Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 26 - 30
Posted By:Hajas On 9/7/2015 10:02:54 AM

 

எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 26 - 30

by : David Praveen 

பாகம் 1 - 5பாகம் 6 - 10 , பாகம் 11 - 15பாகம் 16 - 20பாகம் 21 - 25  


பாகம் 26

ஈமோதெப் வானில் நிகழும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நகர்வை மிகத் துள்ளியமாக அறிந்தவராக இருந்திருக்கிறார். இன்றையிலிருந்து 4500 வருடங்களுக்கு முன்பு இத்தகைய அறிவுப் பெற்ற ஒரு சராசரி மனிதர் செய்திருக்க கூடிய காரியம் பாரோவிற்கு சோசிய குறிப்புகளை துள்ளியமாக கணித்துக்கொடுத்து அரசவையில் பட்டங்களையும் மரியாதைகளையும் பெரும் பொருளையும் சம்பாதித்திருப்பது. அவர் காலத்தோடு அவர் மண்ணோடு மண்ணாகியும் போயிருப்பார். ஆனால் பெரும் பொருளுக்கு ஆசைப்படாமல் தன்னுடைய அறிவைக் காலத்தைக் கடந்தும் நிலை நிறுத்தவேண்டும் என்று நினைப்பவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் ஈமோதெப்.

(புகைப்படத்தில் இருப்பது பாரோ ஜோசரின் சிலை உலகின் முதல் பிரமிடான அவனுடைய கல்லறையில் இருக்கும் serdab என்கிற கட்டிட அமைப்பின் மூலம் வடக்கு அடிவானை பார்க்கும் காட்சி)

தான் வானில் காணும் நிகழ்வுகளை பூமியில் நிலை நிறுத்த ஒரு பிரம்மாண்டமான கட்டிட அமைப்பை கட்ட அவர் திட்டமிட்டிருக்கவேண்டும். அது வரை பூமியில் வாழ்ந்த வாழ்ந்துக்கொண்டிருக்கும் எந்த ஒரு மனிதனும் நினைத்தும் கூட பார்த்திருக்க முடியாத அந்த பிரம்மாண்ட கட்டிடத்தை கட்டத் தேவைப்படும் பொருளாதார வசதியும் மனித உழைப்பை திரட்டும் வசதியும் அவரிடம் நிச்சயம் இல்லை. அவர் காலத்தில் அவருடைய திட்டத்தை செயல்படுத்தக் கூடி சக்திப் படைத்த ஒரே நபர் பாரோ மட்டும்தான். ஈமோதெப் பாரோ ஜோசரின் அரசவையில் பணியில் இருந்தபடியே முதல் பிரமிட் திட்டத்தை உருவாக்கினாரா அல்லது இந்த திட்டமே பாரோ ஜோசர் ஈமோதெப் என்கிற அதி புத்திசாலியை அடையாளம் காண உதவியதா என்பதை அனுமானிக்க முடியவில்லை.

வரலாற்றில் வாழ்ந்த மனிதர்களின் அறியப்படாத பக்கங்களை அனுமானங்களாக வைத்துக்கொண்டு வரலாற்று புனைவுக் கதைகள் எழுதுபவர்களுக்கு ஈமோதெப்பின் வாழ்க்கையும் சாதனைகளும் மிகச் சிறந்த வேட்டைகளம். ஆங்கில வணிக எழுத்தாளர்கள் ஈமோதெப் என்கிற வாய்ப்பை தவறவிடுவார்களா என்ன! மேலைநாட்டு காமிக் புத்தகங்கள் அவரை வில்லனாக சித்தரிக்கும் வேலையில் புனை கதை (fiction) எழுத்தாளர்கள் ஈமோதெப்பை மையமாக வைத்து பல Best Seller வரலாற்று நாவல்களை எழுதியிருக்கிறார்கள்.

நிச்சயம் ஈமோதெப் பல மாதங்கள் ஏன் பல ஆண்டுகளாக கூட தன்னுடைய முதல் பிரமிட் திட்டம் குறித்து பாரோ ஜோசருக்கு விளக்கியிருக்க வேண்டும். செயல் முறையில் வானில் தான் கண்ட அற்புதங்களை பாரோவிற்கு விளக்கி சொல்லியிருக்கவேண்டும். தன்னுடைய கட்டிடம் மாய மந்திர சக்திகளை அல்ல கடைந்தெடுத்த வானியல் அறிவியலை உள்ளடக்கியது என்று புரியவைத்திருக்கவேண்டும். இதற்கு முன்னோட்டமாக அவர் Sothic Calendar என்கிற நாட்காட்டி முறையை பாரோ ஜோசருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். பொதுவாக எகிப்திய நாகரீக நாட்காட்டி தமிழர்களுடையதைப் போல சந்திரனை (Lunar Calendar) அடிப்படையாக கொண்டது. சூரிய நாட்காட்டியை (Solar Calendar) விட சந்திர நாட்காட்டி மிகத் துள்ளியமானது.

எகிப்தியர்களுக்கு மூன்றாவதாக ஒரு நாட்காட்டியும் தேவைப்பட்டது. அது நைல் நதியின் வெள்ளப் பெருக்கை கணக்கில் கொண்டு தங்களுடைய வருடப் பிறப்பை தொடங்க. ஈமோதெப் காலத்திற்கு முன்வரை இதற்கென்று ஒரு நாட்காட்டி இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் இல்லை. முதன் முதலாக ஈமோதெப்பே இதற்கென்று புதிதாக உருக்கியது Sothic Calendar. இந்த நாட்காட்டிக் குறித்த வானியல் அறிவியல் விளக்கங்களுக்குள் போக நான் விரும்பவில்லை. அது உங்களை குழுப்புவதுடன் இந்த வரலாற்றுக் கட்டுரையின் போக்கை சிதைத்துவிடும் என்பதால். ஈமோதெப்பின் Sothic Calendar மிகச் சரியாக ஒவ்வொரு 1460 வருடங்கள் கழித்தும் Lunar Calendar-வுடன் ஒன்றினையும். இந்த நாட்காட்டியை பாரோ ஜோசர் எகிப்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்திவைத்தான். இதற்குப் பிறகே எகிப்தியர்களின் வருடப் பிறப்பு என்பது இந்த நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்டது.

