Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 28
Posted By:Hajas On 10/16/2016 11:05:06 AM

 

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
=============================

by - Abu Malik

தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்

Episode 27: மறைவான உலகங்கள் 

Episode 28: முப்பரிமாண உலகுக்குள் பிரவேசம் 



ஜின்கள் தமது மறைவான பரிமாண உலகிலிருந்து, நமது முப்பரிமான உலகுக்குள் ஊடுறுவி, நீண்ட நேரம் தரித்திருப்பதாக இருந்தால், அவர்களுக்கு நமது முப்பரிமான உலகம் சார்ந்த ஏதாவதோர் ஊடகம் தேவைப்படுகிறது என்பதை சென்ற எபிசோடில் ஓரளவு பார்த்தோம். இனி இது குறித்து இன்னும் சில விளக்கங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

இவ்வாறான ஊடகங்களாக அவர்கள் சில சமயங்களில் சில மனித உடல்களையோ, அல்லது சில மிருகங்களின் உடல்களையோ கூட தேர்ந்தெடுத்துக் கொள்வதும் உண்டு. சிலரது உடலில் ஜின்கள் புகுந்து கொள்வதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று. ஆனால், இது மட்டும் தான் காரணம் என்பதில்லை. வேறு பல காரணங்களுக்கும் மனித உடல்களில் ஜின்கள் நுழைந்து கொள்வதுண்டு. அவை பற்றி இன் ஷா அல்லாஹ் பிறகு நோக்கவிருக்கிறோம்.

இதே போல், தொழினுட்ப ரீதியில் விருத்தியடைந்த மேலும் சில வகையான ஜின் இனத்தவர்கள், நமது முப்பரிமாண உலகுக்குள் பிரவேசிக்கும் போது, மனித / மிருக உடல்களை ஊடகமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நாம் நீருக்கு அடியில் பிரவேசிக்கும் போது ஆக்ஸிஜன் அடங்கிய உடைகளை அணிந்து கொண்டு செல்வதைப் போல், சில விஷேட உடைகளைப் போன்ற ஊடகங்களைத் தாமே தயாரித்து, அதனுள் நுழைந்து கொண்டு நமது முப்பரிமான உலகுக்குள் பிரவேசிப்பதும் உண்டு. இவ்வாறான ஊடகங்கள் மூலம் பிரவேசிக்கக் கூடியவர்களே வேற்றுக் கிரகவாசிகள் எனும் போர்வையில் பறக்கும் தட்டுக்களில் வரக் கூடிய ஜின்கள்.

இதை எளிய நடையில் கூறுவதென்றால், வேற்றுக் கிரகவாசிகள் என்ற பெயரில் பறக்கும் தட்டுக்களில் வரக்கூடியவர்கள் வேற்றுக்கிரகவாசிகளே அல்ல. தொழினுட்ப ரீதியில் நம்மை விடவும் அதிகம் முன்னேறிய சில வகையான ஜின் இனத்தவர்களே அவர்கள். நமது கண்களுக்குத் தெரியக் கூடிய அவர்களது வேற்றுக் கிரக உடல் என்பது உண்மையில் உடல் அல்ல. மாறாக, நாம் தண்ணீருக்கு அடியில் பிரவேசிக்கும் போது அணிந்து கொள்ளும் ஆக்ஸிஜன் உடையைப் போன்ற ஓர் உடை / ஊடகம் மட்டுமே.

இதை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக நமது நடைமுறை சார்ந்த ஓர் உதாரணத்தை உருவகப்படுத்திப் பார்க்கலாம்:

நாம் வாழும் இந்த முப்பரிமான உலகத்தை ஒரு குளம் / ஏரி / ஆறு என்றும், இதனுள் வாழும் மனிதர்களாகிய நம்மை மீன்கள் என்றும், இந்தக் குளத்தில் மீன்பிடிக்க வரும் மீனவர்களாக ஜின்களையும் ஓர் உதாரணத்துக்காக உருவகப் படுத்திக் கொள்வோம்.

இரண்டு விதங்களில் மீன் பிடிக்கலாம். ஒன்று, குளத்துக்குள் இறங்காமல், கரையிலோ, படகிலோ இருந்து கொண்டு தூண்டில், வலை போன்றவற்றை மட்டும் நீருக்குள் போட்டு, அதன் மூலம் மீன் பிடிக்கலாம். மற்றது, நேரடியாகக் குளத்துக்குள் இறங்கி, நீருக்குள் மூழ்கி வேறு அடிப்படைகளிலும் மீன் பிடிக்கலாம்.

