Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
களவு போகும் கல்வி துறை
Posted By:Hajas On 9/10/2017 4:56:14 AM

over the counter abortion pill

abortion clinic nyc

 

களவு போகும் கல்வி துறை

இனி உங்கள் குழந்தைகள் கிராக்கி என்று அழைக்கப்படுவார்கள்

- மு. நியாஸ் அகமது | nomadniya@gmail.com

 

உங்கள் குழந்தைகளை யாராவது கிராக்கி என்றழைத்தால் நீங்கள் மகிழ்வீர்களா... அது அப்படி ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல. நல்ல உருது சொல் தான் - பொதுவாக ‘தேவை’யை குறிக்க இச்சொல் தமிழகத்தில் பயன்பட்டாலும், எங்கள் பகுதியில் வாடிக்கையாளர்களை குறிக்கவே அதிகம் இச்சொல் பயன்படுகிறது. இந்த சொல் உங்கள் செவிகளையும் கடந்து சென்றிருக்கும். சென்னைவாசியாக நீங்கள் இருந்தால் சாவு கிராக்கி என்ற சொல்லைக் கடக்காமல் வந்திருக்க மாட்டீர்கள். ஆனால் யாரும் தங்கள் குழந்தைகளை கிராக்கி என்றழைப்பதை விரும்பமாட்டார்கள். குழந்தைகளை உண்மையாக நேசிக்கும் பலர் அப்படி யாரேனும் அழைத்தால் நிச்சயம் அடிக்கக்கூட செல்வார்கள். ஆனால், உலக வர்த்தக அமைப்பு இனி உங்கள் குழந்தைகளை கிராக்கி என்று அழைக்க வேண்டும் என்கிறது. சரி, இனி எம் நாட்டில் குழந்தைகளை அப்படியே அழைக்கிறோம் எசமானே... என உறுதி அளித்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மேன்மை பொருந்திய இந்திய அரசும் உறுதி அளித்துள்ளது.

என்ன பிதற்றுகிறாய் என்கிறீர்களா...! இல்லை. இது வெற்று பிதற்றல் அல்ல, வார்த்தை அலங்காரத்துக்காகவோ, இல்லை கட்டுரையின் சுவாரஸ்யத்தை கூட்ட வேண்டும் என்பதற்காகவோ, நான் இதை சொல்லவில்லை. நூறு சதவீதம் உண்மை.

வர இருக்கும் பேராபத்தை புரிந்துக் கொள்ள, எனக்கும் கல்வியலாளர் மீனாட்சி உமேஷுக்கும் நடந்த உரையாடல் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.

கல்வியலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொது செயலாளராக இருக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பிடமிருந்து எனக்கு இந்திய கல்வித் துறை சந்திக்கும் பிரச்சனைகள், அவர்கள் நடத்தும் கூட்டங்கள் குறித்து மின்னஞ்சல் வருவது வழக்கம். சேவை துறையில் வர்த்தகம் குறித்த ஒரு செய்தி அறிக்கையும் அப்படி தான் வந்தது. அந்த அறிக்கை முக்கியம் எனப் பட்டதால் அதனை மீனாட்சி உமேஷூக்கு அனுப்பினேன்.

மின்னஞ்சல் அனுப்பிய சில மணி நேரங்களில் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

“நியாஸ்... அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் மட்டும் நடைமுறைக்கு வந்தால், நிச்சயம்... நானும் மரணித்து எம் குழந்தைகளையும் கொன்று விடுவேன்” என்றார்.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நிச்சயம் இப்படி ஒரு எதிர்வினையை நான் எதிர்பார்க்கவில்லை. சிந்தித்து பார்த்தால் அவர்கள் சொன்னது சரித்தான் எனப்பட்டது. குழந்தைகளை உண்மையாக நேசிக்கும் அனைவரும் அப்படியொரு முடிவைத் தான் எடுப்பார்கள்.

அவ்வளவு ஆபத்துகள் கொண்டது அந்த ஒப்பந்தம்.

WTO - GATS ஒப்பந்தம்:

என்ன மிரட்டுகிறாய்....? பீடிகை போதும்... தெளிவாக கூறு என்று நீஙகள் சொல்வது கேட்கிறது.

இந்திய அரசு, உலக வர்த்தக அமைப்பின் (WTO) 160 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கல்வி வணிகர்கள் இந்தியாவில் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் பிறவகைத் தொழில் நுட்ப அல்லது தொழில் முறைக் கல்வி கழகங்களும் வணிக நிறுவனங்களாக அமைத்துக் கொள்வதற்கு இடமளிக்க முன் வந்துள்ளது. அதாவது சேவை துறையில் வர்த்தக உடன்படிக்கையில் (GATS) வரும் டிசம்பர் மாதம் கென்யா - நைரோபியில் நடைப்பெற இருக்கிற ‘அமைச்சர் நிலை சந்திப்பு’ கூட்டத்தில் இந்தியா கையெழுத்திட போகிறது. அப்படி கையெழுத்திடும் பட்சத்தில் இந்திய உயர் கல்வி துறை பெரும் சந்தையாக மாறி, உலக பெரும் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறும். கட்டற்ற அந்நிய முதலீடு உள்ளே வரும். உயர் கல்வி துறை சேவை என்பதிலிருந்து மாறி முழு வணிகமாக மாற இது வழிவகுக்கும். உயர் கல்வி என்பது பண்டமாக மாறும் மாணவர்கள் நுகர்வோர் (கிராக்கி)களாக மாறுவார்கள்.

