Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பதில்லையா? அதற்கு சமுதாயம் அனுமதிப்பதில்லையா?
Posted By:peer On 6/10/2019 2:46:31 PM

இந்தியாவில் மிக ஏழ்மையான நிலையில் இருப்போர் செய்யும் இரண்டு தொழிலில் ஒன்று பீடி சுற்றுவது இரண்டாவது தையல் வேலை செய்வது, இது இரண்டையும் இந்தியாவில் அதிகம் செய்வோர் முஸ்லிம் பெண்களே! தகவல் எடுக்கப்பட்டது நீதிபதி ராஜேந்திர சச்சாரின் "இந்திய முஸ்லிம்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை" ஆய்வறிக்கையின்படி.

முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை என்கிற பொது ஊடகங்களின் இட்டுக்கட்டப்பட்ட மாயையை முறியடிக்கும்விதமாக முஸ்லிம் பெண்கள் ஆங்கில வழி கல்விச்சாலைகளுக்கு தான் செல்வதில்லையே தவிர ஆரம்பக்கல்வி மக்தப் மதரஸாக்களுக்கு கட்டாயம் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பொது பள்ளிகளின் அரைகுறை யூனிபார்ம், ஆண்-பெண் கலந்திருப்பது இவற்றிலிருந்து தவிர்த்துக்கொள்ளவே அவர்களது பெற்றோர் இந்த வழியை கையாளுகின்றனர். அவர்களது வேத நூலான குர்ஆனை கற்றுக்கொள்ள அரபும், நபிகள் பொருமகனாரின் வாழ்வியலை பயில உருதுவும் அவர்கள் கற்றுக்கொள்ளவே செய்கிறார்கள். இது தாய்மொழிக்கல்வி என்கிற வரம்பினுள் வருகிறதே தவிர இந்தியா அமுல்படுத்தி வைத்திருக்கும் மெக்காலே கல்வி திட்டத்திற்குள் வரவில்லை என்பதாலே முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை என்கிற பொய்யை இட்டுக்கட்டி வருகின்றனர்.

துரதிருஷ்டவசமாக குருகுல கல்விக்கூடங்களில் பயின்று வருவோருக்கு மத்திய அரசு பணிகள் கிடைக்கிறது ஆனால் மதரஸாவில் படிப்போருக்கு அப்படி அமைவதில்லை. மஹராஸ்டிரா மாநிலம் லாத்தூரில் நடைபெறும் ஒரு சிறிய குருகுலம், அங்கு படித்துவிட்டு சென்றால் கூட மஹராஷ்டிரா மாநில பணியிடங்களில் அவர்களுக்கு ப்ளேஸ்மண்ட் கிடைக்கும்...நமக்கு கிடைக்குமா?

அடுத்தது முஸ்லிம் சமுதாயம் பெண்களை பணியிடங்களுக்கு அனுப்புவதில்லை என்கிற வரலாற்று பொய்யை மீண்டும் மீண்டும் நிறுவ முயற்சிப்பார்கள். இந்தியா கல்விக்கொள்கைப்படி ஆங்கிலவழி பாடங்கள் போதிக்கப்படும் இஸ்லாமிய கல்வி சாலைகளில் பணிபுரியும் ஆசிரியைகள் அனைவரும் முஸ்லிம் பெண்களே, இஸ்லாமிய மருத்துவ சேவை மையங்களில் பணிபுரியும் செவிலியர்கள், மருந்தாளுனர்கள், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்வோர், ஸ்கேன் பரிசோதகர்கள் என அனைவரும் முஸ்லிம் பெண்களே! இஸ்லாமிய தொழில்துறைகளிலும் வணிக ஸ்தாகனங்களிலும் பணிக்கு வருவோரில் சரிபாதி பேர் முஸ்லிம் பெண்கள். அதுபோக அரசு துறைகளிலும், நீதிமன்ற பணிகளிலும், காவலர் பிரிவிலும் என எல்லா பணியிடங்களிலும் இட ஒதுக்கீட்டை தற்போது பூர்த்தி செய்துகொண்டிருப்பது முஸ்லிம் ஆண்களைவிட பெண்களே அதிகம்.

