Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
தப்லீக் ஜமாத்தும் கொரோனாவும்: யார் இந்த தப்லீக் ஜமாத்? நடந்ததென்ன? இனி என்ன நடக்கும
Posted By:peer On 4/18/2020 7:01:49 PM

கொரொனாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் உலக மீடியாக்கள் அதை எப்படி கட்டுப்படுத்துவது அதற்கான மருந்துகள், தடுக்கும் வகைகள் என்னென்ன என்று விவாதித்துக் கொண்டிருக்கும் வேலையில் இந்திய மீடியாக்கள் மட்டும் கொரொனாவிற்கான மதத்தைப் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றன.

16-Apr-2020 | S. பீர் முஹம்மத், நெல்லை ஏர்வாடி

யார் இந்த தப்லீக் ஜமாத்:
-----------------------------

தப்லீக் ஜமாத் 1926 ஆம் ஆண்டு மெளலான முஹம்மது இல்யாஸ் அவர்களால் இந்தியாவில் மேவாத் என்ற இடத்தில் துவங்கப் பட்டது. அக்காலம் இந்தியா ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் முஸ்லீம்களை முஸ்லீம்களாக வாழச்செய்வது, முஸ்லீம்களிடையே சீர்திருத்தம் செய்வது. இது ஒரு ஆன்மீக இயக்கம். உலகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு. 90 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அளவில் இந்த இயக்கம் இன்றும் துடிப்புடன் செயல் பட்டுக் கொண்டிருப்பதற்கான முக்கியக் காரணம் இந்த அமைப்பின் மூலம் யாருக்கும் எந்த வகையிலும் இன்னல்கள் ஏற்பட்டதில்லை. இந்த இயக்கம் அரசியலைப் பற்றிப் பேசாது. ஆட்சியாளார்களைப் பற்றி பேசாது. பிற மதங்களை ஏசாது. ஏன் தன்னைப் பற்றி ஏசுபவர்களைக்கூடா, மெளனமாக, கண்ணியமாக கடந்து செல்லும். இந்த இயக்கத்தில் தேர்தல்கள் கிடையாது, பதவிகள் கிடையாது. இதற்காக வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கிடையாது. அதைவிட ஒரு படி மேலாக இதில் வேலைச் செய்பவர்கள் தங்களது சொந்தக் காசுகளைப் போட்டுத் தான் வேலைச் செய்யவேண்டும். ஏறக்குறைய உலகில் உள்ள எல்லா நாட்டு உளவுத் துறைகளும் இந்த அமைப்பை, இதன் செயல்பாடுகளை துருவி ஆராய்ந்துவிட்டனர். முடிவாக அனைத்து உளவு துறைகளின் ஆய்வறிக்கைகளும் ஒன்றைத் தான் முன்வைத்தன, எனக் கூறுவார்கள். அதாவது இவர்கள் வானத்திற்கு மேலை நடப்பதையும் பூமிக்கு கீழே நடப்பதைப் பற்றியும் தான் பேசுவார்களேத் தவிர மற்ற எதனைப் பற்றியும் இவர்கள் பேசுவதில்லை. ஏனெனில் அது தான் உண்மை.

இவர்களின் இப்படிப்பட்ட செயல்பாடுகளைப் புரிந்துக் கொள்ளவேண்டுமானால் இஸ்லாத்தின் சில அடிப்படைகளை நாம் தெரிந்துக் கொள்ளவேண்டும். இஸ்லாமிய கோட்பாடுகளின் படி இறைவன் மனிதர்களைப் படைத்தான். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களையும் பின்னர் அவரின் மனைவி ஹவ்வா( அலை) (ஏவாள்) அவர்களையும் படைத்தான். அவ்விருவர் மூலம் மனிதர்களை இந்தப் பூவுலகில் பல்கிப் பெருகிவிடச் செய்தான். இஸ்லாமிய கோட்பாடின் படி மனிதர்கள் குரங்குகளில் இருந்துத் தோன்றவில்லை. இறைவன் தான் மனிதர்களையும் படைத்தான், அந்தக் குரங்குகளையும் படைத்தான். இது எதில் இருந்துத் தோன்றியது என்ற கேள்விக்கு படிவளர்ச்சிக் கொள்கையால் இது வரை விடையளிக்க முடியாத ஒட்டகத்தையும் படைத்தான்.