இந்த நாட்காட்டிக்கான ஒரு ஆய்வுக் கூடமே (observatory) ஈமோதெப் முன்வைக்கும் முதல் பிரமிட் திட்டம் என்பதை பாரோ ஜோசர் சரியாக புரிந்துக்கொண்டிருந்திருக்கவேண்டும். இந்த இடத்தில் நாம் மற்றொரு அனுமானமும் செய்யவேண்டியிருக்கிறது. ஈமோதெப்பின் திட்டத்தை தனக்கான கல்லறை கட்டிடமாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்கிற யோசனையை முன்வைத்தது பாரோ ஜோசராகத்தான் இருக்கவேண்டும். காரணம் காலம் காலமாக விண்வெளியில்தான் தங்களுடைய மறுவாழ்விற்கான பயணம் நடைப்பெறுகிறது என்பதை திடமாக நம்புபவர்கள் பாரோக்கள். பாரோ ஜோசரும் அத்தகைய நம்பிக்கைக்கு விதிவிலக்கானவன் கிடையாது. அப்படியிருக்கையில் விண்வெளியைக் கண்கானிக்கும் பூமியின் முதல் கட்டிடமே ஏன் தன்னுடைய மறுவாழ்வையும் சாத்தியப்படுத்தும் கல்லறையாகவும் இருக்க கூடாது என்று பாரோ ஜோசர் கருதியிருக்கவேண்டும்.

உலகின் முதல் பிரமிட் திட்டம் பூமியின் முதல் வானியல் ஆய்வுக் கூடமாக ஈமோதெப்பால் முன்வைக்கப்பட்டு பிற்பாடு பாரோ ஜோசரின் யோசனையின் பெயரில் அது கல்லறையாகவும் மாற்றப்பட்டிருக்கவேண்டும் என்பதற்கான திடமான ஆதாரம் இந்த பிரமிடின் வளாகத்திலேயே இருக்கிறது.

அடுத்த தொடரிலும்.....

பாகம் 27

கீழ் வானில் அதிகாலை நேரத்தில் தோன்றும் Sirius (விடிவெள்ளி?) நட்சத்திரத்தின் விண்வெளி இயக்கத்தை மிகத் துள்ளியமாகப் பிரதிபலிப்பதே ஈமோதெப் திட்டமிட்ட பிரமிடின் வடிவமைப்பு. இந்த அம்சமே பாரோ ஜோசரை கவர்ந்திருக்கவேண்டும். இறந்தப் பிறகு தங்களுடைய ஆன்மாவனது கிழ் திசையில் அதிகாலையில் உதிக்கும் சூரியனோடு சேர்ந்துகொண்டு பகல் முழுவதும் விண்வெளியில் பயணம் செய்து மேற்கில் சூரியன் மறையும் தருணத்தில் அதை விட்டு விலகி மீண்டும் தங்களுடைய கல்லறைக்கு திரும்பிவிடும் என்பது பாரோக்களின் நம்பிக்கை. கல்லறையிலிருந்து அவர்களுடைய ஆன்மாவை சூரியனிடம் அழைத்துச் சென்று விட்டுவிட்டு மாலையில் மீண்டும் அந்த ஆன்மாவை கல்லறைக்கு அழைத்து வருவது மனித உடலில் கழுகுத் தலை (falcon headed Horus God) கொண்ட ஓரஸ் கடவுள்.

அதிகாலையில் அவர்களுடைய ஆன்மாவை சூரியனிடம் கொண்டுபோய் சேர்க்க ஓரசுக்கு வழிகாட்டுவது Sirius நட்சத்திரம் என்பதும் பாரோக்கள் காலம் காலமாக நம்பிவரும் விசயங்களில் ஒன்று. கடவுள் ஓரசுக்கே வழிகாட்டும் ஒரு நட்சத்திரத்தின் விண்வெளி இயக்கத்தை பிரதிபலிக்க பூமியில் ஒரு பிரமாண்ட கட்டிடம் என்றால் பாரோக்களுக்கு கசக்குமா என்ன. பாரோ ஜோசருக்கும் கசக்கவில்லை. பூமியின் முதல் வானியல் ஆய்வுக் கட்டிடத்தை பாரோ தனக்கான கல்லறையாகவும் மாற்றியமைக்கும் படி சொன்னபோது ஈமோதெப் எத்தகைய உணர்வுகளை கடந்திருப்பார் என்பது சுவாரசிய அனுமானங்களை வஞ்சனையில்லாமல் வழங்க கூடியவைகள்.

ஈமோதெப் தன்னுடைய வானியல் கட்டிடத்தின் தோற்றத்தை முதலிலேயே பிரமிட் வடிவமைப்பில் வடிவமைத்தாரா அல்லது பாரோவின் வேண்டுகோளுக்குப் பிறகு சில தேவையான மாற்றங்களை செய்து இப்பொழுதிருக்கும் பிரமிடுகளின் முக்கோண வடிவைக் கொண்டுவந்தாரா என்பதை சொல்வதற்கும் இதுவரையில் எத்தகைய எழுத்து ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இன்றைக்கு பிரமிடின் முக்கோண வடிவமைப்பே மந்திர தந்திர சக்திகளின் உறைவிடம் என்று அறிவியலைத் தாண்டி ஒரு கருத்து ஓடிக்கொண்டிருக்கிறது. பிரமிடின் மினியேச்சர் வடிவங்களை செய்து அதை வீடுகளில் வைத்தால் சக்தி சகட்டுமேனிக்க சதிராடும் என்று ஒரு தொழில் நடந்துக்கொண்டிருக்கிறது.