இந்த இரண்டு விதங்களில், குளத்துக்குள் இறங்காமல் மீன் பிடிப்பது இலகுவான, நீண்ட நேரம் சிரமமில்லாமல் செய்யக் கூடிய காரியம். ஆனால், எதிர்பார்க்கும் சில குறிப்பிட்ட மீன்களைத் துல்லியமாகத் பிடிக்க வேண்டுமானால், நீருக்குள் மூழ்கித் தேடிச் சென்று தான் பிடிக்க வேண்டும். இவ்வாறு மூழ்கும் போது ஏதாவதோர் ஊடகம் மீன் பிடிப்பவருக்கு அவசியம்.

கிட்டத்தட்ட இதே போன்ற ஓர் அடிப்படையிலேயே நமது முப்பரிமான உலகோடு ஜின்களுக்கு இருக்கும் தொடர்பும் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. நீருக்குள் இறங்காமல், கரையிலிருந்து கொண்டே நீருக்குள் வலை வீசி மீன் பிடிப்பதைப் போன்ற ஓர் அடிப்படையிலேயே அனேகமான சந்தர்ப்பங்களில் ஜின்கள் தமது மறைவான பரிமாணத்தில் இருந்து கொண்டே, முப்பரிமான உலகிலிருக்கும் மனிதர்கள் விசயத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால், இவ்வாறான ஆதிக்கங்கள் எல்லாம், மனித சிந்தனையின் அளவோடு மட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன.

அதாவது, இவ்வாறான ஆதிக்கங்கள் மூலம், மனிதர்களது உள்ளத்தின் எண்ணவோட்டத்தில் / சிந்தனையில் மட்டுமே அவர்களால் தாக்கம் செலுத்த முடியும். இதைத் தாண்டி, பௌதீக ரீதியில் எந்தத் தாக்கமும் அவர்களால் செலுத்த முடியாது.

மனித உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துதல், “வஸ்வாஸ்” / சந்தேகங்கள் போன்ற எண்ணங்களை உள்ளங்களில் விதைத்தல், வணக்க வழிபாடுகளில் ஈடுபடாதவாறு நமது நாட்டத்தைத் திசைதிருப்புதல், தீய ஆசைகளைத் தூண்டுவதன் மூலம் பாவத்தின் பக்கம் மனிதர்களைத் திசைதிருப்பி விடுதல், தனிமையில் இருளில் இருக்கும் போது சிலரது உள்ளங்களில் இனம்புரியாத ஓர் அச்ச உணர்வைத் தோற்றுவித்தல்... போன்ற ஷைத்தானிய ஜின்களின் அன்றாட நடவடிக்கைகள் எல்லாமே இந்த அடிப்படையிலான ஆதிக்கங்கள் தாம். இவ்வாறான ஆதிக்கங்களால் உளவியல் எனும் வரையறையைத் தாண்டி, பௌதீக ரீதியான எந்த விதமான தாக்கத்தையும் அவர்களது பரிமாணத்தில் இருந்தவாறே ஏற்படுத்த முடியாது.

அதே நேரம், சில மனிதர்கள் விடயத்தில் இந்த வரையறைகளையும் தாண்டி, பௌதீக ரீதியிலும் குறிப்பிட்ட காரியங்களைச் சாதிக்க விரும்பும் போது ஷைத்தான்கள் / கெட்ட ஜின்கள் வேறு வழியின்றி நமது பரிமாணத்துக்குள் பிரவேசிப்பதுண்டு. இவ்வாறு பிரவேசிக்கும் போது தான், தமது தேவைகளுக்கு / திட்டங்களுக்கு ஏற்ற விதத்தில் உருமாறியோ, அல்லது ஏதாவதோர் ஊடகத்தின் துணை கொண்டோ நமது பரிமாண உலகுக்குள் அவர்கள் பிரவேசிக்கிறார்கள்.

உருமாறி வருவதைப் பொருத்தமட்டில், சில சந்தர்ப்பங்களில் ஏற்கனவே நாம் பார்த்த ஹதீஸ்களில் குறிப்பிட்ட பிரகாரம் மிருகம் / மனிதன் போன்ற ஏதாவதொரு வடிவத்துக்கு ஜின்கள் உருமாறி வருவதுண்டு. மேலும், சில சந்தர்ப்பங்களில் அரைகுறை வடிவங்களான நிழல் தோற்றங்கள் (Shadow People), மற்றும் ஆவி வடிவங்கள் (Ghosts) போன்ற வடிவங்களில் கூட அரிதாக ஒருசில ஜின்கள் பிரவேசிப்பதுண்டு.

