Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அவர்கள்உள்ளேஇருக்கிறார்கள் - ஜெயகாந்தன்
Posted By:peer On 1/3/2021 7:38:45 AM

எழுத்தாளன் என்பவன் மனித ஆன்மாக்களை செப்பனிடும் என்ஜினியர்
_ மக்ஸிம் கார்க்கி

#அவர்கள்உள்ளேஇருக்கிறார்கள்

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து....

இந்த பைத்தியக்கார உலகத்தில் பல பைத்தியக்கார விடுதிகளும் இருக்கின்றன ஒரு முறை அவற்றில் பலவற்றுக்கு நான் விஜயம் செய்தேன் என்ன காரணம் என்று கேட்கிறீர்களா ? என்னவோ ஒரு பைத்தியக்காரத்தனம் . பைத்தியங்களுக்கு அவர்கள் செய்யும் எல்லா காரியங்களுக்கும் ஒரு காரணம் உண்டு . ஆனால் அந்த காரணம் , நடைமுறை உலகத்தின் கண்களுக்கு புரிவதில்லை , பொருந்துவதுமில்லை எனவே அவர்களை ஏதோ ஒரு பெயரைச் சூட்டி நாம் ஒதுக்கி வைத்து விடுகிறோம் .

பைத்தியம் என்று பெயர் சூட்டப்பட்டவர்களை மட்டுமே நம்மால் ஒதுக்கிவைக்க முடிகிறது . ஆனால் பைத்தியக்காரத்தனத்தையே நம்மால் ஒதுக்கி வைத்து விட முடிகிறதா ? பிறருக்கு தெரியாத , தெரிந்துவிடுமோ என்று நாம் அஞ்சுகிற , தெரிந்துவிட கூடாது என்று நாம் காப்பாற்றி வைத்திருக்கிற , ஒருவேளை தெரிந்திருக்குமோ என்று எண்ணி அடிக்கடி தலையைச் சொறிந்து கொள்கிற எத்தனை ஆயிரம் பைத்தியக்காரத்தனங்கள் நம் ஒவ்வொருவரிடமும் குடி கொண்டிருக்கின்றன ! இப்படிப்பட்ட நாம் , அந்த பைத்தியக்காரத்தனங்கள் வெளியே தெரிந்துவிட்டதென்ற ஒரே காரணத்தினால் அவர்களை விலக்கி வைத்ததுகூடச் சரி _ என்றைக்குமே வேண்டாமென்று அவர்களைச் சபித்துவிட என்ன உரிமை பெற்று இருக்கிறோம் ?

உலகத்தின் அப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனத்தைத் தரிசித்து விட்டுத் திரும்பி வந்த சிலரையும் நான் அங்கே சந்தித்தேன் . உலகம் அவர்களை கண்டு அஞ்சுவது போலவே , அவர்களும் இந்த உலகத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள் . அவர்கள் உலகத்தை விட இது பெரிய உலகமல்லவா ? அதாவது பெயர் சூட்டப்பட்ட அந்த பைத்தியக்கார விடுதியைவிட , பெயர் சூட்டப்படாத இந்த உலகம் பெரிய பைத்தியக்கார விடுதியல்லவா ? எனவே நமக்கு அஞ்சி அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் .

அவர்களின் உலகம் மிகவும் ஆனந்தமயமாய் இருக்கிறது போலும் ! அந்த லயிப்பில்தான் அவர்கள் புற உலகத்தையும் உங்களையும் என்னையும் _ மறந்து செயல்படுகிறார்கள் .

மனிதர்கள் செய்யாத எதையும் அவர்கள் செய்துவிடவில்லை . அவர்கள் அழுகிறார்கள் ,பாடுகிறார்கள் , ஆடுகிறார்கள் , பேசுகிறார்கள் , அன்பு செய்கிறார்கள் , நன்றி காட்டுகிறார்கள் . நாம் செய்யக்கூடிய எல்லாவற்றையும் அவர்களும் செய்கிறார்கள் . இருந்தாலும் அவர்கள் பைத்தியக்காரர்கள் !

அந்த கோடு எங்கே கிழிக்கப்பட்டது ?

சற்று நேரத்திற்கு முன் உங்களது தனி அறையில் உடை மாற்றிக் கொண்டபோது நீங்களும் நிர்வாணமாய் நின்றிருந்தார்கள் , நினைவிருக்கிறதா ? அதுபோல் அவர்கள் தங்கள் தனி உலகத்தில் அவ்வாறு நிற்கிறார்கள் . ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள் !

ஒரு மெல்லிய ஸ்கிரீன் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு கோடு கிழித்திருக்கிறதே !

அன்றொருநாள் அளவுக்கு மீறிய கோபத்தில் கையிலிருந்த பாத்திரத்தை வீசி எறிந்து உடைத்தீர்களே , நினைவிருக்கிறதா ? அதற்கு ஆயிரம்தான் காரணம் இருக்கட்டும் . அந்த செய்கையை நீங்கள் நியாயப் படுத்த முடியுமா ? அதைப் போல அவர்களும் சில சமயங்களில் செய்தது உண்டாம் . ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள் !

