Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 55
Posted By:Hajas On 7/1/2017 9:34:32 PM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

Episode 54: ஜின்களால் மனிதர்களைக் கடத்திச்செல்ல முடியுமா?

Episode 55: ஜின்களால் பௌதீக ரீதியில் தீங்கிழைக்க முடியுமா?


Image may contain: one or more people and text

ஜின்களால் பௌதீக ரீதியில் தீங்கிழைக்க முடியுமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதுவரை நாம் பட்டியலிட்டுக் காட்டிய பல சம்பவங்களில் நாம் ஜின்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது, ஜின்களால் மனிதர்களுக்குப் பௌதீக ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்தலாம் எனும் கருத்தையே வலியுறுத்தி வந்தோம். இந்தக் கருத்தும் மார்க்கத்தில் அங்கீகரிக்கப் பட்ட கருத்தா? என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியது நமது கடமை. எனவே இது குறித்து இப்போது சற்று விரிவாக நோக்கலாம்.

ஜின்களால் மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படும் பௌதீக ரீதியிலான தாக்கங்களைப் பிரதானமாக இரண்டு அடிப்படைகளில் வகைப்படுத்திக் கொள்ளலாம். ஒன்று நேரடியான தாக்குதல்; மற்றது நோய் நொடிகள் மூலமான மறைமுகத் தாக்குதல். இந்த இரண்டுமே மனிதர்கள் மீது ஏற்படுத்தப் படும் பௌதீக ரீதியிலான தாக்கங்களில் அடங்கும். எனவே, இந்த இரண்டையும் தனித்தனியாக நோக்க வேண்டியிருக்கிறது.

சுருக்கமாகக் கூறுவதென்றால், இந்த இரண்டு வகையான தாக்குதல்களையும் மனிதர்கள் மீது ஜின்கள் தொடுப்பதுண்டு. இதை உறுதிப்படுத்தக் கூடிய மார்க்க ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றுல் சிலதை இனித் தனித்தனி பிரிவுகளாகப் பார்ப்போம்:

நேரடித் தாக்குதல்கள்:
~~~~~~~~~~~~~~~~~~~~
பௌதீக ரீதியாக ஜின்களால் மனிதர்களுக்குத் தாக்கம் ஏற்படுத்தலாம் என்பதை இப்போது ஒருசில ஆதாரங்கள் வாயிலாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

ஆதாரம் 1:
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம்.
அல்குர்ஆன் (6 : 112)

நிச்சயமாக அவன் (ஷைத்தான்) உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
(அல்குர்ஆன் 2:208)

இந்த இரண்டு குர்ஆன் வசனங்களும் நேரடி ஆதாரம் கிடையாது. இருந்தாலும், நமது கருத்துக்கு அடிப்படையான ஓர் உண்மை இந்த வசனங்களினுள் ஒளிந்துள்ளது. அந்த உண்மையை உணர்த்துவதற்காக மட்டுமே இவ்வசனங்களை நாம் ஆதாரமாக எடுத்துள்ளோம்.

அதாவது, இங்கு அல்லாஹ் மனிதர்களைப் பார்த்து, “ஷைத்தான் உங்கள் பகிரங்க எதிரி” என்று குறிப்பிடுகிறான். இந்த வார்த்தையே கவனிக்கத் தக்கது. ஒருவன் நமக்குப் பகிரங்க எதிரியாக மாறி விட்டால், அவன் எல்லா அடிப்படைகளிலும் நம்மை அழிக்கவே ஓயாது முயற்சிப்பான் என்று தான் அர்த்தப்படும். சில சமயங்களில் அந்த முயற்சிகள் உள்ளம் / கொள்கை / கோட்பாடுகள் சார்ந்த முயற்சிகளாகவும் இருக்கலாம்; சில சமயங்களில் அந்த முயற்சிகள் நேரடித் தாக்குதல்களாகவும் கூட இருக்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப எதிரி, தனக்குத் தோதான முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வான்.

ஆதாரம் 2:
"இன்னும் அவர்களில் எவரை (வழிகெடுக்க) நீ சக்தி பெற்றிருக்கிறாயோ, அவர்களை உன் குரல் மூலம் வழிகெடுத்துக் கொள்; உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்....... (என்றும் இறைவன் இப்லீஸிடம் கூறினான்)”
(அல்குர்ஆன் 17 : 64)

இந்த வசனமும் நேரடி ஆதாரம் கிடையாது. ஆனால், இதிலும் நமது கருத்துக்கு அடிப்படையான ஒரு பேருண்மை ஒளிந்திருக்கிறது. அந்த உண்மையையும் உணர்த்திக் காட்டுவதற்கே இதை நாம் ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்.

