Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 16 - 20
Posted By:Hajas On 9/5/2015 3:26:37 AM

duloxetin pris

duloxetin pensa click duloxetin pris

எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 16 - 20

by : David Praveen 

பாகம் 1 - 5பாகம் 6 - 10 , பாகம் 11 - 15

 

பாகம் 16

மஸ்டபாவைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. இது தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு இங்கே மிக உன்னத அரசரின் கல்லறை இருக்கிறது என்பதை அடையாளம் காட்டுவதற்கு. சுற்றுச் சுவருக்கு அருகில் இறந்தப் பாரோவை வழிபடவும் பாரோவுக்கான உணவுப் பொருட்களை படைக்கவுமான கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த கோயில்களில் வருடத்தின் 365 நாட்களும் மூன்று வேலையும் தவராமல் பாரோவிற்கு உணவுப் பொருட்கள் படைக்கப்பட்டிருக்கிறது.

பாரோப் பரம்பரையின் தொடக்க காலங்களில் மஸ்டபாக்களில் வைக்கப்படும் பாரோவின் மம்மி உடல் மறு வாழ்வில் அவருக்குப் பயன்படுவதற்கு என்கிற நம்பிக்கையையும் தாண்டி அவருடைய மஸ்டபா கோவிலில் அவருக்குப் படைக்கப்படும் உணவுகளையும் மம்மி உடலுக்குள் புகுந்து பாரோ சாப்பிடுவார் என்கிற நம்பிக்கையும் இருந்திருக்கிறது. பிற்காலத்திலும் இந்த நம்பிக்கை தொடர்ந்திருக்கிறது. மஸ்டபா கட்டிட வளாகத்திற்குள் பல சிறு கோயில்கள் கட்டப்பட்டிருக்கிறது. அந்த கோயில்களில் காலையும் மாலையும் மக்கள் வந்து நறுமணப் பொருட்களை வைத்து கூடவே உணவுப் பொருட்களையும் படைப்பார்கள்.

David Praveen's photo.
 
 

மஸ்டபா வளாக கோவில்களில் குறிப்பிட்ட பாரோவின் சிலையும் அவருடைய குடும்பத்தினர்களின் சிலைகளும் வடிக்கப்பட்டிருக்கும். இந்த கோவில்களின் சுற்றுச் சுவர்களில் அந்த பாரோவின் சிறப்புகள் புடைப்புச் சிற்பங்களிலும் hieroglyphics எழுத்துக்களிலும் செதுக்கப்பட்டிருக்கும். பாரோவின் மஸ்டபா வளாக கோவில்களை பராமரிக்க என்று தனியே பூசாரிகளும் நியமிக்கப்பட்டனர். பிற்காலத்தில் இந்த பூசாரிகளுக்கும் சேர்த்தே பிரமிடின் வளாகத்தில் வசிப்பிடங்கள் (living - quarters) கட்டப்பட்டிருக்கின்றன. உயிருடன் இருக்கும் நாட்களில் பாரோவும் நேரடியாக தனக்கான மஸ்டபாவிற்கும் அதை சுற்றியுள்ள தன்னுடைய சிலைகள் நிறுவப்பட்ட கோவில்களுக்கும் சுற்றுப் பயணம் வருவதும் நடக்கும்.
சில மஸ்டபாக்கள் அருகிலிருக்கும் மற்றொரு பாரோவின் மஸ்டபா கட்டிட செங்கற்களை உருவியெடுத்தும் கட்டப்பட்டிருக்கிறது. இப்படி செய்யப்பட்டதின் காரணமாக சில பழங்கால பாரோக்களின் மஸ்டபாக்கள் இன்றைக்கு நமக்கு கிடைக்காமல் போய்விட்டன. முதல் பாரோ வம்சாவளித் தொடங்கி மூன்றாம் வம்சாவளி காலக்கட்டம் வரைக்கும் மஸ்டபா கட்டிடமும் இறந்த உடலை மம்மி ஆக்கும் செயலும் பாரோக்களுக்கு மட்டுமான அரச உரிமையாக மட்டுமே இருந்திருக்கிறது. மற்ற எந்த எகிப்திய குடிமகனுக்கும் இந்த உரிமைக் கிடையாது.

