Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஓ! பெண்ணியமே உனக்கு மகளிர்தின வாழ்த்துகள் மட்டும்தான்!
Posted By:peer On 10/14/2020 10:42:13 AM

சுடர்செல்வி, பெரியகுயப்பள்ளம்
எழுதப்பட்ட நாள்: மார்ச் 08, 2020.

ஓ! பெண்ணியமே உனக்கு மகளிர்தின வாழ்த்துகள் மட்டும்தான்!

ஓ! பெண்ணியமே
உனக்கு மகளிர்தின வாழ்த்துகள் மட்டும்தான்!

உன் உடைகளை சுருக்கினால்தான் நீ அழகாவாய் என்று உன்னை நம்ப வைத்து - ஒரு கூட்டம் உன் ஊனை ரசிக்கிறது! விமர்சிக்கிறது!

நீயும் உன் அகவழகை
பைய மறந்துவிட்டு
ஒப்பனை அழகியலில்
ஓங்கி நிற்கிறாய்!

பெண்ணியம் என்றார்கள்
பெண்வளர்ச்சி என்றார்கள்
பெண்ணவள் நீ உன்னிலை அறிந்திடுமுன்
தாராளப் பொறுப்புகள் பல வழங்கினார்கள்.

சார்ந்து சார்ந்து வாழும் வாழ்வால் நீ உன்னிலை மறக்கின்றாய்
தன்மானம் இழக்கின்றாய்

தனக்குத் தேவையான பணியை ஒவ்வொருவரும் தாமே செய்ய பழகியிருந்தால்
நீ ஏன் அடுப்படியில்! இல்லத்தில்!அலுவலகத்தில்! -என
பணிக்குவியலைச் சுமந்து
நிமிர முடியாது தவிக்கப் போகிறாய்?

நீ விழுந்துக் கிடக்கிறாயா?
விண்ணைத்தொடுகிறாயா? என்பது நிச்சயம் உனக்குத் தெரியும்!

சகித்துக் கொண்டு வாழ்வதெல்லாம் உன்னை சக்கையாக்கி வீண்பொருளாய் தூர எறிய அன்று!
விழி! எழு! தன்னிலை உணர்!
புறம் பேசும் பேச்சுக்களை சிந்தை நுழைக்கா!

பெண்ணியம் பேசிய தலைவர்களின்
இல்லங்களில் கூட- நீ வந்தாரை விரும்தோம்பும் இல்லக்கிழத்தியாய்தான் இருக்கிறாய்!

உன்னைப் போகப்பொருளாய்
நினைக்கும் ஒர் கூட்டம்
சுமைகளை இறக்கி வைப்பதே திருமணம் என்றொரு கூட்டம்
உடன் பிறந்தவளை சுமையாய் நினைக்கும் ஒரு கூட்டம்
உன்னை மையமாய் வைத்தே வணிகம் செய்யும் ஒரு கூட்டம்

இத்தனைக்கும் இடையில்-நீ
வென்று வெளியில் வந்தால்
அப்படி இப்படியென நாக்கால் வையவும், வாழ்த்தவும் ஒரு கூட்டம்.

குடும்பம்
பொருளாதாரம்
பிள்ளை வளர்ப்பு
சுற்றுச்சூழல்
குமுகாயம்
மொழிப்பற்று - என பல தளங்களில் இயங்கினாலும் நிர்வகித்தாலும்
நீயொரு பெண்தானே எனும் ஏளனம்!

பதினாறாம் நூற்றாண்டில் இருந்த பழம்பெரும் கட்டமைப்பெல்லாம் கால ஓட்டத்தில் கானலானது!
ஊடகம் எதைக் காண்பித்தாலும் உண்மையானது!
இயற்கை வேளாண், தற்சார்பு வாழ்வியல் மெல்ல மெல்ல வலுவிழந்தது!

தாய்வழி குமுகாயம் தந்தைவழியானது!
நிலவுடைமை மாற்றம் கண்டது
உனக்கான பாதையானது பாதுகாப்பற்றதானது!

உடல் இச்சைக்காய் பிணங்களாய் மிதக்கிறாய் நீ!
பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்கவும் புரிதல் ஏற்படுத்தவும் தெளிவுண்டாக்கவும் தெரியாத பெற்றோராலும் குமுகாயத்தாலும்  உன் பாதை தவறி செல்கிறாய்!
உன் தவறை உணர்த்தி திருத்த இயலாத நபர்கள் உன் குறைகளை மட்டும் நிறையவே சுட்டுகின்றனர்!