மனிதர்கள் நேரான சரியான வழியில் வாழ்வதற்கு வழிகாட்டுவதற்காக அவன் தூதர்களையும் (நபிமார்கள்) அனுப்பிவைத்தான். அத்தூதர்களையும் அவன் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்தான். அவர்களும் மற்றவர்களைப் போன்ற மனிதர்களே. மற்ற மனிதர்களுக்கும் அவர்களுக்குமிடையிலான ஒரே வித்தியாசம், தூதர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களிலேயே நன்நடத்தையில், செயல்களில், குணத்தில் மிகச் சிறந்தவர்களாக் இருந்தார்கள். அவர்களுக்கு இறைனிடமிருந்து கட்டளைகள் வந்தன. அவற்றை அவர்கள் மனிதர்களுக்கு எடுத்துரைத்து நேரான வழியில் அழைத்தார்கள்.

இந்த உலக வாழ்க்கை தற்காலிகமானது. இந்த மனிதர்களில் நல்லவர்கள் யார்? தீயவர்கள் யார்? என்பதற்கான ஒரு தேர்வுக்களமே இந்த உலகம், இந்த உலகம் நீதிக்கான களமல்ல. இங்கே நீதியும் நடக்கும், அநீதியும் நடக்கும். இந்த உலகில் மனிதர்களுக்கு பலவிதமான சோதனைகள் உண்டு. அவனுக்கு நல்லது கெட்டது எது என்பதை சிந்தித்தறிய பகுத்தறிவும் உண்டு. இந்த உலகில் வரும் உயிர்கள் அனைத்தும் மரணத்தை சுகித்தேத் தீரும். ஒரு நாள் இந்த உலகம் தனது முடிவைச் சந்திக்கும். அப்போது எந்த உயிரினமும் இந்த உலகில் இருக்காது. பின்னர் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள். அப்போது இறுதி நீதித் தீர்ப்புநாள் நடக்கும். அந்நாளின் நீதிபதியாக யாவற்றையும் படைத்து பரிபக்குவபடித்திய அந்த ஒரே இறைவனே. அங்கே எந்த ஒரு ஆத்மாவுக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. மனிதர்கள் இந்த உலகில் தங்களது வாழ்க்கையை எப்படி வாழ்ந்தார்களோ அதன் அடிப்படையில் விசாரிக்கப் பட்டு அங்கே நியாயம் வழங்கப் படும். பின்னர் யாருடைய நன்மையான காரியங்கள் அவர்களது தீமையான காரியங்களை முந்திவிட்டதோ அவர்கள் சுவனத்திற்கும், யாருடைய தீயகாரியங்கள் அவர்களுடைய நன்மையான காரியங்களை மிகைத்துவிட்டதோ அவர்கள் நரகத்திற்கும் அனுப்பப் படுவர். அந்த ஒரே இறைவனின் முன்னால் யாரும் தப்பமுடியாது.

இந்த உலக வாழ்க்கை தற்காலிகமானது. ஆனால் சுவர்க்க/நரக வாழ்க்கையோ முடிவில்லாதது. ஆகவே உண்மையான வெற்றி என்பது நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனால் நல்லவர்கள் என்ற சான்றைப் பெறுவதே. - இது தான் இந்த தப்லீக் ஜமாத்தின் செயல்களுக்கான அடிப்படை. அதனால் தான் அவர்கள் மனிதர்களிடையே இறந்த பின் என்ன நடக்கும் என்பதையும் (அதாவது மண்ணுக்குக் கீழே) அதன் பின்னர் நியாயத் தீர்ப்பு நாளில் என்ன நடக்கும் (அதாவது வானத்தில்) என்பதைப் பற்றி மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்து இறைவனின் கட்டளைகள்படி மனிதர்களை வாழத்ட் தூண்டிக் கொண்டிருப்பவர்கள். அதற்காக மனிதர்களிடம் எந்தக் கூலியையும் எதிர்பார்க்காமல் தங்களது சொந்தக் காசை செலவழித்துக் கொண்டிருப்பவர்கள்.