மனிதர்கள் மீது ஜின்களுக்குப் பௌதீக ரீதியிலான எந்தத் தாக்கமும் செலுத்த முடியாது என்று இன்று வாதிடக் கூடிய அனேகமான பகுத்தறிவு வாதிகள் பொதுவாக முன்வைக்கும் ஒரு வாதம் தான் பின்வரும் கருத்து:

“மனித இனத்துக்கு எதிரான ஷைத்தானின் சதித்திட்டங்கள், மற்றும் செயல்பாடுகள் என்பதன் வரைவிலக்கணம் என்னவென்றால், உள்ளத்தில் ஊசலாட்டங்களை / தவறான எண்ணங்களை விதைத்து, அந்த எண்ணங்கள் மூலம் மனிதனைப் பாவிகளாக்கி, வழிகெடுத்து, நரகப் படுகுழியில் விழச் செய்வது மட்டுமே. ஏனெனில், உள்ளத்தில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தும் ஆற்றல் மட்டுமே ஷைத்தானுக்கு வழங்கப் பட்டுள்ளது. இதை மீறிய பௌதீக ரீதியிலான வேறெந்த ஆற்றலும் ஷைத்தானுக்கு (ஜின்னுக்கு) இல்லை”

மூட நம்பிக்கைகளுக்கெதிராகப் பகுத்தறிவு வாதம் பேசும் அனேகமானோரின் நிலைபாடு இது தான். ஆனால், இந்த நிலைபாடும், வாதமும் முழுக்க முழுக்கத் தவறானது; அரைகுறைப் புரிதலின் விளைவால் ஏற்பட்டது.

ஷைத்தானுக்கு (ஜின்னுக்கு) வழங்கப் பட்டிருக்கும் ஆற்றல்கள் என்பது, உள்ளத்தில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துவதோடு மட்டும் வரையறுக்கப் படவில்லை. மாறாக, மனித வாழ்வின் எல்லா அம்சங்களிலும் சர்வசாதாரணமாக ஊடுறுவும் சக்தியும், அனுமதியும் ஷைத்தானிய ஜின்களுக்கு அல்லாஹ்வால் ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளன.

அதாவது, பௌதீக, மற்றும் ஆன்மீக ரீதியான இரண்டு அடிப்படைகளிலும் மனித இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தி ஷைத்தானிய ஜின்களுக்கு வழங்கப் பட்டுள்ளது என்பது தான் மார்க்கம் கூறும் உண்மை. இந்த உண்மையைத் தான் அல்லாஹ் மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் மூலம் பட்டவர்த்தனமாகத் தரம் பிரித்துக் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

உள்ளத்தில் ஆசைகளைத் தூண்டுவதன் மூலமும், ஆசை வார்த்தைகளை உள் மனதுக்குள் ஓதுவதன் மூலமும் மனிதனை வழிகெடுப்பது மட்டும் தான் ஷைத்தானின் ஆற்றல் என்றிருந்தால், இந்த வசனத்தில் அல்லாஹ், “அவர்களை உன் குரல் மூலம் வழிகெடுத்துக் கொள்” என்று கூறியதோடு மட்டும் நிறுத்திக் கொண்டிருப்பான். ஆனால், அத்தோடு அல்லாஹ் நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக ஷைத்தானுக்கு வழங்கப் பட்டுள்ள பல்வேறு வகையான ஆற்றல்களையும், அதிகாரங்களையும் இந்த வசனத்தில் அல்லாஹ் பட்டியல் போட்டுக் காட்டுகிறான்.

அதாவது, தொடர்ந்து அல்லாஹ் இந்த வசனத்தில், “உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்” என்றும் கூறுகிறான். இங்கு தான் நாம் சிந்திக்க வேண்டும். உள்ளத்தில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துவதன் மூலம் பாவம் செய்யத் தூண்டுவது மட்டும் தான் ஷைத்தானின் அதிகாரம் என்றிருந்தால், அவ்வாறான ஒருவனுக்கு எதற்கு வீணாக ஒரு குதிரைப் படையையும், காலாட்படையையும் அல்லாஹ் வழங்க வேண்டும்? உள்ளத்தில் ஆசையைத் தூண்டுவதற்கும், போர்ப் படைகள் சகிதம் போர் தொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? காரணம் இல்லாமல் அல்லாஹ் எதையுமே குறிப்பிட மாட்டான்.

