Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 21 - 25
Posted By:Hajas On 9/5/2015 3:40:18 AM

எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 21 - 25

by : David Praveen 

பாகம் 1 - 5பாகம் 6 - 10 , பாகம் 11 - 15பாகம் 16 - 20

பாகம் 21

அவனுடைய கொடூர செயல்களையும் தாண்டி அவனுக்கு சிம்மசொப்பனமாக இருந்த ஒரே மாநிலம் எகிப்தின் தெற்கில் இருந்தது. நைல் நதியின் கிழக்கு கரையில் இருந்த எகிப்தின் நான்காவது மாநிலம் அது. அதன் தலைநகரம் Thebes. இந்த நகரத்தின் எல்லைகளிலேயே கிழக்கு மற்றும் மேற்கு பாலைவனங்களை ஊடறுத்துச் செல்லும் பாலைவனப் பாதைகள் சந்தித்துக்கொண்டன. இந்த நகரத்திலிருந்து மேற்குத் திசையில் நைலை ஒட்டி ஒரு பாதை பழங்கால சிறப்பு மிக்க Abdju நகரம் வரைக்கும் சென்றது. இந்த நகரின் கிழக்கு திசையிலும் ஒரு பாதை நைல் நதியின் ஓடும் திசையிலேயே ஓடி எகிப்தின் தெற்குப் பகுதிகளை அடைந்தது.

இந்த நகரம் எகிப்தின் Old Kingdom (கி.மு. 2575 – 2125) காலகட்டத்திலிருந்து முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருந்தது. இந்த நகருக்கு அருகிலேயே பழங்கால எகிப்தியர்களின் புன்னியத் தளங்களில் ஒன்றாக கருதப்பட்ட Ipetsut இருந்தது (இது இன்றைய Karnak). Kheti-க்கு நிகராக எகிப்தின் மற்ற மாநிலங்களுக்கு வயிற்றில் புளியை கறைத்தவன் Intef. தீப்சின் ஆளுநர். அதாவது அரசன். Intef-யின் போர் தந்திரம் Kheti-யினுடையது போல இருக்கவில்லை தொடக்க காலகட்டங்களில். Herakleopolis-க்கு தான் அடங்கியிருப்பவன் என்றுக் காட்டிக்கொண்டே மறைமுகமாக தன்னுடைய படை பலத்தை பெருக்கிக்கொண்டிருந்தான். தன்னுடைய மாநிலத்தின் போர் தந்திரோபய (war strategical) முக்கியத்துவம் குறித்து அவன் நன்றாகவே கணித்துவைத்திருந்தான்.

(படத்தில் இருப்பது Mentuhotep II சிலை. 4000 வருடங்களுக்கு முற்ப்பட்டது)

Herakleopolis அரசன் கூட்டிய ஆளுநர்களின் கூட்டங்களுக்கு தான் போகாமல் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்புவது அவனுடைய தந்திரங்களில் ஒன்று. இப்படி செய்வதன் மூலம் Kheti-க்கு தான் அடங்கியவன் என்று காட்டிக்கொண்டே தான் Kheti-யையும் மதிக்காதவன் என்கிற தோற்றத்தை மற்ற ஆளுநர்கள் மத்தியில் ஏற்ப்படுத்தினான். இதன் காரணமாகவே மற்ற மாநிலங்களின் ஆளுநர்கள் இவன் மீது சந்தேகத்துடனேயே திரிந்துக்கொண்டிருந்தார்கள். இவனுடைய மாநிலத்திற்கு அடுத்து இருந்த மூன்றாம் மாநில அரசனான Ankhtifi வெளிப்படையாகவே Herakleopolis அரசனை எதிர்த்துக்கொண்டிருந்தவன். தன்னுடைய பலத்தை Herakleopolis-க்கு உணர்த்த திட்டமிட்ட அவன் பல சின்ன மாநிலங்களை தன்னுடைய படை பலத்தின் மூலம் இணைத்துக்கொண்டு தீப்சைத் தாக்கினான்.