ஹோ... இவ்வளவு தானா... இதற்காக தான் இந்த பீடிகையா... இப்போது மட்டும் என்ன வாழ்கிறது இங்கே... உள்ளூர் கல்வி தந்தைகள் என்ன அறத்துடனா கல்வி நிலையங்களை நடத்துகிறார்கள்...? ஏற்கெனவே அது வியாபாரமாக மாறிவிட்டது...? உலக முதலாளிகள் வந்தால் என்ன... ? என்று அலுத்துக் கொள்ளும் நடுத்தர வர்க்கமா நீங்கள். இல்லை... நீ என்ன இடதுசாரியா...? உங்களுக்கு நாட்டின் வளர்ச்சியில் கொஞ்சம் கூட அக்கறை இல்லையா...? என்று அலுத்துக் கொள்ளும் உயர்த்தர வர்க்கமா நீங்கள்...?

பாராபட்சம் இல்லாமல் அனைவரும் இந்த ஒப்பந்தத்தால் பாதிப்படைய போகிறோம்.

அரசு கல்லூரிகள் இல்லாமல் போகும்:

முதலில் நடுத்தர வர்க்கத்தினரின் கேள்விக்கு வருகிறேன். நானும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவன் தான். தனியார் கல்லூரியில் உதவி தொகையினால் படித்தவன். உங்கள் கோபம் நியாயமானது. இங்கு உயர் கல்வி முழு வியாபாரமாகி ஒரு தசாப்தத்திற்கு மேல் ஆகிறது. லட்சங்கள், கோடிகள் என எந்த வெட்கமும் இல்லாமல் கல்வி வியாபரம் கன ஜோராக நடக்கிறது. இது எதுவும் மறுப்பதற்கில்லை. ஆனால், இப்போதும் நமக்கு நம்பிக்கை அளிப்பதாக அரசு கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் மட்டுமே உள்ளன. அதன் உட்கட்டமைப்பு வசதி தரமற்றதாக, பாடத் திட்டங்கள் மேம்படுத்த வேண்டியதாக பேராசிரியர்கள் பற்றாகுறையாக இருக்கலாம். ஆயிரம் குற்றச் சாட்டுகள் இருந்தாலும் ஏழை, எளிய மக்கள் கல்வி பெறும் வாய்ப்பை அரசு கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. அரசை தொடர்ந்து நிர்பந்திப்பதன் மூலம் அரசு கல்வி நிறுவனங்களை மேம்படுத்த முடியும்.

ஆனால் இந்த (WTO-GATS) ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில், அரசு கல்லூரிகளுக்கான மானியம் வெட்டப்படும். அதன் தரம் மேலும் குறையும், கல்வி கட்டணம் எளியவர்கள் செலுத்த முடியாத அளவிற்கு அதிகரிக்கும். மெல்ல காலப்போக்கில், அரசு கல்லூரிகள் என்பதே இல்லாமற் போகும். நேரடியாக சொல்ல வேண்டுமானால், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி மறைமுகமாக மறுக்கப்படும்.

ஏற்கெனவே, நம் நாட்டில் உயர் கல்வி துறையில் சமத்துவமின்மை நிகழ்கிறது. குறிப்பாக இந்தியாவில் 12 சதவீதத்திற்கு மட்டுமே ஏற்ற வயதில் உயர் கல்வி கிடைக்கிறது (தகவல் - Neo - Liberal assault on higher education). மேலும் இந்தியாவில் 8.15% மக்கள் மட்டுமே பட்டாதாரிகள். (தகவல்: http://www.thehindu.com/news/nation...) இத்தகைய சூழலில் உயர் கல்வி துறையில் அந்நிய முதலீடு குவியும் பட்சத்தில், உயர் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டா கனியாக மாறும்.

வளர்ச்சியை எதிர்க்கிறோமா...?

பணம் இருந்தால் கல்லூரிக்கே செல்லாமல் நம் நாட்டில் பட்டம் பெற முடியும் என்ற நிலைத்தான் இப்போது உள்ளது. இத்தகைய சூழலில் அந்நிய கல்வி நிறுவனங்கள் வந்தால் கல்வியின் தரம் நிச்சயம் உயரும் தானே... நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்...? சரி... நீங்கள் எக்கேடாவது கெட்டுப் போங்கள் எங்களிடம் பணம் இருக்கிறது நாங்கள் படித்துக் கொள்கிறோம் என்று உயர் வகுப்பில் இருக்கும் நீங்கள் நினைத்தால் உங்களைவிட முட்டாள் யாரும் இல்லை.

கோபம் கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பும், போற்றும் உலக வங்கி 2000 ஆம் ஆண்டு ஓர் ஆய்வை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் சாரம், “A report of a survey by world bank in 2000 on foreign educational providers is on record stating that well - known universities of developed countries established low standard branches in backward countries"(தகவல் - All India Forum For RIght To Education Report). இதன் அர்த்தம் புரிகிறது அல்லவா... நன்கு அறியப்பட்ட வெளிநாட்டு பல்கலைகழகங்கள், பின் தங்கிய நாடுகளில் தரமற்ற கிளைகளையே நிறுவி உள்ளது.

இது தான் முதலாளித்துவத்தின் உண்மை முகம். அனைவரும் தரமான கல்விப் பெற வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் அல்ல, லாபம்... லாபம்... மேலும் லாபம் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம்

அந்நிய பல்கலைக் கழகங்கள் நம் நாட்டிற்கு வருவதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அறிவு பரிமாற்றத்திற்கு வருகிறதென்றால். அது நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால், இந்த ஒப்பந்தம் இந்திய சந்தையை குறி வைத்து லாபநோக்கத்துடன் வருகிறது. அதாவது யார் வேண்டுமானாலும் கடை விரிக்கலாம், அது தரமானதா இல்லை தரமற்றதா என்ற எந்த நிபந்தனையும் இல்லை.