தனிநபராக தொழில் தொடங்கி சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் எத்தனையோ முஸ்லிம் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை எல்லாம் கணக்கில் சேர்க்கமாட்டீர்களா என்றால் ஆபிஸ் வேலைக்கு எங்கே போகிறார்கள் முஸ்லிம் பெண்கள் என்கிறார்கள்? படித்த படிப்பிற்கு ஏதோ ஒரு ஆபிசிற்கு அடிமாட்டு சம்பளத்திற்கு வேலைக்கு போவது தான் சம்பாதிப்பதாக அர்த்தமா? முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வாருங்கள், அங்கே ஆண்கள் நடத்தும் கடைகளில் ஆள்மாற்றி வைக்க தங்களது மனைவியரையும் தாய்மாரையும் தானே விட்டுச்செல்கிறார்கள். மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், பால் பூத், காய்கறிகடை, களப்பு கடை, ஓட்டல்கள், தையலகம், புத்தக கடை, ஜவுளிக்கடை இன்னபிற வியாபார ஸ்தலங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்தும் ஹிஜாப் கட்டியும் வேலைக்கு போவதை நீங்கள் காணவில்லையா..? வருமானம் போதாதபட்சத்தில் தற்போது எல்லா பிரிவிகளிலும் முஸ்லிம் பெண்களும் மாற்றுமத பெண்களுக்கு இணையாக சம்பாதிக்க வந்துவிட்டார்கள்...ஆனாலும் இன்னும் சிலர் இஸ்லாமிய பெண்கள் பணிகளுக்கு போக அனுமதிக்கப்படுவதில்லை என்றே கூறிவருகின்றனர்.

எத்தனை பெண் கல்வியாளர்கள், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளை உருவாக்கி அதனை திறம்பட நடத்தி வருகிறார்கள்..ஆண்களைவிட ஆளுமைத்திறனில் அதிகம் மிளிர்கிறார்கள் என எப்போதாவது சன்னல் வழியே உலகை எட்டி பார்த்ததுண்டா? இவர்கள்.

முதலில் இஸ்லாம் , பெண்களை சம்பாதிக்க விடாமல் ஒடுக்குகிறது என்றவர்கள், அதற்கான பொறுப்பான பதில்கள் கொடுத்துவிட்ட பிறகு இப்போது முஸ்லிம் சமுதாயம், குறிப்பாக ஆண்கள் , தங்களது பெண்களை வருமானம் தேட அனுமதிப்பதில்லை என அங்கலாய்க்க தொடங்கிவிட்டனர். உண்மையாலுமே முஸ்லிம் பெண்கள் யாரும் சம்பாதிப்பதே இல்லையா இல்லை ஆண்கள் அவர்களை அடிமைப்படுத்தி தான் வைத்துள்ளார்களா? ஒருவேளை சம்பாதிக்க போன பெண்களில் எத்தனை பேரை முஸ்லிம் ஜமாத்துகள் பத்வா கொடுத்து ஊர்நீக்கம் செய்து வைத்துள்ளனர் என்கிற புள்ளிவிபரத்தை எங்களுக்கும் தரலாமே.

இந்திய அளவில் வேண்டாம், தமிழகத்தையே எடுத்துக்கொள்வோம், இங்கே கடலைமிட்டாய் தயாரிப்பது, வீடுகளில் போய் பெரியவர்களுக்கு மருத்துவ உதவி செய்வது, வீடு வீடாக சென்று வத்தல் வடாம் விற்பது, வீட்டிலேயே இருந்து பெண்களுக்கான மலிவு விலை பேடுகள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் தயாரிப்பது போன்ற பணிகளில் கீழ்த்தட்டு முஸ்லிம் பெண்களும், ப்யூட்டி பார்லர் நடத்துவது, மாடலிங் துறை, பேஷன் டிசைனிங், டிவி காம்பியரிங், சீரியல் ஆக்டிங் போன்ற்றறை மேற்தட்டு முஸ்லிம் பெண்களும் செய்து வருகிறார்கள்.

கல்வியில் மேன்மை பெற்ற பெண்கள் ஆசிரியைகளாக,பேராசிரியைகளாக,லைப்ரேரியன்களாக, பப்ளிகேஷன்ஸ் நடத்துவோராக, மேடைப்பேச்சாளர்களாக,மார்க்க சொற்பொழிவு செய்வோராகவும் உள்ளனர். அவர்களில் சிலர் புர்கா எனும் கருப்பு ஆடையும் அணியமாட்டார்கள், தலையில் முக்காடும் இட மாட்டார்கள் ஆனால் முஸ்லிம் பெண்கள் தான். இதைவிட சம்பாதிக்க வேறு எந்த துறையை தேர்ந்தெடுக்கவேண்டும் என கூறுகிறார்கள் தெரியவில்லை. எல்லோரும் ஏரோப்பிளேன் ஓட்ட போனால் பிற பணிகளை யார் தான் செய்வது. ஆண்களில் அத்தனை பேரும் ஐஏஎஸ் ஐபிஎஸ்ஸாக இருந்தால் இதர வேலைகளை யார் பார்ப்பது அந்த தியரி முஸ்லிம் பெண்களுக்கும் வொர்க் அவுட் ஆக வேண்டும் தானே.