இவர்கள் இதற்காக சில காலம் வெளியூர்களுக்கு அதாவது மூன்று நாட்கள், நாட்பது நாட்கள், நான்கு மாதங்கள் என அவரவர் சக்திகேற்ப பிற ஊர்களுக்கு, நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு செல்பவர்கள் மஸ்ஜிதுகளில் தான் தங்கவேண்டும். அவர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் ஹோட்டல்களில் தங்க முடியாது. அவ்வாறு செல்லும் இடங்களில் பல கிராமங்களாக இருக்கும், கொசுக்கடிகள் இருக்கும், பல இடங்களில் மின்விசிறிகள் இருக்காது, ஏன் படுப்பதற்கு சரியான படுக்கைகள் கூட இருக்காது. ஆனால் அவர்கள் அனைத்தையும் பொறுத்தே ஆக வேண்டும். அது மட்டுமல்ல தங்களது உணவை தாங்களே சமைத்துக் கொள்ளவும் வேண்டும். தங்களது இந்த முழு பிரயாணத்துக்கான செலவை அவர்களது சொந்தக் காசைக் கொண்டே அவர்கள் செலவிடவேண்டும். இதற்காக எந்த வித சம்பளமும் இந்த இயக்கம் இவர்களுக்குக் கொடுக்காது. அவர்களது முக்கியபணி அந்த இடத்திலுள்ள முஸ்லீம்களுக்கு போதனைச் செய்து அவர்களை இறையச்சமுடையவர்களாக மாற்றி இறைவனுக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள அதிகரிக்கச் செய்வது. இவர்கள் பிற மதத்தினரிடையே போதனைச் செய்வது மிக அரிது.

இந்த அமைப்பினர் தெருவில் வருகிறார்கள் என்றால் அங்கே அரட்டையடித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டம் காணாமல் போய்விடும். இறைவனின் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்லாமல் இருக்கும் மற்ற முஸ்லீம்களின் முகத்தில் அசடு வழியும். இந்த அமைப்பினருக்கு முஸ்லீம் சமூகம் வைத்திருக்கும் பெயர் “அல்லாஹ் போலீஸ்”. ஆனால் இவர்களின் வார்த்தைகளில் கடுமையிருக்காது மாறாக கண்ணியம் இருக்கும். முஸ்லீம்களின் கடமைகளை ஞாபகமூட்டுவார்கள். தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருமாறு கோருவார்கள்.

டில்லி நிஜாமுத்தீன் மர்கஸ்:
---------------------------------
இந்த அமைப்பின் தலைமையகம் டில்லியில் நிஜாமுத்தீன் என்ற இடத்தில் உள்ளது. மர்கஸ் என்றால் சென்டர் என்று அர்த்தம். மேலே குறிப்பிட்டப்படி இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்காக வெளிநாடு செல்பவர்களும், அங்கிருந்து இந்தியாவிற்கு வருபவர்களும் முதலில் இங்கிருந்து தான் பயணத்தை ஆரம்பிக்கவேண்டும். சர்வதேச அளவில் வருடம் முழுவதும் செயல் பட்டுக் கொண்டிருப்பதால் எந்த நேரமும் சுமார் ஆயிரம் பேராவது இங்கே இருந்துக் கொண்டேயிருப்பார்கள். மீடியாக்களில் குறிப்பிடுவது போல் இது விசேசமாக நடத்தப்பட்ட மாநாடு இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு ஜமாத்தினாருக்கான ஆலோசனைக் கூட்டம் அங்கே நடைபெற்றது. தன்னிச்சையாக யாரும் இந்த அமைப்பின் பேரில் வெளிநாடுகளுக்கு செல்லவும் முடியாது, அங்கிருந்து இங்கே வரவும் முடியாது. மேலும் யார் யார் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கின்றார்கள் அவர்கள் எத்தனை நாட்கள் தங்குவார்கள் அவர்கள் எங்கெங்கே இந்தியாவில் சென்றிருக்கின்றார்கள், செல்வார்கள் என்ற முழு விவரமும் அரசாங்க அதிகாரிகளுக்கு தெளிவாக தெரிவிக்கப்படும். அதிகாரிகள் இங்கே வந்து விவரங்களைப் பெற்று செல்வது வழக்கமான ஒன்று. அரசாங்கத்துடன் முழு ஒத்துழைப்பையும், அரசாங்க சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருவதால் தான் இத்தனை வருடங்களாக இந்த அமைப்பை தனது செயல்பாட்டைத் தொடர்ந்து வருகிறது.