ஆக, இந்த வாசகத்தின் மூலம் நமக்கு ஒரு விடயம் தெளிவாகப் புலப்படுகிறது. உள்ளத்தின் ஊசலாட்டம் ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல், பௌதீக ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் ஆற்றல்களும் ஷைத்தானுக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. அவ்வாறான தாக்கங்களை நடத்துவதற்கு ஏதுவாகவே அவனுக்குக் குதிரைப் படையும், காலாட்படையும் அல்லாஹ்வால் பிரத்தியேகமாக வழங்கப் பட்டுள்ளன என்பது இங்கு தெளிவாகிறது.

ஆதாரம் 3:
மேலும் ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள், ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவை (தனித்தனியாக) அணிவகுக்கப் பட்டன.
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.
(அல்குர்ஆன் 27:17-18)

இந்த வசனத்தில் தெளிவாகவே ஜின்களுக்கு இருக்கும் பௌதீக ரீதியான ஆற்றல் மறுக்க முடியாதவாறு நிரூபிக்கப் பட்டுள்ளது. ஜின் இனத்தின் ஒரு படைப்பிரிவையே அல்லாஹ் ஸுலைமான் (அலை) அவர்களுக்காகத் திரட்டிக் கொடுத்ததாக இங்கு கூறுகிறான்.

எதிரி நாட்டவரோடு போரிடுவதற்குத் தான் படைகள் திரட்டப் பட்டு, அணிவகுக்கப் படுவதுண்டு. பௌதீக ரீதியில் நேரடியாகத் தாக்குதல் செய்து, ஆட்களைக் கொல்லும் ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ, அவ்வாறானவர்கள் தாம் போர்ப்படைகளில் திரட்டப் படுவார்கள். இது தான் அர்த்தமுள்ள செயல்.

நிலைமை இவ்வாறிருக்கும் போது, பகுத்தறிவாளர்கள் கூறுவது போல், உள்ளத்தில் ஊசலாட்டம் ஏற்படுத்தி வழிகெடுப்பது மட்டும் தான் ஜின்களின் ஆற்றல் என்றால், இங்கு எதற்காக அல்லாஹ் வீணாக ஜின்களின் ஒரு படையை அணிவகுக்கச் செய்தான்? ஏற்கனவே வழிகேட்டில் இருக்கும் ஸுலைமான் (அலை) அவர்களின் எதிரி நாட்டவரைப் போர்க்களத்தினுள் புகுந்து ஆசை வார்த்தை காட்டி இன்னும் கொஞ்சம் வழிகெடுக்கவா? பகுத்தறிவு வாதம் பேசுவோர் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

ஆதாரம் 4:
யஹ்யா இப்னு ஸஈத் அறிவித்ததாகப் பதிவாகியிருக்கும் செய்தி:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவுப் பயணம் அழைத்துச் செல்லப் பட்ட போது, ஒரு கெட்ட ஜின், கையில் ஒரு தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு, நபி (ஸல்) அவர்களை (தாக்குவதற்காகப்) பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம், அதையே (அந்த ஜின் தன்னை நெருங்கி வருவதையே) கண்டார்கள்.

அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள், “நான் உங்களுக்கு ஒரு வசனத்தைக் கற்றுத் தரட்டுமா? நீங்கள் அதைக் கூறும் போதே அதன் (அந்த ஜின்னின்) கையிலிருக்கும் தீப்பந்தம் அணைந்து விடும்; அத்தோடு அது கீழே விழுந்தும் விடும்.” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நிச்சயமாக (கற்றுத்தாருங்கள்)” என்று கூறினார்கள். உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள், “(நான் கூறுவதைப் போலவே) கூறுங்கள்..” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

“மேன்மை பொருந்திய அல்லாஹ்வின் திருமுகத்தை கொண்டும், நல்லோர், தீயோர் எவருமே மீற முடியாத, அவனது (அல்லாஹ்வின்) முழுமையான சொற்களைக் கொண்டும்... வானிலிருந்து இறங்குபவற்றின் தீங்கிலிருந்தும், வானில் ஏறுபவற்றின் தீங்கிலிருந்தும், பூமியிலிருக்கும் படைப்புக்களின் தீங்குகளிலிருந்தும், அதன் (பூமியின்) உள்ளே இருந்து வெளிப்படுபவற்றின் தீங்குகளிலிருந்தும், இரவு மற்றும் பகல் ஆகியவற்றின் சோதனைகளிலிருந்தும், இரவிலும் பகலிலும் வருகை தருவோரில், நல்லதைக் கொண்டு வருவோரைத் தவிர்ந்த (ஏனைய) வருகையாளர்களிடமிருந்தும்... கருணை மிக்கவனே, உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.”