மூன்றாம் வம்சாவளி காலகட்டத்திற்குப் பிறகு அரசியல் காரணங்களுக்காக அதாவது தங்களுடைய அதிகாரத்தை மேலும் வலுவாக்கித் தக்கவைத்துக்கொள்ள பாரோக்கள் மஸ்டபா கட்டிக்கொள்ளும் உரிமையையும் உடலை மம்மி ஆக்கும் உரிமையையும் Nomarch-களுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். நார்மர் எகிப்தை ஒன்றாக்கியப் பிறகு அதை பல மாநிலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாநிலத்தின் நிர்வாகப் பொறுப்பையும் அந்த பகுதிகளில் இருக்கும் செல்வாக்கு மிகுந்த உள்ளுர் தலைவர்களிடம் கொடுத்தான். இவர்களின் செயல்பாடுகள் ஒருவகையில் பாரோ அரசவையின் பிரபுக்கள் போலவும் மற்றொரு வகையில் பாரோவின் கீழ் இருக்கும் மாநிலங்களின் கவர்னர்கள் போலவும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இவர்களை Nomarchs என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் காண்கிறார்கள்.

பிற்காலத்தில் சில வம்சாவளிப் பாரோக்களின் ஆட்சியை குப்புறத் தள்ளி குழிப் பறிக்கவும் காரணமாக இருந்தவர்கள் இந்த Nomarchs. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இவர்கள் செய்த கிளர்ச்சியின் காரணமாக மீண்டும் ஒருமுறை எகிப்து பாரோக்களுக்கு கட்டுப்படாமல் பல அதிகாரம் மிக்க மாநிலங்களாக பிரிந்துப்போனபோது பாரோ Mentuhotep II இவர்களின் கிளர்ச்சிகளை அடக்கி நார்மருக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை எகிப்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தான். இது நடந்தது Middle Kingdom காலகட்டத்தில் அதாவது பதினொராவது பாரோ வம்சாவளி காலத்தில். நார்மருக்குப் பின் சுமார் 1000 வருடங்கள் கழித்து இது நடைப்பெற்றது.

Mentuhotep II எகிப்து கண்ட மிகச் சிறந்த பாரோக்களில் இவனும் ஒருவன். தீப்ஸ் நகரின் போர் கடவுளான Montu-வின் நினைவாகவே இவனுக்கு Mentuhotep என்றுப் பெயர் வைக்கப்பட்டது.

அடுத்த தொடரிலும்......

 

பாகம் 17

Mentuhotep பாரோ வமிசத்தை சேர்ந்தவன் கிடையாது. அதாவது நேரடியாக முதல் பாரோவான நார்மரின் இரத்த வழியில் வந்தவன் கிடையாது. நார்மருக்கு அடுத்து புதியதொரு பாரோ வமிசத்தை தொடங்கிவைத்தவன் என்று சொல்லலாம். இவன் தொடங்கி வைத்த பாரோ வமிசத்தை ஆராய்ச்சியாளர்கள் Middle Kingdom என்று பகுத்திருக்கிறார்கள். நார்மரின் நேரடி இரத்த தொடர்புடைய பாரோ வம்சம் எட்டாவது வம்சத்துடுன் (Eighth Dynasty) முடிவடைந்துவிடுகிறது. அதன் கடைசிப் பாரோ Neferirkara.

Neferirkara-விற்கு அடுத்து வந்த ஒன்பது, பத்து மற்றும் பதினொராவது வம்சாவளிக் காலத்தில் (கி.மு. 2125 – 2010) எகிப்தை ஆண்டவர்களை அரசர்கள் என்று மட்டுமே குறிப்பிட முடியும். காரணம் அவர்கள் மாநிலங்களின் ஆலுனர்கள். எகிப்தில் அன்றைய காலகட்டத்தில் மொத்தமாக 22 இரண்டு மாநிலங்கள் இருந்தன. இந்த மாநிலங்களுக்கு தனித் தனி ஆளுநர்கள் உண்டு (Nomarchs). இவர்களே எட்டாம் வமிசத்தின் கடைசி பாரோவான Neferirkara இறந்ததும் ஏற்ப்பட்ட குழப்பத்தை பயன்படுத்திக்கொண்டு தங்களை தங்களின் மாநிலங்களின் அரசர்களாக அறிவித்துக்கொண்டார்கள்.

