Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன்
Posted By:peer On 11/17/2018 10:08:47 AM

திட்டமிட்டு மறைக்கப்பட்ட மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன்

இரண்டு முறை தூக்கிலிட்டும் உயிர்நீங்கா மாவீரன், இறுதியாக மூன்றாவது முறை மிகத் திடமான கயிற்றில் நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் அந்த மாவீரனின் உயிர் பிரிந்தது. ஒட்டுமொத்த நாடும் துயரில் மூழ்கியது. அதோடு நிற்கவில்லை. மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர். உடல் பாகங்களை தனித்தனியே வெற்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைத்து அடக்கம் செய்தனர். ஆம், உயிர்நீத்த பின்பும் எதிரிகள் கண்டு அஞ்சியது மருதநாயகத்தின் உடலைத் தான். யார் இந்த மருதநாயகம், தமிழகத்தில் இவரால் பயனடைந்த பகுதிகள் தான் என்ன ? என்ற ஒட்டுமொத்த தேடலின் ஓர் சிறிய பகுதிதான் இக்கட்டுரைத் தொகுப்பு. சுற்றுலாவுடன் கொஞ்சம் வரலாற்றையும் அறிவோம்.

மருதநாயகம்

கடந்த 1997 ஆம் வருடம் பிரபல நடிகர் மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஒன்றை எடுக்கப் போவதாக அறிவித்தார். அன்று முதல் இன்று வரையிலும் இப்படம் குறித்தும், யார் அந்த மருதநாயகம் என்ற கேள்வியும் பரவலாக விவாதிக்கப்பட்டே தான் வருகிறது. காரணம், இந்தியப் போராட்ட வீரர்களில் மதத்தால் மறக்கடிக்கப்பட்டவர் இவர். அது ஒருபுறம் இருக்க இவரது வாழ்நாளில் இவரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த தமிழகப் பகுதிகள் எப்படி இருந்தது தெரியுமா ?


எங்கே பிறந்தார் ?

இராமநாதபுரம் மாவட்டம், பனையூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் மருதநாயகம். இவரது முழுப் பெயர் கான்சாஹிப் மருதநாயகம். மதுரைக்கு உட்பட்ட பகுதிகளை இவர் ஆட்சி செய்ததால் இப்பெயர் ஏற்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் கூறப்படுகிறது. தனது இளமைக் காலத்தில் தஞ்சாவூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்ஹானின் படையில் சிறிது காலம் பணிபுரிந்தார். இதுதான், இவரது முதல் இராணுவ அனுபவம்.

பாண்டிச்சேரிப் பயணம்
தஞ்சையில் தனது போர்த் திறமையை மேம்படுத்திய மருதநாயகம் பின், பாண்டிச்சேரிக்குச் சென்று பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரராக இணைந்து கொண்டார். தொடர்ந்து, போரின் போதும், விவாதத்தின் போதும் இவர் ஆற்றிய தலைமைப் பண்பு, நுட்பம், திறமை உள்ளிட்டவற்றால் வியந்த பிரெஞ்சு தளபதிகள் சில காலத்திலேயே முக்கியப் பதவிகளை கான்சாஹிப் மருதநாயகத்திடம் ஒப்படைத்தனர்.

முகலாயப் பேரரசின் பிரிவு

ஒளரங்கசீப் மறைவுக்குப் பின் முகலாயர்களின் பேரரசு தென்னிந்தியாவில் சிதறியது. கர்நாடக நவாப், ஐதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்ற பெயர்களில் ஆங்காங்கே சிற்றரசுகள் தோன்றின. ஆற்காடு நவாபாக முடிசூடிக் கொள்வது யார் என்ற போட்டியும் எழுந்தது. ஒரே ரத்த உறவுகளான சாந்தா சாஹிபும், முகம்மது அலியும் தங்களுக்குள் மோதினர். அப்போதுதான் ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் தங்களது சூழ்ச்சியை வெளிப்படுத்தினர். சாந்தா சாஹிபுக்கு பிரெஞ்சுக் காரர்களும், முகம்மது அலிக்கு ஆங்கிலேயர்களும் ஆதரவளித்தனர். திருச்சியை மையமாகக் கொண்டு சாந்தா சாஹிப் செயல்பட்டார்.

திருச்சி நத்தர்ஷா தர்கா

பிரெஞ்சுப் படையின் உதவியால் ஆரம்பக்காலத்தில் பல வெற்றிகளைக் குவித்த சாந்தா சாஹிப் இறுதியில் ஆற்காட்டில் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தார். மருதநாயகம் முன்னின்று போரிட்டாலும், மைசூர் மற்றும் மராத்தியப் படைகளின் துணையோடு போரிட்ட ஆங்கிலேயப் படைகளை வெல்ல முடியவில்லை. பல்வேறு சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிபின் உடல், திருச்சி நத்தர்ஷா தர்கா அருகே புதைக்கப்பட்டது.


