Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 31 - 35
Posted By:Hajas On 11/2/2015 4:53:10 AM

எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 31 - 35

by : David Praveen 

பாகம் 1 - 5பாகம் 6 - 10 , பாகம் 11 - 15பாகம் 16 - 20பாகம் 21 - 25பாகம் 26 - 30   


பாகம் 31

எகிப்திய சிற்பக் கலை, கட்டிடக் கலை மற்றும் ஓவியக் கலைகளை பிரம்மாண்டத்தின் உச்ச நிலைக்கு நகர்த்தி மற்ற நாகரீக மக்களின் கலை வெளிப்பாடுகளையெல்லாம் வாயடைத்துப்போக வைத்தவன் ராமேசிஸ் II. மூவாயிரம் ஆண்டுகளாக எகிப்தின் தெற்கு எல்லையில் தொடங்கி வடக்கு எல்லை வரை 31 வம்சப் பாரோக்களால் கட்டப்பட்ட மொத்த நினைவுச் சின்னங்களையும் கணக்கெடுத்தால் அதில் மூன்றில் ஒரு பங்கு கட்டிடங்களை பாரோ ராமேசிஸ் II-வே கட்டியிருப்பான். வடக்குத் தொடங்கி தெற்கு வரை எகிப்தின் அனைத்து மாநிலங்களிலும் பாரோ ராமேசிஸ் II-வின் நினைவுச் சின்னங்கள் உண்டு.

நமக்குத்தான் இன்றைக்கு எகிப்து என்றால் பிரமிடுகளும் மம்மிகளும் நினைவிற்கு வரக் கூடியவைகள் ஆனால் இன்றையிலிருந்து 3200 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்களுக்கு எகிப்து என்றால் ராமேசிஸ் II-வின் பிரம்மாண்ட சிலைகள்தான் நினைவிற்கு வரும். எகிப்திலிருக்கும் எந்த பழமையான கோயிலுக்கு போய் நின்றாலும் அங்கே ராமேசிஸ்-II சிலை நமக்கு முன்னால் பிரம்மாண்டமாக நின்றுக்கொண்டிருக்கும். பாரோ அகநேத்தன் பழமையான சிலைகளை அழித்து தன்னுடைய சிலைகளை மக்களின் மனதில் பதியவைக்க வெறிப்பிடித்து அலைந்தான் என்றால் ராமேசிஸ்-II பிரம்மாண்டமான சிலைகளை எழுப்பி மற்ற நாகரீக மக்களை வாய் பிளக்க விட்டான். இவன் உருவம் கொண்ட சிற்பங்கள் அமெரிக்கா வரை எதிரொளித்திருக்கிறது. அமெரிக்காவின் South Dakota-வில் இருக்கும் Mount Rushmore மலை முகட்டில் செதுக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் முன்னால் பிரதமர்களின் (George Washington, Thomas Jefferson, Theodore Roosevelt மற்றும் Abraham Lincoln) முகங்கள் கொண்ட Mount Rushmore National Memorial சிற்பம் முழுக்க முழக்க ராமேசிஸ் II-வின் பிரம்மாண்ட சிலைகளின் தாக்கத்தால் உருவானது.

(புகைப்படத்தில் இருக்கும் அனைத்து சிலைகளும் திருவாளர் ராமேசிஸ் II சிலைகள்தான். இடம் Luxor Temple, Thebes)

பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் உலக மக்களின் மனங்களில் தாக்கத்தை செலுத்தும் சிலைகளுக்கு சொந்தக்காரனான ராமேசிஸ் II தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இருந்திருக்க வேண்டும் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அத்தகைய மனப்பான்மையின் காரணமாகவே அளவிற்கு மீறித் தன்னை பிரகடனப்படுத்தும் இத்தகைய பிரம்மாண்ட கட்டிடங்களை அவன் கட்டியிருக்கவேண்டும் என்று அனுமானிக்கிறார்கள். அவன் தாழ்வு மனப்பான்மையின் காரணமாக கட்டினான இல்லை தான் கொண்ட தற்பெருமையின் வெளிப்பாடாக இத்தகைய படு பிரம்மாண்ட கட்டிடங்களை கட்டினான என்பது ஒரு புறம் இருக்கட்டும் எகிப்து முழுக்க பிரமாண்டத்தின் பிரமாண்ட கட்டிடங்களை கட்டியெழுப்ப கட்டிட, சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்களின் முதுகை ஓடித்துவிட்டான் என்பது மட்டும் எத்தகைய சந்தேகத்திற்கும் இடமில்லாத உண்மை.

மேற்குலகின் கலைக்கு அடித்தளமாக இருப்பது கிரேக்கத்தின் கலைகள். கிரேக்க கலைக்கு அடித்தளமாக இருப்பவைகள் எகிப்திய கலைகள். அதிலும் முக்கியமாக ராமேசிஸ் II-வின் கட்டிடங்களே. எகிப்தின் மிகப் பழம் பெறுமைக் கொண்ட நகரங்களான Iunu, Herakleopolis, Abdju மற்றும் Thebes நகரங்களில் இவன் கட்டியக் கட்டிடங்கள் அனைத்தும் இவனுக்கு முன்பு இருந்த பாரோக்கள் கட்டிய கட்டிடங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவனுடைய கோயில் கட்டிடங்களின் சிறப்பு அம்சம், இரண்டு கைகளையும் தொடையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்துக்கொண்டிருக்கும் இவனுடைய 20 அடி உயர சிற்பங்கள். கோயில் நுழைவு வாயிலின் பக்கவாட்டு பகுதிகளில் உட்கார்ந்திருக்கும் இவனுடைய 20 அடி உயர சிலைகளைக் கடந்துதான் நாம் கோயிலுக்குள்ளேயே நுழைய முடியும். இவன் கட்டிடக் கலையின் அடுத்த சிறப்பு அம்சம் obelisk. நம்மூர் கோயில்களில் இருக்கும் கொடி மரம் போன்றது இந்த obelisk.

