Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
யா ஹாஃபிழ் - பாதுகாவலனே!
Posted By:peer On 6/30/2021 7:52:39 PM

யா ஹாஃபிழ் - பாதுகாவலனே!
----------------------------------------
  اِنَّ رَبِّىْ عَلٰى كُلِّ شَىْءٍ حَفِيْظٌ‏

'உறுதியாக எனது இறைவன் அனைத்துக்கும் பாதுகாவலன்.'
[குர்ஆன் 11 : 57]

மூல வார்த்தை
-------------------
இந்த திருப்பெயர் ஹ - ஃபி - ழ என்ற மூன்று எழுத்துக்களைக் கொண்டது. 'பாதுகாத்தான்' என்று அர்த்தம்.

இந்த அர்த்தத்தில் ஹஃபீழ் என்ற திருப்பெயர் குர்ஆனில் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளது.

இது அல்லாமல், குர்ஆனில் இதன் திரிந்த வடிவங்கள் 44 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

உதாரணங்கள் :
ஹாஃபிழீன் - பாதுகாவலர்கள்
மஹ்ஃபூழ்  - பாதுகாக்கப்பட்டது
ஹஃபிழ்னா - பாதுகாத்தோம்.

▪︎எப்படி, யார் மூலம் பாதுகாப்பு?

'இறைவனே உங்களுக்குப் பாதுகாப்பாளர்களையும் ஏற்படுத்துகிறான். அவர்கள் உங்களை மரணம் வரும்வரை பாதுகாத்து பின்னர் இறக்கச் செய்கின்றனர்.' [குர்ஆன் 06 : 61]

'மனிதனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரும் வானவர்கள் இருக்கின்றனர். அவர்கள் இறை கட்டளைக்கிணங்க மனிதனைப் பாதுகாக்கின்றனர்.'
[அல் குர்ஆன் 13 : 11]

'ஒவ்வொரு மனிதனுடனும் அவனைப் பாதுகாக்க ஒரு வானவர் உள்ளார். அவர் அம்மனிதனை அவன் தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும்
ஜின்கள், மனிதர்கள், மிருகங்கள், விஷ ஜந்துக்களிடமிருந்து பாதுகாக்கிறார்.

அவர்கள், விஷ ஜந்துக்கள் அவனை அணுகும்போது 'தூர விலகிப்போ' என்று கூறுகின்றனர். ஆனால், இறைவனின் இறுதிவிதி வந்து விட்டால், அவர்கள் உடனே விலகிக் கொள்வார்கள்.'
[இப்னு அப்பாஸின் (ரளி) மாணவர் முஜாஹித் (ரஹ்]


▪︎பல்வேறு வகையான இறைபாதுகாப்பு ஏற்பாடுகள்

01.மூளையில் இரத்த ஓட்டம் சரியான அளவில் இருக்க வேண்டும். ஆக ஸ்பீடாக இருந்தாலும் பிரச்சினை. ஸ்லோவாக இருந்தாலும் பிரச்சினை. அந்த வகையில், நமது மூளைக்குள் இரத்தம் வேகமாக பாயாமல் இறைவன் பாதுகாக்கிறான்; பாய்ந்தால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்!

02.ஒன்றுக்கொன்று எதிரான ஒன்றிலிருந்து நம்மை இறைவன் காக்கிறான். நெருப்பிலிருந்து தண்ணீர் மூலம் பாதுகாக்கிறான். அந்த தண்ணீர் இல்லை என்றால் நமது நிலை என்ன என்று சிந்தியுங்கள்!

03. தூங்கும்போது மூக்கில், காதில் விஷ ஜந்துக்கள் நுழைந்து விடாமல், இறைவன் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறான். அவ்வாறு அவை நுழைந்தால் என்ன ஆகும்?

இரவில் தூங்கும்போது ஒரு சிறு எறும்பு காதுக்குள் நுழைந்து விட்டாலே, நாம் படும்பாடு பெரும்பாடு! விஷ ஜந்து நுழைந்துவிட்டாலோ, நாம் என்ன பாடுபடுவோம் என்று சிந்தியுங்கள்!

04. நமக்கு மேலே ஏழு வான் அடுக்குகள். அவற்றை இந்த பூமிக்கு முகடுகளாக ஆக்கி, அவை நம்மீது விழாதவாறு பாதுகாத்து வைத்துள்ளான். விழுந்தால் நம் நிலை என்ன ஆகும் என்று சிந்தியுங்கள்!