இந்த நிலை ஏற்பட காரணமாக இருந்த சமூக மற்றும் அரசியல் விசயங்களைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்வது அவசியம்தானே. இதற்கு நமக்கு எகிப்தின் நிலவியல் குறித்தும் தெரிந்திருப்பது அவசியமாகிறது. நாம் முன்பே பார்த்திருக்கிறோம் எகிப்து Upper Egypt என்றும் Lower Egypt என்றும் இரு பிரிவுகளைக் கொண்டது என்று. இந்த பிரிவுகளுக்கு மூலக் காரணம் நைல் நதி. உலகின் மிகச் சிறந்த மனித நாகரீகத்தை ஒரு நதியால் வடிவமைக்க முடியுமா என்கிற கேள்விக்கு சிந்துவெளி, சுமேரிய மற்றும் சீன நாகரீகங்கள் பதில்களாக இருந்தாலும் எகிப்து என்கிற பதில் மிகச் சிறந்த பதிலாக இருக்க முடியும். அந்த அளவிற்கு எகிப்தியர்களின் தினசரி வாழ்க்கை தொடங்கி அவர்களின் மதக் கோட்பாடு அரசியல் கோட்பாடு இறுதியாக பாரோனிக் கோட்பாடு என்று அனைத்தையும் வடிவமைத்தது நைல் நதி.

David Praveen's photo.
 
 
 

நைல் என்கிற ஒரு நதி இல்லையென்றால் இன்றைக்கு பிரமிடுகள் என்பது இருந்திருக்காது. மம்மிகள் இருந்திருக்காது. முடிவற்ற சுவாரசிய வரலாற்றுக் கதைகள் இருந்திருக்காது. நைலின் வெள்ளப் பெருக்கே எகிப்தை உருவாக்கியும் இருக்கிறது சமயங்களில் அழித்துமிருக்கிறது. அந்த நதியில் பெருக்கெடுக்கும் வெள்ளமே எகிப்தின் விவசாய உற்பத்தி. உலகின் மற்ற நாகரீகங்கள் நதியின் கரையில் தோன்றியிருந்தாலும் அவைகளின் விவசாய உற்பத்தி என்பது மழையை நம்பியும் கடுமையான உடல் உழைப்பையும் நம்பி இருந்த ஒன்று. ஆனால் எகிப்தியர்கள் தங்களுடைய விவசாயத்திற்கு நம்பியிருந்ததெல்லாம் நைல் நதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு ஒன்றை மட்டும்தான்.

எகிப்தியர்கள் காலம் தவறாத மழையை நம்பிப் பழக்கப்பட்டவர்கள் கிடையாது. காரணம் எகிப்தை சுற்றியிருந்ததெல்லாம் பாலைவனம் மட்டுமே வடக்கில் இருந்த மத்தியத் தரைக்கடலைத் தவிர. எகிப்தின் மேற்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருப்பதெல்லாம் சுட்டெரிக்கும் பாலைவன மணற் பரப்பு. இத்தகைய நில அமைப்பில் வருடம் தவறாத மழை என்பதெல்லாம் பொய் கதைகள். நைல் நதியும் இல்லையென்றால் எகிப்து என்பது பாலைவனமே. நைல் நதியை எகிப்தியர்கள் Iteru என்று அழைத்தார்கள். இதற்கு அர்த்தம் ஆறு என்பது.

நைல் நதி எத்தியோப்பியாவின் மேட்டு நிலப் பகுதியில் மொழியும் மழையிலிருந்து உருவெடுக்கிறது. பல நீர்வீழ்ச்சிகள் ஒன்றாக சேர்ந்து நீல நைல் (Blue Nile) என்றும் வெள்ளை நைல் (White Nile) என்றும் பிரிந்து எகிப்தின் தெற்கு எல்லையான அஸ்வான் (Aswan) பகுதிக்குள் நுழைகிறது. பழங்கால எகிப்தியர்களைப் பொறுத்தவரை இதுவே நைல் பிறப்பெடுக்கும் இடம். பிறகு நைல் 500 சொச்சம் கிலோ மீட்டர்கள் வடக்கில் ஓடி மத்தியத் தரைக் கடலில் கலக்கிறது. எகிப்தியர்கள் தங்கள் நாடானது நைல் நதி பிறப்பெடுக்கும் மேடான பகுதியில் தொடங்கி அது கடலில் கடக்கும் தாழ்வான பகுதியில் முடிவடைகிறது என்று நம்பினார்கள். அதன் காரணமே நைல் நதி எகிப்திற்குள் நுழையும் தெற்குப் பகுதியை Upper Egypt என்றும் நைல் மத்தியத் தரைகடலில் கலக்கும் பகுதியை Lower Egypt என்றும் அழைத்தார்கள்.