சந்தையின் அடிமைகள்:

என் பள்ளி கல்லூரி பருவத்து ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பெயர் அனைத்தும் எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. எனக்கு பள்ளி பாடம் எடுத்த லதா, ராதா, பீட்டர், சத்தியமூர்த்தி, சங்கர் போன்ற ஆசிரியர்கள் பாட திட்டத்தை தாண்டி பரந்துபட்டு யோசிக்கும் வெளியை திறந்துவிட்டார்கள். ஆசிரியர் - மாணவன் என்பதை தாண்டிய உணர்வு பூர்வமான பிணைப்பு இருந்தது.

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறுமானால் இந்த உறவு பிணைப்பு அறுப்படும். சந்தைக்கு தேவையான கல்வியை மட்டுமே போதிக்கும் ஆசிரியர்களிடமிருந்து எந்த பிணைப்பையும் எதிர்பார்க்க முடியாது. அதாவது நம் கல்வி துறை பெருங்குழும நிறுவனங்களுக்கு தேவையான அடிமைகளை உற்பத்தி செய்யும் கூடாரமாக மட்டுமே இருக்கும்.

எளிய உதாரணம், மான்சாண்டோ நிதி உதவியில் நம் பல்கலைகழகங்களில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் எதுவும் மக்களுக்கு பயன்படுவதாக இல்லாமல் பெருநிறுவனங்களை போஷாக்கு ஆக்குவதாகவே உள்ளது. மக்களுக்கு பயன் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை மக்களை அழிப்பதாகவே உள்ளது.

மான்சாண்டோ நிதி உதவி அளிக்கும் பல்கலைக்கழகங்களே இவ்வளவு அழிவை உண்டாக்கும் பட்சத்தில் மான்சாண்டோவே கல்வி நிறுவனம் தொடங்கினால்....?

நிச்சயம். இங்கு வரும் பல்கலைக் கழகங்கள் நம் சுய சிந்தனையை, தற்சார்ப்பை அழிக்கும்.

அதிகாரத்தை பரவலாக்கலை (decentralisation) பற்றி அனைவரும் பேசி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் கல்வியை மையப்படுத்தவே உதவும். மைப்படுத்துதல் என்றால் ஒற்றை முதலாளிக்கு இயைவாக சிந்திக்க வைத்தல்.

ஏற்கெனவே நாம் என்ன உண்ண வேண்டும், எப்படி பல் துலக்க வேண்டும் என பெருநிறுவனங்களே முடிவு செய்கின்றன.இந்த ஒப்பந்தமும் நிறைவேறுமானால், நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பதையும் நிறுவனங்களே முடிவு செய்யும். சுதந்திர சிந்தனை தடைப்படுவதை விட கேவலம் வேறு என்ன இருக்க முடியும்...?. நவீன அடிமைகளாகத்தான் இருக்க போகிறோமா...?

ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் எதிர் காலத்தின் மீதும் விருப்பம் கொண்டோர் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாமல் தடுக்க அழுத்தம் தர வேண்டும்.

அதற்கெல்லாம் மேலாக நம் குழந்தைகள் கிராக்கிகளாக்கிவிட கூடாது.

உங்கள் வீட்டு பெண்ணை அரசன் படுக்கைக்கு அழைத்தால் சம்மதமா...?

இந்த தலைப்பு உங்களை காயப்படுத்தி இருக்க கூடும். இதற்காக என் மீது நீங்கள் கோபம் கொள்ளலாம், இல்லை முகம் சுழித்து வார்த்தைகளை கடக்க எத்தனிக்கலாம். ஆனால் வர இருக்கும் பேராபத்தை உங்களுக்குள் கடத்த எனக்கு வேறு வார்த்தைகள் தெரியவில்லை. அரசன் உங்கள் வீட்டு பெண்ணை படுக்கைக்கு அழைத்தல் என்ற வாக்கியம் உங்களிடம் எவ்வளவு அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ, அவ்வளவு அதிர்வலைகளை உயர் கல்வி துறையை முழு வணிகமயமாக்க இந்திய அரசு WTO- GATSக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது.

என்ன புலம்புகிறாய்...? ஏன் இந்த மிரட்டல் தொனி...? அந்த ஒப்பந்தத்தில் உள்ள பிரச்சனைகளைத் தான் போன கட்டுரையிலேயே சொல்லிவிட்டாயே.... ஏன் மேலும் மேலும் அச்சமூட்டுகிறாய்...? என்று கேட்கிறீர்களா. ஆம் அவ்வளவு அச்சம் நிறைந்ததாக தான் அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் உள்ளன.

முந்தைய கட்டுரையை படித்த பல பேர். WTO-GATS உயர் கல்வித் துறை ஒப்பந்தம் குறித்து இன்னும் விளக்கமாக கூற முடியுமா என்றார்கள். பின் வரும் பத்திகள் அவர்கள் ஒப்பந்தத்தை புரிந்து கொள்ள உதவும் என நம்புகிறேன்.

ஒரு ஆயிரம் பேர் கொண்ட கிராமத்தில் நீங்கள் வசிப்பதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். உங்கள் கிராமம் இறையாண்மை உள்ள தனி நாடு. உங்கள் நாட்டில் ஒரு கல்லூரி அரசாங்கத்தால் நடத்தப்படுறது. அதன் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டியதாக இருந்தாலும், அங்கு இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது. சிறுது காலம் செல்கிறது. நாட்டில் மக்கள் தொகை பெருகுகிறது. அந்த ஒரு கல்லூரி போதுமானதாக இல்லை. அரசாங்கத்திடமும் இன்னொரு கல்லூரி துவங்க பணம் இல்லை. அந்த நேரத்தில் ஊரில் உள்ள ஒரு செல்வந்தர் கல்லூரி துவங்க முன் வருகிறார். ஆனால் என்னால் இலவசமாக கல்லூரியை நடத்த முடியாது, நிர்வாக செலவுக்கு பணம் தேவை. அதற்காக கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி கேட்கிறார். அரசாங்கமும் பல நிபந்தனைகளுடன் கல்லூரி துவங்க அனுமதிக்கிறது. அதற்கான சில சட்டங்களையும் இயற்றுகிறது.