ஒரு மிகப் பெரிய போருக்குத் தயாராகிக்கொண்டிருந்த தீப்சின் Intef இந்தப் போரில் தன்னுடைய பலத்தை வீணாக்க விரும்பாமல் அமைதியாக இருந்துவிட்டான். Ankhtifi-யின் படை தீப்சை முற்றுகையிட்டுப் பார்த்துவிட்டு வெல்ல முடியாமல் பின்வாங்கிப் போய்விட்டது. தீப்சின் முற்றுகையிலேயே தன்னுடைய பலத்தை இழந்துவிட்ட Ankhtifi-யின் படையை Kheti சுலபமாக வேட்டையாடிவிட்டான். இதன் பிறகு வந்த அடுத்த நூறு வருடங்களுக்கு Kheti-யின் தலைமுறைக்கும் Intef-யின் தலைமுறைக்கு இடையில் மட்டுமே எகிப்தின் அடுத்த பாரோ யார் என்கிற போட்டி நிலவியது. இரண்டு மாநில அரசர்களும் அடுத்த மூன்று தலைமுறைகளாக ஒருவர் மீது ஒருவர் போர் தொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த நூறு வருட பாரோ அறியணைப் போருக்கு இறுதி முடிவுக்கட்டியவன் Mentuhotep II. இவனுடைய காலத்தில் எகிப்தின் பெரிய மாநிலங்கள் சிறிய மாநிலங்களை தங்களுக்குள் இணைத்துக்கொண்டுவிட்டதால் மாநிலங்களின் எண்ணிக்கை 22-ஆக குறைந்திருந்தது. Mentuhotep II போர் திட்டமிடல்களில் படு கில்லாடி. எங்கு எகிறி அடிக்கவேண்டும் எங்கு பதுங்கிப் பாயவேண்டும் என்பதை முன் கூட்டியே மிகத் துல்லியமாக கணிக்க கூடியவன். அவன் தன்னுடைய தந்தை மற்றும் பாட்டன் முப்பாட்டன்களை போல வருடத்திற்கு ஒருமுறை Herakleopolis-யின் Kheti அரச தலைமுறைகளுடன் போய் மோதிவிட்டு வருவதை விரும்பவில்லை. ஒரே ஒரு படையெடுப்பு ஒரே அடி Herakleopolis-ன் கதை முடிந்துவிட வேண்டும் என்பதே அவனுடைய திட்டம். இதற்கான வாய்ப்பிற்காக காத்திருந்தான் அவன் அரசனாகியும் பதினொரு வருடங்கள் வரை.

அடுத்த தொடரிலும்......

 

பாகம் 22

Herakleopolis-ன் கதையை முடிப்பதற்கு முன்னாடி அவன் தாக்கியது வடக்கிலிருந்த Memphis-யை. Herakleopolis படை உதவிக்காக மெம்பிசை அணுகிவிடக் கூடாது என்பதற்காக. இதை முடித்துவிட்டு நேராக அவன் போய் நின்றது Herakleopolis-ல். அவன் திட்டமிட்டிருந்த இறுதி அடி Herakleopolis நகரின் தலையில் இறங்கியது. Kheti அரச குடும்ப உறுப்பினர்கள் மேற்கிலும் கிழக்கிலும் இருந்த பாலைவனத்திற்கு ஓடியும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. Kheti அரச குடும்பத்தில் ஒருவர் மிச்சமில்லாமல் மறு உலகத்திற்கு அனுப்பப்பட்டார்கள். என்ன அதற்கு அவர்களுக்கு பிரமிடு மற்றும் மம்மி உடல் உதவி செய்யாமல் மென்டோதெப் படையினரின் ஆயுதங்களே உதவி செய்தன.

மென்டோதெப்பை எதிர்க்க வேறு எந்த மாநில அரசர்களுக்கும் பலம் கிடையாது என்பதால் அவனுக்கு அடங்கிப்போய்விட்டார்கள். மென்டோதெப் கி.மு. 2010-ல் தன்னை எகிப்தின் பாரோவாக அறிவித்தான். தனக்கான பாரோனிக் பெயராக Netjeri-hedjet என்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டான். ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கழித்து எகிப்திய மண்ணில் மீண்டும் பாரோ சகாப்தம் தொடங்கியது. முதல் பாரோ செய்த அதே காரியத்தை சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இரண்டாம் முறையாக மென்டோதெப் செய்தான். அதனால் இவனை reunifier என்று குறிப்பிடுகிறார்கள். இவன் காலத்திலிருந்தே எகிப்தின் Middle Kingdom (கி.மு. 2010 – 1630) தொடங்குகிறது. பதினொராவது வம்சத்தின் இடைக் காலத்தையும் தொடங்கிவைத்தவன் இவனே.