எகிப்தில் பிற்காலத்தில் பாறைக் கற்களால் கட்டப்பட்ட பிரமிடுகளைத் (ஈமோதெப்பிற்கு பிறகு) தவிர The Land of the Dead-ல் இருக்கும் மஸ்தபாக்கள் மற்றும் உள்ளூரில் இருக்கும் கோயில்கள் அனைத்திற்கும் அற்ப ஆயுள்தான். முந்நூறு நானாறு வருடங்கள் கழித்து வரும் பாரோக்கள் தாங்களும் தங்களுடைய பெயரை நிலை நிறுத்தும் பிரம்மாண்டமான கட்டிடங்களை தங்களுடைய ஆயுள் முடிவதற்குள்ளேயே கட்டிவிடவேண்டும் என்கிற நிற்பந்தம் மற்றும் அழுத்தம் காரணமாக தனக்கு முன்னால் இருந்த பாரோக்கள் கட்டிய கட்டிங்களின் கட்டுமான பொருட்களான கற்கள் மட்டும் மர பொருட்களை தங்களுடைய கட்டிடங்களுக்காக உருவி எடுத்துவிடுவார்கள். இதன் காரணமாக பல பாரோக்களின் கட்டிடங்கள் ஓரிடத்திலிருந்து மறைந்து மற்றொரு பாரோவின் கட்டிடங்களாக பிறப்பெடுத்து மீண்டும் மற்றொரு பாரோவின் கட்டிடமாக பரிணமித்துவிடும்.

இந்த வகையில் மற்ற எந்த பாரோவையும் விட ராமேசிஸ் II-வே மிக அதிக அளவில் தன்னுடைய பிரம்மாண்டமான கட்டிடங்களுக்காக மற்ற பாரோக்களின் கட்டிடங்களை முழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறான். இவன் அதிகமாக கைவைத்து கற்களை உருவியெடுத்தது பாரோ அகநேத்தனுடைய கட்டிடங்களிலிருந்துதான். எகிப்திய மக்கள் நினைத்தும் பார்க்க விரும்பாத பாரோ அகநேத்தன் Thebes மற்றும் Akhetaten நகரங்களில் கட்டியிருந்த Aten கோயில்களின் கட்டுமான பொருட்களை தன்னுடைய கட்டிடங்களுக்காக தரையோடு தரையாக வழித்து எடுத்துவிட்டான் ராமேசிஸ் II. இந்த செயலின் மூலம் எகிப்திய மக்கள் விரும்பாத அகநேத்தன் பாரோவின் நினைவுச் சின்னங்களை அழித்த மாதரியும் ஆயிற்று தன்னுடைய பிரம்மாண்ட கட்டிடங்களை கட்டிய மாதரியும் ஆயிற்று என்பது அவனுடைய கணக்கு.

அடுத்து இவன் தன் வேலையைக் காட்டியது Thebes-ல் இருக்கும் Luxor கோயிலில்.

அடுத்த தொடரிலும்......

பாகம் 32

சாதாரணமாகவே பிரம்மாண்டத்தை கட்டிக்கொண்டு சாமியாடும் பேர்வழி ராமேசிஸ் II, அப்படியிருக்கையில் Luxor கோயில் போன்ற எகிப்திய நாகரீகத்தின் மிக பழமையான அதே சமயத்தில் அதி முக்கியமான இடத்தை மட்டும் விட்டுவைத்துவிடுவானா என்ன. எகிப்தியர்கள் வருடா வருடம் கொண்டாடும் திருவிழாக்களில் ஒன்று Opet. இந்த திருவிழாவின்போது பாரோக்கள் மக்களின் முன்னிலையில் சில மத சடங்குகளை செய்வார்கள். அதற்கென்று கோயில்களில் பெரிய திறந்த வெளியும் அதை சுற்றிய கட்டிடங்களும் கட்டப்பட்டிருக்கும். கிரேக்கர்களின் தியேட்டர் என்கிற கட்டிட அமைப்பு இதிலிருந்து பெறப்பட்டதே.

அப்படியான சடங்கு செய்யும் தியேட்டர் ஒன்று Luxor கோயிலில் இருந்தாலும் தன்னுடைய பிரம்மாண்டத்தை அதில் புகுத்த நினைத்தான் ராமேசிஸ் II. அந்த தியேட்டர் மிக பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட்டு அங்கே கண்களைத் திருப்பும் இடங்களிலெல்லாம் 20 அடி உயரம் கொண்ட அவனுடைய சிலைகள் நிறுத்தப்பட்டன. இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அடுத்த திட்டம் தயாரானது Abu Simbel என்கிற இடத்தில். எகிப்து என்றாலே பிரமிடுகளுக்கு அடுத்து அடையாளப்படுத்தப்படும் வரலாற்று கலைச் சின்னம் Abu Simbel-ல் இருக்கும் ராமேசிஸ் II-வின் புடைப்புச் சிற்பங்கள்தான்.