இது ஆராய்ச்சியாளர்களின் காதுகளையும் எட்ட இன்றைய நவீன டிஜிட்டல் கருவிகளைக் கொண்டு பிரமிடுகளின் உள்ளே வெளியே பக்கவாட்டுப் பகுதிகள் உச்சி என்று பல நிலைகளில் ஆராய்ந்துப் பார்த்தார்கள். சொல்லிவைத்தார் போல அனைத்து நவீன கருவிகளும் தாறுமாறான கிறுக்கல் கோடுகளில் உலறிக் கொட்டிவைத்ததுதான் மிச்சம். அந்த கருவிகளால் பிரமிடுகளை நிதானிக்கவே முடியவில்லை. இதன் காரணம் இன்னமும் விளங்கவில்லை. அப்படின்னா பிரமிடுகளுக்கு உண்மையிலேயே அமானுசிய சக்திகள் இருக்கிறதா என்று நீங்கள் கேட்டால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று சொல்வேன். எனக்கு நம்பிக்கை இல்லையென்பதாலேயே அதற்கு அமானுசிய சக்திகள் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஒன்று நிச்சயம் பிரமிடுகள் நாம் இன்றைய நவீன அறிவியலின் துணைக்கொண்டு அறிந்துக்கொள்ள முடியாத அல்லது இதுவரை அறிந்துக்கொள்ளாத ஒரு விண்வெளி இயங்குப் புதிரை தனக்குள் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இதை சாத்தியப் படுத்தியது ஈமோதெப்பின் பிரமிட் வடிவமைப்பு. இன்றைய அறிவியலின் வளர்ச்சிகளைக் கொண்டு ஈமோதெப்பின் முதல் பிரமிடுக் குறித்து நாம் அறிந்துக்கொண்டவைகள் அது Big Dipper என்று அழைக்கப்படும் நட்சத்திர கூட்டங்களின் (வடக்கு வானில் இந்த நட்சத்திரக் கூட்டம் ஒன்று சேர்ந்து எருதின் தொடை உருவத்தை உண்டாக்கும்) துணைக் கொண்டு Sirius நட்சத்திரத்தின் விண்வெளி இயக்கத்தையும் Sothic Cycle-யும் கணிக்க பயன்படக் கூடியதாக இருந்திருக்கிறது என்பது. (Sothic Cycle என்பது பூமியின் வட துருவ அச்சு பயணத்தை கணிக்க கூடியது. பூமியானது விண்வெளியில் தன்னைத் தான் சுற்றிக்கொள்ளும் போது ஒரே இடத்தில் ஆணியடித்ததைப் போல நின்றுக்கொண்டு சுற்றாது. பூமித் தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருக்கும்போது அதனுடைய வட துருவப் பகுதி ஒரு வட்டத்தை உண்டாக்கும் (north celestial pole precession). அந்த வட்டத்தின் தொடக்க புள்ளிக்கு மீண்டும் வந்து சேர பூமிக்கு 26000 ஆண்டுகள் பிடிக்கும். இன்றைய வானியல் இதற்கு 28000 ஆண்டுகள் பிடிக்கும் என்கிறது.)

ஈமோதெப் Sothic Cycle-யை அடிப்படையாக கொண்ட நாட்காட்டியை எகிப்தில் அறிமுகப்படுத்தியதோடு நிற்காமல் அதை பிரமிடாகவும் கட்டிவிட்டார். ஈமோதெப் Sothic Cycle 26000 ஆண்டுகளுக்கு ஒரு முறை முடிவடையும் என்று கணித்தார். பூமி அதுவரைக் கண்டிராத மிகப் பெரிய கல் கட்டிடம் பாரோ ஜோசரின் Step Pyramid. ஆறு அடுக்குத் தளங்களைக் கொண்டது. இன்றைய அளவில் சொல்வதென்றால் 20 மாடி கட்டிடம் ஒன்றின் உயரம் கொண்டது. இதை அவர் கட்டி முடித்தப் பிறகு பாரோ மட்டுமல்ல எகிப்திர்கு வந்துப் போய் கொண்டிருந்த மற்ற நாகரீகத்தின் வணிகர்கள் கூட பிரமித்துப் போயிருப்பார்கள். பாரோ ஜோசர் ஈமோதெப்பின் அறிவின் மீது நம்பிக்கை வைத்து தன்னுடைய அரசமைப்பையே மாற்றியது எந்த வகையிலும் தவறான செயல் இல்லை என்று உச்சிக் குளிர்ந்திருப்பார். உலகம் அதுவரைக் கண்டும் கேட்டுமிராத ஒரு கல் கட்டிடம், விண்வெளிக்கு ஏறிச் செல்லும் படிகள் போன்று விண்ணை முட்டிக்கொண்டிருந்த ஒரு கட்டிடம் தன்னுடைய மறுவாழ்விற்கான பயணத்திற்கு தயாராகி நிற்பதை பாரோ ஜோசர் எத்தகைய பெருமிதத்துடன் எதிர் கொண்டிருப்பான் என்பதை வார்த்தைகளில் விவரிக்காமல் அவனுடைய உணர்ச்சிகள் பொங்கிய முகத்தை கற்பனை செய்துப் பார்த்துக்கொள்வது இன்னும் மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.

இந்த பிரமிட் 37 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட பாலைவனப் பகுதியின் மையத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உள்ளே இருக்கும் அறைகளை (chambers) இணைக்கும் பாதையின் நீளமே சுமார் 6 கிலோ மீட்டர்கள் நீளம். இது மொத்தம் 11.6 மில்லியன் கியுபிக் அடிகள் கொண்ட கற்களைக்கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்த பிரமிட் அடங்கியிருந்த 37 ஏக்கர் நிளமும் பெரிய சுற்றுச் சுவரால் சூற்றிவளைக்கப்பட்டிருந்தது. பிரமிடின் தென் கிழக்குப் பக்கத்தில் பல கல்லறைக் கோயில்கள் கட்டப்பட்டிருந்தது. பிரமிடிற்குள் இருக்கும் பாரோவின் கல்லறை அறைக்கு செல்ல குகைப்போன்ற பாதை இருக்கிறது. இந்த பாதை மேலும் பல அறைகளை ஒன்றினைக்கிறது. இந்த அமைப்பு பிரமிடிற்குள் புதிதாக நுழையும் ஒருவரைத் தலைச் சுற்ற விட்டுவிடும். இன்றைக்கும் இதற்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்களை வழிநடத்திச் செல்லும் வழிகாட்டியை தவறவிட்டுவிட்டால் கதை முடிந்தது. பாரோ ஜோசரின் ஆன்மாவோடு ஒன்றாக ஐக்கியமாகிவிடவேண்டியதுதான்.