இவன் காலத்திற்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் பிரமிடு கலையும் இலக்கியும் தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டிருந்தது. எல்லாம் திறமையில்லாத பாரோக்களின் கைவண்ணம்தான். இந்த காலகட்டங்களிலேயே மம்மியை வைக்கும் sarcophagus-களின் மேல் மறு வாழ்விற்கான பாடல்களும் மந்திரங்களும் எழுதப்படும் வழக்கம் தோன்றியது. காரணம் பிரமிடுகள் கட்ட முடியாத காரணத்தால் பிரமிடுகளின் சுவற்றிலும் கல்லறை கோயில்களின் சுவற்றிலும் எழுதப்பட வேண்டிய மந்திரங்கள் சவப்பெட்டிகளின் (sarcophagus) வெளிப்பக்கத்தில் எழுதும்படியாகிப்போனது. இந்த காலகட்டங்களிலேயே சவப் பெட்டி வடக்குத் தெற்காக வைக்கப்பட்டு சவப் பெட்டிக்குள் வைக்கப்படும் மம்மியின் முகம் கிழக்கு திசையைப் பார்க்கும்படி திருப்பிவிடும் வழக்கமும் தோன்றியது. காரணம் எகிப்தியர்கள் சூரிய உதயம் பூமிக்கு உயிரை கொண்டுவருகிறது என்று நம்பியதால் இறந்தவரின் மம்மி சவப் பெட்டிக்குள் சூரியன் உதிக்கும் கிழக்கு திசையை பார்ப்பதின் மூலம் உயிர்தெழும் (resurrection) என்று நம்பினார்கள். அதற்கு வசதியாக சவப் பெட்டியின் கிழக்கு பக்கத்தில் இரண்டு கண்களை வரைந்தும் வைக்கத் தொடங்கினார்கள். அந்த கண்களின் வழியாக மம்மி சூரிய உதயத்தை பார்க்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

David Praveen's photo.

(புகைப்படத்திலிருப்பது விவசாய தொழிலை சித்தரிக்கும் பிரமிடு ஒவியம். 4500 வருடங்களுக்கு முற்பட்டது) 
 

பிரமிடுகளின் சுவற்றிலும் கல்லறை கோயில்களின் சுவற்றிலும் விவசாயம் செய்வது, மீன் பிடிப்பது, உணவு சமைப்பது, காய்கறி நறுக்குவது, பழங்களை பறிப்பது, கால்நடைகளை வளர்ப்பதுப் போன்ற ஓவியங்களை மிகப் பழங்காலம் தொட்டே எகிப்தியர்கள் வரைந்து வைப்பது வழக்கம். விவசாயத்தின் மூலமும், மீன் பிடிப்பதன் மூலமும் கால்நடைகளை வளர்ப்பதன் மூலமும் கிடைக்கும் உணவுகள் இந்த ஓவியங்களின் வழியாக சவப் பெட்டிக்குள் இருக்கும் மம்மிக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுத் தேவைகளை நிறைவேற்றும் என்பது அவர்களின் நம்பிக்கை. பிரமிடுகளே இல்லை பிறகு எங்கிருந்து இந்த ஓவியங்களை வரைவது. திறமையான ஓவியர்கள் வேலை இல்லாத காரணத்தால் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டதால் இந்த காலகட்டத்தில் கல்லறைகளில் இத்தகைய ஓவியங்களை வரைய ஆட்கள் கிடைப்பது அரிதிலும் அரிதாகிப்போனது.