இது பாறையால் ஆன குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில். ராமேசிஸ் II-வின் கோயில்களுக்கே உரிய அமைப்பில் நுழைவாயிலின் இரண்டு பக்கமும் பக்கத்திற்கு இரண்டு சிலைகள் என்று நான்கு சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. நான்குமே ராமேசிஸ் II-வின் உருவங்கள்தான். பாறை மலையின் முக்கால் பங்கு உயரத்திற்கு செதுக்கப்பட்ட சிலைகள். அப்படியென்றால் பிரம்மாண்டத்தை பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சிலைகளை பார்த்துக்கொண்டிருப்பதற்கே ஒருவருக்கு ஒரு நாள் போதாது. நாம் இதையேப் பாத்துக்கொண்டிருக்க முடியாதல்லவா வாருங்கள் அந்த கோயிலுக்குள் செல்லலாம்.

அடுத்த பிரம்மாண்ட அதிரடி வரவேற்பு அறையின் தூண்களில் இருக்கிறது. தூண்கள் அனைத்தும் தூண்கள் கிடையாது அவைகள் 20 அடி உயரம் கொண்ட ராமேசிஸ் II சிலைகள். Osiris கடவுளின் உருவத்திலிருக்கும் ராமேசிஸ் II உருவம். அறையின் இரண்டுப் பக்கமும் வரிசையாக நின்றுக்கொண்டிருக்கின்றன. இந்த கோயிலின் வாசலிலேயே ஆச்சரியத்தில் பிளந்த உங்களின் வாய் இதைப் பார்த்தப் பிறகு இன்னும் கொஞ்சம் அதிகமாக பிளந்திருக்கும். இப்படி பார்ப்பவர்கள் தன்னைக் கண்டு வாயைப் பிளக்கவேண்டும் என்பதுதான் ராமேசிஸ் II-வின் எண்ணமும்.

மனித வரலாற்றில் வேறு எந்த ஒரு அரசனும் ராமேசிஸ் II அளவிற்கு பிரம்மாண்ட சிற்ப உருவங்களின் மூலம் சுய விளம்பரம் செய்துக்கொண்டது கிடையாது. சுய விளம்பரத்தின் உச்சம் Abu Simbel சிற்பங்கள். அடுத்த அறையில் Ptah, Amun மற்றும் Ra-Horakhty ஆகியோர்களின் சிலைகள் இருக்கின்றன. இவைகளோடு சேர்த்து அங்கேயும் ராமேசிஸ் II-வின் ஒரு சிலை உண்டு. வருடத்தின் இரண்டு நாட்களில் (பிப்ரவரி 21 மற்றும் நவம்பர் 21) சூரிய உதயத்தின் முதல் ஒளி உள் அறையில் இருக்கும் இந்த நான்கு சிலைகளின் மீதும் விழுகின்றது.

Museum என்கிற வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள் Ramesseum என்கிற வார்த்தையை கேள்விப்பட்டதுண்டா! பிற்காலத்தில் வரும் சந்ததிகள் அப்படியான ஒரு வார்த்தையை தன் பெயரிலேயே உருவாக்கி பயன்படுத்தவேண்டும் என்பதுதான் ராமேசிஸ் II-வின் அடுத்த அதிரடி நெத்தியடி கட்டிடக் கலைத் திட்டம். எகிப்தின் பாரோ என்னத்தான் ஆண்டு அனுபவித்து இருந்தாலும் அவருடைய கல்லறை என்பதே அவருடைய ஆட்சிக்கும் அவருடைய பெருமைக்கும் உறிய உச்சக்கட்ட அடையாளம். அப்படியான ஒரு விசயத்தில் ராமேசிஸ் II கோட்டைவிட்டு விடுவானா என்ன. தன்னுடைய கல்லறை கோயிலை கட்ட அவன் தேர்ந்தெடுத்த இடம் தீப்ஸ். அது நைல் நதியின் மேற்கு கரையோரம் அமைந்த இடம். இந்த இடத்தின் மொத்த பரப்பளவு சுமார் 12 ஏக்கர்.

(புகைப்படத்திலிருப்பது Abu Simbel-ல் இருக்கும் ராமேசிஸ் உருவங்கள். அடுத்தப் புகைப்படம் வானிலிருந்து எடுக்கப்பட்ட Ramesseum )

இந்த கல்லறைக் கோயில் இன்றைக்கு நமக்கு முழுதாக கிடைக்கவில்லை. இடிந்த கட்டிட சிதைவுகளாகத்தான் கிடைக்கிறது. ஆனால் அந்த சிதிலங்களே பார்ப்பவர்களை மிரள அடிக்க கூடியது. அது முழுமையாக கிடைத்திருந்தால்! இந்த கல்லறைக் கோயிலிலும் ராமேசிஸ் II-ன் 20 அடி உயர சிலைகளுக்கு பஞ்சமே இல்லை. தூணிலும் துரும்பிலும் ராமேசிஸ் II மயம்தான். இந்த கல்லறைக் கோயிலுக்குள் ஒரு தானியக் களஞ்சியமும் இருக்கிறது. பாரோ ராமேசிஸ் II மக்களை சந்திக்கும்போதோ அல்லது திருவிழாக் காலங்களில் சடங்குகளை செய்யும்போதோ கூடும் மக்களுக்கு உணவுத் தயாரிக்கவேண்டி தேவைப்படும் கோதுமையை சேமித்து வைக்க கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த களஞ்சியம் பின்னால் வந்த பல பாரோக்களால் பஞ்ச காலங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த களஞ்சியத்தை முழுதாக நிரப்ப சுமார் 75,00,000 கோதுமை மூட்டைகள் தேவைப்படும் என இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகிறார்கள். இது இன்றைய தீப்ஸ் நகர மக்களுக்கே ஒரு வருட காலத்திற்கு போதுமான உணவுத் தேவையை பூர்த்தி செய்ய கூடியது. அப்படியென்றால் இன்றையிலிருந்து 3200 வருடங்களுக்கு முன்பான நிலையை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

Ipetsut, Luxor, Abu Simbel மற்றும் Ramesseum போன்ற இடங்களில் இருக்கும் ராமேசிஸ் II-வின் கட்டிடங்கள் நமக்கு வேண்டுமானால் திகைப்பையும் போதும் போதும் என்கிற பிரமிப்பையும் தரலாம் ஆனால் ராமேசிஸ் II-விற்கு இவைகளால் மனசு நிறைந்தப்பாடாகத் தெரியவில்லை. தனக்கு முன்னால் இருந்த பாரோக்கள் பல நூறு வருடங்களாக எகிப்தின் பல நூறு மைல்கள் தூரம் எங்கும் கட்டிவைத்த கட்டிட அற்புதங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தினான்.