அடுத்த தொடரிலும்......

பாகம் 28

இதற்குள் இரண்டு பிரதான பாதைகள் இருக்கிறது. இந்த பாதைகள் பூமியின் கீழ்மட்டத்திற்கும் ஒருவரை அழைத்துச் செல்லும் இவைகள் இரண்டுமே ஒரிடத்தில் சந்தித்துக்கொண்டு மேலும் மூன்று பாதைகளாக பிரியும். இந்த மூன்றுப் பாதைகளும் பல்வேறு அறைகளுக்கு ஒருவரை அழைத்துச் செல்லும். அறைகள் எல்லாமே அரண்மனை அறைகள் போன்ற தோற்றத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. இந்த அறைகளில் ஒன்றில் பாரோவிற்கு தேவையான உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கிறது. மற்றொன்றில் பாரோ ஜோசரின் சிலை உருவம் சடங்குகளை செய்வதைப் போல வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. கிழக்கு பக்கத்திலிருக்கும் ஒரு அறையில் கல்லால் செய்யப்பட்ட 40,000 பாத்திர பண்டங்கள் வைக்கப்பட்டருக்கின்றன. இவைகள் பாரோ ஜோசரின் மூதாதையர்களுடையதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஒரு அறையில் சில சவப்பெட்டிகளும் (sarcophagus) அதில் மனித எலும்புக் கூடுகளும் இருந்திருக்கின்றன. இந்த எலும்புக் கூடுகள் மம்மி தொழில் நுட்பம் வராத காலத்தில் இறந்துப்போன முதல் பாரோ நார்மரின் மூதாதையர்களுடையதாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் இதற்குள் நூற்றுக் கணக்கில் false chambers இருக்கின்றன. அதாவது பாரோ ஜோசரின் சவப் பெட்டி (sarcophagus) வைக்கப்பட்டிருக்கும் அறைப் போன்றே இருக்கும் அறைகளை false chambers என்கிறார்கள். இந்த அறைகளை ஒரு குழப்ப வடிவில் இணைப்பவைகள்தான் குகைப் போன்ற பாதை அமைப்பு. ஈமோதெப் போன்ற ஒரு உன்னத கட்டிட வல்லுனர் ஜாங்கிரியை பிழிந்துவிட்டக் கதையாக பல அறைகளைக் கட்டி அவைகளை ஏன் ஒரு குழப்ப வடிவில் இணைத்திருக்கவேண்டும்? எல்லாம் திருவாளர்கள் கல்லறை திருடர்களிடமிருந்து (tomb robbers) பாரோ ஜோசரின் கல்லறை சொத்துக்களை காப்பாற்றத்தான். பிரமிடிற்குள் நுழையும் கல்லறைத் திருடர்கள் எது பாரோ ஜோசரின் சவப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் அறை என்று எளிதாக கண்டுபிடிக்கவிடாமல் பல நாட்களுக்கு சுத்த விடுவதற்குத்தான் இந்த ஏற்பாடு.

(புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது பிரமிடிற்குள் வழித் தெறியாமல் சிக்கிக் கொள்ளும் கல்லறைக் கொள்ளையர்களின் உடல்கள் எப்படி சிதறிக்கிடக்கும் என்பதை ஆட்களை வைத்து விளக்கப்படமாக எடுத்தது)

இன்றைய பிரமிட் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் ஒரு விசயம் பிரமிடிற்குள் ஒரு மனிதர் தொடர்ந்தார் போல ஆறு நாட்கள் இருந்தாரேயானால் ஒன்று அவர் இறக்க நேரிடும் அல்லது மூலைக் குழம்ப நேரிடம் என்கிறார்கள். இதற்கான காரணம் பிராண வாயு போதாமையா அல்லது வேறு ஏதும் காரணமா என்பதை அறியமுடியவில்லை. காரணம் பிரமிடிற்குள் ஒரு மனிதன் சுவாசித்து உயிர் வாழக் கூடிய அளவிற்கு பிராணவாயு ஓட்டம் இருக்கும். பிரமிடிற்குள் நுழையும் கல்லறை திருடர்கள் பாரோ ஜோசரின் சவப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் உண்மையான அறையை கண்டுபிடிக்க முடியாமல் நாட்கணக்கில் சுற்றி மேலேப் போய் சேருவதற்குத்தான் இந்த ஏற்பாடு. பதினெட்டாம் நூற்றாண்டில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் பிரமிடுகளைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தபோது அவர்களை வரவேற்ற முதல் விசயமே பாரோவின் உண்மையான சவபெட்டி அறையை கண்டுபிடிக்க முடியாமலும் நாட்கணக்கில் பிரமிடைவிட்டு வெளியே வராமலும் அதற்குள்ளேயே சுற்றி இறந்துப்போய் கிடந்த கல்லறை கொள்ளையர்களின் உடல்களைத்தான்.