வீட்டில் இருந்தபடியே சேலைகள், துணிமணிகள் விற்றோர், பலகாரங்கள் செய்து விற்றோர் இப்போது அவர்களை அப்டேட் செய்துகொண்டு...முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக ஆன்லைன் பிசினஸ் செய்கிறார்கள், வேலையில்லா பட்டதாரிகளை பணிக்கு சேர்த்துக்கொண்டு ஆன்லைனில் ஆர்டர் கொடுப்போருக்கு டோர் டெலிவரி செய்வது வரை முன்னேறிவிட்டார்கள். சாதாரணமாக குக்கிங் வீடியோ போட்டு யூடியூபில் சம்பாதிப்போர் உள்ளனர். இன்னும் கூட முஸ்லிம் பெண்கள் முன்னேறவில்லை என்றால்... நீங்கள் எதிர்பார்க்கும் பெண் பணிகள் என்ன? சம்பாத்தியம் என்ன? அவரவரும் அவரவருக்கு விருப்பப்பட்ட தொழில்களை குடும்பத்தின் அனுமதியோடு கணவரின் உதவியோடு செய்து கொண்டுதானே உள்ளார்கள். அவர்களை சமூகத்தைவிட்டு யார் தள்ளி வைத்தது.

ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிக்க வேண்டாம் என தடுத்த புதுக்கோட்டை மாணவியின் குடும்பத்தாருக்கு கூட வேறு ஒரு முஹல்லாவை சேர்ந்த உலமா குழுவை கொண்டு அறிவுரை கொடுத்து அப்பெண்ணை மேற்கொண்டு படிக்க ஆவணசெய்த சமுதாயமும் முஸ்லிம் சமுதாயம். எங்கோ யாரோ செய்யும் தவறை ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் பழியாக சுமத்துவது சரியல்ல.

கல்வித்தகுதி இருந்தும், குடும்பத்தின் கணவரின் அனுமதி இருந்தும் பல பெண்கள் வேலைக்கு போவதில்லை காரணம் வீட்டில் இருக்கும் பெற்றோரை கவனிக்க வேண்டும், குழந்தைகளை பராமரிக்க வேண்டும், அவர்களை வேறொருவர் கைகளில் ஒப்படைத்துவிட்டு நாம் பணிக்கு போக வேண்டுமா என்கிற அக்கறையிலும், தமது வருமானத்தை வைத்து குடும்பம் நடத்த வேண்டும் என்கிற நிலையில் குறைந்தளவு சம்பளத்திற்கு பல கஷ்டங்களை அனுசரித்து போக வேண்டுமா? என்கிற சமயோஜிதத்திலும், பணியிடங்களில் பெண்களுக்கு உண்டாகும் பாலியல் தொல்லைகள் அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காகவும் பல பெண்கள் தாங்களாகவே பணியிடங்களுக்கு போக விரும்புவதில்லை.

பெண்ணுக்கு சம்பாதிக்கும் தேவை எப்போது வரும்? பெற்றோரில்லாத,கணவரில்லாத,மகனோ,சகோதரனோ இல்லாமல் வாழ்வாதாரத்திற்கு போராடும் பெண், கணவர் இருந்தும் அவருடைய சம்பாத்யம் போதாமலும் குடும்பத்தை இயக்க இயலாமலும் இருக்கும் பெண்கள் தான் சம்பாதிக்க இறங்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். கணவனுடைய வருமானமே இரண்டு குடும்பத்திற்கு மிச்சமானது, குடும்பத்தின் சொத்துபத்துக்கள் ஏராளம் எனக்கு சம்பாதிக்க அவசியமில்லை சொத்துக்களை பராமரித்தாலே போதும் என்கிற நிலையில் பெண்கள் எதற்கு சம்பாதிக்க வேண்டும்.

- ரோஸி.நஸ்ரத்




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..