தலைநகரான ஆற்காடு

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆற்காட்டை தலைநகரமாகக் கொண்டு செயல்பட்ட ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும், பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயர் படையில் மாவீரர்

ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் சரியத் துவங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்தனர். இதனிடையே பிரெஞ்சு படைத் தளபதிகளுக்கும், மருதநாயகத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆங்கிலேயரின் படையில் இணைந்தார் மருதநாயகம்.

கிருஷ்ணகிரிப் போர்

தற்போது கிருஷ்ணகிரி என அழைக்கப்படும் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையினரை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரை வியப்பில் ஆழ்த்தியது. ஒருமுறை மருதநாயகம் தனது படைவீரர்கள் சிலருடன் மட்டும் இருக்கையில் பல நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை சூழ்ந்து போரிட்டனர். அப்போது அவராற்றிய செயல், எதிரிகளை வீழ்த்துவதில் காட்டியை வேகம் ஆங்கிலேயர்களார் ஆளுநர் பொறுப்பை பெற்றுத் தந்தது.
ஆளுநரான மருதநாயகம்

தொடர்ந்து நடைபெற்ற போர்கள், அனைத்திலும் வெற்றிகண்ட மாவீரர் மருதநாயகம். தெற்குச் சீமைகளாக இருந்த மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகளைக் குவித்து தெற்குச் சீமையின் ஆளுநராக பொறுப்பேற்றார் அவர்.


விழித்தெழுந்த மருதநாயகம்

ஆற்றல் மிகுந்த தளபதியாய், பல்வேறு நிலப்பரப்புகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மருதநாயகத்திற்கு சற்று தாமதமாகத்தான் புரிந்தது ஆங்கிலேயர்களின் சூழ்ச்சித் திட்டம். நம் நாட்டை நாமே ஆள வேண்டும் என விழித்தெழுந்த அவர் தேசப் பற்றும், விடுதலை உணர்வும் பெற்று ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துவங்கினார்.

தஞ்சை காத்த வீரன்

ஒருமுறை பிரெஞ்சு அரசுக்கு எதிரான போரின் போது போரின் ஒரு திட்டமாக காவிரியாற்றின் கால்வாய்களையும், தடுப்பணைகளையும் உடைக்கும் பணியை பிரெஞ்சுப் படை செய்ய திட்டம் தீட்டியது. இதனை அறிந்த மருதநாயகம், பிரெஞ்சுப் படையின் திட்டத்தை முறையடித்து தஞ்சை மண்டலத்தில் விவசாயத்தையும், தன் மக்களையும் காப்பாற்றினார்.

கான்சாஹிப் உருவாக்கிய நகரம்

மதுரையில் இருக்கும் கான்சா மேட்டுத் தெரு, கான்சாபுரம், கான்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் கான்சாஹிப் மருதநாயகம் காலத்தில்தான் உருவானவை. தேனி மாவட்டம் பெரிய குளம் அருகிலுள்ள கான்சாஹிப்புரம், விருதுநகருக்கு உட்பட்ட ராஜபாளையம், கூமாப்பட்டிக்கு அடுத்துள்ள கான்சாஹிபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆகிய பகுதிகள் அவரது புகழை இன்றும் நினைவு கூறுகிறது.

தமிழகத்திற்குத்தான் முல்லைப் பெரியாறு

இன்றும் கூட பல சர்ச்சைகளை சந்தித்து வரும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசன நீரை மதுரைக்கு கொண்டு வர அன்றைய காலகட்டத்திலேயே திட்டமிட்டவர் மருதநாயகம். தமிழக மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, தமிழகத்திற்கு உட்பட்ட பாசனப் பகுதிகளை செழிக்க வைக்கும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் அணையைக் கட்டியவரும் இவர்தான். திருநெல்வேலியில் உள்ள மேட்டுக் கால்வாய் திட்டத்தை வடிவமைத்து செயலாற்றியவரும் இந்த மாவீரனே.

இந்த உண்மை தெரியுமா ?

நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதே அந்நாட்டிற்கான வணிகத்தையும், விவசாயத்தையும் மேம்படுத்துவதுதான் என உணர்ந்த மருதநாயகம் வணிகத்துக்கு துறை முகங்களும், நல்ல சாலைகளும் முக்கியம் என்பதை அறிந்து தரமான சாலைகளை அமைத்தார். இதற்கு எடுத்துக்காட்டு இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்ததும், பிரசித்தம் பெற்ற சுற்றுலாத் தலமாகவும் உள்ள கொடைக்கானலுக்கு முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயகத்தின் உத்தரவின் பேரில் தான்.