திருடுவதற்காக பிரமிடிற்குள் நுழைபவர்களில் பாதிப்பேர் உயிருடன் திரும்பி வராது போனதே பிரமிடுகளின் சாபம் குறித்த கட்டுக் கடங்காத கதைகள் உருவாக காரணமாகிப் போனது. பிரமிடுகளுக்குள் பாரோக்களின் ஆன்மாக்கள் உட்கார்ந்துக்கொண்டு உள்ளே வருபவர்களுக்கு பேய் பயம் காட்டி கொன்று போடுகின்றன என்கிற உலகின் படு சுவாரசியமான பேய் கதைகள் கடந்த 4500 வருடங்களாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றன. கல்லறை கொள்ளையர்களுக்கு வயிற்றில் பீதியைக் கறைத்த இந்த கதைகளே அவர்களுக்கு தொழில் போட்டிகளையும் குறைத்திருக்கிறது. உயிருக்கு அஞ்சாத கல்லறைக் கொள்ளையர்களே பிரமிடுகளுக்குள் புகுந்து பாரோக்களின் தங்கத்தை அள்ளிக்கொண்டுப் போயிருக்கிறார்கள். எமகாதகர்கள். பல பிரமிடுகளுக்குள் புகுந்த திருடி அனுபவப்பட்ட பல கல்லறைத் திருடர்கள் தங்களின் தொழில் இரகசியங்களை தங்களின் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்து கல்லறை கொள்ளைத் தொழிலை தலைமுறை தலைமுறையாக வளர்த்து எடுத்திருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய திறமை எப்பேர்ப்பட்டது என்றுப் பார்த்துக்கொள்ளுங்கள். ஈமோதெப் தொடங்கி அவருக்கு பின் வந்த பல பிரமிட் கட்டிட வல்லுனர்களின் முதல் சவாலே இந்த கல்லறைக் கொள்ளையர்கள்தான். ஆனால் எகிப்தின் பல சுவாரசியங்களைப் போல கட்டிட வல்லுனர்களுக்கும் கல்லறை கொள்ளையர்களுக்கும் இடையே நடந்த நீயா நானா போட்டியில் பல தலைமுறைகளுக்கு வெற்றிப் பெற்றவர்கள் கல்லறைக் கொள்ளையர்களே.

உலகின் முதல் பிரமிடே உலகின் முதல் விண்வெளி ஆய்வு மையம் என்பதற்கு வலுவான வரலாற்று ஆதாரம் பிரமிடின் வடக்கு திசையில் இருக்கிறது. வடக்குப் பக்கத்தில் இருக்கும் கல்லறை கோயில்களுக்கு அடுத்து இருப்பது Serdab Court கட்டிடம். இதில் தனியாக துருத்திக்கொண்டு ஒரு சுவர் இருக்கிறது அதில் இரண்டு துலைகள் இருக்கிறது. இதற்கு பின்னால் பாரோ ஜோசரின் சிலை இருக்கிறது. அதன் இரண்டு கண்களிலிருந்து தொடங்கி இரண்டு நீள் கோடுகளை அதற்கு முன்னால் இருக்கும் இரண்டு துளைகளின் வழியாக வடக்கு வானம் வரைக்கும் இழுத்தால் அந்த கோடு வானில் முடியும் இடம் Big Dipper நட்சத்திரக் கூட்டத்தில் ஒன்றாக இருக்கும் Alkaid நட்சத்திரத்தில்.

Alkaid நட்சித்திரம் வடக்கு வானில் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சுற்றி வந்து நிற்கும் இடத்தைத்தான் அந்த இரண்டு துலைகள் வழியாக பாரோ ஜோசரின் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கிறது 4600 வருடங்களைக் கடந்து இன்றும் இந்த நொடியும். இந்த Alkaid நட்சத்திரத்தின் பயணமே ஈமோதெப் Sothic Cycle-களை நிதானிக்க உதவியிருக்கவேண்டும் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஈமோதெப்பின் முதல் பிரமிடிற்குப் பிறகு எகிப்தில் கட்டப்பட்ட அனைத்து பிரமிடுகளும் வானியலை அடிப்படையாக கொண்டவைகளே. இதன் உச்சம் ஈமோதெப் காலத்திற்கு பிறகு 100 வருடங்கள் கழுத்துக் கட்டப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் பாரோ Khufu-வின் Great Pyramid at Giza.

ஈமோதெப் காலத்திற்கு பிறகு பிரமாண்ட கட்டிடக் கலை என்பது எகிப்தின் பிரிக்க முடியாத அங்கமாகிப்போய்விட்டது. ஈமோதெப் கிளப்பிவிட்ட பிரமாண்டம் என்கிறத் தீ பத்தொன்பதாம் வம்சாவளி காலம் வரைக்கும் கொழுந்துவிட்டு எறிந்திருக்கிறது. அதாவது ஈமோதெப் காலத்திற்கு அடுத்து சுமார் 2500 வருடங்கள் கழித்தும். அப்படியென்றால் எப்படிப்பட்ட தாக்கத்தை ஈமோதெப்பின் முதல் பிரமிட் எகிப்திய பாரோக்களின் மனதில் உண்டாக்கியிருக்கும் என்றுப் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கு உங்களுக்கு ஒரு உதாரணப் புருசர் போன்ற பாரோ ஒருவனைத் தெரிந்துக்கொள்ள வேண்டுமா அப்படியென்றால் அப்படி சிறிது நேரம் உட்காருங்கள். சூரியன் The Land of the Dead-ல் மறைந்துக்கொண்டிருக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் பாலவைவனத்தின் குளிர் காற்று நம்மை சந்திக்க வந்துவிடும். பாலைவன குளிருக்கு கதகதப்பாக இருக்க உங்களுக்காக கொஞ்சம் சுள்ளிகளைப் பொறுக்கி வந்து நெருப்பு மூட்டுகிறேன். பிறகு ஆளுக்கொரு கோப்பை சூடாக தேநீர் அருந்திக்கொண்டே அந்த பாரோவைக் குறித்த தெரிந்துக்கொள்ளலாம்.

அடுத்த தொடரிலும்......

பாகம் 29

தேநீர் குடித்தப் கோப்பையை அப்படி வைத்துவிட்டு இந்த ரொட்டியையும் வெண்ணெய் தடவிய வாத்துக் கறியையும் ஆளுக்கு ஒன்றாக கையில் எடுத்துக்கொள்ளுங்கள். இப்ப எதுக்கு ரொட்டியும் வாத்துக் கறியும்னு யோசிக்கறீங்களா? இன்றையிலிருந்து 4500 வருடங்களுக்கு முன்பு நாம் உட்கார்ந்து குளிர்காய்ந்துக்கொண்டிருக்கும் இந்த மண்ணில் நடமாடிய பாரோக்களின் விருப்ப உணவு இவைகள். இன்னும் ஆடு, மாடு, கருவாடு (பாரோக்களும், அரச குடும்பத்தினரும், பிரபு குடும்பத்தினரும் நைல் நதி மீனை சாப்பிடமாட்டார்கள் ஆனால் அதை உலர்த்தி காயவைத்த கருவாடாகத்தான் சாப்பிட்டிருக்கிறார்கள் காரணம் தெரியவில்லை) காய்கறிகளில் பட்டாணி, பூண்டு, வெங்காயம், வெள்ளரி பழங்களில் திராட்சை, தர்பூசணி, பேரிச்சை என்று சாப்பிட்டிருக்கிறார்கள். இவைகள் பாரோ மற்றும் எகிப்திய குடிமக்கள் என்று அனைவருக்கும் பொதுவான உணவு வகைகள்.

