Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அப்பாக்கள் :
Posted By:peer On 2/20/2016 2:26:41 PM

ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.
ஆனால் , ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.

அப்பா...
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.

கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.

தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சுமைகள் அதிகமானவை . அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.ا

ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையிலும், அங்கலாய்ப்பிலும் இருக்கும் தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.

அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.

தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.ا

தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும்.

வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.

யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!

ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.

விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.

இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.

ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.

தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.

ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை , அவமானங்களைச் சந்தித்திருப்பார்கள்?

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?

எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?

அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?

எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?

எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?

முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..

வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...

நரம்பு தெரியும் கைகளில் ...

நரை விழுந்த மீசைகளில் ...

அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.

தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?

ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?

மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?

பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?

இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?

படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலி சுமந்து வலி சுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?

வீரம், துணிச்சல்,
விடாமுயற்சி,
நம்பிக்கை, உழைப்பு..
இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் , யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.

ஒரு இளைஞனோ , யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார். பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.

“எதுக்கும் பயப்படாதே”

“ஒன்றுக்கும் யோசிக்காதே”

“எல்லாம் வெல்லலாம்”

“மனசை தளரவிடாதே”

“நான் இருக்கிறேன்”

இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.


அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.

தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.

அப்பாக்கள் :

➡பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

➡பிள்ளைகளின் நெம்புகோல்கள்

➡பிள்ளைகளின் அச்சாணிகள்

➡பிள்ளைகளின் சூரியன்கள்

➡பிள்ளைகளின் திசைகாட்டிகள்

➡பிள்ளைகளின் ஆசிரியர்கள்

➡பிள்ளைகளின்
நம்பிக்கைகள்

அப்பா:
தூய்மையான
அன்பு,

போலியற்ற
அக்கறை,

நேர்மையான வழிகாட்டல், 

நியாயமான
சிந்தனை, 

நேசிக்கத்தக்க உபசரிப்பு, 

மாறுதலில்லா நம்பிக்கை, 

காயங்களற்ற
வார்த்தை,  

கம்பீரமான
அறிவுரை,

கலங்கமில்லா
சிரிப்பு,

உண்மையான
அழுகை,

என அத்தனையும் உளமகிழ்ந்து 

செய்து வளர்த்தவர்.

தோழனுக்கு தோழனாய் 
தோள் கொடுப்பவர் அப்பா.

அப்படியொரு அப்பாவாக இருப்பதில் ஒவ்வொரு தகுதியுள்ள அப்பாக்களும் மகிழ்ச்சியுருவர்.
இதுவரை இல்லாவிடிலும் இனியாவது இப்படிப்பட்ட அப்பாவாக இருக்க இப்போதிருந்தே தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பிப்பர்.

வாழ்த்துக்கள் தந்தையர்களே.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..