இந்த சங்கடத்தை சரிக்கட்ட இந்த காலகட்ட எகிப்தியர்கள் செய்த காரியம் இன்றைக்கு நமக்கு மிகச் சிறந்த காலக் கண்ணாடியாக பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. விவசாயம், மீன் பிடிக்கும், கால்நடை வளர்க்கும், உணவுத் தயாரிக்கும் பொம்மைகளை செய்து கல்லறைகளில் வைத்துவிட்டார்கள். இந்த பொம்மைகளிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் விலைமதிப்பில்லாதவைகள். அன்றைய மனிதர்களின் உடை அமைப்பு, விவசாய கருவிகள், மீன் படி கருவிகள், உணவுத் தயாரிப்பு பொருட்களின் அமைப்புகள், படகுகளின் அமைப்புகள் என்று இவைகளிலிருந்து நாம் பெறும் தகவல்களை அடுக்கிக்கொண்டேப் போகலாம்.

எகிப்தின் கலை மற்றும் இலக்கிய சிறப்புகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்தான் மென்டோதெப். பிரமிடுகள் மீண்டும் அதன் பழைய பிரம்மாண்டத்தை பெறத் தொடங்கின. நாம் இதுவரை மஸ்டபாக்களின் தோற்றத்தைப் பார்த்துவிட்டோம் ஆனால் பிரமிடுகளின் பிறப்பை பார்க்கவில்லைதானே. பிரமிடை முதன் முதலில் கட்டியப் பாரோ யார்? இதற்கான பதிலை நாம் பார்த்திருக்கிறோம் அது பாரோ Djoser. இது நடந்தது மூன்றாம் வம்சத்தின் தொடக்க காலத்தில். அதாவது Early Dynastic Period காலகட்டத்தில் கி.மு. 2650-களில்.

அடுத்த தொடரிலும்......

பாகம் 23

எகிப்தின் முதல் பிரமிடுக் குறித்து தெரிந்துக்கொள்ள பாரோ மென்டோதெப் காலத்திலிருந்து 600 ஆண்டுகள் முன்னோக்கி செல்லவேண்டும். வாருங்கள் The Land of the Dead என்று அழைக்கப்படும் எகிப்தின் மேற்கு கரை பாலைவனம் வழியாக பொடி நடையாக நடந்து எகிப்தின் முதல் பிரமிடை தேடிச் சொல்வோம். நாம் போய் சேரவேண்டிய இடத்தின் பெயர் Saqqara. இந்த இடம் எகிப்தின் வடக்குப் பகுதியில் இருக்கிறது அதாவது Lower Egypt-ல். மென்டோதெப்-க்கு விடை கொடுத்துவிடுவோம். அவன் அவனுடைய கல்லறை கோயிலுக்கு போக வழி விட்டுவிடுங்கள். Saqqara-விற்கான பயண தூரம் கொஞ்சம் அதிகம்தான் இருந்தாலும் என்ன. வழித் துணைக்கு நம்மிடம் எகிப்திய சுவாரசிய கதைகளுக்கு பஞ்சமா என்ன!

முதல் பாரோ நார்மர் காலத்திற்கு முன்பிலிருந்தே எகிப்தின் Upper Egypt பகுதியில் இருந்த Abdju பாலைவனப் பகுதி அரசர்களின் necropolis-ஆக இருந்திருக்கிறது. Necropolis என்றால் மிகப் பெரிய கல்லறைத் தோட்டம் என்றுப் பொருள். பழங்கால எகிப்திய அரசர்கள் தங்களின் மஸ்டபாக்கள் இந்த இடத்திலேயே கட்டப்படவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்கள். இதன் காரணமாக இந்த இடத்திற்கு ஒரு புனித தன்மை வந்து ஒட்டிக்கொண்டது. இந்த விருப்பத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. நார்மரும் தன்னக்கான மஸ்டபாவையும் கல்லறைக் கோயிலையும் இந்த இடத்திலேயேக் கட்டிக்கொண்டான். இதை அவன் பெருமையாகவும் கருதியிருக்கிறான்.

அவனுக்குப் பின் வந்த ஏழு பாரோக்களும் தங்களின் மஸ்டபாக்களை இந்த நிலத்திலேயே கட்டிக்கொண்டார்கள். ஏறத்தாழ 1000 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்த பாரம்பரியத்திற்கு முடிவு கட்டப்பட்டது இரண்டாம் வம்சத்தின் (Second Dynasty – Early Dynastic Period) ஆட்சி கால முடிவில். இந்த முடிவுக்கட்டலுக்குப் பிறகே மூன்றாம் வம்சத்தின் (Third Dynasty) காலக் கட்டம் தொடங்குகிறது. இதை செய்தவன் பாரோ Hetepsekhemwy, மூன்றாம் வம்சத்தின் முதல் பாரோ. இது நடைப்பெற்றது கி.மு. 2750-கள் வாக்கில். Abdju-வில் நிலப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட கடைசி பாரோ இவனுடைய தந்தை பாரோ Qaa.