கல்வியை சேவையாக மட்டுமே வழங்க வேண்டும், லாப நோக்கத்தில் கல்வி நிலையத்தை நடத்த கூடாது என்கிறது. அரசு சொல்லும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும், கல்வி நிலையத்திலிருந்து வரும் வருவாயைக் கொண்டு வேறு தொழிலில் முதலீடு செய்ய கூடாது என்று நிபந்தனைகள் நீள்கின்றன.

அனைத்திற்கும் ஒத்துக் கொண்ட அந்த செல்வந்தர், மக்களிடமிருந்தும், நிதியை திரட்டி பள்ளியை துவங்குகிறார். துவக்கத்தில் நியாயமாக நடந்துக் கொண்ட நிர்வாகம், காலம் செல்ல செல்ல லாப நோக்கத்துடன் அதிக கட்டணம் வசூலிக்க துவங்குகிறது. இது குறித்து மக்கள் அரசாங்கத்திடம் புகார் சொல்கிறார்கள். அரசும் விசாரணை நடத்தி அதன் மீது சில நடவடிக்கைகளை எடுக்கிறது. கடுமையான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அரசாங்கத்திற்கு லஞ்சம் தருகிறது பள்ளி நிர்வாகம். இது தெரிந்த சில முற்போக்காளர்கள் பள்ளிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் போராடுகின்றனர். நீதி மன்றத்திலும் வழக்கு போடுகிறார்கள்.

அந்த நேரத்தில் ஒரு சர்வதேச வணிக அமைப்பு ‘கல்வியில் வணிகம்’ குறித்த சர்வதேச மாநாடு நடத்துகிறது. அந்த மாநாட்டில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள், உங்கள் நாடும் கலந்து கொள்கிறது. அந்த மாநாட்டில் கல்வி துறையில் அந்நிய முதலீடு குறித்து விவாதிக்கப்படுகிறது. அதாவது ஒரு தேசத்தில் உள்ள கல்வி நிலையங்கள் இன்னொரு தேசத்திற்கு சென்று கல்வி நிலையங்கள் துவங்க அனுமதித்தல். அதற்கான சட்ட திருத்தம்கோருதல். அதற்கு 160 நாடுகள் சம்பந்தம் தெரிவித்து அதற்கான ஒப்பந்தத்தில் பல நிபந்தனைகளுக்குட்பட்டு கையொப்பமிடுகின்றன. அதில் உங்கள் நாடும் ஒன்று.

உங்கள் நாட்டின் சார்பாக கலந்துக் கொண்ட பிரதிநிதி, ஏதோ சாதனை நிகழ்த்திவிட்டது போல், கல்வி துறையில் மாபெரும் புரட்சி நிகழப்போவது போல் உங்களிடம் பிரசாரம் செய்கிறார்.

நீங்களும் அதை நம்பி புலங்காகிதம் அடைகிறீர்கள். உள்ளூர் கல்வி திருடனின் ஆதிக்கம் உலக கல்வி நிறுவனங்களால் முடிவுக்கு வரும் என்று மகிழ்வடைகிறீர்கள். கல்வியின் தரம் கூடும் என்றும் நம்பி வெளிநாட்டு கல்வி நிலையத்திற்கு சிவப்பு கம்பள வர்வேற்பு அளிக்கிறீர்கள்.

கல்வி நிலையம் துவங்கப்படுகிறது. நீங்களும் விருப்பமாக உங்கள் மகளையோ, மகனையோ சேர்க்க செல்கிறீர்கள். ஆனால், அவர்கள் சொல்லும் கல்வி கட்டணம் உங்களுக்கு கட்டுபடி ஆகாததாக இருக்கிறது.

நீங்கள் அதிர்ச்சி அடைகிறீர்கள். அரசாங்கத்திடம் புகார் செய்கிறீர்கள். ஆனால், வெளிநாட்டு கல்வி நிலையங்களில் தலையிட தனக்கு உரிமை இல்லை என்று அரசு நழுவுகிறது.

நீதிமன்றத்தில் கல்வி நிலையத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று நீதிமன்றப் படி ஏறுகிறீர்கள். நீதிமன்றமும் வெளிநாட்டு கல்வி நிலையங்களில் தலையிட தங்களுக்கு உரிமை இல்லை என்று சொல்லி கை விரிக்கிறது. இந்த வழக்குகளை கையாள அமைக்கப்பட்டுள்ள தீர்பாயத்தை தொடர்பு கொள்ள உங்களை அறிவுறுத்துகிறது. சரி... தீர்பாயத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுகிறீர்கள். ஆனால், அந்த தீர்ப்பாயம் ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் அமைக்கப்பட்டுள்ளதை அறிந்து மனமுடைந்து தன் குழந்தையை அரசு கல்வி நிறுவனங்களிலேயே சேர்ப்போம் என்று அரசு கல்லூரிக்கு செல்கிறீர்கள். ஆனால் அங்கும் தாறுமாறாக சர்வதேச கல்வி நிலையங்களுக்கு சமமாக கல்வி கட்டணம் ஏற்றப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைகிறீர்கள்.

மீண்டும் அரசை அணுகுகிறீர்கள். அரசு கல்வி நிலையங்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்தால் தான், நாங்கள் உங்கள் நாட்டில் கல்வி நிலையங்கள் துவங்குவோம் என சர்வதேச கல்வி நிலையங்கள் நிபந்தனை விதித்தார்கள். அதற்கு உடன் பட்டே, அவர்களை அனுமதித்தோம். அரசு கல்வி நிலையத்தில் கல்வி கட்டணத்தை கட்டுப்படுத்தும் உரிமை இப்போது எங்களிடம் இல்லை என்று அதிகாரிகள் உங்களிடம் விளக்கம் அளிக்கிறார்கள்.