அடுத்த தொடரிலும்.....

பாகம் 33

உலகம் இதுவரை பார்த்திராத அந்த திட்டத்தைக் குறித்து பார்ப்பதற்கு முன்பு ராமேசிஸ் II குறித்து தனிப்பட்ட முறையில் கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாம் என்றால் வேண்டாம் என்றா சொல்வீர்கள். எகிப்தின் பாரோக்களிலேயே அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்தவன் இவன் ஒருவனாகத்தான் இருக்கும். அன்றைய நாட்களில் எகிப்தியர்களின் சராசரி ஆயுட் காலம் என்பது 40 வருடங்கள்தான். இந்த சராசரி ஆயுட் காலத்திற்கு பாரோவா, பரதேசியா என்கிற வித்தியாசமெல்லாம் கிடையாது. மிக குருகிய ஆயுட் காலம் கொண்ட ஒரு மக்களினம் உலகின் பிரம்மாண்டமான கட்டிடக் கலையையும் ஓவியக் கலையையும் உருவாக்கியது எகிப்திய நாகரீகத்தின் பல ஆச்சரியங்களில் பத்தோடு ஒன்று பதினொன்று.

ராமேசிஸ் II தன்னுடைய வாழ் நாளிலேயே தன்னுடைய பல வாரிசுகள் The Valley of the Kings-ல் போய் அடக்கமானதைப் பார்த்திருக்கிறான். அவன் வாரிசுகளின் இழப்புகளைவிட வாழ் நாள் முழுவதும் அவனை பாதித்த ஒரு விசயம் அவனுடைய மனைவி Nefertari-யின் இழப்பு. ராமேசிஸ் II-விற்கு மொத்தம் எட்டு மனைவிகள் இருந்தார்கள். இவர்களில் எகிப்திய நாகரீகம் கண்ட பல தனித்துவமான பெண்களில் ஒருத்தியான Nefertari-யும் அடக்கம். மிகச் சிறந்த படிப்பாளி. ராமேசிஸ் II அவளை நினைத்துப் பெருமிதம் அடைந்த விசயங்களில் அவளுடைய அழகும் அவளுடைய படிப்பறிவும் பிரதான விசயங்கள். ஒருப் பெண்ணிடத்தில் அழகும் அறிவும் ஒற்றினைவது அற்புதமான விசயம்தானே. (இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல பொது புத்தியின் கருத்தையே இங்கே உபயோகித்திருக்கிறேன். போர் கொடி தூக்கலாமா என்று யோசிக்கத் துணியும் பெண்ணியவாதிகள் பொது புத்திக்கு எதிராக எதையாவது தூக்கிக்கொள்ளவும்)

நினைத்து நினைத்துப் பெருமிதம் அடைந்த, தான் மிகவும் நேசித்த Nefertari-யை முழு ஆயுளுக்கு (40 வயது) பறிக்கொடுத்த ராமேசிஸ் II மிகவும் உடைந்துப்போய்விட்டான். உடைந்துப் போன நிலையிலும் தன்னுடைய அன்பு மனைவியின் நினைவு இந்த உலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கவேண்டும் என்று முடிவு செய்த அவன் எகிப்திய அரச குடும்ப பெண்களை அடக்கம் செய்யும் The Valley of the Queens-ல் Nefertari-க்கு என்று பிரம்மாண்டமான கல்லறையை குடைவித்தான். முகலாய பேரரசன் ஷாஜகானுக்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய அன்பு மனைவிக்கு என்று இந்த உலகம் அதுவரைப் பார்த்திராத ஒரு அற்புதமான கல்லறையை கட்டிய முதல் பேரரசன் ராமேசிஸ் II. பாரோனிக் நாகரீகத்தின் அதி அற்புதமான ஓவியங்களைக் கொண்டது Nefertari-யின் கல்லறை.

அவளுடைய கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கும் ராமேசிஸ் II-வின் வாசகம் “My love is unique – no one can rival her, for she is the most beautiful woman alive. Just by passing, she has stolen away my heart”. பிற்காலத்தில் ராமேசிஸ் II-வின் மம்மியே மரத்தாலான சவப்பெட்டியில்தான் (sarcophagus) வைக்கப்பட்டது ஆனால் Nefertari-யின் மம்மி மிகவும் மதிப்பு வாய்ந்த சிகப்பு பளிங்கு கல்லால் ஆன sarcophagus-ல் வைக்கப்பட்டிருக்கிறது. Nefertari-யின் கல்லறையில் அவளுடைய மறு உலக வாழ்வு பயணத்திற்கு உதவி செய்யும் கடவுளர்களின் ஓவியங்களை தானே முன் நின்று மேற்பார்வை செய்திருக்கிறான் ராமேசிஸ் II. அதில் Isis கடவுள் ankh (இது சிலுவைப் போன்ற உருவமைப்புக் கொண்டது) எனப்படும் என்றும் அழியாத பெரு வாழ்விற்கான சாவியை Nefertari-யிடம் கொடுக்கும் ஓவியம் கண்கொள்ளாக் காட்சி.