நைல் வருடா வருடம் பெரும் சத்தத்துடன் காட்டாற்று வெள்ளத்தை (inundation) இழுத்துகொண்டு எகிப்திர்குள் நுழையும். இந்த காட்டாற்று வெள்ளம் தன்னுடன் கருப்பு நிற வண்டல் மணலையும் (alluvial soil) இழுத்துக்கொண்டு வந்து வழி நெடுக்க இரண்டு கறைகளிலும் கொட்டிவிட்டு செல்லும். இதுதான் எகிப்தின் விவசாயத்திற்கான உயிர்நாடி. எகிப்தியர்கள் இந்த வண்டல் மணலின் மீது விதைகளைத் தூவினாலேப் போதும் மூன்று மாதமோ ஆறு மாதமோ கழித்து அறுவடை செய்துவிடலாம். மண்ணை உழவேண்டிய அவசியமே நீர் பாய்ச்ச வேண்டிய அவசியமோ கிடையாது.

அடுத்த தொடரிலும்.....

 
 

பாகம் 18

ஒவ்வொரு வருடமும் எகிப்திய மக்கள் நைலின் வெள்ளப் பெருக்கிற்கு காத்திருப்பார்கள். வெள்ளம் வந்து வடிந்தப் பிறகு விவசாயத்தை மேற்கொள்வார்கள். மிக எளிதான வேலை. ஆனால் எகிப்தியர்களின் விவசாய உற்பத்தியை எளிதாக்கி பெரும் செழிப்பை தரும் நைலின் வெள்ளப் பெருக்கே அவர்களின் உயிருக்கும் உலைவைக்க கூடியது. வெள்ளப் பெருக்கு மிக அதிக அளவில் இருந்தால் நைல் நெடுக்க இரு கரையோரமாக இருக்கும் எகிப்திய நகரங்களும் நீருக்குள் முழ்கிவிடும். வெள்ளம் வடிந்துவிட்டாலும் அதிக நீர் தேங்கிய நிலம் விவசாயம் செய்ய விடாமல் செய்துவிடும். அந்த வருடம் பஞ்சம்தான். நைலில் வெள்ளப் பெருக்கு குறைந்தாலும் பிரச்சனைதான். விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்துவிடும். பஞ்சம்தான்.

இதை சமாளிக்க நீர்பாசன முறைகளை எகிப்தியர்கள் கண்டுபிடித்திருந்தாலும் அது நிரந்தரத் தீர்வாக அமையவேயில்லை. நைலின் வெள்ளப் பெருக்கு என்பது அதிகரித்தாலும் சரி குறைந்துவிட்டாலும் சரி அளப்பரியது. நைலின் வெள்ளப் பெருக்கிற்கு உதாரணம் வெள்ள நீர் இரண்டு கறைகளையும் தாண்டி பாலைவன மணற்பரப்பில் ஏறி வழியக் கூடியது. எகிப்தின் வரலாறு நெடுக இந்த வெள்ள நீர் இரு கரைகளிலும் சில பாலைவனச் சோலைகளையும் உருவாக்கி இருக்கிறது. இத்தகைய சக்திப் படைத்த நைலின் வெள்ளப் பெருக்கை நிச்சயத் தன்மையுடன் நிதானிக்க முடியாது என்பதுதான் எகிப்தியர்களைப் பொறுத்த வரை அதன் பாதகமான விசயம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் நைலின் வெள்ளப் பெருக்கு நிச்சயத்தன்மையற்றது.

David Praveen's photo.
 