பணம் இல்லாதவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை உணர்கிறீர்கள். உள்ளூர் கல்வி வியாபாரி சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டான். அவனை எதிர்க்க சட்டமாவது துணை இருந்தது. ஆனால், சர்வதேச வியாபாரி சட்டத்தையே அவனுக்கு ஏற்றது போல மாற்றிவிட்டான் என்பதை உணரும் போது நிலைமை உங்கள் கையை மீறி போயிருக்கிறது. செய்வதறியாமல் நிற்கிறீர்கள்.

சரி நிகழ் காலத்திற்கு வாருங்கள்... உங்களை கற்பனை செய்ய சொன்னது அனைத்தும் உண்மையாக நிகழ்ந்தால். நீங்கள் என்ன செய்வீர்கள்...?

“என்னது அரசு கல்வி நிலையங்களில் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் அரசிடம் இருக்காதா... ? ஏன் இவ்வளவு ஆபாண்டமாக அரசு மீது பொய் குற்றம் சுமத்துகிறாய்...? போதும்... நிறுத்து உன் பொய்யை ... நீ சொல்லும் எதையும் நாங்கள் நம்ப தயாராக இல்லை...” என்றகிறீர்களா.

நான் சொல்லியதில் எதுவும் எள் முனை அளவுக்கூட பொய் இல்லை நண்பர்களே... அரசு WTO-GATSக்கு அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நம்மை மீண்டும் அடிமை காலத்திற்கே அழைத்து செல்ல கூடியதாக இருக்கிறது.

GATS, இந்திய அரசு தான் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், உள்ளூர் கல்வி நிலையங்களுக்கும் என்ன சலுகை தருகிறதோ அதே போன்ற சலுகையை வெளிநாட்டு கல்வி நிலையங்களுக்கும் தர வேண்டும் என்கிறது. (National Treatment article XVII).

இதன் பொருள் நீங்கள் அரசு கல்வி நிலையங்கள் துவங்க இலவச இடம், கட்டிடம், மின்சாரம் தந்தால் அதே போன்ற சலுகைகளை எங்களுக்கும் தர வேண்டும் என்கிறது.

மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் சரி சமமாக கருதப்பட வேண்டும் என்கிறது ஒரு ஷரத்து. இலவசமாக அரசு கல்வி வழங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் , மாணவர்களிடமிருந்து ஒரு ரூபாய் கட்டணம் பெற்றால் கூட, அதுவும் எங்களை போல் கட்டணத்திற்கு சேவை வழங்கும் நிறுவனம் தான். அதனால், அவர்களுக்கு மட்டும் தனி சலுகை வழங்க கூடாது (Government Procurement article XIII) என்கிறது மற்றொரு ஷரத்து.

தற்போது எந்த அரசு உயர் கல்வி நிலையங்களும் இலவசமாக கல்வி வழங்கவில்லை. மாணவர்களிடமிருந்து ஒரு குறைந்தபட்ச தொகையை கட்டணமாக வாங்குகிறது. அப்படியானால் GATS ஒப்பந்தப்படி அதுவும் ஒரு கட்டணத்திற்கு சேவை வழங்கும் நிறுவனமாகத் தான் ஆகிறது. அதனால் இனி அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானிய குழு (UGC) எந்த மனியங்களையும் வழங்க முடியாது.

அப்படியானால், அரசு கல்வி நிலையங்களின் செலவை ஈடுகட்ட அது மாணவர்களிடமிருந்து தான் வசூலிக்க வேண்டி வரும். இயற்கையாக கல்வி கட்டணம் தனியார் கல்வி நிலையங்களுக்கு இணையாக உயரும்.

சாமானிய மனிதன் மீது அளவற்ற அன்பும், அக்கறையும் கொண்ட நம் அரசு அப்போது என்ன செய்யும் என்றால்... மக்களே... அஞ்சாதீர்கள்... நாங்கள் இருக்கிறோம் என்று வாசன் கண் பரிசோதனை நிலையம் விளம்பரம் போல் நெஞ்சில் கை வைத்து ஒரு திட்டத்தை முன் வைக்கும்.

உங்கள் வங்கி கணக்கு எண் தாருங்கள் உங்கள் உயர் கல்விக்காக நாங்கள் அரசு பல்கலைக் கழகங்களுக்கு அளிக்கும் மானியத்தை உங்கள் வங்கி கணக்கில் போட்டு விடுகிறோம். நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் சென்று பயிலுங்கள், ‘உங்கள் கல்வி, உங்கள் சுதந்திரம்’ என்று தேன் தடவி பேசும்.

நாமும் மகிழ்வோம். அரசு அளித்த மானியத்தைக் கொண்டு இயல்பாக நம் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச கல்வி நிலையங்களில் தான் சேர்வோம்.

‘உங்கள் பணம்... உங்கள் கையில்...’ வாக்கியம் நினைவிருக்கிறதா.... ? சென்ற காங்கிரஸ் ஆட்சி பொது வழங்கல் துறையை (Ratio Shop) மூடப் போட்ட திட்டமிது. அதாவது, மானியத்தை நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விடுகிறோம், நீங்கள் பொருட்களை வெளி சந்தையில் வாங்கி கொள்ளுங்கள் என்றது.