ராமேசிஸ் II-வின் வாழ்வைப் பொறுத்தவரைக்கும் துக்கம் என்றாலும் மகிழ்ச்சி என்றாலும் அதன் வெளிப்பாடு பிரம்மாண்ட கட்டிடக் கலைதான். சரி இனி ராமேசிஸ் கட்டிடக் கலைகளில் உச்சமாக கருதப்படும் அந்த மிகச் சிறந்த கட்டிடக் கலைக் குறித்துப் பார்க்கலாம். அதன் பெயர் Per-Ramesses அதாவது ராமேசிஸின் வீடு என்பதுப் பொருள். பெயருக்குத்தான் அது வீடு ஆனால் அது நிதர்சனத்தில் மிக மிகப் பிரம்மாண்டமான அரண்மனைகளின் நகரம். இத்தகைய ஒரு அரண்மனைகளின் நகரத்தை அவனுக்கு முன்பும் சரி அவனுக்கு பின்பும் சரி எந்த ஒரு பேரரசனும் தங்களின் கணவில்கூட கட்டவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கமாட்டார்கள். இந்த அரண்மனைகளின் நகரம் இன்றைக்கு முழுதாக கிடைக்கவில்லை. இதன் சிதிலமடைந்த அடிப்படைக் கட்டுமானங்களே நமக்கு இதன் பிரம்மாண்டத்தை அனுமானிக்க உதவி செய்கிறது.

(புகைப்படத்தில்.....Isis கடவுள், Nefertari-யிடம் ankh சாவியைக் கொடுக்கும் ஓவியக் காட்சி)

இதன் அற்புதத்தை மிக எளிதாக அதே சமயத்தில் அதன் பிரம்மாண்டத்துடன் நீங்கள் கற்பனை செய்ய உங்களுக்கு உதவ இப்படி செல்லலாம், இந்த உலகில் இருக்கும் அனைத்து அதி அற்புதமான அரண்மனை கட்டிடங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து வைத்தால் அதுதான் Per-Ramesses. Per-Ramesses-யின் மையமாக இருந்தது Amun–Ra, Horakhty மற்றும் Atum ஆகிய திருமூர்த்திகளின் பிரம்மாண்டமான கோயில். இந்த கோயிலுக்கு முன்னால் 20 அடிகளுக்கும் அதிகமான உயரம் கொண்ட ராமேசிஸ் II-வின் நான்கு உருவச் சிலைகள் இருந்திருக்கிறது. இதற்குள் இன்றைய தரத்திற்கு ஈடான செம்பு உருக்க ஆலை ஒன்றும் இருந்திருக்கிறது. இன்றையிலிருந்து சுமார் 3300 வருடங்களுக்கு முன்பே உலகின் முதல் cosmopolitan city-யாக இருந்திருக்கிறது Per-Ramesses. இந்த நகரத்திற்கு தேவைப்படும் உணவு தானியங்களையும் காய்கறி பழங்களையும் தடையில்லாமல் உற்பத்தி செய்வதற்கு என்றே இந்த நகரைச் சுற்றி பல கிராமங்களை உருவாக்கியிருக்கிறான் ராமேசிஸ் II. இந்த அரண்மனை நகரமும் அதை சுற்றியிருக்கும் கிராமங்களுமே அகதிகளாகத் திரிந்துக்கொண்டிருந்த யூதர்களை எகிப்தை நோக்கி இழுத்திருக்கவேண்டும் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

பிழைப்புத் தேடித் திரிந்த யூதர்கள் Per-Ramesses நகரில் தஞ்சம் அடைந்து அந்த நகரின் Pithom or Per-Atum (இன்றைய Tell el-Maskhuta) பகுதியையும் Raamses பகுதியையும் கட்டியிருக்கவேண்டும் என்று இன்றைக்கு அனுமானிக்கப்படுகிறது. கட்டுமான வேலையில் ஈடுபடுத்தப்பட்ட யூதர்கள் அடிமைகளைப் போல நடத்தப்பட்டார்களா என்பதற்கு எவ்வித எழுத்து மற்றும் வரலாற்று ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும் அவர்களுடைய வாழ் நிலை அடிமைகளைப் போல்தான் இருந்திருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் விவிலியத்தின் யாத்திராகாமமும் குறிப்பிடுகிறது. ஆனால் இவைகளைக் குறித்து எகிப்திய பப்பைரஸ் மற்றும் கல்லறை எழுத்துக்கள் அழுத்தமான மெளனமே சாதிக்கின்றன. என்னத்தான் ராமேசிஸ் II எகிப்தின் பிரம்மாண்டமாக இருந்தாலும் எகிப்து என்றாலே மக்களின் நினைவிற்கு வருவது பிரமிட்தான். அதிலும் பிரமிட் என்றாலே நம் கண்களுக்குள் தோன்றுவது The Great Pyramid at Giza-தான். இது குறித்த தெரிந்துக்கொள்ள நாம் ராமேசிஸ் II காலத்திலிருந்து 1300 வருடங்கள் முன்னோக்கி செல்லவேண்டும். வாருங்கள் செல்வோம்.

அடுத்த தொடரிலும்......

