Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ?
Posted By:peer On 5/14/2017 1:29:13 PM

பில்கிஸ் பானுவிற்கு இப்போது வயது 34. அப்போது வயது 19. அப்போது என்பது 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம். அந்த மாதத்தின் 3ஆம் தேதி அவர் கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார். அப்போது அவர் 5 மாத கர்ப்பிணி. கையில் 3 வயது குழந்தை இருந்தது. ஈத் பண்டிகைக்காக அவர் தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.

அப்போதுதான் கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள், தேடித்தேடி அழிக்கப்பட்டார்கள். முஸ்லிம் மக்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. அந்த தினத்தில் அவரது ஊரிலிருந்தால் தாக்கப்படுவோம் என்ற செய்தி கிடைத்தது. அதனால் மசூதி, ஆதிவாசிகள் குடியிருப்பு என்று மறைந்து மறைந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். தாய், 2 தங்கைகள், தாய் மாமாவின் 2 பெண்கள், அப்பாவுடன் பிறந்த அத்தையின் பிள்ளைகள் என்று ஈத் பண்டிகைக்காக வந்திருந்த சொந்தங்கள் எல்லோரும் மரணத்திற்கும், மானத்திற்கும் பயந்து ஓடிக் கொண்டிருந்தார்கள்.

------------------------
எமதாண்டவம்
------------------------
அவர்கள் இரவில் தங்கியிருந்த இடத்திற்கு ஒரு கும்பல் வருகிறது. அந்தக் கும்பலால் பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சார்ந்த 14 பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவரது 3 வயது பெண் குழந்தை தலையில் கல்லால் அடித்து அவர் கண்முன்னே கொல்லப்பட்டாள். அதற்கு முன்பாக அவரது தங்கைகளும், தாய் மாமா பெண்களும் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் இவர் சாட்சி. அதன் பிறகு பலரால் இவரும் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார். கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். இறந்து போய் விட்டார் என்று கருதி அந்தக் கும்பல் அவரை அந்த இடத்தில் விட்டுச் செல்கிறது.

-----------------------------------------------
காவல்துறையின் லட்சணம்
-----------------------------------------------
சில மணி நேரங்கள் கழித்து சில சடலங்கள் அந்த இடத்தில் கிடப்பதாக ‘‘அறிந்து கொண்ட’’ காவல்துறை அங்கே வருகிறது. அதன் பிறகு அவர் சிகிச்சைக்கு அனுப்பப்படுகிறார். மார்ச் 4ஆம் தேதி லிம்ஹேடா காவல் நிலையத்தில் குற்றவாளிகளில் தெரிந்தவர்களின் பெயரைச் சொல்லி , மற்றவர்களின் எண்ணிக்கையை சொல்லி அடையாளம் காட்ட முடியும் என்று புகார் கொடுக்கிறார்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அந்த அறிக்கையில் குற்றவாளிகள் எவரின் பெயரும் இடம் பெறவில்லை. சரியாக ஓராண்டு கழிந்த பிறகு, 2003ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி போலீஸ் இதுகுறித்து ஒரு அறிக்கை கொடுக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் லிம்ஹேடா நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைக்கிறது.

---------------------------------------------------------------
மனித உரிமை ஆணையத்தின் உதவி
----------------------------------------------------------------
அதற்குப்பிறகு, ஏப்ரல் மாதம் அவர் தேசிய மனித உரிமை ஆணையத்தை நாடுகிறார். ஆணையத்தின் உதவியோடு உச்சநீதிமன்றத்தில், லிம்ஹேடா காவல்துறையின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்; சிபிஐ விசாரணை வேண்டும்; இந்த வழக்கை கண்டுகொள்ளாத, திரித்துக் கூறுகிற குஜராத் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை வைக்கிறார். இதற்கிடையில் குஜராத் குற்றப் புலனாய்வுத்துறை இவரை துன்புறுத்துகிறது. மீண்டும் அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். அந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் சிபிசிஐடி துன்புறுத்தலைக் கைவிட வேண்டுமென்றும், சிபிஐ விசாரிக்க வேண்டுமென்றும் உத்தரவிடுகிறது.

2004ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி குற்றவாளிகள் 12 பேரை சிபிஐ கைது செய்தது. அதனடிப்படையில் பிப்ரவரி 11ஆம் தேதி சிபிஐ இடைக்கால அறிக்கை ஒன்றை உச்சநீதிமன்றத்தில் கொடுக்கிறது. அந்த அறிக்கையில் ‘‘குஜராத் மாநில காவல்துறை அப்பட்டமாக அத்துமீறி இருக்கிறது; கடுமையான குற்றங்களை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு மார்ச் மாதம் காவல்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்படுகிறார்கள். அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. இந்தக் கொடுமைகளில் ஈடுபட்ட 20 பேர் - அதில் 6 போலீஸ்காரர்களும், 2 டாக்டர்களும் அடங்குவர். அதன் பிறகு அந்த மாநிலத்தில் இருந்த காவல்துறை மூலமாகவும், குற்றவாளிகள் மூலமாகவும் பில்கிஸ் பானுவும் சாட்சிகளும் மிரட்டப்படுகிறார்கள். வேறு வழியின்றி மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். அதன் பிறகு பில்கிஸ் பானுவிற்கும் சாட்சிகளுக்கும் மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