பாரோ Hetepsekhemwy தனக்கான மஸ்டபாவையும் கல்லறைக் கோயிலையும் கட்டத் தேர்ந்தெடுத்த நிலம் Saqqara. பொதுவாக பழங்கால எகிப்தியர்கள் பாரம்பரியத்தை மீறி நடக்க கூடியவர்கள் கிடையாது. பழம் பாரம்பரியத்தை அப்படியே பின் தொடர்வதை தங்களின் பெருமைகளில் ஒன்றாக கருதக் கூடியவர்கள். அப்படியிருக்கையில் என்ன காரணத்திற்காக பாரம்பரியத்தை மீறும் இந்த முடிவை பாரோ Hetepsekhemwy எடுத்தான் என்பதற்கான எழுத்துப் பூர்வ ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆராய்ச்சியாளர்கள் அரசியல் காரணங்களுக்காக அவன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். Saqqara-வில் கட்டப்பட்ட முதல் மஸ்டபா அனேகமாக இவனுடையதாகத்தான் இருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.

(புகைப்படத்திலிருப்பது பாரோ Hetepsekhemwy மஸ்டபாவின் முகப்பு. இன்றையிலிருந்து 4750 வருடங்களுக்கு முற்பட்டது)

தன்னுடைய மஸ்டபாவிற்கான ஒரு புதிய இடத்தை தேர்ந்தெடுத்து புதுமை செய்ததைதுப்போல மஸ்டபா கட்டிக் கலையிலும் பல புதுமையான மாறுதல்களை அறிமுகப்படுத்திய முதல் பாரோவும் இவனே. மஸ்டபாக்களின் கீழே இருக்கும் கல்லறை அறைகளை (burial champers) சுட்ட செம்மன் செங்கற்களால் கட்டாமல் பாறைகளில் செதுக்கி அதற்கு மேல் சுட்ட செங்கற்களைக் கொண்ட மஸ்டபாவை கட்டியெழுப்பினார்கள் இவன் காலத்திய கட்டிட வல்லுனர்கள். அதேப் போல கல்லறை அறைகளின் அமைப்பிலும் புதுமைகளை நுழைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு வரை கல்லறை அறைகள் என்பது இப்படித்தான் இருக்கும். ஒரு பெரிய அறை அதில் பாரோவின் சவப்பெட்டி (sarcophagus) வைக்கப்படும். அதை சுற்றிலும் சிறிய சிறிய அறைகள் கட்டப்படும் அவைகளின் உணவுப் பொருட்களும் மற்ற ஆடம்பரப் பொருட்களும் வைக்கப்படும்.

இந்த அமைப்பை கைவிட்டுவிட்டு கல்லறை அறையை கிட்டத்தட்ட அரண்மனை அறைகள் போன்ற அமைப்பிலேயே பாறையில் குடைந்துவிட்டார்கள் அவன் காலத்திய வல்லுனர்கள். கல்லறை அறை என்பது பாரோவின் மம்மிக்கான சாப்பிடும் குடிக்கும் அறையாக மட்டும் இருப்பதில் Hetepsekhemwy விருப்பம் இல்லை. தான் வாழும் அரண்மனைப் போன்றே தன்னுடைய மம்மியின் கல்லறை அறைகளும் இருக்கவேண்டும் என்று பெரிதாக விரும்பினான். அவன் விருப்பதை செயல்படுத்திக்காட்டினார்கள் அவன் காலத்திய கட்டிடக் கலைஞர்கள். இவனுக்கு அடுத்த வந்த பாரோக்களும் இதே கட்டிடக் கலையை தங்களுடைய மஸ்டபாக்களிலும் தொடர்ந்தார்கள்.