ஆனால், இவ்வாறான நிகழ்வுகள் மிக அரிதாகவே நடக்கின்றன. இவ்வாறு அரைகுறை வடிவில் தோன்றும் ஜின்களைக் காணும் போது தான், மூட நம்பிக்கை கொண்ட மக்கள் “சத்தியமாக எனது இரண்டு கண்களாலும் பேயைக் கண்டேன்”, “இன்ன இடத்தில், இன்ன வடிவத்தில் நான் ஆவியைக் கண்டேன்” என்பன போன்ற கூற்றுக்களை ஆணித்தரமாக கூறுவதுண்டு.

இஸ்லாத்தின் பார்வையில் பேய் பிசாசு என்பதெல்லாம் இல்லையென்பதை நாம் உறுதியாக நம்புவதால், இவ்வாறானவர்கள் கூறும் கதைகளை எடுத்த எடுப்பிலேயே பொய்யென்றும், புருடா என்றும் நம்மில் அனேகமானோர் ஒருபுறம் ஏளனம் செய்வதும் உண்டு. இன்னொரு புறம், இவ்வாறு பேயைக் கண்டதாகக் கூறுபவர்கள் Hallucination எனப்படும் பிரமை சார்ந்த மனநோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று கூறி, அவர்களுக்குப் பைத்தியக்காரப் பட்டத்தை எடுத்த எடுப்பிலேயே நம்மில் ஒரு சாரார் கொடுத்து விடுவதும் உண்டு.

ஆனால், உண்மை இந்த இரண்டு நிலைகளுக்கும் நடுவில் இருக்கிறது. அனேகமான சந்தர்ப்பங்களில் இவ்வாறு “ஆவியைக் கண்டேன்” என்று கூறுவோரில் ஒரு பகுதியினர் பொய் சொல்பவர்களாகவோ, அல்லது பிரமையால் பாதிக்கப் பட்டவர்களாகவோ இருப்பார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால், இவ்வாறு ஆவியைக் காணும் எல்லோருமே பிரமை பிடித்தவர்களோ அல்லது பொய்யர்களோ என்று கூறுவது தான் தவறு. ஏனெனில், இவ்வாறானவர்களில் ஒரு பகுதியினர் தெளிவான சித்த சுவாதீனத்தோடு ஆவி / நிழல் போன்ற அரைகுறைத் தோற்றத்தில் ஏதாவதொரு ஜின்னைப் பார்த்ததன் விளைவாகவே இவ்வாறு கூறுவார்கள்.

பொதுவாக இவ்வாறான சம்பவங்கள் மிக அரிதாக நடப்பதனால், இவற்றைப் பார்த்தவர்களது கூற்றுக்களை ஆதாரத்தோடு நிரூபிப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இந்த சிக்கலைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தான் பகுத்தறிவு வாதம் பேசுவோர் இவ்வாறானவர்கள் எல்லோரையுமே எடுத்த எடுப்பில் மெண்ட்டல் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். இது பக்கச்சார்பான ஒரு பார்வை. நடுநிலையோடும், நியாய உணர்வோடும், திறந்த மனதோடும் ஆய்வு செய்வோர் இவ்வாறு அணுகக் கூடாது.

மனித கண்ணுக்குத் தெரியும் வடிவங்களில் ஜின்கள் தோன்றுவது குறித்து இப்போதைக்கு இவ்வளவும் போதும். இன் ஷா அல்லாஹ் இது குறித்த இன்னும் சில பகுதிகளைப் பிறகு நோக்கலாம். இனி நமது ஆய்வின் அடுத்த கட்டமாக, ஜின்களில் இருக்கக் கூடிய ஒருசில பிரத்தியேகமான இனத்தவர்கள் / வகையறாக்கள் பற்றி கொஞ்சம் விரிவாக நோக்கலாம்.