 பாகம் 34

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பாரீசில் கட்டப்பட்ட ஈபீல் டவருக்கு (Eiffel Tower) முன்பு வரை இந்த உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்துவந்தது The Great Pyramid. அது கட்டப்பட்டு கடந்த 4500 வருடங்களாக உலகின் மிகப் பெரிய அதே சமயத்தில் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. இந்த பிரமிடுக்கு பின் அறிவியல் தொடங்கி அமானுஷ்ய மர்மம் வரை பல கதைகளுக்கு பஞ்சமே இல்லை. ஏலியன்கள், உலகின் முதல் அணு உலை, உலகின் முதல் மின்சார உற்பத்தி மையம், உலகின் முதல் வானியல் ஆராய்ச்சி மையம் இப்படி போய் கொண்டே இருக்கிறது இந்த பிரமிட் குறித்த இன்றைய ஆராய்ச்சிகள். இதில் விசேசம் இந்த கதைகளை சொல்பவர்கள் அனைவரும் ஆராய்ச்சியாளர்களே.

எகிப்தியாலஜியில் இந்த பிரமிட் குறித்த ஆராய்ச்சிக்கென்றே தனித் துறை கூட இருக்கிறது. இந்த பிரமிட் கட்டப்பட்ட காலத்திலிருந்து உலகின் அனைத்து நாகரீக மக்களையும் அதிசயத்து மலைத்துப்போக வைத்திருக்கிறது. இந்த பிரமிட் Old Kingdom-யை சேர்ந்த Fourth Dynasty பாரோக்களில் இரண்டாம் பாரோவான கூபுவிற்காக (Khufu) கட்டப்பட்டது. ஆனால் இந்த பிரமிடிற்குள் பாரோ கூபுவின் மம்மி வைக்கப்படவேயில்லை என்பது இந்த பிரமிட் குறித்த மர்மங்களின் தொடக்கப் புள்ளி. இன்றைய பிரமிட் ஆராய்ச்சியாளர்கள் இந்த பிரமிட் கல்லறை பயன்பாட்டிற்காக கட்டப்பட்டதில்லை என்கிற முடிவிற்கு வரக் காரணம் இதற்குள்ளிருந்து பாரோ கூபுவினுடைய மம்மி மாத்திரம் அல்ல அவனுக்கு பின் வந்த வேறு எந்த ஒரு பாரோவின் மம்மியும் கூட இதிலிருந்து கண்டெடுக்கப்படவில்லை என்பதே.
உலகின் மிகப் பெரிய கல் கட்டிடம் ஒன்றை தன்னுடைய மறு வாழ்வு பயணத்திற்கான கல்லறை கட்டிடமாக கட்டிய பாரோ கூபுவின் மம்மி அதற்குள் வைக்கப்படாமல் வேறு ஒரு பிரமிடில் வைக்கப்பட்டதற்கான காரணமென்ன. இது குறித்துத் தெரிந்துக்கொள்வதற்கு முன்பு நாம் பாரோ கூபுவின் தந்தையான பாரோ ஸ்னெப்ரு (Sneferu)-வின் பிரமிட் கட்டும் முயற்ச்சிகளைக் குறித்து தெரிந்துக்கொள்வது நல்லது. பாரோ கூபு உலகின் மிகப் பெரிய கல் கட்டிடமான The Great Pyramid-யை கட்டுவதற்கான அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தவன் பாரோ ஸ்னெப்ரு. இவன் தன்னுடைய காலத்தில் தனக்கென்று மூன்று பெரிய பிரமிடுகளை கட்டிக்கொண்டான்.

பாரோ ஸ்னெப்ரு (கி.மு. 2575 – 2545), நான்காம் வம்சாவளியின் முதலாவது பாரோ. இவன் காலத்திலேயே எகிப்தியர்கள் மிக பிரம்மாண்டமான பிரமிடுகளை கட்டும் தொழில் நுட்பத்திற்குள் நுழைகிறார்கள். பிரம்மாண்ட பிரமிடுகளை கட்டுவதற்கான மனித உழைப்பை கொடுக்க போர் கைதிகளாக பிடிபட்ட 7000 நுபிய அடிமைகள் பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் பெயருக்குத்தான் அடிமைகள். ஆனால் உண்மையில் பாரோ ஸ்னெப்ரு இவர்களுக்கு எகிப்திய குடியுரிமை கொடுத்திருக்கிறான். அது மாத்திரமல்ல இவர்களுக்கு வரி விலக்கும் கூட கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கென்று தனி குடியிருப்பும் கூட ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறான் பாரோ ஸ்னெப்ரு. இந்த சலுகைகளுக்கெல்லாம் நன்றிக் கடனாக இவர்களிடமிருந்து உறிந்துக்கொள்ளப்பட்டது முதுகை உடைத்து இரண்டு கூறுகளாக்கும் பிரமிட் கட்டுமானப் பணி.

பாரோ ஸ்னெப்ரு காலத்தில் எகிப்திய நாகரீகம் சமூக வாழ்வு, அரசியல், கலை மற்றும் பிரமிட் கட்டிடக் கலை என்று அனைத்திலும் அடுத்த நிலைக்கு அடியெடுத்து வைத்தது. ஈமோதெப் விட்டுச் சென்ற இடத்திலிருந்து பிரமிட் கட்டிடக் கலையை மேலும் அதிகமாக அறிவியல் அடிப்படையிலான கட்டுமானமாக மாற்றியவர்கள் பாரோ ஸ்னெப்ருவின் பிரமிட் கட்டிடக் கலை வல்லுனர்கள். மூன்றாம் வம்சாவளியைச் சேர்ந்த பாரோ Hetepsekhemwy பழம் பாரம்பரியத்தை உடைத்து Saqqara-வை ஸ்டெப் பிரமிடுகள் கட்டுவதற்கான இடமாக தேர்ந்தெடுத்ததைப் போல பாரோ ஸ்னெப்ரு மீண்டும் ஒருமுறை பழம் பாரம்பரியத்தை உடைத்து Meidum-யை தன்னுடைய பிரம்மாண்டமான பிரமிடுகளை கட்டுவதற்கான இடமாகத் தேர்ந்தெடுத்தான்.