கொரோனா - நடந்ததென்ன?:
--------------------------------
இந்தியப் பிரதமர் கொரோனாவிற்காக 22ஆம் தேதி ஒரு நாள் ஊரடங்காக அறிவித்தார். மர்கஸில் 22ஆம் தேதி யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப் படவில்லை. 22ஆம் தேதி மாலையே 23ஆம் தேதியிலிருந்து 21நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்த உடனேயே மர்கஸில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் பட்டன. அவரவர்கள் தத்தமது ஊருக்குச் செல்லுமாறு பணிக்கப் பட்டனர். ஆனால் எல்லோராலும் கிளம்பிச் செல்ல முடியவில்லை ஏனெனில் அரசாங்கம் அனைத்துப் போக்குவரத்துகளையும் ரத்துச் செய்திருந்தது. ரயில் மற்றும் பஸ் போக்குவரத்துகள் நிறுத்தப் பட்டிருந்தனர். தங்கியிருப்பவர்கள் வெளியே செல்வதற்காக சில வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு சம்பந்தப் பட்ட அதிகாரிகளை அணுகியிருக்கின்றார்கள். ஆனால் எந்த பதிலும் இல்லை. வெளியூர் மக்கள் வெளியே போகமுடியாத சூழ்நிலையில் தங்கியிருப்பவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப் படுத்துவதற்காக அந்தப் பகுதி தாசில்தாரை தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பிரகாரம் 25-ம் தேதி மருத்துவக்குழுவுடன் அந்தப் பகுதி தாசில்தார் மர்கஸ்க்கு வந்து ஆய்வு செய்து, அங்கு வந்து சென்றவர்களின் பட்டியலை வாங்கியதோடு, அப்போது அங்கு தங்கியிருந்தவர்களின் உடல்நிலை பற்றியும் ஆய்வு செய்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு தப்லீக் ஜமாஅத் நிர்வாகம் முழுமையாக ஒத்துழைப்புத் தந்துள்ளது.

பாடம் படிக்கத் தவறியவர்கள்:
-------------------------------------
ஓ மனிதா! அதிகமாக ஆட்டம் போடாதே! அறிவின் உச்சிக்கே சென்றுவிட்டாய் என்று நினைக்காதே! உன்னை மீறிய சக்தி ஒன்று உண்டு! உனது அறிவு மிக மிக அற்பமானது என்பது தான் மனிதன் கொரோனாவிலிருந்து கற்கவேண்டிய பாடம். அதைச் சரியாக செய்திருந்தால் அவனது திரும்புதலும் அந்த ஏக இறையோனின் பக்கமே இருந்திருக்கும். ஆனால் இந்தியாவில் நடந்ததோ, இந்தக் கஷ்டமான நேரத்திலும் கச்சிதமாக அரங்கேற்றப் பட்ட மதத் துவேசம்.