எகிப்தில் மூலிகை வகையிலான கீரை வகைகள் கிடையாது. இவைகளை எகிப்தியர்கள் The Land of Punt என்கிற நாட்டிலிருந்தே இறக்குமதி செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள். The Land of Punt என்பது எந்த நாடாக இருந்திருக்கும் என்பதை இன்றைக்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை. Punt என்பது நிச்சயமாக திராவிட மொழி உச்சரிப்பைத் தருகின்றது என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய வரலாற்றுத் துறை இதைக் குறித்து ஆராய்ச்சி செய்யலாம். (அப்படி கனவு வேண்டுமானால் காணலாம். நாமும் எகிப்திய நாகரீகத்திற்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பை பார்த்துக்கொண்டேதான் வருகிறோம் ஆனால் இதை விட உங்களை அதிரவிடும் ஒரு தொடர்பும் இனி வர இருக்கிறது.)

பாரோக்களும் சாதாரண எகிப்திய குடிகளும் ஒன்றுப் போல கோதுமையிலிருந்து தயாரிக்கப்பட்ட கள்ளை (beer) நாம் தேநீர் அருந்துவதைப் போல அருந்தியிருக்கிறார்கள். இது போதை வஸ்துவல்ல என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. ஏனென்றால் சமூகத்தில் ஆண் பெண் என்று இரு தரப்பும் இந்த கோதுமைக் கள்ளை குடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் அதைத் தராமல் ஏன் எங்களுக்கு தேநீரை குடுத்தியாம் என்று கேட்காதீர்கள். (இந்த கட்டுரைக்கு கீழே ஸ்கிரோலிங்கில் மது புகை நாட்டிற்கும் வீட்டிற்கும் கெடு என்று பொது நல விளம்பரம் இருக்கிறது பாருங்கள்!)

சரி கொஞ்சம் நெருக்கதில் வந்து உட்கார்ந்துக்கொள்ளுங்கள் அப்பொழுதுதான் நெருப்பின் கத கதப்பு மேலும் உங்கள் உடலில் இதமாக பரவும். அப்படியே கொஞ்சம் தலையை நிமிர்த்தி நாம் உட்கார்ந்துக்கொண்டிருக்கும் பாலைவனம் போல நம் தலைக்கு மேல் பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளியைப் பாருங்கள். போதும் இனி அந்த பாரோவைக் குறித்த வரலாற்றை உங்களுக்கு சொல்லப் போகிறேன். பாரோ துத்தன்காமூனை உங்களுக்குத் தெரியும்தானே ஆம் அகநேத்தனுடைய மகனேதான். மிக சிறுவயதிலேயே பாரோவாகி தன்னுடைய பத்தொன்பது வயதிலேயே மர்மமாக இறந்துப் போனானே அவனேத்தான்.

துத்தன்காமூன் பாரோவாக முடிசூட்டிக்கொண்டபோது அவன் ஒன்பது வயதே ஆன சிறுவன் என்பதால் அவன் பெயருக்கு மட்டுமே பாரோ. எகிப்தின் முழு ஆட்சி அதிகாரமும் Horemheb என்கிற இராணுவத் தளபதியிடமே இருந்தது. துத்தன்காமூன் இள வயதை அடைந்தும் கூட ஆட்சி அதிகாரம் Horemheb இடம்தானிருந்தது. இவன் இராணுவத் தளபதி என்பதால் அரசு அமைப்பில் அனைத்து பதவிகளிலும் தனக்கு நம்பிக்கையான சக இராணுவத் தளபதிகளையே நியமித்து பாரோ ஆட்சியை ஒரு இராணுவத்தின் ஆட்சிப்போல மாற்றியமைத்துக்கொண்டான். இதற்கு காரணம் எகிப்தின் அடுத்தப் பாரோவாக தான் வரவேண்டும் என்கிற இரகசிய ஆசையும் இவனுக்கு இருந்ததுதான். துத்தன்காமூன் இளைஞனாகி வருவது இவனுடைய ஆசையில் மண்ணை அள்ளிப்போடும் விசயம் என்பதால் துத்தன்காமூனுடைய மரணத்தில் இவனுடைய சூழ்ச்சிக்கும் பங்கு இருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் துத்தன்காமூன் அரண்மனையில் இறந்த சமயத்தில் Horemheb இருந்தது சிரியா நாட்டின் எல்லைப் பகுதியில். அங்கே எகிப்தின் பரம்பரை எதிரிகளான Hittite-களின் தூண்டுதலில் எகிப்திற்கு எதிராக கிளர்ச்சி செய்துக்கொண்டிருந்த கலககாரர்களை அடக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தான். தன் மீது துத்தன்காமூனுடைய கொலைப் பழி விழுந்துவிடாமலிருக்க தான் எகிப்திற்கு வெளியே இருக்கும் சமயத்தில் தன்னுடைய ஆதரவாளர்களின் மூலம் அரண்மனையில் சூழ்ச்சி செய்து அவன் துத்தன்காமூனைக் கொன்று இருக்கவேண்டும். காரணம் துத்தன்காமூன் கொலை செய்யப்பட்டவுடன் அவனுடைய இளவயது மனைவி அனக்சினமூன் (Ankhesenamun) பாரோக்களின் படு பயங்கரமான எதிரிகளான Hittite-களிடமே உதவிக் கேட்டு தூதர்களை அனுப்பியிருக்கிறார்கள்.

