Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு
Posted By:peer On 11/26/2018 5:53:24 AM

நேற்று (நவ 24, 2018) மாலை சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு குறித்து..
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

அது CPM கட்சியின் சிறுபான்மை அமைப்பு நடத்திய மாநாடு. அதில் நான் ஒரு பேச்சாளனாகக் கலந்து கொண்டேன். இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். கூடுதலாக நான் சொல்லவும், சுட்டிக் காட்டவும் விரும்புபவை:

1. அங்கே பொதுவான தீர்மானங்களாக முஸ்லிம்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ரெங்கநாத் மிஸ்ரா ஆணையம், சச்சார் ஆணையம் முதலானவற்றின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தீர்மானம் இயற்றினார்கள்.அவை மட்டும் போதாது. இது போல எண்ணற்ற மாநாடுகளில் தீர்மானங்கள் இயற்றப்பட்டுவிட்டன, முதல் மாநாடு ஜூலை 05, 2008 க் சென்னை ருஷ்யன் கலாச்சார மையத்தில் நாங்கள் கூட்டிய மாநாடுதான். கோவை வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குப் பின் ஒன்பதாண்டுகள் வரை முஸ்லிம் அமைப்புகளும் கூட யாரும் விடுதலை குறித்துப் பேசவில்லை. பேச முடியாத அளவிற்குச் சூழல் இருந்தது. 9 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையான நாகூர் அமானி, உடுமலைப்பேட்டை அப்துல் கய்யூம், சென்னை இப்றஹீம் என்கிற மூன்று இளம் முஸ்லிம்கள்தான் அப்படியான ஒரு பொதுக் கோரிக்கை உருவாக வேண்டும் என ஒவ்வொரு தலைவர்களையாகச் சென்று பார்த்து வேண்டிக் கொண்டிருந்தார்கள். 2006,7,8 ஆண்டுகளில் கருணாநிதி அரசு 10 ஆண்டுகள், ஏழு ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சுமார் 1500க்கும் மேற்பட்டோரை விடுதலை செய்யப்பட்டபோதும் முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படவில்லை. எங்கள் மாநாட்டிற்கு டெல்லியில் இருந்தும் கொல்கத்தாவில் இருந்தும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கத் தலைவர்கள்எஸ்.ஏ.ஆர் கிலானி, அமித் பட்டாச்சார்யா தமிழகத்தின் மூத்த அரசியல் கைதிகளான நல்லகண்ணு, தியாகு மற்றும் பார்த்திமா முசாஃபர், நான் ஆகியோர் பேசினோம். பெருந்திரளாக முஸ்லிம் மக்கள் அதில் கலந்து கொண்டனர். அதற்குப் பின்தான் முஸ்லிம் சிறைக் கைதிகள் வுடுதலை என்பது இங்கொரு பேச்சு பொருளானது. அதன்பிந்தான் பெரிய அளவில் ஆங்காங்கு முஸ்லிம்கள் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடுகள் நடத்தினார்கள்.

2. முஸ்லிம் கைதிகளாக இருக்கட்டும், "ஏழு தமிழர் விடுதலை" தொடர்பான தமிழக இயக்கங்கள் ஆகட்டும் அவர்களின் கோரிக்கைகள் இம்மியும் முன் நகராமல் இருப்பதற்கான காரணம் ஒன்று உண்டு. இந்த வழக்குகள் அனைத்திலும் வெடிமருந்துகள் தடைச் சட்டம் தொடர்பான CrPC 435 பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது, இது ஒரு மத்திய அரசுச் சட்டம். எனவே இப்படியான விடுதலைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்கிற விதியை மத்திய அரசுகள் இறுக்கிப் பிடித்துக் கொண்டு இந்த விடுதலைக்குத் தடையாக உள்ளன. மன்னிப்பு அளிப்பது என்பது முற்றிலும் மனிதாபிமானக் கோணத்தில் இருந்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று. சட்ட நெறிமுறைகளின்படி தீர்ப்பளிக்கும் வேலையோடு நீதிமன்றத்தின் பணி முடிந்துவிடுகிறது. மன்னிப்பு என்பது இந்தச் சட்ட அமைப்புகளுக்கு அப்பால் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரால் வழங்கப்படுவது என்பதன் பொருள் இதுதான். மன்னிப்பு வழங்குவது என்பது அக் கைதியின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள், அவர் வயது, அவரை நம்பியுள்ள குடும்பம், அவரது உடல்நிலை முதலான பல காரணங்கள் முக்கியம் வகிக்கின்றன. எனவே அதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அவர் சிறைப்பட்டுக் கிடக்கும் மாநிலத்தில் அரசுக்குத்தான் உள்ளது. 2000 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள மத்திய அரசுக்கு இதை முடிவு செய்யும் தகுதி இல்லை. அவர் எந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டிருந்தாலும் பிரச்சினை இல்லை. Cr PC 435 ஐக் காட்டி மத்திய அரசு இந்த உரிமையை இன்று பறித்து வைத்துள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இதை உடைத்தாக வேண்டும். நேற்றைய மாநாடு இதைக் கணக்கில் கொள்ளவில்லை. நான் மட்டுமே அதைப் பேசினேன். பின்னால் பேசிய CPM அருணன் அதை அடக்கி வாசித்தார். இந்தப் பிரச்சினையையும் சிறுபான்மை நலக் குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. நேற்றைய மாநாடு பல்வேறு வகைகளில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. அண்ணாமலை மன்றம் நிரம்பி வழியும் அளவிற்குக் கூட்டம் இருந்தது. முஸ்லிம்களைக் காட்டிலும் Non Muslims அதிக அளவில் திரட்டப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. CPM கட்சியையும் அவர்களின் சிறுபான்மை நலக்குழுவையும் இதற்காக வெகுவாகப் பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் அங்கு கிறிஸ்துவத் தலைவர்கள் அழைக்கப்பட்ட அளவிற்கு இந்தப் பிரச்சினைகளுக்காகப் பத்தாண்டுகளாக இதைப் போன்ற பல்வேறு மாநாடுகளையும், போராட்டங்களையும் நடத்தி வரும் முஸ்லிம் அமைப்புகள் ஏன் புறக்கணிக்கப்பட்டன எனவும் எனக்குத் தெரியவில்லை. அவர்களும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. இடதுசாரிக் கட்சிகளுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் ஆன தொலைவு அதிகமாகிக் கொண்டுள்ள நிலையில் இந்த அம்சத்தில் சிபிஎம் கட்சி இன்னும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

(2008 முதல் மாநாட்டில் நாங்கள் வெளியிட்ட முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான விரிவான குறுநூல் கீழே)




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..