ஒரு கிலோ சக்கரை ரூ 13.50 க்கு ரேசன் கடைகளில் தற்போது விற்கப்படுகிறது. வெளி சந்தையில் ரூ - 30 முதல் 35 வரை விற்கப்படுகிறது. வெளி சந்தையில் மொத்தமாக கொள்முதல் செய்யும் போது ரூ 24க்கு மொத்த வணிகர் ஆலைகளிலிடமிருந்து வாங்குகிறார். அதாவது ஒரு கிலோ சக்கரைக்கு அரசு தரும் மானியம் ரூ 10.50. இந்த ரூ.10.50 உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், அடுத்த மாதமே சக்கரை விலை வெளிச் சந்தையில் உயர்ந்தால்...?

இது போல் தான் கல்வி துறையிலும் நிகழப்போகிறது.

இது தந்திரமாக நம் நாட்டு பணத்தை அயல் நாட்டு வணிக கல்வி நிலையங்களுக்கு திசை திருப்பவே வழி வகுக்கும். நாட்டின் பொருளாதாரம் முற்றாக சீரழியும். சரி... பொருளாதாரம் எக்கேடாவது கெட்டுப் போகட்டும். சாமானிய மாணவனுக்கு நன்மை பயக்குமென்றால் நல்லது தானே என்கிறீர்களா....?

அதற்கும் ஆப்பு நிச்சயம் விழும்... சர்வதேச நிதி நிறுவனங்கள், நம் அரசு மானியத்தை குறைக்க வேண்டும் இல்லை ரத்து செய்ய வேண்டும் என்று அழுத்தம் தந்து வருகிறது. ஆரம்பத்தில் சிறிது காலத்திற்கு மட்டும் நம் வங்கி கணக்கில் பணம் தந்துவிட்டு பிறகு அதையும் நிறுத்தாது என்பது என்ன நிச்சயம்... ?

ஏற்கெனவே, அரசும், தீவிர மேட்டுக்குடி வலது சாரி குழுக்களும் திட்டமிட்டு ஒரு கருத்தாக்கத்தை நம்மிடையே உருவாக்குகிறார்கள்... அதாவது மானியம் பெறுவது இழுக்கு, இட ஒதுக்கீடு அவமானம் என்பது போன்ற கருத்தாக்கங்கள் சாமானிய மனிதனின் மனதில் வெற்றிகரமாக விதைக்கப்பட்டு வரும் தருணத்தில்... உங்கள் எரிவாயு உருளை மானியத்தை விட்டு தாருங்கள் என ஊரெங்கும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் உங்கள் கல்விக்கு அரசிடம் கையேந்தலாமா...? என்று கூடிய விரைவில் கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்....?

அரசன் நம் வீட்டு பெண்களை படுக்கைக்கு அழைப்பது, எதேச்சதிகாரத்தின் குறியீடு, அதாவது தனக்கு விருப்பமான அனைத்தையும் கவர்தல் அதற்காக அனைத்து வழிமுறைகளையும் கையாளுதல். இது தான் இப்போது கல்வி துறையில் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் கல்வி சந்தையை உலக பெருங்குழுமங்கள் கைப்பற்ற WTO-GATS ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. அதற்கு நம் அரசும் துணை புரிகிறது.

காந்தியும், பகத்சிங்கும் தேச துரோகிகள்

என்னது காந்தியும், பகத்சிங்கும் தேச துரோகிகளா...? என்ன உளறுகிறாய்... ? உன் மூளை மழுங்கிவிட்டதா... ? நல்ல மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடு. இல்லை... இல்லை... உன் கட்டுரையின் உள்நோக்கம் வேறு... நீ ஒரு அந்நிய நாட்டு கைக்கூலி... எம் தேசத்தின் கல்வி கொள்கைகளை குறித்து எங்களிடம் தவறாக பிரசாரம் செய்து கலகமூட்ட பார்க்கிறாய்... உன் உள்நோக்கம் புரிந்து விட்டது... இனியும் உம் கட்டுரையை தொடர்ந்து படிக்க நாங்கள் தயாராக இல்லை, என்று என் மேல் கோபம் அடைகிறீர்களா.... என்னை தாக்க வேண்டும் என்று கூட தேச பக்தியில் நரம்புகள் புடைத்த உங்களில் சிலர் எண்ணலாம்..

உங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்...

இது எதுவும் என் கருத்து இல்லை. நாளை WTO- GATS ஒப்பந்தம் நிறைவேறினால். நான் மேற்கூறிய விசயங்கள் உங்கள் பிள்ளைகளின் பாடப்புத்தகத்தில் இடம் பெறலாம், உம் குழந்தைகளுக்கு காந்தியும், பகத்சிங்கும் தேச துரோகிகள் ஆகலாம்; இந்தியாவை கொள்ளையடிக்க வழிகோலிய ராபர்ட் கிளைவை, நம் குழந்தைகள் ஆதர்ச புருஷனாக கொண்டாடலாம்.

என்ன சொல்ல வருகிறாய்.... கொஞ்சம் புரியும் படி சொல் என்கிறீர்களா... ?

GATS ஒப்பந்தத்தின் ஒரு சரத்துப்படி (ஒப்பந்தப் பிரிவு 1- 2 (a)), அந்நிய நாட்டு கல்வி பெருங்குழுமங்களில் வழங்கப்படும் பாடத்திட்டங்களில் நம் நாட்டு அரசால் தலையிட முடியாது. அவர்கள் இந்த நாட்டிற்கும், சூழலியலுக்கும் எதிரான கல்விகளை வழங்கினால் கூட நம் அரசால் எதிர்த்து கேள்வி எழுப்ப முடியாது. அவர்களின் பாடத்திட்டம் நம் நாட்டு கலாசாரத்தைக் கூட கிண்டல் செய்யலாம்.

இது, நம் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானது இல்லையா....? இந்திய பண்பாட்டையும், கலாசாரத்தையும் உயர்த்திப் பிடித்து பேசி ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் தான் இது போன்ற நிபந்தனைககளுக்கு சம்மதம் தெரிவித்து, அந்த ஒப்பந்தத்தில் திசம்பர் மாதம் கையெழுத்திடப்போகிறார்கள்.