பாரோக்களின் வம்சத்தில் வராதா Horemheb-ன் சூழ்ச்சியை முறியடிக்கவே அவள் இந்த காரியத்தை பார்த்திருக்கவேண்டும். தான் Hittite அரசனின் மகன்களில் ஒருவனை திருமணம் செய்துக்கொண்டு அவனை அடுத்தப் பாரோவாக முடிசூட்டி பாரோவின் வம்சத்தை நிலை நிறுத்துவதும் அதே நேரத்தில் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்துவரும் Hittite பாரோ மோதலை முடிவிற்கு கொண்டுவரவும் இதன் மூலம் Horemheb-யின் பாரோ கனவில் இடியை இறக்குவதும் அவளுடைய இராச தந்திரமாக இருந்திருக்கவேண்டும்.

இந்த திட்டம் அன்றைய Hittite அரசனுக்கும் பிடித்துப்போக தன்னுடைய மகன்களில் ஒருவனான Zannanza என்பவனை எகிப்திற்கு அனுப்பிவைத்தான். அவன் அனுப்பி வைத்ததோடு சரி மீண்டும் அவன் தன்னுடைய மகனை உயிருடன் பார்க்கவேயில்லை. Zannanza எகிப்தை அடைவதற்கு முன்பே Horemheb-ஆல் தீர்த்துக்கட்டப்பட்டுவிட்டான். இறுதியில் பலித்தது Horemheb-யின் பாரோ கனவுதான். பதினெட்டாவது வம்சத்தின் இறுதிப் பாரோவாக Horemheb தன்னை அறிவித்துக்கொண்டான்.

இவனுடைய ஆட்சியில் எகிப்திய நாகரீகம் முழுக்க முழுக்க இராணுவ மயமானது. எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம்தான். எகிப்தின் பாரோனிக் பாரம்பரியத்திற்கு முடிவுக்கட்டிவிட்டு எகிப்தில் இராணுவப் பாரம்பரியத்தை தொடங்கிவைத்தான். இவ்வளவு சிரமப்பட்டு இராணுவ சூழ்ச்சி செய்து பாரோவான Horemheb தனக்கு பிறகு எகிப்தை ஆள ஒரு வாரிசை உருவாக்கும் தந்தையாகாமல் போனான். ஆட்சியை சூழ்ச்சி செய்து பிடித்துவிடலாம் ஆனால் தன்னுடைய இரத்தத்தில் வர வேண்டிய வாரிசை சூழ்ச்சி செய்துப் பெற முடியாது அல்லவா. அதுதான் அவனுக்கும் நடந்தது. தான் உருவாக்கிய இராணுவமயமான எகிப்தை துத்தன்காமூனுடைய உறுவினர்களிடம் ஒப்படைக்க அவனுக்கு விருப்பம் இல்லை. அதற்கு பதிலாக தன்னுடைய குண நலன் வார்பிலிருக்கும் ஒருவனை நம்பிக்கைகுரிய தளபதிகளின் கூட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்து எகிப்தின் அடுத்தப் பாரோவாக அறிவித்தான்.

Horemheb அறிவித்த அந்த அடுத்தப் பாரோவின் பெயர் பரமேசு (Paramessu). என்ன நண்பர்களே அட்சர சுத்தமாக தமிழ்ப் பெயர் போலவே இருக்கிறதா.

அடுத்த தொடரிலும்......

 

பாகம் 30

பரமேசு என்கிறப் பெயரில் இருக்கும் தமிழ் ஒலியிலை அடையாளம் காண்பது நிச்சயமாக ஒரு rocket science கிடையாதுதான் ஆனால் நடைப் பிணமாகிவிட்ட தமிழர்களின் வரலாற்று உணர்வு rocket science-தான் கண்டதா, பரமேசு என்கிற எகிப்திய பாரோவைத்தான் கண்டதா! இதைக் குறித்தெல்லாம் ஆதங்கப்பட்டும் ஒரு பிரையோசனமும் கிடையாது. நம்முடைய வரலாற்று உணர்வு என்பது நடை பிணத்திலும் செவிட்டு நடைப்பிணம். அந்த செவிட்டு நடைப்பிணத்தின் காதில் எகிப்திய பாரோக்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் வரலாற்றுத் தொடர்பை ஊதினால் என்ன ஊதாமல் போனால்தான் என்ன!

பரமேசு, பாரோ Horemheb-யின் பிரதி. ஆனால் ஒரு விசயத்தில் பரமேசுக்கும் Horemheb-க்கும் வித்தியாசம் இருந்தது. அது இவனுக்கு ஆண் வாரிசு இருந்தது. பத்தொன்பதாம் வம்சத்தின் முதல் பாரோவாக பரமேசு முடி சூட்டிக்கொண்டதும் தன்னுடையப் பெயரை ரமேசு (Ramessu beloved of Amun) என்று மாற்றிக்கொண்டான். அதுவேப் பிற்பாடு ராமேசிஸ் (Ramesses - I) என்றானது. இன்றைக்கும் நம்மூரில் பரமேசு, ரமேசு என்கிறப் பெயர்களுக்கு பஞ்சமேக் கிடையாது. ஆனால் வரலாற்று ஆராய்ச்சிக்களுக்குத்தான் பஞ்சம்.

ராமேசிஸ் பாரோவாக பதவியேற்றுக்கொண்டபோதே 60 வயதுகளைக் கடந்துவிட்டிருந்தான். தன்னுடைய நிலையை கருத்தில் கொண்டே பாரோவானக் கையோடு தன்னுடைய மகன் செட்டியை (Seti - I) தனக்குப் பிறகான பாரோவாக அறிவித்துவிட்டான். எதிர்பார்த்ததுப்போலவே ராமேசிஸ் பாரோவான பதினெட்டு மாதங்கள் கழித்து மம்மியாகிவிட்டான். செட்டி (இந்த பெயரும் தமிழ் ஒலியமைப்பை கொண்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வாய்பில்லை. இன்றைக்கு இந்த தமிழ் வார்த்தை ஒரு சமூகத்தை குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது ஆனால் இந்த வார்த்தையின் வேர் சொல் ஆராய்ச்சி இந்த வார்த்தை வேறு பொருளை குறிக்கப் பயன்பட்டிருக்கலாம் என்பதை தெளிவுப்படுத்தும்) அடுத்தப் பாரோவானான். இது நடந்தது கி.மு. 1290-ல்.

