துவிட்டாலே பெருநாள் வந்தமாதிரிதான்.சென்னையில் இருக்ககூடிய ஆண்கள் எல்லாம் பெருநாளுக்காக ஊர்வர ஆரம்பித்துவிடுவார்கள்.தெறுவெல்லாம் ஒரே ஜே,ஜேன்னுதான் இருக்கும்.(இப்ப எந்த நாளும் எல்லாத்தெருவும் ஊரடங்கு போட்டமாதிரிதான் இருக்கு)
பெருநாள் சாயங்காலமே எங்கத்தெருவில் ராட்டு ஊஞ்சா வந்துவிடும்.எல்லாத்தெரு சிறுமிகளும் எங்கத்தெருவுக்குத்தான் வருவார்கள் தெறு அன்றே விழாக்கோலம் கொண்டுவிடும்.சிறுவர்கள் எல்லாம் சைக்கிளில் பலூனை கட்டிக்கொண்டு,தெறு,தெறுவாக சுத்திக்கொண்டிருப்பார்கள்.
அரிதாக யார் வீட்டிலாவது நிற்கும் மருதாணி மரத்தில் இலைகளை பறித்து வந்து,ம்மா அதை அம்மியில் வைத்து பட்டுப்போல் மையாக அரைத்துத்தர எந்த "கோனும்"இல்லாத அந்தக்காலத்தில் அம்மியில் அரைத்த மருதாணியில் தீக்குச்சியை வைத்தே இரவு இரண்டு மணிவரை உட்கார்ந்து டிஸைன் போடுவோம்.கெமிக்கல் கலக்காத மருதாணி செக்கச்செவேல் என்று பிடித்திருக்க,-மருதாணியின் வாசமும்,புது வளையலின் மணமும்,மல்லிகைப்பூவின் நறுமணத்தோடும்,புத்தாடை அணிந்து காலையில் தொழுகைக்குச்சென்று "ஈதுள் ஃபித்ரை" நிறைவேற்றினால்தான் எங்கள் உள்ளம் நிறைவடையும்.

மூன்று பெருநாட்கள் எல்லாம் இல்லாமல் ஊர் முழுக்க ஒரே பெருநாளாய் மனம் உவக்க கொண்டாடினோம்.

பெருநாள் அன்று இப்போதுபோல ஆர்டர் சாப்பாடோ,மந்தியோ,பிரியாணியோ,கப்ஸாவோ இல்லாத காலம்.எல்லாவீட்டிலும் பாரம்பரிய உணவான நெய்ச்சோறு கறிதான்.காலையில் இட்லி,கறியோடு பாயாசமோ,வட்லப்பமோ இருக்கும்.எங்க வீட்ல தொன்று தொட்டு வட்லப்பம்தான்.அநேக வீடுகளில் பாயாசம் இருக்கும்.கட,கடவென ஐஸ்காரர் சைக்கிளில் ஐஸ் கொண்டு வருவார்.அதுதான் எங்களின் பட்டர்ஸ்காட்சாக இனித்தது.

மகிழ்ச்சியோடும்,சந்தோசத்தோடும்,ஈகைத்திருநாளை இனிதாக கொண்டாடி முடித்த பின்பும்..6நோன்பு பெருநாளுக்கு காட்டுப்பள்ளிக்கு காலார நடந்துப்போய்,திருக்குச்செம்பில் காபியும்,வறுத்த வேர்க்கடலையும்,சுக்கு ஐசும்,சேமியா ஐசும்,பால் ஐசும் வாங்கித்தின்று,வரும்வழியில் ஆற்றில் கால் நனைத்து,பட்டம்விட்டு மனம்மகிழ்ந்த காலங்கள்.

காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் கலாச்சாரங்கள் காணாமல் போய்விட்டாலும்,நம் மனக்கண்ணில் என்றும் சுத்திக்கொண்டேதான் இருக்கும்.70's&80s kidsகள் உங்கள் மனத்திரையில் அந்தக்கால நினைவுகளை திரையிட்டுக்கொள்ளுங்கள்."அது ஒரு அழகிய நிலாக்காலம்...
கனவினில் தினம்,தினம் உலாபோகும்"......

உம்மு ஆதில்
நெல்லை ஏர்வாடி




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..