--------------------------------------------------
குஜராத்திலிருந்து மும்பைக்கு
--------------------------------------------------
அதன் பிறகு மே 12ஆம் தேதி சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. கூடவே, இந்த வழக்கை குஜராத்தில் நடத்தினால் நியாயம் கிடைக்காது என்கிற கருத்தையும் அது சொல்கிறது. ஜூலை மாதம் மீண்டும் பில்கிஸ் பானு இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்த வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டதோடு அவருக்காக வாதாட மத்திய அரசாங்கம் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

------------------
தண்டனை
------------------
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடக்கிறது. 12 குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். அந்தப் பெண் தொடர்ச்சியாக 20 நாள் குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார். மீண்டும் 2006 ஆகஸ்ட் மாதம் அவரை குறுக்கு விசாரணை செய்கிறார்கள். அத்தனைக்கும் பிறகுதான் 2008 இல் இந்த வழக்கில் மும்பை செசன்ஸ் நீதிமன்றம் ஜனவரி 8ஆம் தேதி தீர்ப்பு சொல்கிறது. ஒரு போலீஸ்காரர் உட்பட 12 பேரும் குற்றவாளிகள். அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் இறந்து விட்டார். அது தவிர 5 போலீஸ்காரர்கள் மற்றும் 2 டாக்டர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இதை எதிர்த்து 2009, 2011 காலத்தில், சிபிஐ தரப்பு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்களில் குழந்தையை அடித்துக் கொன்ற, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 3 பேருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது. அதேபோன்று குற்றவாளிகள் தங்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென மேல்முறையீடு செய்கிறார்கள்.

இந்த வழக்கின் தீர்ப்புதான் கடந்த மே 4 வியாழனன்று வழங்கப்பட்டது.

மரண தண்டனையை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆனால் 11 பேரின் ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தியதோடு ஏற்கனவே நீதிமன்றம் விடுதலை செய்த 2 டாக்டர்கள் உள்ளிட்ட 6 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.

15 ஆண்டு காலம் துயரங்களை பெரும் பாரமாய்ச் சுமந்து கொண்டே இந்தப்போராட்டத்தை நடத்திய பில்கிஸ் பானுவின் உறுதி பாராட்டத்தக்கது. அதேசமயம் இந்த தீர்ப்பும் பில்கிஸ் பானுவின் போராட்டமும் வேறு சில விஷயங்களை கண்முன்னே கொண்டு வருகிறது.

இதுபோன்று கொத்துக்கொத்தாய்க் கொல்லப்பட்ட பல வழக்குகளில் கேட்பதற்கு ஆளின்றி மறைந்து போனது ஏராளம்.

கேட்பதற்கு ஆளிருந்தாலும், பயத்தாலும் மனப்பிறழ்வாலும் எதுவும் செய்ய முடியாது என்கிற அவ நம்பிக்கையாலும் அதை சகித்துக் கொண்டு எங்கோ மறைந்து வாழும் எண்ணிக்கை அதிகம். இதையெல்லாம் விட மிக முக்கியமான ஒரு அம்சம், குற்ற நிகழ்வைவிட குற்றத்தின்பால், குற்றமிழைத்தவர்களின்பால் - பாதிக்கப்பட்டவர்களின் பால் - அரசு நிர்வாகமும், நீதிமன்றமும் கடைப்பிடித்த அணுகுமுறை.

-----------------------
எது காரணம்?
-----------------------
* தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டதைப் பற்றி கொடுத்த புகாரில், காவல் நிலையத்தில் எந்தவிதச் சலனமுமின்றி குற்றவாளிகளின் பெயரை நீக்கி விட்டு, கதை எழுதுவது போல் முதல் தகவல் அறிக்கை எழுத வைத்தது எது?

* இப்படி காவல்துறையினர் கொடுத்த ஒரு அறிக்கையை ஏற்றுக் கொண்டு அந்த வழக்கை நீதிமன்ற நடுவர் தள்ளுபடி செய்தது ஏன் நிகழ்ந்தது?

* பாதிக்கப்பட்ட ஒரு பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகும், மாநிலத்திலிருந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் அந்தப் பெண்ணை மிரட்டியதும், நீ இந்த வழக்கை விசாரிக்காதே என்று உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய அளவிற்கு அந்தத்துறையின் மனிதத்தன்மைகளை அழித்ததும் யார்?

* உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், சாட்சிகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு பின்னே உள்ள வலுவான சக்தி எது? நியாயமாகவும், சுயேச்சையாகவும் இந்த வழக்கு நடந்து விடக்கூடாது என்று கருதியவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் தானா? அரசுக்கு எந்தவிதமான பங்கும் கிடையாதா?