பாரோ செட்டியும் அவனுடையத் தந்தையைப் போலவே மிகச் சிறந்த இராணுவ வீரன். இவனுடைய காலத்திலும் பாரோ ஆட்சி இராணுவமயம்தான் என்றாலும் கட்டிடக் கலையில் பிரம்மாண்டம் என்கிற பாரோனிக் பரம்பரையை இவன் மீட்டு எடுத்தான். கட்டிடக் கலைஞர்களும், ஓவியக் கலைஞர்களும், கல் குவாரி தொழிலாளர்களும் இவனுடைய காலத்தில் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டார்கள். பாரோ செட்டி மற்றொரு சிறப்பான காரியத்தையும் செய்தான். சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு பாரோ Hotepsekhemwy காலத்தில் கைவிடப்பட்ட பழம்பெறுமை மிக்க Abdju நகரத்தின் பழம்பெறுமைக்கு மீண்டும் உயிர்கொடுத்தான் பாரோ செட்டி.

(புகைப்படத்தில் இருப்பது மலைப் பாறையை ஆழமாக குடைந்து உருவாக்கப்பட்ட பாரோ செட்டியின் கல்லறை)

எகிப்தின் கண் கண்ட தெய்வங்களான Horus, Isis, Osiris, Amun-Ra, Ra-Horakhty, Ptah, Nefertem மற்றும் Ptah-Sokar ஆகியவைகளுக்கு Abdju நகரில் மிக பிரம்மாண்டமான கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கோயிலின் வளாகத்தில் தன்னுடைய கோயிலையும் கட்டிக்கொண்டான். இந்த கோயிலில் தன்னுடைய மகன் ராமேசிஸ் II (Ramesses – II) பழங்கால பாரோக்களின் பெயர்களை ஒரு பப்பைரஸ் சுருளைப் பார்த்து படிப்பதுப் போன்ற சிலை ஒன்றையும் செதுக்கிவைத்தான். ராமேசிஸ் II சிலையின் கையில் இருக்கும் சுருளில் செட்டிக்கு முற்பட்ட 67 பாரோக்களின் பெயர்களும் செதுக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் படிக்க முடியும். முதல் பாரோ நார்மர் தொடங்கி பாரோ செட்டியின் பெயர் வரைக்கும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் சில விடுபடல்களுடன். அந்த பெயர் பட்டியலில் Hyksos பரம்பரை அரசர்களின் பெயர்களும், பாரோ Hatshepsut மற்றும் பாரோ Akhenaten பெயர்களும் மிக கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பெயர் விடுபடல்களே இவர்கள் எகிப்திய நாகரீகத்தில் எத்தகைய பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதற்கு ஒரு உதாரணம். இவர்களுடையப் பெயர்களை தங்களுடைய பட்டியலில் குறிப்பிடுவது தங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பின்னால் வந்த பாரோக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

Abdju நகர் பாரோ செட்டியின் மத புனித யாத்திரை நகரமாகவே மாறிபோய்விட்டது. இந்த நகரில் தான் கட்டிய கோயிலுக்கு மானியமாக ஏக்கர் கணக்கில் நிலங்களை எழுதிக்கொடுத்திருக்கிறான். இந்த நிலங்கள் பெரும்பாலும் அவன் வென்று அடக்கிய நுபிய (Nubia) நாட்டைச் சேர்ந்தது. இந்த நிலத்தின் மூலம் பெறப்படும் உற்பத்திப் பொருட்களை படகுகளின் மூலம் இந்த கோயிலுக்கு கொண்டு வந்து குமிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறான். பாரோவின் கோயில் என்றால் அதில் தங்கமில்லாமலா? கோயிலுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை வருடா வருடம் வழங்குவதற்காக எகிப்தின் தூர கிழக்கு பாலைவனப் பகுதியில் புதிதாக ஒரு தங்க சுரங்கத்தை உருவாக்கினான். இந்த தங்கச் சுரங்கத்தை அவனே நேரில் சென்று ஆய்வுச் செய்ததாக அவனுடைய அரசவை எழுத்தர் பதிவு செய்திருக்கிறார்.

இன்றையிலிருந்து 3200 வருடங்களுக்கு முன்பு எழுத்தப்பட்ட அந்த குறிப்பு ஆங்கில வடிவில் கீழே
“His Majesty surveyed the hill country as far as the mountains, for his heart wished to see the mines from which the fine gold is brought. After His Majesty had walked uphill for many miles, he halted by the wayside to mull things over.”
இந்த கோயில் மாத்திரம் இல்லாமல் தீப்சில் இருக்கும் The Valley of the Kings-ல் தன்னுடைய கல்லறையையும் மிக பிரம்மாண்டமாக செதுக்கிக்கொண்டான். (இவன் காலத்திற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் பிரமிடுகள் கட்டப்படுவது கைவிடப்பட்டுவிட்டது). தீப்சின் மலைப் பாறையில் மீக ஆழமாகவும் நீளமாகவும் செதுக்கப்பட்ட ஒரே கல்லறை இவனுடையதுதான். இந்த கல்லறையின் சுவர்களில் ஒரு இன்ஞ் கூட விட்டுவைக்காமல் கண்ணைக் கவரும் வர்ணங்களின் ஓவியங்களால் நிரப்பித்தள்ளிவிட்டார்கள் இவன் காலத்திய ஓவியர்கள்.

இவனுடைய காலத்தில் இவன் தலைமையில் எகிப்தின் எல்லைப் பகுதி நாடுகளுடன் நடந்தப் போர்களின் தாக்கம் அடுத்தப் பல பாரோக்களின் தலைமுறைகளுக்கும் எதிரொளித்திருக்கிறது. சில இராணுவ வெற்றிகளை இவன் பெற்றாலும் எகிப்தின் வீழ்ச்சியானது இவன் காலத்திலிருந்தே தொடங்கியது. இவனுக்கு அடுத்து பாரோவாக வந்தவன் ராமேசிஸ் II. பைபில் குறிப்பிடும் மேசே காலத்து பாரோ இவனாக இருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியளார்கள் அனுமானம் செய்கிறார்கள்.

அடுத்த தொடரிலும்.....





General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..