Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
Posted By:peer On 11/19/2022 3:48:34 AM

முகநூல் நண்பர்களே! சகோதர சகோதரிகளே!

கடந்த நவம்பர் 12 ந்தேதி ஒரு துக்கச் செய்தியை வாட்ஸ் அப் வழியாகக் கண்டேன்.

உடல் நலக் குறைவின் காரணமாக வாட்டம் கொண்டிருந்த எனக்கு மேலும் துக்கத்தைக் கொடுத்தது அச்செய்தி!

உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!

சென்னை இஸ்லாமிய நிறுவனததில் பணியாற்றிய போது அவரைப் பார்த்துப் பேசி பழகும் அரிய வாய்ப்பைப் பெற்றவன் நான் என்பதால் அவரது மறைவு ஆழமாகவே என்னை பாதித்தது.

அதனால் தான் உடல் நலக்குறைவால் வாடிப்போன இந்நிலையிலும் அவர் மறைந்து 7ஆம் நாளாயினும் அந்த மாமனிதரைக் குறித்து உங்களிடம் என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பி இந்தப் பதிவை இடுகின்றேன்.

டாக்டர் சித்தீகீ அவர்கள் இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து பல சிறந்த நூல்களை எழுதியுள்ளார்.

இவர் ஒன்றுபட்ட இந்தியாவில் உ.பியில் உள்ள கோரக்பூரில் 1931ல் பிறந்தார்.

அலீகர் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் மற்றும் இஸ்லாமியத் துறை இரண்டிலும் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்று அதன் பொருளாதாரத் துறையில் துணைப் பேராசிரியராகவும் இஸ்லாமியத் துறையில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

பிறகு சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலுள்ள கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமியப் பொருளாதார ஆய்வு மையத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பின்னர் இவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் கீழைநாடுகள் குறித்த ஆய்வுகள் துறையில் ஃபெல்லோவாக (மூத்த பேராசிரியராகப்) பணிபுரிந்தார்.

பின்னர் ஜித்தாவிலுள்ள இஸ்லாமிக் டெவலப்மெண்ட் பேங்கின் இஸ்லாமிய ஆய்வு மற்றும் பயிற்சி மையத்தில் வருகைப் பேராசிரியராகப் பணி புரிந்தார்.

பேரா. சித்தீகீ அவர்கள் ஆஙகிலத்திலும் உர்தூவிலும் சரளமாக எழுதக் கூடியவர்.

பேரா.சித்தீகீ 63 நூல்களை- அத்தனையும் ஆய்வு பூர்வமானவை- எழுதியுள்ளார்.அவை அனைத்தும் 5க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகெங்குமுள்ள 177 பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.
உலகெங்குமுள்ள 1301 நூலகங்களில் அவை ஆய்வறிஞர்களின் வாசிப்புக்காக இடம் பெற்றுள்ளன.

டாக்டர் சித்தீகீ அவர்களின "வட்டியில்லா வங்கி
முறை" -"Banking without Interest" என்னும் நூல் அவரை உலகம் முழுக்க பிரபலப் படுத்திய முக்கிய நூலாகும். இதை அவரின் "மாஸ்டர் பீஸ்-Master peace" -உயிரோவியம்-என்று கூறலாம்.

இதனால் தான் டாக்டர் சித்தீகி இன்றளவும் இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை எனக் கருதப்படுகிறார்.

இந்த ஒரு நூல் மட்டும் ஆங்கிலம் உட்பட மூன்று மொழிகளில் 1973 முதல் 2022 வரை முப்பது பதிப்புகளைக் கண்டுள்ளது.

இந்நூல் உலகெங்குமுள்ள 220 முக்கிய நூலகங்களில் ஆய்வாளர்களின் குறிப்புக்காக பாதுகாத்து
வைக்கப்பட்டுள்ளது.