உன் விருப்பத்தை நீ வெளியில் தெரிவித்தாலும் ஆகாதவள்தான்! பிறர் விருப்பத்தின் படி உன் வாழ்வமைந்து உனக்குப் பிடிக்காத வாழ்க்கையை நீ வாழ்ந்தாலும் அதையும் நீதான் சரிசெய்திட வேண்டும்!

தவறென்றாலே நீதான் செய்திருப்பாய் என்ற எழுதப்படாத சட்டமும்
நீதான் குற்றவாளி என்ற என்றைக்குமான தீர்ப்பும் தான் பெண்ணியக்குரலா?

எங்கே சறுக்குகிறாய் நீ!
நிதானம் கொள்! கவனமாய் கட! உள்ளத்தில் துணிவுடன் உண்மையை உணர்ந்துணர்த்து!
ஒரு பெண்ணாய் சக பெண்களின் நிலை குறித்து சிந்தனை செய்!
யாரையும் பழிசுமத்துவதில் நோக்கம் செலுத்தாதே அதற்குப்பின்னுள்ள சூழலை அறிந்து அதற்கு தக நட!
 
ஒருவனுக்கொருத்தி என்ற பண்பாட்டை நீ  மீறும் போது அடுத்த தலைமுறை நெறியற்று வாழ வழிவகுத்திடுவாய் நிதானம் கொள். துணிவிருந்தால் தனித்து வாழ்! மன உறுதியை நிலைநாட்டு! உன் பிள்ளைகள் வழி தடுமாற நீ காரணமாய் இராதே!

பணிந்து நடப்பது மட்டும் பெண்மையன்று!
நிமிர்ந்து நடப்பதும் நேரிய பெண்மைதான்!

உன்னை வேண்டாம் என்று உதறியவர்களை ஏன் உதறினோமென ஒருமுறையேனும்  நினைக்க வை! அது உன் வெற்றி!

உன்னிடம் பணமிருந்தால் உன்னைச் சுற்றி பல கூட்டம் இருக்கும் உன்னை விட்டு பணம் செல்லும் வரை!

நற்குணத்தால் நீ செயல்படும் போது உண்மையாக நேசிக்கும் ஒரு உயிர் போதும்! வீறுகொண்டெழுவாய் நீ!

நீ மனதால் செயல்படுகிறாய்
ஆண் புத்தியால் செயல்கொள்கிறான்! இரண்டுக்கும் வேறுபாடு வேறு வேறு!

பால்பாகுபாடு இல்லாத பிள்ளைவளர்ப்பு ஒவ்வோர் குடும்பத்திலும் - என்று புரிதலுடன் கூடிய தெளிவில் அனுகப்படுகிறதோ அன்றே பெண்ணியம் ஓங்கும்! மனிதம் தழைக்கும்!

மகளிர் தினம்
அன்னையர் தினம்
மழலையர் தினம்
முதியோர் தினம் நல்லார் தினம் பொல்லார் தினம் - என பல தினங்களை கொண்டாடுவதைவிட
மனதார அனைவரும்
 மகிழ்வாய் இருக்க
உடலியல் மனவியல் மனையியல் குறித்த அறவியலோடு
இயற்கையோடு பயணிப்போம்
எந்நாளும் மகளிர்நாளே!  


இக்கவிதை திருமதி.சிலம்புச்செல்வி சுடர்கொழுந்து - பெரியகுயப்பள்ளம் என்ற ஊரை சேர்ந்த என்னால் எழுதப்பட்டு தமிழ்வேங்கை அமைப்பு 10/03/2020 அன்று திருமுதுகுன்றம் தெய்வம் திருமண மண்டபத்தில் நிகழ்த்திய மகளிர்தின விழாவில் வாசிக்கப்பட்டது.

இப்படைப்பு உருவாக வாய்ப்பளித்த தமிழ்வேங்கை காலாண்டிதழ் நிறுவனர் ஆசிரியர் திரு.புதூர்சாமி ஐயா அவர்களுக்கு நன்றி!




தமிழ் மொழி
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..