இதோ Saqqara வந்துவிட்டது நண்பர்களே. பயணக் கலைப்பேத் தெரியாமல் வந்து சேர்ந்துவிட்டோம் பாருங்கள். சரி சரி வாருங்கள் பாரோக்களின் ஆயிரமாயிரம் ஆண்டுகாலா நித்திரையை கலைத்துவிடாமல் இன்றைய பிரமிடுகளின் தந்தையாக கருதப்படும் அந்த முதல் பிரமிடைத் தேடிச் செல்வோம்.

அடுத்த தொடரிலும்......

 

பாகம் 24

அதோ அதுதான் நண்பர்களே பாரோ Djoser-யின் Step Pyramid. பிரமிடுகளின் தந்தை அதுவேதான். அருகில் சென்றுப் பார்க்கலாம் வாருங்கள். இதோ இந்த மேடையில் ஒரு பெயர் கல்வெட்டாக எழுதப்பட்டிருக்கிறதுப் பாருங்கள் இதுதான் இந்த பிரமிடை உருவாக்கியவரின் பெயர். ஆம் சரியாக படித்துவிட்டீர்கள் Imhotep-யேதான். எகிப்தின் முதல் பிரமிடை வடிவமைத்து கட்டியெழுப்பிய கட்டிடக் கலை வல்லுனர். மனித இன வரலாற்றிலேயே அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரு கலைஞனின் கற்பனைக்காக மிகப் பெரும் நாகரீகத்தின் அரசு என்கிற இயந்திரமே மாற்றியமைக்கப்பட்டிருக்குமானால் அது Imhotep என்கிற இந்த மனிதனுக்கு மட்டுமாகத்தான் இருக்கும்.

இந்த நடவடிக்கை பாரோ ஜோசர், ஈமோதெப் மீதும் அவனுடைய திறமைகளின் மீதும் வைத்திருந்த கண் மூடித்தனமான நம்பிக்கையின் எடுத்துக்காட்டு. ஈமோதெப் பாரோ ஜோசரை எந்த அளவிற்கு கவர்ந்திருந்தான் என்பதற்கு மற்றொரு உதாரணம் மிக மதிப்பு மற்றும் அதிகாரம் மிக்க பல அரசு பட்டங்கள் அவனுக்கு வழங்கப்பட்டிருப்பதிலிருந்து தெரியவருகிறது. Royal Seal Bearer, First Under The King, Ruler of The Great Estate, Member of The Elite, Greatest of seers, மற்றும் Overseer of Sculptors & Painters இவைகள் ஈமோதெப்பை அலங்கரிக்கும் அரசு பட்டங்கள்.

பாரோ ஜோசர் தன்னுடைய பிரமிடின் நுழைவாயிலில் தன்னுடைய பெயருக்கு பக்கத்திலேயே ஈமோதெப்பின் பெயரையும் குறிக்கும்படி செய்திருக்கிறான். அதைத்தான் நீங்கள் சற்று முன் வாசித்தது. பாரோனிக் வரலாற்றிலேயே இல்லாத செயல் இது. பாரோ ஜோசருக்கு பின்னால் வந்த பாரோக்கள் ஈமோதெப்பை கடவுளாக்காதது ஒன்றுதான் குறை. அடுத்து வந்த 3000 வருடங்களுக்கு எகிப்தியர்களின் அறிவியல், மருத்துவ இயல், வானியல், கலை என்று பல துறைகளின் தந்தை பிம்பமாக (father figure) மாறிப்போனவர். எகிப்திய நாகரீகத்தின் சின்னங்களில் ஒருவர் ஈமோதெப். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த மனிதரைக் குறித்த விரிவான பப்பைரஸ் வரலாற்று எழுத்துப் பதிவுகளோ அல்லது பிரமிட் எழுத்துக்களோ இல்லையென்பது எகிப்திய சுவாரசியங்களில் ஒன்று.

பாரோ ஜோசரின் அரண்மனை எழுத்தர்கள் கூட தாங்கள் பதிவு செய்திருக்கும் ஜோசரின் அரசியல் செயல்பாடுகள் குறித்த பதிவுகளில் ஏழே முறைதான் ஈமோதெப்பைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். பாரோ ஒருவரே தலை வணங்காத குறையாக பெரிதும் மதித்த ஈமோதெப் போன்ற ஒரு தலைச் சிறந்த அறிஞரைக் குறித்து எகிப்திய வரலாற்றுப் பதிவுகள் மெளனம் காப்பது இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் புருவம் தூக்க வைத்திருக்கிறது. ஒருவேளை அவரைக் குறித்த பதிவுகள் கொண்ட பபப்பைரஸ் சுருள்கள் இனி வரும் காலங்களில் தொல் பொருள் ஆய்வுகளின்போது கிடைக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். காலம் தன் இரகசியப் பெட்டகத்தை திறந்து ஈமோதெப் குறித்து வெளிப்படுத்தும் வரை நாமும் காத்திருக்கத்தான் வேண்டும் வேறு வழியில்லை.