நான் பாடிக் கொண்டிருக்கிறேன் எனது பாடலைக் கேட்க ஒருவருமே இல்லை என்று எனக்குத் தெரியும் . அந்தத் தனிமையில் தொண்டையைக் கிழித்துக் கொண்டு , என் செவிக்கு அது இனிமையாக இருப்பதால் என்னை மறந்த உற்சாகத்தில் நான் பாடிக் கொண்டிருக்கிறேன் .

நான் கேட்கிறேன் : இதற்கு என்ன பெயர் ? அதே போல் அவர்களும் தங்கள் உற்சாகம் கருதி பாடுகிறார்கள் . அதே மாதிரியே சில சமயங்களில் அதே மாதிரி உற்சாகமான லயிப்புடன் உடன் அவர்கள் அந்த தனிமையில் அந்தரங்கமாக தம்முடன் பேசுகிறார்கள் ! ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள் !

அளவுக்கு மீறிய சந்தோஷத்தினால் , அல்லது துயரத்தினால் , எத்தனையோ இரவுகள் உறக்கமின்றிப் படுக்கை கொள்ளாமல் பெருமூச்செறிந்து கொண்டே , மனம் சிலிர்த்து சூரியோதயம் வரை நீங்கள் விழித்துக் கொண்டிருக்கவில்லையா ?

அதைப்போல அவர்களும் இருப்பதுண்டு . ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள் !

விஷயம் இதுதான் : நாம் எப்போதேனும் இப்படியெல்லாம் இருக்கிறோம் . அவர்கள் எப்பொழுதுமே இப்படி இருந்து கொண்டிருக்கிறார்கள் . எனவேதான் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் ; நாம் வெளியே இருக்கின்றோம் .

இந்த ' எப்போதோ ' வும் , இந்த ' எப்போதுமே ' வுந் தான் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை உண்டாக்கி விட்டன !

இதன் அடிப்படையான வித்தியாசம் என்னவெனில் , நமது காரியங்களுக்கான காரணத்தை நாம் நியாயப்படுத்த முடிகிறது . அவர்களால் நியாயப் படுத்த முடியவில்லை ; அதாவது அவர்கள் நியாயம் நமக்கு பிடிபடுவதில்லை .

அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனி உலகமாக இருக்கிறார்கள் ; தனி உலகமாக இயங்குகிறார்கள் . நாம் எவ்வளவு தான் தனிப்பட்ட முறையில் பைத்தியக்காரர்களாக இருந்தாலும் ஒரு பொதுவான நியாயத்திற்கு உட்பட்டு விடுகிறோம் . அவர்களுக்குப் பொதுவான நியாயம் என்று ஒன்று இல்லை . அவர்கள் ஒவ்வொருவருமே தங்களுக்குள்ளேயே மாறுபட்ட தனித்தனி நியாயத்தின் அடிப்படையில் தனித்தனியே இயங்குகிறார்கள் . எனவேதான் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் .

ஒருமுறை என்னுடன் வந்திருந்த நண்பரான மனோதத்துவ டாக்டரிடம்( Psychiatrist ) நான் கேட்டேன் :
" நாளடைவில் உள்ளே இருக்கும் இவர்களின் எண்ணிக்கை அதிகமாகி நாம் குறைந்து போனால் , நாம் உள்ளேயும் அவர்கள் வெளியேயும் இருக்க நேரிடும் அல்லவா ? " _ இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்து தான் நான் கேட்டேன் . அவர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ? எனது நண்பர் சொன்னார் :

அவர்கள் எண்ணிக்கையில் எவ்வளவு அதிகரித்தாலும் அவர்கள் ஒன்றிணைந்த பலமாக ஆக முடியாது . ஏனெனில் தனித்தனி நியாயங்களும் , தனித்தனி நடைமுறைகளும் கொண்ட அவர்கள் , சிதறுண்ட உலகங்கள் . அவர்கள் ஓர் உலகத்தை நிர்வகிக்கவோ, அதன் தன்மையை தீர்மானிக்கவோ முடியாதவர்கள் . நீங்கள் சொன்னது போல் அவர்களின் தொகை அதிகமாகி விட்டால் , அது ஒரு பிரச்சனை தான் . ஆனால் அந்த பிரச்சனை நமக்கே ஒழிய அவர்களுக்கல்ல . ஒருவேளை அதன் விளைவாக அவர்கள் வெளியே இருக்க நேரிடலாம் ; ஆனால் நாம் உள்ளே இருக்க வேண்டிய அவசியமில்லை . அவர்கள் எத்தனை ஆயிரம் பேராக இருந்தாலும் புத்தி சுவாதீனமுள்ள சிலர் அவர்களை அன்புடனும் பரிவுடனும் புரிந்துகொண்டால் அவர்களை ஆண்டு விடலாம் என்பது மட்டுமல்ல ; நம்மில் ஒருவராக மாற்றியும் விடலாம் . ஆனால் அவர்களால் அது முடியாது . ஒருவேளை அவர்களில் ஒருவராக நாம் மாறி விட்டாலும் , அதற்கு நாமே தான் பொறுப்பே ஒழிய , அவர்களல்ல ... ஆனால் நம்மில் ஒருவராக அவர்கள் மாறுவது நம் கையில் மட்டுமே இருக்கிறது ... " என்று அவர் விளக்கிக் கொண்டு வருகையில் , நான் குறுக்கே புகுந்து விசாரித்தேன் :

" அவர்கள் இப்படியாவதற்கும் நாம் தான் பொறுப்போ ? "






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..