சிறப்பான சாலை கட்டமைப்பு

இவரது ஆட்சிக் காலத்தில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த தூத்துக்குடி மற்றும் தொண்டி துறைமுகத்தை மதுரையுடன் இணைக்கும் வகையிலான தேசிய வர்த்தக சாலைகளை மருதநாயகம் உருவாக்கினார். தனது ஆட்சிப்பகுதியின் முக்கிய நகரங்களாக இருந்த கம்பம், திருநெல்வேலி போன்ற தொலைதூர பகுதிகளையும் மதுரைக்கு உட்பட்ட சாலைகளுடன் இணைத்தது இவரது சாதனைகளில் ஒன்றாக உள்ளது.


மதுரை காத்த மாவீரன்

பிறப்பால் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் தன் நாட்டு மக்களின் ஒற்றுமை காப்பதில் சிறந்து விளங்கினார் கான்சாஹிப். ஆங்கிலேயர் மற்றும் ஆற்காட்டு நவாப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மதுரை கள்ளழகர் கோவிலின் நிலங்களை மீட்டு, கோவிலுடன் இணைத்தார். தொடர்ந்து, போரின் போது சிதிலமடைந்திருந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலையும் சீர் செய்து மக்களின் மனதை வென்றார். இன்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள செப்பேடுகளின் வாயிலாக இதை அறியமுடியும்.

மதுரையால் விளைந்த போர்

மதுரையில் கொடிகட்டிப் பறந்த மருதநாயகத்தை வீழ்த்த எண்ணிய நவாப் பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு ஆங்கிலேயர்கள் மூலம் அவரை வீழ்த்த முடிவு செய்தார். அதன் விளைவு கப்பம் வசூலிப்பதன் மூலம் போராக மூண்டது. இடையில் சிவகங்கையில் சமஸ்தானம் பிரிப்பதிலும் ஆங்கிலேயர்களின் கட்டளைப்படி சிற்றரசர்கள் மருதநாயகத்தை எதிர்க்கத் துவங்கினர்.

போர் முழக்கம்

மதுரை போர் உக்கிரமடையத் துவங்கியது. மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது. ஆயிரக் கணக்கான வீரர்கள், ஆங்கிலேயர்களின் அதிரடிப்படை என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினரோ பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர் படையில் இருந்த இந்திய வீரர்களை மனதில் கொண்டு போரை தற்காலிகமாக நிறுத்தினார் மருதநாயகம்.


நயவஞ்சகத்தால் வீழ்ந்த நாயகன்

போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கையாண்டனர். மருதநாயகத்தின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை பொன்னுக்கும், பொருளுக்கும் விலைக்கு வாங்கினர். எளிதில் நெருங்க முடியாத மருதநாயகத்தை ரமலான் மாதத்தில் தொழுகையின் போது மருதநாயகத்தை சூழ்ந்து சிறைபிடித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களின் பாதுகாப்புடன் ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார் அந்த நாயகன்.

பயமறியா முகம்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் கருப்பு நாள் அது. ஆம், 1764, அக்டோபர் 10 மதுரைக்கு அருகே உள்ள சம்மட்டிபுரத்தில் அவரை தூக்கிலிட முடிவு செய்யப்பட்டு மருதநாயகம் கொண்டு வரப்பட்டார். அந்த மாவீரனின் முகத்தில் துளியும் பயம் இல்லை. அதுமட்டுமா, முதல் முறை தூக்கிலிடப்பட்டும் அவர் உயிர் நீங்கவில்லை. மாறாக கயிறே அறுந்து விழுந்தது. புதிய கயிற்றில் மீண்டும் தூக்கிலிடப்பட்டார். அத்தியாகியின் உயிர் அவரை தியாகம் செய்ய விடவில்லை. இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகு மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடும் இருளில் மூழ்கியது.

தொடைநடுங்கிய ஆங்கிலேயர்கள்

மருதநாயகத்தை தூக்கிலிட்டும் அவர், மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என்று பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர். தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பி அடக்கம் செய்தனர்.

மருதநாயகம் நினைவிடம்

அவரது உடலின் ஒரு பாகம் மதுரை சம்மட்டிபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவருக்கு நினைவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், மற்றொன்று பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும், பூதஉடல் மதுரையிலும் அடக்கம் செய்யப்பட்டதாக பல வரலாற்று ஆய்வுகளிலும், குறிப்புகளிலும் கூறப்படுகிறது.

மருதநாயகத்தை மறவாதீர்!

எத்தனை எத்தனையோ சிறப்புகள், இன்றும் இவர் பெயர் கேட்டால் அஞ்சி நடுங்கும் ஆங்கிலேயர்கள், பிறப்பால் இஸ்லாமியர் என்னும் ஒரேக் காரணத்திற்காகவே மறக்கடிக்கப்படும் தன்னிகரற்ற இவர் போன்ற வீரர்களைத் திரைப்படம் மூலம் நினைவு படுத்துவது மட்டுமின்றி, அவர் ஆட்சி செய்த மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பயணிக்கும் போதும் நாமும் நினைவு கூறுவோம். மருதநாயகத்தை போற்றுவோம்




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..