05. கண்விழிகளின் பாது காப்புக்காக உறுதியான குழி போன்ற எலும்பு பாத்திரத்தை வல்ல இறைவன் அமைத்து வைத்துள்ளான்.

கண் விழிகளுக்கு மேல் இமைகளை அமைத்து நமது கண்களை பாதுகாக்கிறான்.

அந்த இமைகள் இல்லை என்றால் என்ன ஆகும் என்று சிந்தியுங்கள்!

▪︎பாதுகாக்கும் சாதனங்கள்

இறைவன் பாதுகாக்கிறான் என்பதையும் தாண்டி பொருட்களை நீண்ட நாள் பாதுகாத்து பயன்படுத்து வதற்காக, பல்வேறு சாதனங்களை உருவாக்கும் ஆற்றலையும் நமக்கு வழங்கி யுள்ளான் இறைவன்.

உணவு கெடாமல் இருக்க உப்பு மற்றும் குளிர்சாதன பெட்டி களைப் பயன்படுத்துகிறோம்.
பணங்காசுகளை வங்கியில் சேமித்து வைத்து பாதுகாக்கி றோம்.

▪︎ஒரு பழங்கால வரலாறு

ஒருமுறை துன்னூன் மிஸ்ரி ஓர் ஆற்றோரமாக சென்றார். அங்கே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென சிறுவர்கள் சிதறி ஒடினர்.

அங்கே ஒரு நட்டுவாக்காலி வேகமாக ஆற்றோரமாக சென்றது. அதைக் கண்டுதான் சிறுவர்கள் பதறி ஓடினார்கள்.

அந்த நட்டுவாக்காலிக்காக காத்திருந்தது போல ஆற்றோரம் ஆமை ஒன்று அங்கே வந்தது.

அதன் மீது ஏறி அது பயணிக்க ஆரம்பித்தது. 'என்னடா இது' என ஆச்சரியப்பட்டு அதை அவர் பின் தொடர்ந்தார். அது ஆற்றின் மறு கரையை அடைந்தது.

அங்கே ஒரு மரம். அதன் அடியில் ஒருவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மரத்தின் மேலிருந்து ஒரு பாம்பு அவனைத் தீண்டுவதற்காக சரசரவென கீழே இறங்கிக் கொண்டிருந்தது.

உடனே இந்த நட்டுவாக்காலி ஆமையின் முதுகிலிருந்து அவசர அவசரமாக இறங்கி அந்த மனிதனுக்கருகே சென்று அந்த பாம்பு அவனைத் தீண்டு வதற்குள் குறுக்கே பாய்ந்து அந்த பாம்புடன் சண்டை யிடுகிறது.

சண்டையின் இறுதியில் இது அதைத் தீண்ட, அது இதைத் தீண்ட இரண்டும் செத்துப் போனது. ஆனால், இத்தனை களேபரத்திலும் அந்த மனிதன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

உடனே துன்னூன் மிஸ்ரி அந்த மனிதனைத் தட்டி எழுப்பி,
மனிதா! இறை கருணையைப் பார்! உன்னை பாதுகாப்பதற்காக எங்கோ இருந்த நட்டுவாக் காலியை ஆமையின் முதுகி லேற்றி இங்கு வரச் செய்து இரண்டும் சண்டையிட்டு மாண்டு போன இந்த அதிசயத்தை கொஞ்சம் எண்ணிப் பார்த்து அந்த இறைவனுக்கு நன்றி செலுத்து என்று அறிவுரை சொன்னார்.சுப்ஹானல்லாஹ்!

▪︎இன்னொரு
ஆரம்ப பாடசாலை கதை

ஒரு வழிப்போக்கன் ரொம்ப தூரம் நடைப்பயணத்தை மேற்கொண்டதன் காரணமாக களைப்படைந்து ஒரு  ஆலமரத்தின் அடியில் அமர்ந்தான். அப்பொழுது அவனது எண்ண அலை இப்படி ஓடியது :

'ச்சே, என்ன கடவுள் இவர். இவ்வளவு பெரிய ஆலமரத்திற்கு இவ்வளவு சிறிய அளவில் பழம், அவ்வளவு  சிறிய பூசணிக் கொடிக்கு அத்தனை பெரிய பழம்?' என்று!