இவர்களுக்கு உண்மையாக தேச கலாசாரத்தின் மீது எந்த ஈடுபாடும் கிடையாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அவர்களுக்கு தேவையானாது எல்லாம், நான்கைந்து இந்திய பெருங்குழுமங்களின் வளர்ச்சி மட்டுமே.... பண்பாடு, கலாச்சாரம் போன்ற வார்த்தைகள் எல்லாம் மக்களை பிரித்தாள்வதற்கு பயன்படும் சொல்லாடல்கள்.

நீங்கள் அலெக்ஸ் ஹேலியின் ‘ஏழு தலைமுறைகள்’ நாவலைப் படித்து இருக்கிறீர்களா...?அருமையான நாவல். அமெரிக்கா என்னும் வல்லாதிக்க பேரரசை கட்டியெழுப்ப, எப்படி ஆப்பிரிக்க அடிமைகள் சுரண்டப்பட்டார்கள் என்று விளக்கும் நாவல். அது புதினம் அல்ல, உண்மை ஆவணம். காம்பியா நாட்டின் ஜப்பூர் என்னுன் சிற்றூரில் அடிமை வியாபாரிகளால் அமெரிக்காவிற்கு கடத்தப்படும் குண்டா பல சித்திரவதைகளை அனுபவிக்கிறான், அவனது மனைவி பெல் பாலியல் ரீதியாக சுரண்டுபடுகிறாள். அவர்களின் வழித்தோன்றலான ஏழாம் தலைமுறையை சார்ந்த அலெக்ஸால் தொகுக்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை தான் இந்த நாவல். அந்த நாவலை படிக்கும் போது காகிதத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆப்பிரிக்க மக்களின் குருதி வாசனையை நீங்கள் நுகரலாம்.

கல்வியை பற்றித் தானே கட்டுரை... இதில் என்ன புத்தக விமர்சனம் செய்துக் கொண்டிருகிறாய் என்று நீங்கள் கோப்படுகிறீர்களா... இல்லை. நான் கட்டுரையின் கருவை விட்டு இம்மியளவும் நகரவில்லை. ஏழு தலைமுறைகள் நாவலுக்கும் GATS ஒப்பந்ததிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு, அதிக பருத்தி உற்பத்தி தேவைப்பட்டது... அதிக உற்பத்திக்கு அதிக உழைப்பு தேவை... சொகுசான அமெரிக்கர்களால், வயலில் உழன்று வேலை பார்க்க முடியவில்லை. அதற்கு நல்ல ஆரோக்கியமான ஆப்பிரிக்க அடிமைகள் தேவைப்பட்டார்கள். அவர்களின் நல்வாழ்வு, குண்ட்டா - பெல் போன்ற எண்ணற்ற ஆப்பிரிக்க மக்களின் குருதியை விலையாக கேட்டது.

GATS ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், நாளை நம் குழந்தைகளும் நவீன ‘குண்ட்டா - பெல்’ கள் தான். நம்மை அடித்து துன்புறுத்தி தான் வேலை வாங்க வேண்டும் என்பதல்ல, அவர்களுக்கு சேவை செய்வது போல் நம் மூளையை பழக்கிவிட்டாலே போதுமானது. இங்கு வரும் வெளிநாட்டு உயர் கல்வி குழுமங்கள் வெற்றிகரமாக அதை தான் செய்யும்.

இப்போது மட்டும் இங்கு என்ன வாழ்கிறது....? நாம் அவர்கள் வடிவமைத்துக் கொடுத்த மெக்கலே கல்வியைத் தானே படிக்கிறோம். ஏற்கெனவே நம் குழந்தைகள் நவீன கூலிகளாக மாறிவிட்டார்கள். இதற்கு மேல் நடக்க என்ன இருக்கிறது...? என்று வினவும் உங்களின் தார்மீக கோபம் புரிகிறது.

ஆனால், இப்போது கல்வியையும், பாடதிட்டத்தையும் மாற்ற நமக்கு ஏகப்பட்ட வாய்ப்புகளை நம் அரசியலமைப்பு வழங்கி இருக்கிறது. அங்கொன்று, இங்கொன்றாக வெளிச்ச கீற்றுகளும் தெரிய துவங்கி இருக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், அது அனைத்தையும் இழக்க நேரிடும்.

ஏற்கெனவே உள்ளூர் கல்வி திருடன் திருடுகிறான்... இப்போது அந்நிய நாட்டி திருடன் வரப்போகிறான்...? திருட்டு தொடரத்தானே போகிறது... ? என்று அலுத்துக் கொள்கிறீர்களா.

ஆம், மறுப்பதற்கில்லை... ஏற்கெனவே திருட்டுத்தான் நடக்கிறது. இன்னொரு திருடன் உள்ளே வந்தால், திருடன் தானே வலிமை பெறுவான். புது திருடனுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு பழைய திருடன் இன்னும் அதிகமாக திருட மாட்டான் என்பது என்ன நிச்சயம்... ?

இதற்கெல்லாம் மேல், அந்த ஏழு தலைமுறை நாவலில் அமெரிக்காவில் எப்படி குண்டாக்களுக்கும், பெல்லுகளுக்கும் (ஆப்பிரிக்க அடிமைகள்) கல்வி மறுக்கப்பட்டதோ, அது போல் இங்கு உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு, குறிப்பாக தலித்துகளுக்கு உயர் கல்வி மறுக்கப்படும் சூழல் உண்டாகும். ஏனெனில், GATS ஒப்பந்தத்தில், இடஒதுக்கீடு குறித்து ஓரெழுத்தையும் காண முடியவில்லை.