ஈமோதெப் குறித்து நமக்கு அதிகம் தெரியவில்லையென்றாலும் அவர் கட்டிய உலகின் முதல் பிரமிட் அவருடைய பன்முகத் தன்மைக் கொண்ட திறமைகளுக்கு உன்னத எடுத்துக்காட்டு. இன்றைய நவீனகால பொறியியளாளர்கள், வானியல் அறிஞர்கள், ஓவியக் கலைஞர்கள், மருத்துவர்கள் என்று அனைவரையும் தன்னுடைய பன்முகத் தன்மை மூலம் வாய் பிளக்கவைப்பவர். இவருடைய பன்முகத் தன்மையை குறித்து ஒரு உதாரணம் மூலம் சொல்வதென்றால் இன்றைக்கு நாம் நன்கு அறிந்திருக்கும் லியானர்டோ டாவின்சி, மைக்கேல் ஏன்ஜலோ, கலீலியோ, ஹிப்போகிரேட்ஸ் (மருத்துவத்தின் தந்தை) மற்றும் நியுட்டன் போன்றவர்களை ஒரு குடுவைக்குள் போட்டு நன்றாக குலுக்கி பிறகு வடிகட்டினால் வருவது ஈமோதெப்பாக இருக்கும்.

வெள்ளை இனத்தை சேராத இப்படியான சிறந்த மனிதர்களைக் கண்டால் மேற்கத்திய அறிவுலகத்திற்கு பொறுக்காது அல்லவா அதன் விளைவு இன்றைக்கு ஈமோதெப் உலகின் தலைச் சிறந்த வில்லன்களில் ஒருவராக சித்தரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார். மேற்கத்திய சிறுவர்கள் படிக்கும் காமிக் புத்தகங்களில் தலைக்காட்டும் புகழ்பெற்ற வில்லன்களில் ஈமோதெப்பும் ஒருவர். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த The Mummy படத்தின் வில்லன் ஈமோதெப். இந்த படத்தின் அடுத்த பாகத்திலும் வில்லன் ஈமோதெப்தான். எகிப்தியர்களுக்கு என்று இல்லாமல் மனித நாகரீகத்திற்கேப் பொதுவான ஒரு தலைசிறந்த அறிஞரை இதைவிட அற்புதமாக சிறப்பிக்க முடியாதுதானே!

அடுத்த தொடரிலும்......

பாகம் 25

கொஞ்சமே கொஞ்சம் கிடைக்கும் தகவல்கள் ஈமோதெப் Herakleopolis நகரைச் சேர்ந்தவர் என்றும் அந்த நகரில் இருந்த Ra கடவுள் கோயிலின் தலைமைப் பூசாரியாக (high priest) இருந்தவர் என்றும் சொல்கிறது. பாரோ ஜோசருக்கு எப்படி அறிமுகமானார் முதல் பிரமிட் குறித்த தன்னுடைய பொறியியல் திட்டத்தை எப்படி பாரோவின் கவனத்திற்கு கொண்டுவந்தார் என்பது குறித்தெல்லாம் சொல்வதற்கு வரலாற்றுத் தகவல்கள் இல்லை. நாமே ஒரு அனுமானத்தின் பேரில் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்துக்கொள்ளவேண்டியதுதான்.

