Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஒரு நீதிபதியின் கதி…!
Posted By:peer On 3/1/2017 1:05:56 PM

2002ம் ஆண்டு பிப்ரவரி 27ல் தொடங்கிய கொடூரமான குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை முடிந்து இன்றோடு 15 வருடங்கள் ஆகின்றன. சாதாரண முஸ்லிம் ஆண்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நடைபெற்ற கொடூரங்கள் ஒரு புறம். பதவியிலிருந்த முஸ்லிம் நீதிபதிகளுக்கும் அதே நிலைதான் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
 
பிப்ரவரி 28ம் தேதி மாலை 4 மணியளவில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி காதிரி அவர்களின் வீட்டைச் சுற்றிலும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. ஃபாசிசக் கயவர்கள் கொள்ளையடிப்பிலும், தீ வைப்பிலும் ஈடுட்டுக்கொண்டிருந்தனர். ஆயுதங்கள் இல்லாத இரண்டு போலீஸ் காவலர்கள் மட்டுமே அவரது வீட்டைச் சுற்றிலும் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.
 
நீதிபதி காதிரியின் தாயாருக்கு 85 வயதாகிறது. அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர். மேலும் அவருடைய மனைவி, கல்லூரிக்குச் செல்லும் இரு மகள்கள் என்று அவரது குடும்பத்தில் அவரைத் தவிர மற்ற அனைவரும் பெண்களே.
 
அப்போது இராஜஸ்தான் தலைமை நீதிபதி ஏ.பி. ராவனி நீதிபதி காதிரியைத் தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். நிலைமை மோசமாக இருந்ததை அறிந்த நீதிபதி ராவனி ஓய்வு பெற்ற ஒரு துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு நீதிபதி காதிரியின் வீட்டுக்கு தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.
 
ஒரு மணி நேரம் கழித்து நீதிபதி ராவனி மீண்டும் நீதிபதி காதிரியைத் தொடர்பு கொண்டார். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பங்களாக்கள் அமைந்துள்ள அருகிலுள்ள துலியாகோட் பகுதியில் கொள்ளையடிப்புகளும், தீ வைத்தல்களும் நடப்பதாக நீதிபதி காதிரி அவரிடம் கூறினார்.
 
அதன் பிறகு நீதிபதி ராவனி பலமுறை முயற்சி செய்தும் நீதிபதி காதிரியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கவலையுற்ற அவர் மறுநாள் (மார்ச் 1) காலை குஜராத் நீதிமன்றத்தின் புரோடோகால் அதிகாரியைத் தொடர்பு கொண்டார். நீதிபதி காதிரி தன் குடும்பத்தாருடன் பின்னிரவில் அருகிலுள்ள நீதிபதி வகேலாவின் பங்களாவுக்குச் சென்று விட்டார் என்று அவர் கூறினார்.
 
காலை 11.30 மணியளவில் நீதிபதி காதிரி நீதிபதி ராவனியைத் தொடர்பு கொண்டார். தலைமை நீதிபதியும், இதர நீதிபதிகளும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் தன் குடும்பத்தாருடன் நீதிபதி வகேலாவின் பங்களாவுக்குச் சென்று விட்டதாக கூறினார். வாஸ்த்ராபூரிலுள்ள நீதிபதிகள் பங்களாவுக்கு தன்னை மாறிச் செல்லும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.
 
பணியிலிருக்கும் ஒரு நீதிபதியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து மாறி இருக்கச் சொல்லும் அளவுக்கு பாதுகாப்பின் லட்சணம் இருக்கிறது என்றால் அது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றும், அரசியல் நிர்ணயச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்றும் நீதிபதி ராவனி மிக்க வருத்தத்துடன் கூறினார்.
 
இன்னொரு அதிர்ச்சியான செய்தியை நீதிபதி ராவனி அறிந்தார். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும், எம்.ஆர்.டி.பி.யின் முன்னாள் தலைவருமான நீதிபதி திவேச்சா அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவரது வீடு அழித்து நாசமாக்கப்பட்டதாகவும் ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்த நீதிபதி திவேச்சா மூலம் அறிந்து நொறுங்கிப் போனார் நீதிபதி ராவனி.
 