(புகைப்படத்தில் இடிந்த நிலையில் இருக்கும் பாரோ ஸ்னேப்ருவின் Meidum-ல் இருக்கும் முதல் பிரமிட்)

இவன் காலத்திற்கு முன்புவரை கட்டப்பட்ட மஸ்தபாக்களும் ஸ்டெப் பிரமிடுகளும் வடக்கு திசையோடு ஒத்திசைவாக கட்டப்பட்டு வந்தது. இதையும் முதல் முறையாக மாற்றி தன்னுடைய பிரம்மாண்ட பிரமிடுகளை கிழக்கு மேற்கு திசையோடு ஒத்திசைவாக கட்டினான் பாரோ ஸ்னெப்ரு. Meidum-ல் கட்டப்பட்ட இவனுடைய முதல் பிரமிடே வெளிப்பக்க சரிவுகளில் சுண்ணாம்பு கல் பூச்சுக்கொண்ட (limestone casing) முதல் பிரமிட். இந்த பிரமிட் எட்டு அடுக்குகளை கொண்டதாக இருந்திருக்கவேண்டும் என்று இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். இன்றைக்கு இரண்டு அடுக்குகள் மாத்திரமே முழுமையாக இருக்கிறது.

இந்த பிரமிட் பாரோ ஸ்னெப்ரு ஆட்சியின் முதல் பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே இது இடிந்தும் விழுந்திருக்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் இந்த பிரமிட் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் போதே இடிந்து விழுந்து கட்டிடப் பணியாளர்களை பலிவாங்கியிருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த பிரமிட் இடிந்து விழுந்ததன் எதிரொளியே இவன் கட்டிய இரண்டாம் பிரமிடின் வடிவமைப்பில் எதிரொளித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அனுமானம் செய்கிறார்கள்.

அடுத்த தொடரிலும்.......

 பாகம் 35

பாரோ ஸ்னெப்ரு தனக்கான முதல் பிரமிட் இடிந்துவிழுந்துவிட்டதால் மற்றொரு புதிய பிரமிடை கட்டியெழுப்ப நினைத்தானா அல்லது தொடக்கத்திலேயே தனக்கென்று பல பிரமிடுகள் கட்ட நினைத்ததன் தொடர்ச்சிதான் மெம்பிசின் தெற்குப் பகுதியில் (இன்றைய Dahshur) கட்டப்பட்ட இரண்டாவது பிரிமிடா என்பது விவாதத்திற்குரிய விசயமாக இருந்துவருகிறது. இன்றைக்கு வேண்டுமானால் இது தொடர்பாக நாம் விவதாம் செய்துக்கொண்டிருக்கலாம் ஆனால் பாரோ ஸ்னெப்ரு மிகத் தெளிவான திட்டமிடலுடனே இதை கட்டியிருப்பதாக தெரிகிறது.

அவனுக்கு முன்பு இருந்த எந்த ஒரு பாரோவுமே Dahshur பகுதியில் எத்தகைய கல்லறை கட்டிடங்களையும் கட்டியதில்லை. இவனுடைய இரண்டாவது பிரமிடே Dahshur பகுதி கண்ட முதல் கல்லறை கட்டிடம். இன்றைக்கு பிரமிட் என்றால் நம் கண்களுக்கு முன்பாக தோன்றும் பிரமிடின் முக்கோண வடிவத்தின் முதல் தோற்றம் இந்த பிரமிடிலிருந்தேத் தொடங்குகிறது. எகிப்தின் முதல் கேத்திர வடிவ (geometrical) பிரமிட் இந்த பிரமிடே. இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் இந்த பிரமிடிற்கு “Bent Pyramid” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காரணம் அதன் தோற்றம். இந்த பிரமிடின் அடிப்பகுதிக்கென்று மொத்தமாக 8-1/2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எட்டரை ஏக்கர் நிலத்தை அடைத்துக்கொண்டு ஒரு கட்டிடம் என்றால் அதன் பிரம்மாண்டத்தை கற்பனை செய்துக்கொள்ளுங்கள். ஒருவகையில் இந்த பிரமிடே இவனுடைய மகனான பாரோ கூபுவின் The Great Pyramid-ன் முன் மாதரி என்று துணிந்து சொல்லலாம்.

ஈமோதெப் பாரோ ஜோசருக்கு கட்டிய Step Pyramid எகிப்திய பிரமிட் கட்டிடக் கலையின் ஒரு மைல் கல் என்றால் பாரோ ஸ்னெப்ரு-வின் Bent Pyramid பிரமிட் கட்டிடக் கலையின் அடுத்த மைல் கல். தரையிலிருந்து இந்த பிரமிடின் உச்சி 500 அடிகள் உயரத்திலிருக்கிறது. அதாவது இந்த பிரமிடின் மொத்த உயரம் 150 மீட்டர்கள். தரையிலிருந்து முதல் 45 மீட்டர்கள் உயரம் வரை இந்த பிரமிடின் நான்கு பக்கங்களும் 60 டிகிரி கோணத்தில் வானத்தை நோக்கி மேலே எழுகிறது. பிறகு 45 டிகிரி கோணத்தில் உள் பக்கமாக வளைந்து பிரமிடின் உச்சியை தொடுகிறது. வானத்தை நோக்கி எழும் பாதையின் நடுவழியில் இந்த பிரமிடின் நான்கு பக்கங்களும் 45 டிகிரிக் கோணத்தில் வளைந்திருப்பதே இந்த பிரமிடிற்கு Bent Pyramid என்றுப் பெயர் வரக் காரணம்.