முவத்தா மாலிக்: பாடம் 51, ஹதீஸ் 1742

இந்த ஹதீஸுக்குத் துணையாக, இது போன்ற இன்னுமொரு செய்தியையும் காண முடிகிறது. அந்தச் செய்தி பின்வருமாறு:

அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
வயோதிகராக இருந்த அப்துர் ரஹ்மான் பின் கம்பஷ் (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தை அடைந்தவரா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்று கூறினார்கள். ஷைத்தான்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (தாக்குவதற்காக) நெருங்கிய போது நபியவர்கள் என்ன செய்தார்கள்? என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர், அந்த இரவில் ஷைத்தான்கள் ஓடைகளிலிருந்தும் மலைக் கணவாய்களிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி (தாக்குவதற்காக) விரைந்தன. அவர்களில் ஒரு ஷைத்தானுடைய கையில் தீப்பந்தம் இருந்தது. அதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தை கரிப்பதற்கு அந்த ஷைத்தான் நினைத்தது.

அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானிலிருந்து இறங்கி வந்து, “முஹம்மதே நான் கூறுவதை நீங்களும் கூறிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் முழுமையான சொற்களைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், வானிலிருந்து இறங்குபவற்றின் தீங்கிலிருந்தும், வானில் ஏறுபவற்றின் தீங்கிலிருந்தும், இரவு பகலில் ஏற்படும் குழப்பதின் தீங்கிலிருந்தும், நன்மையை விளைவிக்கும் நட்சத்திரத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்து தாரகைகளின் தீங்கிலிருந்தும் அளவற்ற அருளாளனே (உன்னிடம்) பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். உடனே ஷைத்தான்களின் நெருப்பு அனைக்கப்பட்டு, பாக்கியமும் உயர்வும் மிக்க அல்லாஹ் அவர்களை தோல்வியுறச் செய்தான்.
முஸ்னத் அஹ்மத்: 14914 (ஷாமிலா எண்: 15460)
தரம்: ஸஹீஹ் (அல்பானி – ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹா: 2 / 495)

இந்த இரண்டு அறிவிப்புகள் வாயிலாகவும் ஒரு செய்தி உறுதியாகிறது. அதாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையே நேரடியாகத் தாக்கும் நோக்கத்தோடு ஷைத்தானிய ஜின்கள் கையில் தீப்பந்தங்களுடன் இரவுப் பொழுதில் நெருங்கியிருக்கிறார்கள் என்பது இங்கு ஊர்ஜிதமாகிறது. மேலும் இந்தத் தாக்குதல் என்பது நேரடியான தாக்குதல் என்பதும் மறுக்க முடியாதவாறு உறுதியாகிறது.

இனி இன்னோர் ஆதாரத்தையும் பார்க்கலம்:

ஆதாரம் 5:
இப்னு மஸ்ஊத் (ரழி), உமர் (ரழி) போன்ற ஒருசில ஸஹாபாக்கள் நேரடியாகவே ஜின்களோடு மல்யுத்தம் செய்து ஜெயித்திருப்பதாகவும் சில செய்திகள் காணக் கிடைக்கின்றன. ஆனால், அவையெல்லாம் பலவீனமான செய்திகளென்பதால் நாம் புறக்கணித்து விடலாம். ஆனால், இவ்வாறான செய்திகளுள் ஒரு செய்தியை மட்டும் இங்கு நாம் சில நியாயங்களின் அடிப்படையில் உள்ளடக்குகிறோம்.

இது அம்மார் இப்னு யாஸிர் (ரழி) அவர்களைக் குறித்த ஒரு செய்தி. இந்தச் செய்தி, பைஹக்கி (7/124), மற்றும் இப்னு ஸஅத் அவர்களின் தபக்காத் (3/251) ஆகியவற்றில் பதிவாகியுள்ளது.