ஈமோதெப்பின் முதல் பிரமிடுக்கு முன்புக் கட்டப்பட்ட பாரோக்களின் மஸ்டபாக்கள் வானியல் அறிவியலின் அடிப்படையில் கட்டப்பட்டதற்கான புறவய ஆதாரங்கள் இல்லை. ஆனால் ஈமோதெப் கட்டிய பிரமிட் முழுக்க முழுக்க வானியல் அறிவியலை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு வானியல் ஆய்வுக் கூடம் (Space Observatory). இன்னும் இறங்கி சொல்வதென்றால் அது ஒரு நாட்காட்டி (calender) கட்டிடம். இதற்கான ஆதாரங்களை இன்றைய வானியல் அறிஞர்களும் பொறியியல் அறிஞர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட உலகின் முதல் வானியல் ஆய்வுக் கட்டிடமாக இருக்கப் போகிறது தன்னுடைய பிரமிட் என்றால் எந்தப் பாரோதான் அதற்காக தன்னுடைய ஆட்சியையே பணையம் வைக்கத் துணியமாட்டார்கள்.

பாரோ ஜோசர் கிட்டதட்ட ஆட்சியை பணயம் வைக்கும் காரியத்தைதான் செய்தான். ஈமோதெப் முன்வைத்த பிரமிட் திட்டம் மிகுந்த பொருட் செலவையும் மனித உழைப்பையும் முழுங்க கூடியது என்பதை எடுத்த எடுப்பிலேயே ஜோசர் உணர்ந்துக்கொண்டிருக்கவேண்டும். இத்தகைய ஒரு பிரம்மாண்டமான திட்டத்திற்கு அதுவரை வழக்கத்திலிருந்த அரசு அமைப்பு ஈடுகொடுக்க முடியாது என்பதையும் அவன் புரிந்துக்கொண்டிருக்கவேண்டும். இதன் விளைவு பாரோ ஆட்சி முறைத் தொடங்கி சுமார் 300 ஆண்டுகளாக வழக்கிலிருந்த அரசு அமைப்பை முதல் முறையாக மாற்றியமைத்தான். திறமை இல்லையென்றாலும் அரசக் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் என்கிற ஒரேக் காரணத்திற்காக அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உட்கார்ந்துக்கொண்டு அரசிற்கு பல வழிகளிலும் இழப்புகளை ஏற்ப்படுத்திக்கொண்டிருந்தவர்களை எல்லாம் முதல் வேலையாக வீட்டிற்கு அனுப்பிவிட்டான்.

Vizier என்கிற உச்ச அதிகாரமிக்க பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவியில் அமருபவர் பாரோவின் முதன்மை அமைச்சரைப் போல செயல்படுவார். பாரோவிற்கு அடுத்து அரசாங்கத்தில் உச்சக்கட்ட அதிகாரம் படைத்தப் பதவி இது. இந்த பதவியில் இருப்பவர் பாரோவிற்கு மட்டுமே பதில் சொல்லக்கடமைப்பட்டவர். வேறு எவரும் இவருடைய அதிகாரத்தை கேள்வி கேட்க முடியாது. பாரோவின் மனைவி உட்பட. பாரோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகள் மாநிலங்களின் நிர்வாகிகளாகவும், படை மற்றும் படை கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தலைவராகவும், அரண்மனை எழுத்தர்களின் தலைவராகவும், கப்பல் படையின் தலைவராகவும், வரி வசூல் தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் பாரோவின் நேரடி கட்டுப்பாட்டில் வரக் கூடியவர்கள். இந்த மாற்றங்களின் மூலம் அரசாங்கத்தின் கருவூலத்திற்கு பொருள் வரத்து அதிகரிகத் தொடங்கியது. மேலும் பாரோவால் நினைத்த நேரத்தில் பெரும் அளவிலான மனித உழைப்பிற்கு தேவையான வேலையாட்களை சிரமமில்லாமல் திரட்ட முடிந்தது.

David Praveen's photo.
 
 ஈமோதெப்பின் பிரமிட் திட்டத்திற்காக பாரோ ஜோசர் உருவாக்கிய இந்த அரசு அமைப்பே பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படாமல் 31-வது வம்சத்தின் கடைசிப் பாரோவரைப் பின்பற்றப்பட்டது. இதன்படிப் பார்த்தால் பாரோக்கள் பிரமிடுக் கலாச்சாரத்தை கட்டி எழுப்பவில்லை பிரமிடுகளே பாரோனிக் கலாச்சாரத்தை கட்டியெழுப்பியிருக்கிறது.

அடுத்த தொடரிலும்.....

 

பாகம் 26 - 30




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..