  எகிப்தியர்களின் வாழ்க்கை நைலோடு பின்னப்பட்டது என்பதால் அவர்களின் வாழ்க்கையும் நிச்சயமற்ற தன்மையை கொண்டதாக மாறிப்போனது. இந்த நிச்சயமற்ற தன்மையே எகிப்திய நாகரீகத்தின் சமூக, கலை, இலக்கிய, அரசியல் வாழ்வின் உள்ளுரை அம்சமாக இருக்க கூடியது. நைலின் நிச்சயமற்றத் தன்மையே தொல் பழங்கால எகிப்தியர்களை மரணத்தைக் குறித்து அதிகமதிகமாக சிந்திக்க வைத்திருக்கிறது. மரணத்தையும் மறு வாழ்வையும் கொண்டாட வைத்திருக்கிறது. எகிப்திய நாகரீகத்தை தவிர வேறு எந்த நாகரீகமும் மரணத்தை பிரம்மாண்ட சடங்குகளின் மூலமும் பிரம்மாண்ட கட்டிடங்களின் மூலமும் கொண்டாடியதில்லை. மரணத்தின் கடவுளான Osiris எகிப்திய நாகரீகத்தின் முழு முதற் கடவுளாக இருந்திருக்கிறார்.

தொல் பழங்கால எகிப்தியர்களின் உலகப் படைப்பு கோட்பாடும் நைல் நதியின் வெள்ளப் பெருக்கை அடிப்படையாக கொண்டதே. படைப்புக் கடவுளான Nun (பிற்காலத்தில் Ra கடவுளுக்கும் Nun கடவுளுக்கும் பெரும் வித்தியாசமில்லாமல் போனது) மிக மிக தொல் பழங்காலத்தில் நைல் நதியில் ஏற்பட்ட ஒரு வெள்ளப் பெருக்கு வடிந்தப் பிறகு உருவான மணல் முகடில் முளைத்திருந்த தாமரை மலரில் தோன்றியதாக கி.மு. 3000 வருடங்களுக்கு முற்பட்ட எலும்புத் துண்டு எழுத்துகள் சொல்கின்றன.

எகிப்திய மக்கள் செழிப்பான நிலப்பகுதியை kemet (கருமை) என்று அடையாளப்படுத்தினார்கள். மூன்று திசையிலும் பரந்து கிடக்கும் பாலைவனத்தை deshret (சிவப்பு) என்று அழைத்தார்கள். அன்றாடம் நேரம் தவறாமல் உதிக்கும் சூரியன் நைல் நதியின் இரு கரைகளிலும் இருக்கும் பயிர்களுக்கு உயிர் கொடுப்பதால் நைலின் இரு கரையையும் The Land of Living என்றார்கள் எகிப்தியர்கள். சூரியன் மறையும் திசையான மேற்கை மரணத்தின் குறியீடாகப் பார்த்ததால் மேற்கு திசையில் இருக்கும் பரந்த பாலைவனத்தை The Land of Dead என்று அழைத்தார்கள். இதன் காரணமாகவே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அரசர்களையும் பிற்காலத்தைய பாரோக்களையும் அடக்கம் செய்யவும் அவர்களுக்கான கல்லறைகளையும், மஸ்டபாக்களையும், பிரமிடுகளையும் கட்டவும் மேற்கு திசையிலிருந்த பாலைவனத்தை தேர்ந்தெடுத்தார்கள்.

நைல் நதி எகிப்தில் ஓடி மத்தியத் தரைக்கடலில் கலக்கும் வழி நெடுக்க பல சிறிய நீர்வீழ்ச்சிப் போன்ற அமைப்பை ஏற்ப்படுத்தி செல்கிறது. இதை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் first, second……cataracts என்று பிரித்திருக்கிறார்கள். இவைகளே சில மாநிலங்களின் எல்லைகளாக அமையக் கூடியவைகள். நார்மரின் காலத்தில் எகிப்தில் 42 மாநிலங்கள் இருந்திருக்கின்றன. இந்த மாநிலங்களைக் கட்டுப்படுத்த Nomarch-களை ஆளுநர்களாக நியமித்தான் நார்மர். பாரோக்களைவிட இந்த ஆளுநர்களையே எகிப்திய மக்கள் பெரிதும் சார்ந்திருந்தார்கள். நைலில் வெள்ளப் பெருக்கு பொய்த்துப்போனால் உண்டாகும் பஞ்சத்தைப் போக்க உடனடியாக செயல்படுபவர்கள் இவர்களே.