செய்தியின் சாராம்சம் இது தான்:
அம்மார் இப்னு யாஸிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மார் (ரழி) அவர்களை ஒரு கிணற்றுக்குச் சென்று தண்ணீர் கொண்டுவருமாறு பணித்தார்கள். அங்கு கிணற்றருகில் ஷைத்தான் மனித வடிவத்தில் நின்று கொண்டு, அவரை நீர் எடுக்க விடாமல் தடுத்தான். இறுதியில் ஷைத்தானோடு மல்யுத்தம் செய்து, அவனைத் தோற்கடித்த பிறகே அம்மார் (ரழி) அவர்களால் தண்ணீர் அள்ள முடிந்தது. அம்மார் (ரழி) அவர்கள் திரும்பி வந்து, இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய போது நபி (ஸல்) அவர்கள், அம்மாரோடு சண்டையிட்டது மனிதன் அல்ல; ஷைத்தானிய ஜின் என்று கூறினார்கள். (அதுவரை அம்மார் (ரழி) அவர்களுக்கே அது ஜின் என்று தெரிந்திருக்கவில்லை)

இதே செய்தியின் இன்னொரு வடிவம் ஒருசில மாற்றங்களோடு “மஜ்மா அஸ்ஸவா’இத்” (15594) எனும் கிரந்தத்திலும் பதிவாகியுள்ளது.

இந்தச் செய்தியின் விரிவான வடிவம் இமாம் பைஹக்கியின் “தலா’இல் அந் நபுவத்” இல், “அம்மார் இப்னு யாஸிர் ஜின்னோடு போராடியதும், நபி (ஸல்) அவர்களிடம் கூறியதும்” எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு பதிவாகியுள்ளது:

அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அறிவித்ததாவது:
“அல்லாஹ்வின் மீது ஆணையாக, நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில், அம்மார் இப்னு யாஸிர் மனிதர்களோடு மட்டுமல்ல; ஜின்களோடும் சண்டை செய்திருக்கிறார்.”

அப்போது மக்கள், “அவர் மனிதர்களோடு சண்டையிட்டவை பற்றி எமக்குத் தெரியும். ஆனால், ஜின்களோடு எவ்வாறு சண்டையிட்டார்?” என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரழி) கூறினார்கள்:

“ஒரு பிரயாணத்தின் போது நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபியவர்கள் அம்மாரிடம் தண்ணீர் கொண்டு வருமாறு பணித்தார்கள். எனவே அம்மார் (ரழி) தண்ணீர் கொண்டுவரச் சென்றார். ஆனால், அங்கு ஒரு கரிய நிற அடிமையின் தோற்றத்தில் உருமாறித் தோன்றிய ஷைத்தான், அவரை நீர் அள்ள விடாமல் தடுத்தான். அம்மார் அவனோடு மல்யுத்தம் செய்து, அவனை நிலத்தில் வீழ்த்தினார்.

தோல்விடைந்த ஷைத்தான், “என்னை விட்டுவிடு, உனக்கு நீர் எடுக்க நான் வழிவிடுகிறேன்” என்று கூறினான். ஆகவே அம்மார் அவனை விட்டு விட்டார். ஆனால், விடுபட்ட உடனே ஷைத்தான் மீண்டும் அம்மாரைத் தடுக்கவே, மீண்டும் அம்மார் அவனை அடித்து வீழ்த்தினார். இவ்வாறு மூன்று தடவை நிகழ்ந்தது. நான்காவது தடவை ஷைத்தான் அவரை நீர் எடுக்க அனுமதித்தான்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எம்மிடம், “ஷைத்தான் ஓரு கறுப்பு அடிமையின் தோற்றத்தில் உருமாறி, அம்மாரை நீர் அள்ள விடாமல் தடுக்க முயன்றான். ஆனால், அவனை வெற்றி கொள்வதற்கு அல்லாஹ் அம்மாருக்கு உதவி செய்தான்” என்று கூறினார்கள்.

அலீ (ரழி) தொடர்ந்து கூறினார்கள்:
அம்மார் திரும்பி வந்த போது நாம் அவரைப் பாராட்டினோம். அல்லாஹ்வின் தூதர் கூறியவற்றை அவரிடம் கூறினோம். அப்போது அம்மார், “அல்லாஹ்வின் மீது ஆணையாக, அது ஷைத்தான் தான் என்று அப்போது அறிந்திருந்தால், அங்கேயே நான் அவனைக் கொன்றிருப்பேன். அவனது அருவருக்கத்தக்க வாடை மட்டும் இல்லாமலிருந்திருந்தால் அவனது குரல்வளையை இன்னும் இறுக்கிப் பிடித்திருப்பேன்” என்று கூறினார்கள்.