இவரது பல நூல்கள் உர்தூ, ஹிந்தி, பார்ஸீ, துருக்கி, தாய், அரபி, இந்தோனேஷிய மொழி மலாய் மொழி ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

இந்தியா, நைஜீரியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் பல பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்யும்
மாணவர்கள் எண்ணற்றோருக்கு வழிகாட்டும் நெறியாளராக (Guide to Researchers) டாக்டர் சித்தீகி பணியாற்றியுள்ளார்.

வாணியம் பாடி தொழிலதிபரும் இஸ்லாமிய ஆர்வலரும் ஆன திரு. அப்துர் ரகீப் சாஹிப் அவர்கள் நிறுவன பொதுச் செயலாளராக (Founder Secretary) விளங்கும் இஸ்லாமியப் பொருளாதாரத்திற்கான இந்திய மையம்- Indian Centre for Islamic Finance எனும் அமைப்பின் தலைமைப் புரவலராகவும் டாக்டர் சித்தீகி திகழ்ந்தார்.

இந்த அமைப்பு வட்டியில்லா வங்கிகளுக்கு அரசிடமும் ரிசர்வ் வங்கியிடமும் அனுமதி பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஓர் அமைப்பாகும்.

டாக்டர் சித்தீகீ உலகின் பொருளாதார அமைப்பை சுரண்டலற்ற ஆக்ககரமான ஒன்றாக மாற்றிட தம் வாழ்நாளை அரப்பணித்த மாபெரும் சாதனையாளர் ஆவார்.

டாக்டர் சித்தீகியின் இந்த மகத்தான சேவையைப் பாராட்டி சவூதி அரசு அவருக்கு 1982ல் இஸ்லாமிய சேவைக்காக வழங்கப்படும் இஸ்லாமிய உலகின் மிக உயர்ந்த விருதான "மன்னர் ஃபைஸல் விருதை" வழங்கி கௌரவித்தது.

ஷாஹ் வலிய்யுல்லாஹ் விருதை இந்திய இஸ்லாமிய அறிஞர்களும் டாக்டர் சித்தீகீ அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்கள்‌.

உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு இஸ்லாமிய வங்கி தொடர்பான ஆய்வுமையங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் பல்கலைக் கழகங்களில்
டாக்டர் சித்தீகீ வகித்த பதவிகளும் அநதஸ்துகளும் எண்ணிலடங்கா.

ஆனால், டாக்டர் சித்தீகீ அவர்களோ பணிவின் சிகரமாக மிளிர்ந்து "எனது உயர்வுகளுக்குக் காரணம் எனக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுத் தந்து உலக‌ மக்களுக்கு சேவையாற்றிடவும் பொருளாதார அநீதியிலிருந்து உலக மக்களைக் காப்பாற்றிடவும் எனக்கு உணர்வூட்டிய மார்க்க அறிஞர்களே" என்று பல சந்தர்ப்பங்களில் தம் ஆசிரியர்களான உலமாக்களை நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார்.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ அருகிலுள்ள சான் ஜோஸ் நகரில் தமது 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் புடைசூழ இறை விருப்பப்படி தம் இறுதிமூச்சை நிறுத்திக் கொண்ட இந்த மாமனிதரின் இழப்பு இஸ்லாமிய உலகுக்கு மட்டுமல்ல. மனித குலத்திற்கே பேரிழப்பாகும்.

1982ல் ஹைதராபாத் நகரில் டாக்டர் சித்தீகீ அவர்களை சந்தித்து அதிக நேரம் உரையாடிய போது உயர்வு மனப்பான்மை சிறிதும் காட்டாமல் என் போன்ற எளியவனிடம் கூட மிக சாதாரணமாகப் பழகிய இந்தப் பேரறிஞரின் நினைவால் என் கண்கள் பனிக்க, அவரது மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் ஒளி மிக்கனவாக ஆக்
கும்படி வல்லவன் அல்லாஹ்விடம் இருகரமேந்தி துஆ செய்கிறேன்.

அவருக்காகப் பிரார்த்திக்கும்படி உங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
காஞ்சி அப்துல் ரவூப் பாகவி


General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..