ஜின்களில் பல்வேறு இனங்கள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனிதர்களைப் போலவே ஜின்களிலும் நல்ல ஜின்கள், கெட்ட ஜின்கள், முஃமின்கள், காஃபிர்கள் என்று பல வகையைச் சார்ந்த ஜின்கள் பல்வேறு இனங்களிலும் காணப்படுகிறார்கள். இதைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்:

ஆதாரம் 1:
நிச்சயமாக, ஜின்களில் சிலர் (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம்) "நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்" என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.
"அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்" (என்று அந்த ஜின் கூறினர்). (அல்குர்ஆன் 72:1-2)

ஆதாரம் 2:
"மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர், நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம். (அல்குர்ஆன் 72:11)

இவ்வாறு நல்லோர், தீயோர் என்று இருக்கும் ஜின்களின் தரப்புகளில், பெரும்பாலான கெட்ட ஜின்கள் இப்லீஸ் எனும் ஜின்னின் தலைமையின் கீழ் ஒரு பட்டாளமாக ஒன்று திரண்டு மனித இனத்தை வேரறுக்கும் திட்டத்தோடு, ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு மாபெரும் செயல்திட்டத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களையே மார்க்கம் ஷைத்தான்கள் என்று வகைப்படுத்திக் கூறுகிறது.

இவ்வாறான ஷைத்தான்கள் ஏதோ வந்தோமா, போனோமா எனும் அடிப்படையில் எழுந்தமானமாக மனிதர்களை வழிகெடுத்து விட்டுச் செல்பவர்கள் அல்ல. மாறாக, தந்திரத்திலும் திறமையிலும் மிகவும் கைதேர்ந்த இப்லீஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட மிகவும் துல்லியமான திட்டமிடல்களின் அடிப்படையிலேயே இவர்கள் ஒரு கட்டுக்கோப்போடு நமக்கெதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் அடிப்படை நோக்கம் ஒன்றேயொன்று தான். மனித இனத்தை ஈருலகிலும் வேரறுக்க வேண்டும். இந்த உலகிலும் மனித இனம் இழிவடைந்து, நொந்து நூலாகிச் சின்னாபின்னமாக வேண்டும்; மறு உலகிலும் நரக நெருப்பில் வெந்து கருக வேண்டும். இவர்களே மனிதர்களாகிய நமது முதல் தர எதிரிகள். இந்த உண்மைகளைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்:

ஆதாரம் 1:
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான். (அல்குர்ஆன் 35:6)

ஆதாரம் 2:
இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக. (அல்குர்ஆன் 6:112)

ஆதாரம் 3:
இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் (இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு" என்று கூறினோம்.
(அல்குர்ஆன் 2 : 36)

ஆதாரம் 4:
"என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்'' எனவும் (இப்லீஸ்) கூறினான்.
"நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி. (அது) நிறைவான கூலி'' என்று (இறைவன்) கூறினான்.
உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! அவர்களது பொருட்செல்வங்களிலும், குழந்தைச் செல்வங்களிலும் அவர்களுடன் நீ பங்காளி ஆகிக்கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
(அல் குர்ஆன் 17 : 62-64)

ஆக, மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்களின் மூலம் ஷைத்தான்கள் யார் என்பதும், அவர்களின் திட்டம் என்னவென்பதும் மறுக்க முடியாதவாறு தெளிவாகிறது. பல்வேறு இனங்களைச் சார்ந்த ஷைத்தானிய ஜின்கள், அவரவருக்கு இருக்கும் தனித்துவமான ஆற்றல்களுக்கு அமைய பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப் பட்டு, அந்தத்தப் பிரிவுகளுக்கென்று குறிப்பிட்ட சில பணிகள் நியமிக்கப்பட்டு, இப்லீஸின் திட்டங்களை அரங்கேற்றும் நோக்கில் மனிதர்களை நோக்கி ஏவி விடப் பட்டிருக்கிறார்கள்.

இதற்கு மேலதிகமாக, “மனித ஷைத்தான்கள்” என்று இஸ்லாம் கூறக் கூடிய, மனிதர்களில் இருக்கும் இவர்களது படையணிகளாகிய இலுமினாட்டிகள் கூட உண்மையில் இந்த உலகில் அமுல்படுத்திக் கொண்டிருப்பது இப்லீஸின் மாபெரும் திட்டத்தின் சில பகுதிகளைத் தான்.

அடுத்த எபிசோடில் ஷைத்தானின் பட்டாளத்தில் பணிபுரியும் ஒருசில ஜின் இனத்தவர்களைப் பற்றி விரிவாக நோக்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்


Episode 29: கனவுகளில் ஊடுறுவும் ஷைத்தானிய ஜின்கள்,




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..