Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்!
Posted By:peer On 11/17/2018 10:09:13 AM


இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம் இன்று (நவம்பர் 11).

அபுல் கலாம் முஹ்யத்தின் அஹமது என்ற இயற்பெயரைக் கொண்ட "மௌலானா ஆசாத்" அவர்கள் புனித மெக்காவில் (1888, நவம்பர் 11ல்) பிறந்தார். வங்காளத்தில் வசித்த குடும்பம் 1857 சிப்பாய் புரட்சியின்போது மெக்காவில் குடியேறியது. இவர் பிறந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பம் கல்கத்தா திரும்பியது. 10 வயதிலேயே குர்ஆனைக் கற்றுத் தேர்ந்தார்.

முதலில் தந்தையிடமும் பின்னர் வீட்டிலேயே ஆசிரியர்கள் மூலம் கணிதம், தத்துவம், உலக வரலாறு, அறிவியல் கற்றார். 12 வயதிலேயே இலக்கியப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். 16 வயதில் வாரப் பத்திரிகை, மாத இதழ் தொடங்கி நடத்தினார். 17 வயதுக்குள் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற (மவுலானா) ஆன்மீகவாதியானார்.

பல மொழிகளில் புலமை பெற்றவர். வங்கப் பிரிவினையின்போது அரசியலில் நுழைந்தார். நாடு முழுவதும் சென்று உரையாற்றி, இளைஞர்களிடம் தேசபக்தியை உண்டாக்கினார். இவரது உரைகளில் இலக்கிய நயத்தோடு, புரட்சிக் கனலும் தெறித்தது.

ஆங்கில அரசை எதிர்த்துப் போராடிய அரவிந்தருக்கு உறுதுணையாக இருந்தார். வங்கம், பிஹாரில் செயல்படுவதுபோன்ற ரகசிய இயக்கங்களின் கிளைகள் நாடு முழுவதும் பரவ வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக நாடு முழுவதும் மாறுவேடத்தில் சென்று பணியாற்றினார்.

ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.

அல்ஹிலால்’ என்ற உருது வார ஏட்டைத் தொடங்கி, புரட்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். இந்த அச்சகத்தை அரசு 1915-ல் பறிமுதல் செய்த பிறகு, ‘அல்பலாக்’ என்ற ஏட்டைத் தொடங்கினார். இதையடுத்து, இவரை வங்காளத்தைவிட்டு வெளியேற அரசு உத்தரவிட்டது.

பம்பாய், பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேச மாகாண அரசுகளும் இவருக்குத் தடை விதித்தன. பிஹார் சென்றார். ஆறே மாதங்களில் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார்.

திலகர், காந்தியடிகளை 1920-ல் சந்தித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியா பிளவுபடுவதைத் தடுக்க தீவிரமாகப் பாடுபட்டார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அமைக்கப்பட்ட அரசில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சங்கீத நாடக அகாடமி (1953), சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.

ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித் துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.

உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத்.
ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகத்தை (ஐஐடி) நிறுவினார். அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளியை ஏற்படுத்தினார்.

மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.

அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது.

பிளாட்டோ, அரிஸ்டாட்டில் பிதாகரஸ் ஆகிய மூவரும் சேர்ந்த ஆளுமை இவர்’ என்று காந்தியடிகள் இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த உருது எழுத்தாளராகப் போற்றப்பட்டார்.

இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய இஸ்லாமியத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அபுல் கலாம் ஆசாத் தமது 70-வது வயதில் (1958 ல்) மறைந்தார். உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத். பின்னர் அவரது மறைவுக்குப் பிறகு தாமதமாக 1992-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவரது பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர்.தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் அவரின் பிறந்த தினத்தன்று ஆசாத் நாட்டுக்கு ஆற்றிய அரும் பணிகளை நாமும் நினைவு கூர்வோம்.
Image may contain: 1 person, hat and text




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..