குறிப்பு:
இந்த அறிவிப்பைப் பொருத்தவரை, இதன் அறிவிப்பாளர் வரிசையில் சில பலவீனங்கள் இருப்பதாக இமாம் பைஹக்கி உட்பட இன்னும் பல அறிஞர்களும் விமர்சித்துள்ளார்கள். 
ஆனால், இந்தச் செய்தியின் இன்னோர் அறிவிப்பு ஹஸனுல் பஸ்ரி (ரஹ்) வழியாக வருவதாக இமாம் பைஹக்கி குறிப்பிடுவதோடு, அதை ஸாஹீஹான செய்தியென்றும் குறிப்பிடுகிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட செய்திக்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தொட்ட பின்வரும் செய்தியும் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது:

ஆதாரம் 6:
நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை தொழுது கொண்டிருந்த போது, ஒரு ஷைத்தானிய ஜின் நபியவர்களைத் தாக்க வந்ததாகவும், நபியவர்கள் அதன் குரல்வளையால் இறுக்கிப் பிடித்து அதைக் கீழே வீழ்த்தியதாகவும் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு செய்தி முஸ்னத் அஹ்மத் (3/82), மற்றும் நஸாயீ, அபூதாவூத் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

இந்தச் செய்தியில், நபி (ஸல்) அவர்கள் அந்த ஜின்னைப் பற்றிக் குறிப்பிடும் போது,
“(எனது பிடியால்) வெளித்தள்ளிய அதன் நாக்கின் ஈரத்தை எனது கையில் உணரும் வரை (அதன் குரல்வளையை நான் நெரித்துக் கொண்டே இருந்தேன்). ஸுலைமான் (அலை) இன் பிரார்த்தனை மட்டும் இல்லாமல் இருந்தால், அனைவரும் பார்க்கும் விதமாக அவனைப் பிடித்து நான் கட்டி வைத்திருந்திருப்பேன்” என்று ஓர் அறிவிப்பில் கூறியுள்ளார்கள்.

மேலும், அபூதாவூத், அஹ்மத் போன்றோரின் பதிவுகளில், அபூ ஸஈத் வாயிலாக அறிவிக்கப் பட்ட இதே செய்தியின் இன்னோர் அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் அவனை எனது கரங்களால் இறுக்கிப் பிடித்துக் கொண்டே இருந்தேன். எனது இந்த விரலிலும், இந்த விரலிலும் (பெருவிரலும், அதற்கடுத்த விரலும்) அவனது எச்சிலில் ஈரத்தை உணரும் வரை அவன் கழுத்தை நான் நெரித்துக் கொண்டே இருந்தேன்” என்று கூறியதாகப் பதிவாகியுள்ளது.
முஸ்னத் அஹ்மத்: 3 / 82, நஸாஈ, அபூதாவூத்

இந்தச் செய்தியை வலுப்படுத்துவதாக மேலும் பல செய்திகளை ஏற்கனவே நாம் இந்தத் தொடரின் முந்திய பகுதிகளில் புகாரி / முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் பதிவாகியிருக்கும் அறிவிப்புகள் வாயிலாகவும் நோக்கியிருக்கிறோம்.

மேலும் இந்தச் செய்திகளோடு, ஏற்கனவே நாம் நோக்கிய அபூஹுரைரா (ரழி) அவர்கள் மனித உருவில் திருட வந்த ஷைத்தானைக் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம், உபை இப்னு கஅப் (ரழி) தோட்டத்துக்குத் திருட வந்த ஜின்னைப் பிடித்த சம்பவம், போன்ற சம்பவங்களையும் இங்கு மீட்டி இணைத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது, மேற்குறிப்பிட்ட ஆதாரங்களோடு, ஏற்கனவே முந்திய தொடர்களில் நாம் பார்த்த அபூஹுரைராவின் சம்பவம் போன்ற சம்பவங்களையும் இணைத்துப் புரியும் போது, ஜின்களால் மனிதர்கள் மீது பௌதீக ரீதியிலான தாக்கங்களை மேற்கொள்ளலாம் என்பது இங்கு ஆணித்தரமாக உறுதியாகிறது.

இதுவரை நாம் நேரடித் தாக்குதல் சார்ந்த அம்சங்களை மட்டுமே பார்த்தோம். இனி அடுத்ததாகக் குறிப்பிட்ட சில நோய்களைத் தோற்றுவிப்பதன் மூலமும் ஜின்களால் மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியுமா என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்....

- அபூ மலிக்

Episode 56: ஜின்களால் நோய்களை ஏற்படுத்தலாமா?




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..