நீதிபதி காதிரியின் வீட்டின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் படை வன்முறைக் கும்பலின் அளவை நோக்கும்போது மிகக் குறைவானது என்றும், வீட்டிலிருந்து மாறியிருப்பதே புத்திசாலித்தனம் என்றும் இராணுவ உளவுத்துறையினர் நீதிபதி காதிரியிடம் கூறினர்.
 
அவர் பாதுகாப்புக்கு உள்ளூர் போலீசை நம்பியிருக்க வேண்டாம் என்றும், இராணுவ விருந்தினர் மாளிகையில் வந்து தங்கும்படியும், அது அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதால் பாதுகாப்புக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
 
நீதிபதி காதிரியிடம் நீதிபதி ராவனி இவ்வாறு கூறினார்: “சகோதரரே, களத்திலுள்ள யதார்த்தம் என்னவெனில் சட்டத்தின் தத்துவம் என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. நாம் தைரியசாலிகளாக இருக்கலாம். ஆனால் நாம் நாட்டின் எல்லையில் போராடும் படைவீரர்கள் இல்லை. அங்கேதான் ஓர் அங்குலம் பின்வாங்கினாலும் அது கோழைத்தனமாகக் கருதப்படும். இப்பொழுது இங்குள்ள சூழ்நிலைக்கு நீங்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாறுவதே புத்திசாலித்தனம்.”
 
இந்தச் சமயத்தில் அந்தக் குடும்பத்திற்கு உறவினர்களின் உதவியும், ஆதரவும் கண்டிப்பாக தேவை என்ற நிலையில் அவர்கள் உறவினர்களை அண்ட முடியாத கொடுமையான சூழ்நிலை. இராணுவத்தினர் உடல் ரீதியாக அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கலாம். ஆனால் மனோரீதியான தைரியத்தையும், ஆதரவையும் அவர்களால் தர இயலாது.
 
இறுதியில் மாலை 4 மணியளவில் இராணுவப் பாதுகாப்புடன் நீதிபதி காதிரி தன் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு அவருடைய சகோதரியின் கணவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
 
உயிருக்கு அஞ்சிய பல முஸ்லிம் வழக்கறிஞர்கள் நீதிபதி ராவனியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து தருமாறு கெஞ்சினர். ஆனால் தலைமை நீதிபதியாக இருந்த தனது செல்வாக்கு அங்கே செல்லாக்காசு என்றுணர்ந்த அவர், தனது இயலாமையை அவர்களிடம் தெரிவித்தார்.
 
குஜராத் இனப்படுகொலை முழுவதையும் நேரடிக் களத்திற்கே சென்று பதிவு செய்த அக்கறையுள்ள குடிமக்களின் குழுமத்திடம் நீதிபதி ராவனி மேற்கண்ட நிகழ்வுகள் குறித்து நேரடி சாட்சி பகர்ந்தார். மேலும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடமும் இந்நிகழ்வுகள் குறித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.
 
இருந்தும் என்ன பயன்? ஒரு விளைவும் ஏற்படவில்லை. மொத்த இனப்படுகொலையையும் நடத்த விட்டு கள்ள மவுனம் சாதித்த அன்றைய குஜராத் முதல்வர் மோடி இன்று பிரதமர். இதுதான் இன்றைய இந்தியா!
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் ஃபாசிஸ்டுகளிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று சில செயல்களில் ஈடுபடுவதோ, உணர்ச்சி வயப்பட்டு துள்ளுவதோ, கவர்ச்சிப் பேச்சாளர்களிடம் மயங்கி அவர்கள் பின்னால் செல்வதோ தீர்வாகாது.
 
ஒரு தலைமையின் கீழ் மக்களை ஒருங்கிணைத்து, பலப்படுத்தி, இலக்கை நிர்ணயித்து, திட்டங்களைத் தீட்டி, அதனை சன்னம் சன்னமாக நிறைவேற்றும் நீண்ட பயணத்தை மேற்கொண்டாலொழிய இது சாத்தியமாகாது.
 
(இலக்கியச்சோலை வெளியீடான “மனித இனத்திற்கெதிரான குற்றம்” நூலிலிருந்து…)
-M.S.அப்துல்ஹமீத்





General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..