பின்னர் தூக்கம் வரவே தன் துண்டை மரத்தடியில் விரித்து  தூங்கிவிட்டான். திடீரென்று அந்த ஆலமரத்தின் பழம் ஒன்று அவனது நெற்றியில் வந்து விழுந்தது.

திடுக்கிட்டுக் கண்விழித்துப் பார்த்த அவன், 'அப்பா... நான் தப்பித்தேன். இந்த மரத்திற்குக் கடவுள் பூசணிப்பழம் போன்ற  பழத்தை கொடுத்திருந்தால், நான் இப்பொழுது செத்தல்லவா போயிருப்பேன்.

நல்ல காலம் பழம் மிகச்சிறியது. எனக்கு ஒன்றும் ஏற்படவில்லை இறைவன் இருக்கிறார்' என்று முனுமுனுத்துவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான். 

யார் யாருக்கு எதைக் கொடுப்பது. எதை எதை எங்கே வைப்ப‌து  என்ப‌து இறைவ‌னுக்குத் தெரியும்.

புலியும் பூனையும் ஒரே மாதிரி முக‌ச்சாய‌ல். தெருவுக்கு தெருவு பூனைமாதிரி புலியிருந்தால், என்ன ஆகும்?

ம‌லைமேல் விளையும் நார்த்த‌ங்காய்க்கும் க‌ட‌லில் விளையும் உப்புக்கும் முடிச்சுப் போடுப‌வ‌ன் அல்லவா, இறைவன்!

▪︎இறைவனுக்கு
நன்றி செலுத்துவோம்!
------------------------------
80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் அறுவைசிகிச்சை நடந்தது.
நல்லபடியாக நடந்து முடிந்தபின் அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் கொடுத்தனர்.

அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அப்பெரியவரின் அழுகையைப் பார்த்த மருத்துவர் கூறுகிறார். அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றனர்.

அதற்கு பெரியவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
எனக்கு அது பிரச்சினையில்லை; பில் 10 லட்சமாக இருந்தாலும் என்னால் தரமுடியும்.

மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்கு எட்டு லட்சத்துக்கு பில்.

ஆனால் 80 வருடமாக என் இதயத்தை பாதுகாத்த இறைவன் ஒரு ரூபாய்கூட என்னிடம் பில் கேட்கவில்லையே!
இவ்வளவு நாள், இதனை உணர்ந்ததே இல்லை. இப்போது உணர்ந்தபோது, கண்ணீர் வழிகிறது.

எல்லாம் வல்ல இறைவனின் கருணையையும் அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன் என்றார்.

▪︎இறைபாதுகாப்பு பெற
நாம் என்ன செய்ய வேண்டும்?
---------------------------------------
'இறை கட்டளைகளை நீங்கள் பேணி நடங்கள். இறைவன் உங்களை பாதுகாப்பான்.'
[திர்மிதி, அஹ்மது]

அபூ தய்யிபுத் தபரீ என்ற ஒரு நூறு வயது அறிஞர். அந்த வயதிலும் கூர்மையான பார்வைக்கும் செவிப்புலனுக்கும் பிரசித்திபெற்றவராக இருந்தார்.

ஒரு கடல் பயணத்துக்குப் பின் மற்றவர் அனைவரும் மிகவும் களைத்திருக்க, இந்த நூறு வயது முதியவர் படகிலிருந்து ஓர் இளைஞரைப்போல கரைக்குத் தாவினார்.

மக்கள் வியந்துபோய், 'எப்படி இந்த வயதிலும் இவ்வளவு திடகாத்திரமாக இருக்கிறீர்கள்' என்று வினவினர்.

அதற்கு அவர் கூறிய பதில் என்ன தெரியுமா?

இளமைப் பருவத்தில் எனது உடல் உறுப்புகளை இறைவனுக்கு மாறுபுரிவதிலிருந்து பாதுகாத்தேன். எனவே, எல்லாம் வல்ல இறைவன் எனது முதுமைப் பருவத்தில்  பலவீனத்திலிருந்து பாதுகாத்துள்ளான். [இப்னு றஜப்]

▪︎இறைவனையே பாதுகாவலனாகக் கொள்வோம்!
------------------------------------------
'தன்னைத் தவிர தங்களுக்கு வேறு பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கிறான்.' [குர்ஆன் 42 : 06]
----------------------------------------
• கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ




Moral Story
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..