* குற்றவாளிகளில் ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சார்ந்தவர்கள் (அது இயல்பு) தவிர மற்றவர்கள் என்ன காரணத்திற்காக இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டார்கள்?

இதற்கெல்லாம் ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது. அதுதான் மதவெறி. பிற மதத்தினரை கொலை செய்யும் வெறி.
கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சூட்டப்பட்டு ரத்தமும் சதையும் சிந்தனையும் சீழ்பிடித்துப் போன கொல்லும் வெறி.

மதவெறி அபாயம் ஒரு மாநிலத்தில் காலூன்றி விட்டால் அது எவ்வித சம்பந்தமும் இல்லாத, எந்த வகையிலும் தனிப்பட்ட முறையில் தனக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு குடும்பத்தை வெட்டிக் கொலை செய்ய வைக்கிறது. தன் தங்கையைப் போன்ற - தன் மருமகளைப் போன்ற பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்துவதை நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் என்று அது ஏற்க மறுக்கிறது. இத்தனையும் செய்வதற்கு அரசு, காவல்துறை, நீதித்துறை, குற்றப்புலனாய்வுத்துறை ஒவ்வொன்றும் ஆதரவாக நிற்க நிர்ப்பந்திக்கப்படுகிறது; பயிற்றுவிக்கப்படுகிறது. குற்றவாளிகளின் பெயரெழுதாமல் விட்ட காவல்துறை, தவறான மருத்துவ ஆவணங்களை கொடுக்க துணைபோன அரசு மருத்துவர்கள், 14 பேர் கொல்லப்பட்ட ஒரு வழக்கை கூட காவல்துறை சொல்லி விட்டதே என்பதற்காக கண்மூடி ஏற்றுக் கொள்கிற நீதிமன்ற நடுவர், தன்னுடைய குடும்பத்தில் 14 பேரை பறி கொடுத்த துயரத்தில் இருக்கிற ஒரு பெண்ணை குற்றவாளிகளுக்கு எதிராகப் பேசாதே என மிரட்டும் குற்றப்புலனாய்வுத்துறை, புகார் செய்தவரையும் சாட்சி சொன்னவர்களையும் ஒழித்துக் கட்டிவிடுவதாய்ச் சொல்லும் குற்றவாளிகளின் ஆதரவாளர்கள் -இவையெல்லாம் ஒற்றைப்புள்ளியில் இணைகின்றன.

-------------------------------------------------
ஏதாவது செய்ய வேண்டாமா?
-------------------------------------------------
மதவெறி ஏற்றப்பட்டால் எந்தப்பாவமும் அறியாத யாரையும் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை மிகக் குரூரமானது; ஆபத்தானது; இது ஆரம்பத்திலேயே துடைத்தெறியப்பட வேண்டும்.

நாகரீக சமூகம் என்று தன்னை அழைத்துக் கொள்கிற எந்த ஒரு சமூகமும் இத்தகைய பேரழிவு தனக்கு எப்போதும் வரப்போவதில்லை என அமைதியாய் இருப்பது தற்கொலை செய்வதற்கு சமம். அதை விட முக்கியமாக தானும் தற்கொலை செய்து கொண்டு சமூகம் மொத்தத்தையும் பொசுங்கிச் சாக விடுகிற குரூரம்.

இந்த கலவரங்கள் நடந்த போது குஜராத்தில் முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. அவர் தான் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை, ‘‘நாய்க் குட்டிகள் இறந்தால் வருத்தப்படாமல் இருக்க முடியுமா’’ என்று பேசியவர். இப்போது பிரதமரான பிறகு வேதம் ஓதுகிறார். முஸ்லிம் பெண்களுக்காக முத்தலாக் பிரச்சனையை ஊர் ஊருக்கு பேசித்திரியும் நரேந்திர மோடி தனது 19வது வயதில் 14 படுபயங்கரக் கொலைகளையும், வன்புணர்வுகளையும் பார்த்த, அனுபவித்த பில்கிஸ் பானு என்ற இந்த முஸ்லிம் பெண்ணுக்கு என்ன சொல்லப்போகிறார்? அவர் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் இளைஞர் சமூகம், மாணவர் சமூகம், முற்போக்கு அமைப்புகள், மதச்சார்பற்ற அமைப்புகள் அமைதி காக்கப் போகின்றதா? அல்லது தமிழகத்தில் கால் பதிக்க விடாமல் தடுக்கப் போகின்றதா? தமிழகம் சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய சவாலாக அது இருக்கிறது.

இந்த நிகழ்வுகளை நெட்ட நெடுமரமென நாம் பார்த்துக் கொண்டிருந்தால் விஷங்களின் சுழற்சியில் நாமும் அகப்பட்டுக் கொள்வோம்.

என்ன செய்யப் போகிறோம்?

ஏதாவது செய்வது எனில் குறைந்தபட்சம் நம் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் மதவெறிக்கு எதிரான கருத்துக்களை உரையாடல்கள் மூலமாக கொண்டு செல்வதை வழக்கமாக்குவோம்!
*

- தோழர் க.கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
*
தீக்கதிர் 7-5-2017.






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..