அடுத்த தொடரிலும்......

 .

பாகம் 19

எகிப்தின் உண்மையான அதிகாரம் என்பது அதன் மாநிலங்களின் ஆளுநர்கள் கைகளிலேயே இருந்தது. பாரோக்கள் இவர்களை தங்களின் கைகளுக்குள் வைத்துக்கொண்டதன் மூலமே எகிப்திய நாகரீகத்தை உச்ச நிலைக்கு கொண்டுபோனார்கள். இப்படி சொல்வது வேண்டுமானால் சாதரணமான காரியமாக இருக்கலாம் ஆனால் உண்மையில் மாநிலங்களின் ஆளுநர்களை வழிக்கு கொண்டுவர பாரோக்கள் அனைத்து விதமான சாத்தியக் கூறுகளையும் கையாண்டிருக்கிறார்கள். இவர்கள் மேல் படையெடுத்தும் கூட சென்றிருக்கிறார்கள்.

இவர்களை வழிக்கு கொண்டுவர பாரோக்களுக்கு இருந்த மிக எளிய வழி இவர்களுக்கு பட்டங்களையும் அதிகார சலுகைகளையும் வாரி வழங்குவது. இவைகள் எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான சலுகை ஆளுநர்களும் பாரோக்களுக்கு நிகராக மஸ்டபாக்களையும் கல்லறை கோயில்களையும் (mortuary temple) கட்டிக்கொள்ளலாம் என்பது. எகிப்தியர்கள் எப்படி மரணத்தை கொண்டாடக் கூடியவர்கள் என்பதை முன்பேப் பார்த்தோம். பாரோக்களைப் போல தங்களுக்கான மஸ்டபாக்களை கட்டிக்கொள்வது என்பது ஆளுநர்களுக்கு மிகப் மிகப் பெரிய மரியாதையையும் மதிப்பையும் கொடுக்க கூடிய விசயம். இந்த ஒரு சலுகைக்காகவே பரோக்களின் எல்லா கட்டளைகளுக்கும் தாளம் போடுவார்கள்.

பாரோக்கள் இப்படியான சலுகையை தருவது என்பது சாதாரணப்பட்ட காரியமல்ல அரசின் கசானாவையே தீர்த்துக்கட்டும் சலுகை இந்த சலுகை. ஒரு பாரோ எவ்வளவு ஆளுநர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இந்த சலுகையைத் தருகிறாரோ அவ்வளவிற்கு தன்னுடைய கசானாவிற்கு தானே வேட்டு வைத்துக்கொள்கிறார் என்று அர்த்தம். இருந்தாலும் முதல் பாரோவான நார்மர் தொடங்கி இந்த சலுகை மிகவும் நம்பிக்கையான அதே சமயத்தில் பணிவுள்ள Nomarch-களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதில் ஒரு நிபந்தனை உண்டு. பாரோவின் மஸ்டபாச் சுவர், மம்மியை வைக்கும் sarcophagus, கல்லறை கோயில் சுவர்கள் ஆகியவிற்றில் மட்டுமே மறு வாழ்வு பயணத்திற்கும் மறு வாழ்வு உயிர்தெழுதலுக்கும் உதவும் The Book of the Dead, The Book of the Breathing மற்றும் The Book of the Way புத்தகங்களின் பாடல்களையும் மந்திரச் சொற்களையும் எழுதவேண்டும்.

பாரோவைத் தவிர மற்றவர்கள் இந்த புத்தகங்களின் பாடல்களையும் மந்திரச் சொற்களையும் தங்களுடைய மஸ்டபாக்களிலும், கல்லறை கோயில்களிலும், சவப் பெட்டிகளிலும் (coffin) பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. காரணம் பாரோவே பூமியில் ரா மற்றும் ஓரஸ் கடவுள்களின் பிரதிநிதி என்பதால் அவருக்கு மட்டுமே மறு வாழ்வு உயிர்தெழுதலுக்காக இந்த மந்திரங்களையும் பாடல்களையும் பயன்படுத்தும் உரிமை இருந்ததாக கருதப்பட்டது. பாரவோவின் மனைவி உட்பட வேறு யாருக்கும் இந்த உரிமைக் கிடையாது என்று தடைச் செய்யப்பட்டிருந்தது.