மீடியாக்களும், பாசிஸ வாதிகளும் தங்களது இஸ்லாமிய எதிர்ப்பின் உச்ச கட்டமாக, உலகம் முழுவதும் கொரோனாவிற்காக மருந்தைத் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கொரோனாவிற்கான மதத்தை தீர்மானிக்கும் நோக்கில் உலக ஆசாபாசமற்ற தப்லீக்கின் மீது அவதூறுகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றனர். தங்களது சூழ்ச்சிகளை மிக கச்சிதமாக அரங்கேற்றிவிட்டதாக மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். மார்ச் 22ஆம் தேதிக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் நடந்த பல அரசியல் மற்றும் மதக் கூட்டங்களையெல்லாம் பற்றிக் குறிப்பிடவில்லை. ஊரடங்கு அமல் படுத்திய நேரத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அரசாங்கம் சரியான ஏற்பாடுகளைச் செய்யாததால் பல நூறு கிலோமீட்டர்கள் குழந்தைகளுடன், பெண்களுடன் உண்ணுவதற்கோ உணவோ, தண்ணீரோ இல்லாமல் தங்களது ஊருக்கு நடந்த அவலத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஊரடங்கு நேரத்தில் உத்தரபிரதேச முதல்வர் கலந்துகொண்ட ராமர் கோவில் நிகழ்ச்சியைப் பற்றி குறைக் கூறவில்லை. ஆனால் எந்த செய்தித் தாளைப் பார்த்தாலும் எந்த தொலைக் காட்சியை திருப்பினாலும் ஒரே செய்தி, தப்லீக் ஜமாத்,
டில்லி, கொரோனா சொல்ல வந்த செய்தி முஸ்லீம்கள் கொரோனாவைப் பரப்புகின்றனர். எந்தவித மனசாட்சியுமில்லாமல், எந்தவித ஆதாரமுமில்லாமல், தப்லீக் பற்றி எந்தவித அடிப்படை அறிவுமில்லாமல் அவர்கள் ஒத்துழைப்பதில்லை, மருத்துவர்கள் மீது துப்புகிறார்கள், அத்து மீறி நடக்கின்றார்கள் என்று வாயில் வந்ததையெல்லாம் அவதூறாக பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

தப்லீக் காரர்களை எதுவும் தெரியாத முட்டாள்கள் என்று விமர்சிக்கின்றனர். இன்றைய உலகச் சூழலில் ஆன்மீகத்தில் உச்சத்தில் இருக்கும் தப்லீக்காரர்களின் வேண்டுதல்களும் முறையீடுகளும் அந்த அடக்கியாளும் வல்லமைக் கொண்ட அல்லாஹ்விடம் மட்டும்தான் இருக்கும் என்பதையும், அதையும் அவர்கள் ஊரெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், இரவு நேரத்தில் இருக்கும் என்பதையும் உணராத இவர்கள்தான் உண்மையிலேயே முட்டாள்கள். அல்லாஹ்விற்காக அவர்கள் எந்தளவிற்கு தியாகம் செய்கிறார்கள் என்பதை மேலே குறிப்பிட்டுள்ளேன். இவர்கள் அல்லாஹ்வின் நேசர்கள். தனக்காக எல்லாத்தையும் தியாகம் செய்யும் ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் எப்படி நேசிக்காமல் இருப்பான்? தப்லீக்கில் சில உத்தம மனிதர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் ஒரு விசயத்தை அல்லாஹ்விடம் கேட்டால் அதனை அவன் நிறைவேற்றாமல் இருப்பதில்லை. எல்லோரின் நேரான பாதைக்காக, எல்லோரின் நலனுக்காக, எல்லா நேரமும் பிரார்த்திக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தையும் அதைச் சேர்ந்தவர்களையும் இழிவுப் படுத்தும் இந்த அநீதமான செயல் இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் செயல் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

ஆனால் தப்லீக் ஜமாத்தினர் இந்த அவதூறுகளை பொருட்படுத்தப் போவதில்லை. கண்ணியமும், இழிவும் அல்லாஹ்வின் கையில், அது மனிதர்கள் கையில் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களது நம்பிக்கை என்றென்றும் அல்லாஹ் ஒருவனின் மீது மட்டுமே. இதைப் பற்றி அல்லாஹ் தனது வேதமான குர்ஆனிலேயே பின்வருமாரு கூறுகின்றான்.

