Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்!
Posted By:peer On 1/19/2018 2:54:46 AM

சொராபுதீன் ஷேக் (அ) சொஹ்ராபுதீன் ஷேக் என்ற பெயர் உங்களுக்கு நினைவிருந்தால், உங்கள் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பொருள். அதிகார வர்க்கத்தின் அடியாளாக வலம் வந்து, தன் எஜமானர்களாலே அநியாயமாகக் கொல்லப்பட்ட 30 வயது இளைஞன் அவன்.

ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு முன்னர் (26.11.2005) போலி என்கவுண்ட்டர் மூலம் அப்போது குஜராத்தின் உள்துறை இணை அமைச்சராயிருந்த அமித் ஷாவின் உத்தரவுப்படி கொலை செய்யப்பட்ட சொஹ்ராபுதீன் ஷேக், இன்னும் தன் எஜமானர்களைத் துரத்துகின்றான். இதற்குப் பெயர்தான் விதியோ?

சிறியதொரு ஃப்ளாஷ் பேக்!
சொஹ்ராபுதீனின் தம்பி ருபாபுதீன் ஷேக் என்பவர் தன் அண்ணனின் கொலை பற்றியும் தன் அண்ணியான கவுஸர் பீவி காணாமல் போனது குறித்தும் உச்சநீதி மன்றத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தையே புகார் வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம், சொஹ்ராபுதீனின் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு, சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை நியமித்தது.

அவ்விசாரணையின் முடிவில், “சொஹ்ராபுதீன், மோடியைக் கொல்ல வந்த தீவிரவாதி என்பது குஜராத் காவல்துறை கட்டிய கதை. யதார்த்தத்தில் அவன் குஜராத், ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர்களுக்கு மிக நெருக்கமானவன். கடைசிக் காலத்தில் பா.ஜ.க. தலைவர்களுக்கும் தன்னை உருவாக்கிய காவல்துறைக்கும் கட்டுப்படாமல் நடந்து கொண்டதால் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டான்” என்ற உண்மைகள் தெரியவந்தன.

22.11.2005 அன்று சொஹ்ராபுதீனும் அவனுடைய மனைவி கவுஸர் பீவியும் சொஹ்ராபுதீனுடைய கூட்டாளி துளசிராம் பிரஜாபதியும் தீவிரவாதத் தடுப்புப் படையால் குஜராத்திற்குக் கடத்தி வரப்பட்டு, அம்மூவரும் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டனர். சொஹ்ராபுதீனை 26.11.2005இல் சுட்டுக் கொன்ற குஜராத் தீவிரவாத தடுப்புப் படை, கவுஸர் பீவியைப் பாலியல் வல்லுறவு செய்தது. பின் மயக்க ஊசி போட்டுக் கொன்று, அவரது சடலத்தை இரகசியமாக எரித்தும் விட்டது. அதிகார வர்க்கத்தின் சட்டவிரோதச் செயல்களுக்கு உடந்தையாகவும் சாட்சியாகவுமிருந்தவன் துளசிராம் பிரஜாபதி என்பதால், அவனையும் சுட்டுக் கொன்றது குஜராத் காவல்துறை.

2010இல் உச்சநீதி மன்றம் சொஹ்ராபுதீன் வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், “இம்மூன்று படுகொலைகளும் குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சராக இருந்த அமித் ஷா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க.வின் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சாந்த் கடாரியா ஆகிய இருவரின் உத்தரவுப்படியே நடந்தன. இப்படுகொலைகள் நடந்த காலம் நெடுகிலும், இக்கொலைகளைத் தலைமையேற்று நடத்திய வன்சாரா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளோடு அமித் ஷா நேரடியாகவே தொலைபேசி மூலம் தொடர்பு வைத்துக்கொண்டு, இப்படுகொலைகளை வழிநடத்தியிருக்கிறார். இக்கொலைகள் தொடர்பாக அமித் ஷாவுக்கும் சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே 331 தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன” என்பவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் குஜராத்தின் அன்றைய உள்துறை இணை அமைச்சராயிருந்த அமித் ஷா, சொஹ்ராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு 25.8.2010இல் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

oOo

நீதிபதி உத்பத்
சொஹ்ராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கு விசாரணை குஜராத்தில் நடந்தால் சாட்சியங்கள் கலைக்கப்படலாம் என்பதால் 2012ஆம் ஆண்டில் வழக்கை மும்பை சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு மாற்றிய உச்சநீதி மன்றம், இவ்வழக்கை, தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஜே.டி.உத்பத் என்பவர் விசாரணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நரேந்திர மோடி மே, 2014இல் பிரதமரான பிறகு, இவ்வழக்கைச் சீர்குலைக்கும் சதிகளை சி.பி.ஐயே. அரங்கேற்றத் தொடங்கியது. நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கக் கோரினார் அமித் ஷா. நீதிபதி ஜே.டி.உத்பத் அச்சலுகையைத் தர மறுத்து, ஜூன் 26, 2014 அன்று ஆஜராக வேண்டும் என அமித் ஷாவுக்கு உத்தரவிட்டார். அமித் ஷா ஆஜராக வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னர் (ஜூன் 25, 2014 அன்று) நீதிபதி ஜே.டி.உத்பத்தைத் திடீரென்று புனேவுக்கு இடமாற்றம் செய்தது மும்பை உயர்நீதிமன்றம்.

துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்!

இவ்வழக்கை ஒரே நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் உத்தரவு மீறப்பட்டது. எனினும் அந்த நீதிமன்ற அவமதிப்பை உச்சநீதி மன்றம் கண்டுகொள்ளவில்லை.

துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்!