ஏற்கெனவே, தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் இந்திய உள்ளூர் மொழிகளில் கற்பிப்பதில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு தொழிற் கல்வி தமிழில் கடந்த சில ஆண்டுகளாக தான் வழங்கப்படுகிறது. இத்தகைய தருணத்தில், இந்தியா, GATS ஒப்பந்தம் குறித்து கொடுத்த ஒரு விளக்கத்தில், இந்தியர்கள் அனைவரும் உயர் கல்வியை ஆங்கிலத்தில் கல்வி கற்கவே விரும்புகிறார்கள், வெளிநாட்டு பெருங் கல்வி குழுமங்கள் ஆங்கிலத்தில் கல்வி அளிப்பது இந்தியர்களுக்கு வசதியாகத் தான் இருக்கும் என்று சொல்லி உள்ளது.

தமிழ் வழியில் படித்து 92 சதவீத மதிப்பெண்கள், எடுத்த தையரிய லட்சுமி, 2012 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் போது ஆங்கிலம் புரியாமல் அவமானத்தில் தற்கொலை செய்தது இப்போது நினைவில் வருவதை தடுக்க முடியவில்லை. (http://www.thehindu.com/news/cities...)

நண்பர்களே.... உங்கள் வீட்டில் பக்கத்து வீட்டுகாரர் வந்து உட்கார்ந்துக் கொண்டு, நீங்கள் இதை தான் சமைக்க வேண்டும், இப்படி தான் தூங்க வேண்டும், இந்த நேரத்தில் தான் புணர வேண்டும் என்று அதிகாரம் செலுத்தினால்... நீங்கள் கோபப்படுவீர்களா... இல்லை, அவர் சொல்வதை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவீர்களா....? சொரணை உள்ள அனைவருக்கும் கோபம் வரும், ஆதிக்கம் செலுத்துபவரை கழுத்தைப் பிடித்து வீட்டிற்கு வெளியே தள்ளுவோம்.

ஆனால், நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசே... உங்கள் பக்கது வீட்டுகாரருக்கு சாதகமாக நடந்து கொண்டால்...? இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் அது தான் நடக்கும் நண்பர்களே...

அதாவது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இங்கே செயல்பட வரும் போது என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் உலக வர்த்தக கழகத்தால் இறுதிசெய்யப் படும். அவ்வாறு இறுதி செய்யப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிராக உள்நாட்டு சட்டங்கள் இருக்க கூடாது. இதனை கண்காணிக்க ‘வணிக கொள்கை மேற்பார்வை பொறியமைவு’ (Trade Policy Review Mechanism) நிறுவப்படும் . இதன் பிரதிதிகள், ஆண்டுக்கொரு முறை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி தொடர்பான சட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள்.

இது இழிவில்லையா...? உங்கள் வீட்டில் என்ன சமைக்க வேண்டும் என்று பக்கத்து வீட்டுகாரன் ஆணையிட்டாலே வரும் கோபம் , ஒரு அமைப்பு உங்கள் தேசத்தின் கல்வி கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தினால் ஏன் வரமாட்டேன் என்கிறது.

உங்கள் தந்தை உங்கள் குடும்ப சொத்தை விற்பனை செய்கிறார் என்றால் உங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று எதிர் பார்ப்பீர்கள்...? அந்த சொத்து பத்திரத்தை காண வேண்டும் என்பது உங்கள் நியாயமான எதிர்பார்ப்பு. ஆனால். இந்த திருநாடு உங்களிடம் எந்த அனுமதியும் பெறாமல், உயர் கல்வியை விற்பனை செய்ய போகிறது. புதிதாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்றால், அதன் மாதிரியை இணையத்தில் இந்திய மொழிகளில் வெளியிட வேண்டும். ஆனால், இது நாள் வரை இந்திய அரசு இந்திய மொழிகளுக்கு முக்கியதுவம் கொடுத்து, தமிழிலோ, தெலுங்கிலோ, மலையாளத்திலோ வெளியிட்டதில்லை. இந்தியில் மட்டுமே வெளியிடும். இம்முறை, இந்தியில் கூட வெளியிடாமல், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டுள்ளது.

தம் குடிகளுக்கு இந்த ஒப்பந்தம் குறித்து எதுவும் தெரிய கூடாது என்று நினைப்பதிலிருந்தே, நம் அரசுகளின் அயோக்கியதனம் பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கல்வியிலாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து GATS ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து, இந்த GATSன் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொள்ள கூடாது. ஆப்பிரிக்க அரசு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடாது என பரிந்தளித்துள்ளார்கள். இந்திய பொது புத்தி நம்மை விட கீழானவர்களாக நினைக்கும் ஆப்பிரிக்காவே, இந்த விஷயத்தில் விழிப்பாக உள்ளது. நாம் என்ன செய்ய போகிறோம் நண்பர்களே...?

கென்யா நாட்டு நைரோபியில், வரும் திசம்பர் 15 -18 வரை WTO - GATS மாநாடு நடக்கிறது. அதற்குள் உயர்கல்வியை வணிகமயமாக்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியா அளித்துள்ள வாக்குறுதிகளை திரும்ப பெறவில்லை என்றால், இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஆபத்துகள் எல்லாம் நிஜமாகும்.

நம் குழந்தைகளின் நல் எதிர்காலத்திற்காக, இந்தியா அரசிற்கு அழுத்தம் தந்து, வாக்குறுதிகளை திரும்ப பெற வைப்போம்.

Reference

http://www.unesco.org/education/stu...

https://www.wto.org/english/docs_e/...

http://www.thehindu.com/news/nation...

Neo -Liberal aasault on higher education, Published by AIF - RTE

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ்

Niyas Ahmed

https://www.facebook.com/notes/%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/875970009234074/

 




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..