நபியே! உங்களை அவமதித்துக் கூறும்) அவர்களுடைய வார்த்தைகள் உங்களை சஞ்சலப்படுத்த வேண்டாம். நிச்சயமாக கண்ணியம், (மரியாதை) அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (அவன் விரும்பியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்.) அவன்தான் செவியுறுபவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன்: 10:65.)

(நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர் களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப் படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (குர்ஆன் 3:26)

அல்லாஹ் யாரை இழிவுப் படுத்த நாடுகின்றானோ அவர்களை இந்த ஒட்டு மொத்த உலகமும் ஒன்றாக இணைந்தாலும் கண்ணியப்படுத்த முடியாது. அல்லாஹ் யாரை கண்ணியப்படுத்த நாடுகின்றானோ அவர்களை இந்த ஒட்டு மொத்த உலகமும் ஒன்றாக இணைந்தாலும் இழிவுப் படுத்த முடியாது.


இனி என்ன நடக்கும்?:
-------------------------

இன் ஷா அல்லாஹ் இந்த உலகம் பார்க்கும். எந்த கொரோனாவைக் கொண்டு தப்லீக்கை, இறைவனின் அடியார்களை, முஸ்லீம்களை இவர்கள் இழிவுப் படுத்த நினைக்கின்றார்களோ, அதேக் கொரோனோவைக் கொண்டு அல்லாஹ் இந்தச் சமுதாயத்தைக் கண்ணியப் படுத்துவான். இதை இந்த உலகம் காணத்தான் போகின்றது. அவன் ரோஷக்காரன். யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவன். உதாரணத்திற்கு ஒன்றைக் கூறவேண்டுமானால் எந்த அரசாங்கங்கள் இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூடுவதற்கு தடைகள் விதித்தத்தோ அதே அரசாங்கங்கள் இன்று தனது நாட்டின் அனைத்து மக்களையும் வெளியே வரும்போது முகத்தை மூடுமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது.

கொரோனாவின் பலத்தைப் பற்றி அஞ்சுபவர்கள் மனிதர்கள். அல்லாஹ்வின் பலத்தைப் பற்றி மட்டுமே அஞ்சுபவர்கள் இறைவனின் அடியார்கள். இந்த கொரோனா விசயத்தில் தப்லீக்காரர்களுடன் தொடர்பில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், மருத்துமனை ஊழியர்கள் எத்தனை பேர்களின் மனம் ஏற்கனவே இஸ்லாத்தில் பால் ஈர்க்கப் பட்டுள்ளது என்பதை அல்லாஹ் ஒருவனே நன்கறிவான்.

இஸ்லாத்தின் எதிரிகள் தாங்கள் மிகக் கச்சிதமாக காய்களை நகர்த்தியிருக்கின்றோம் என்று ஆனந்தப் படலாம். அதே நேரத்தில் உண்மையான முஸ்லீம்களும் ஆனந்தப் படுகின்றனர். அல்லாஹ்வின் உதவி நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையறிந்து. இது வரை இலைமறைக் காய்போல் இருந்த தப்லீக் மூலம் இந்த உலகம் இனிதான் உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன? இறைக்காதல் என்றால் என்ன? இறைத் தியாகம் என்றால் என்ன? என்று பாடம் கற்கப் போகின்றது. இஸ்லாம் இந்தியாவில் கூட்டங் கூட்டமாக மக்களைத் தன்பால் இழுக்கும் நேரம் நெருங்கிவிட்டது.

சத்தியம் வந்தே தீரும் அசத்தியம் அழிந்தே தீரும்
General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..