நீதிபதி ஜே.டி.உத்பத்தின் இடமாற்றம், எவ்வித அரசியல் தலையீடும் அழுத்தமும் இல்லாமல் நடந்தது என்று நாட்டு மக்களை நம்பச் சொன்னார்கள் ஆட்சியாளர்கள்.

நீதிபதி லோயா
உத்பத்தின் இடத்தில் நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷண் லோயா என்பவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். “அரசியல் பழிவாங்கும் நோக்கில்தான் இந்த வழக்கில் தன்னைச் சேர்த்திருப்பதாகவும், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும்” அமித் ஷா கோரினார். இதனை ஏற்க மறுத்த லோயா, டிசம்பர் 15, 2014 அன்று அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அக்.31 அன்று உத்தரவிட்டார். ஆனால், அமித் ஷாவை விசாரிக்க வேண்டிய டிசம்பர் 15, 2014க்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னர் (1.12.2014இல்) நீதிபதி லோயா நாக்பூரில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

 

துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்!

மாரடைப்பால் லோயா மரணமடைந்தார் என்று அவருடைய குடும்பத்தாருக்குச் சொல்லப்பட்டது. ஆனால், அவருடைய பிடறியில் இருந்த காயமும் சட்டைக் காலரில் இருந்த இரத்தமும் எப்படி வந்தன? லோயாவின் ப்பேண்ட்டில் போடப்பட்டிருந்த பெல்ட்டின் கொக்கி தலைகீழாக இருந்தது ஏன்? போன்ற, லோயாவின் சகோதரி அனுராதா பியானியின் வினாக்களுக்கு இன்றுவரை விடை தெரியவில்லை. அனுராதா பியானி, தொழிலில்முறை டாக்டராவார்.

 

நீதிபதி கோசாவி
நீதிபதி லோயாவிற்குப் பின் எம்.பி.கோசாவி என்பவர் 2014 டிசம்பர் 15இல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சொஹ்ராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கைப் பற்றிய எந்தவொரு அம்சத்தையும் அவர் தொடாமல், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய அமித் ஷாவின் மனுவை முதல் வேலையாக, பொறுப்பேற்ற முதலிரண்டு நாட்களில் – அதாவது 2014 டிசம்பர் 15, 16 ஆகிய இரு தினங்களுக்குள் விசாரித்து, டிசம்பர் 30, 2014 அன்று அமித் ஷாவைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுவித்தார் கோசாவி. அமித் ஷா அரசியல் காரணங்களுக்காகத்தான் வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதை, தான் ஒப்புக்கொள்வதாகவும் அவர் குற்றவாளி என்பதற்கான சிபிஐயின் அனுமானங்களை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டு, அமித் ஷாவை விடுதலை செய்தார் கோசாவி.

துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்!

சொஹ்ராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத்தின் உள்துறை இணை அமைச்சராயிருந்த அமித் ஷா, சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது ஆதாரங்களின் அடிப்படையிலா, அனுமானத்தின் அடிப்படையிலா? என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்கள் என்று அதிகார வர்க்கம் நம்புகிறது! நீதிபதி என்ன தீர்ப்பு வழங்க வேண்டும்; அதையும் எந்தத் தேதியில் வழங்க வேண்டும் என்பதையும் அதிகார வர்க்கம் தீர்மானிக்கிறது!

துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்!

oOo

கோசாவியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருந்தும் சி.பி.ஐ. அதற்கு முன்வரவில்லை. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால், நீதிபதி லோயாவின் மரணத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொள்ளலாம்.

வழக்கறிஞர் பல்வந்த் ஜாதவ் என்பவர் நீதிபதி லோயாவின் நெருங்கிய நண்பரும் தொழில்முறை தோழருமாவார். “பல்லாண்டு காலமாக லோயாவின் மொத்தக் குடும்பதினரையும் நானறிவேன். அமித் ஷாவைக் காப்பாற்ற வேண்டி கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தத்தினால் அவர்கள் இப்போது ஏதும் பேசாமல் மௌனம் காக்கின்றனர்” என்று கேரவன் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கின்றார்.

Thanks: http://www.satyamargam.com/131-editorial/2673-justice-on-the-hands-of-rowdies.html

 



 

பொங்கலுக்கு இரு நாட்களுக்கு முன் (12.1.2018) உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், லோக்குர், குரியன் ஜோஸஃப் ஆகிய மூத்த நீதிபதிகள் நால்வர் ‘போர்க்கொடி’ உயர்த்தியதாகத் தலைப்புச் செய்தி வந்தது.

மிகவும் முக்கியமான வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்குவதுதான் உச்சநீதி மன்றத்தின் மரபு. ஆனால், “அண்மைக் காலமாக மிக முக்கியமான வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்காமல் இளைய நீதிபதிகளுக்கு ஒதுக்குவதைத் தலைமை நீதிபதி வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்” என்பதுதான் மூத்த நீதிபதிகள் நால்வர் உயர்த்திய ‘போர்க்கொடி’யின் சாரம்.

“… மேலும், சிபிஐ சிறப்பு நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, மூத்த நீதிபதிகளில் 10ஆம் இடத்தில் இருக்கும் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு ஒப்படைக்கப்பட்டதும் செலமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகளின் அதிருப்திக்குக் காரணமாகத் தெரிகிறது” என்று தினமணியின் 13.1.2018 நாளிதழின் முதற்பக்கச் செய்தி தெரிவிக்கின்றது.

“நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்து முறையான விசாரணை தேவை” என்று மும்பை வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு மும்பை உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளது.

பாவம், நீதி தேவதை என்னதான் செய்வாள்?

துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்





General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..