இந்த பிரமிடின் 45 டிகிரிக் கோண வளைவிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது காரணம், இந்த பிரமிட் 45 மீட்டர்கள் உயரம் வரை கட்டப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில்தான் பாரோ ஸ்னெப்ரு-வின் முதல் பிரமிட் இடிந்து விழுந்திருக்கவேண்டும் என்றும் அதே நிலைமை இந்த பிரமிடிற்கும் ஏற்ப்பட்டுவிடக் கூடாது என்கிற அச்சத்தில் இந்த பிரமிடை கட்டிக்கொண்டிருந்த கட்டிட வல்லுனர்கள் இதன் பக்கவாட்டு சுவர்களின் கோணத்தை 45 டிகிரிகளாக வளைத்துவிட்டார்கள் என்பது. அடுத்த காரணம், எகிப்து அதுவரை கண்டிராத இத்தகைய பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கான கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாகவே கட்டிட வல்லுனர்கள் இதன் 60 டிகிரி கோணத்தை வளைத்துவிட்டார்கள் என்பது.

இதில் இரண்டாவதாக சொல்லப்படும் காரணம் ஏற்புடையதாக இருக்க வாய்ப்பே கிடையாது. எகிப்தில் கற்களுக்கு பஞ்சமே கிடையாது. வெட்ட வெட்ட குறையாத கல் குவாரி மலைகள் எகிப்தில் ஏராளம். அதனால் முதல் காரணமே பொறுத்தமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த பிரமிடிற்கு வடக்கு பக்கம் ஒன்று மேற்குப் பக்கம் ஒன்று என்று இரண்டு நுழைவாயில்கள் இருக்கிறது. இந்த ஏற்பாடு அனேகமாக பிரமிட் கொள்ளையர்களை குழப்புவதற்காக இருக்கவேண்டும். இந்த பிரமிடிற்கு அருகிலேயே தெற்கில் மற்றொரு சிறிய பிரமிடும் இருக்கிறது (satellite pyramid). கிழக்கில் கல்லறை கோயில் (Mortuary Temple) இருக்கிறது. இவைகளை உள்ளடக்கும் படி ஒரு மிகப் பெரிய சுற்றுச் சுவரும் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு அந்த சுற்றுசுவரின் சுவடுக் கூட இல்லை. சுற்றுசுவரின் கற்கள் பிற்கால பாரோக்களால் உருவியெடுக்கப்பட்டு தங்களுக்கான கல்லறை கோயில்கள் கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இத்தகைய பிரம்மாண்ட கட்டிடத்தை கட்டுவதற்கான பொருளாதார மற்றும் உணவுத் தேவைகளை ஈடுகட்டுவதற்கென்றே எகிப்தில் புதிதாக 35 எஸ்டேட் நகரங்களையும் 122 கால்நடை பண்ணைகளையும் உருவாக்கியிருக்கிறான் பாரோ ஸ்னெப்ரு. இந்த செய்தியை அவனுடைய ஆட்சியின் பதினான்காம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு நமக்குத் கம்பீரமாகத் தெரிவிக்கிறது. இதே கல்வெட்டு இந்த பிரமிடின் உள் கட்டுமான தேவைகளுக்கென்று 40 படகுகள் முழுக்க மிகப் பெரிய மரத் துண்டகள் வந்தன என்று சொல்கிறது. பாரோ ஸ்னெப்ரு-வின் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரு படி மேலே சென்று தன்னுடைய பிரம்மாண்ட பிரமிட் கட்டுமாணத்தின்போது செய்துக் காட்டினான் பாரோ கூபு.

(புகைப்படத்திலிருப்பது Dahshur-ல் இருக்கும் பாரோ ஸ்னேப்புருவின் Bent Pyramid)

இராட்சத தோற்றத்தில் Bent Pyramid எழுந்து நின்றுவிட்டிருந்தாலும் பாரோ ஸ்னெப்ரு-வின் பிரம்மாண்டத் தாகம் அடங்கியப்பாடில்லை. இந்த இரண்டு பிரமிடுகளை கட்டி முடிப்பதிலேயே அவனுடைய ஆட்சியின் இருபது ஆண்டுகள் கழிந்துவிட்டிருந்தது. தனக்கான மூன்றாவது பிரமிட் ஒன்றையும் கட்டத் திட்டமிட்டான் பாரோ ஸ்னெப்ரு. கட்டிட வல்லுனர்களுக்கு பகீர் என்றது. எகிப்தியர்கள் அல்பாயுசுக் கொண்டவர்களாக இருந்ததால் தாங்களும் பாரோவும் உயிருடன் இருக்கும்போதே இந்த முன்றாவதுப் பிரமிடையும் கட்டி முடித்துவிட முடியுமா என்கிற பீதியே அவர்களின் பகீருக்கு காரணம். பாரோ ஸ்னெப்ரு கட்டிட வல்லுனர்களில் இந்த பீதியை கண்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. தன்னுடைய மற்ற இரண்டு பிரமிடுகளுக்கு செய்த முன் ஏற்பாடுகளைவிட பல மடங்கு அதிகமாக அதே நேரத்தில் முன்னெச்சரிக்கையுடன் தன்னுடைய மூன்றாவது பிரமிட் கட்டுமானத்திற்கான ஏற்பாடுகளை செய்தான்.

அடுத்த தொடரிலும்.....




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..