இந்த சலுகைக் கிடைக்கப் பெறாதா அதே சமயத்தில் பாரோவின் தலைமைக்கு கட்டுப்பட விரும்பாத Nomarch-கள் பாரோனிக் (pharaonic) வரலாறு நெடுக தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்துக்கொண்டே இருந்தார்கள். நார்மருக்குப் பிறகு சுமார் 300 ஆண்டுகள் கழித்து பாரோக்களின் ஆட்சியை மிரட்டும் கிளர்ச்சி ஒன்று உருவானது. இரண்டாம் வம்ச காலகட்டத்தின் முடிவில் இது நடந்தது. நார்மர் உருவாக்கிய பாரோ வம்சம் முன்னூறே ஆண்டுகளில் முடிவிற்கு வர இருந்த சமயத்தில் பாரோ Khasekhemwy தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்த Nomarch-களின் மீது படையெடுத்து அவர்களை ஓட ஓட வேட்டையாடி கிளர்ச்சிகளை ஒரு முடிவிற்கு கொண்டுவந்தான். இது நடந்தது சுமார் கி.மு. 2650 வாக்கில். இவன் மட்டும் இல்லாது போயிருந்தால் எகிப்திய நாகரீகத்தின் தலையெழுத்து வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும். இவன் காலத்திற்கு பின்னால் வந்த பாரோ Khufu கட்டிய The Great Pyramid at Giza என்கிற உலக அதிசையங்களில் ஒன்று நமக்கு கிடைக்காமல் போயிருக்கும்.

(படத்திலிருப்பது பாரோ Khasekhemwy-யின் சிலை. இன்றையிலிருந்து 4000 வருடங்களுக்கு முற்பட்டது)

இவன் காலத்திற்கு பின்னால் தோன்றிய பாரோக்கள், தங்களுடைய ஆட்சி நிலைக்க வேண்டுமானால் மேலும் மேலும் அதிகமாக Nomarch ஆளுநர்களை சாந்தப்படுத்த வேண்டும் என்கிற இடைவிடாத நிர்பந்தத்தின் காரணமாக கண்ணில் படும் ஆளுநர்களுக்கெல்லாம் பிரமிடுகளும் அதோனோடு கூடிய கல்லறை கோயில்களையும் தங்களுடைய சொந்த செலவிலேயே கட்டிக் கொடுக்கும் சலுகைகளை வாரி வாரி வழங்கினார்கள். (பாரோ Khasekhemwy-க்கு அடுத்து பாரோவாக பதவியேற்ற பாரோ Djoser-யே உலகின் முதல் பிரமிடைக் கட்டியவன். இவன் கட்டியப் பிரமிட் Step Pyramid வகையைச் சேர்ந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் Pyramid-களின் தந்தைப் போன்றது இந்த Step Pyramid)

அடுத்த தொடரிலும்......

 

பாகம் 20

தன்னுடைய அரசவையைச் சேர்ந்தவர்களுக்கும் ஆளுநர்களுக்குமான பிரமிடுகளையும் கல்லறைக் கோவில்களையும் கட்டுவதுடன் மாத்திரம் ஒரு பாரோவின் கடமை முடிந்துவிடாது. (இவைகளுக்கே அரச கருவூலம் பாதி காலியாகிவிடும் என்பது வேறு விசயம்.) அவைகளில் உலகம் இருக்கும் வரைக்கும் வருடத்தின் 365 நாட்களுக்கும் நாளின் மூன்று வேலையும் உணவுகள் படைப்பதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும். எக்காரணத்தை கொண்டும் இந்த உணவு படைக்கும் காரியம் மட்டும் நிறுத்தப்படவே கூடாது. மேலும் அந்த கல்லறைக் கோயில்களை பராமரிக்கும் பூசாரிகளுக்கும் மாத சம்பளமும் கொடுத்தாக வேண்டும். இந்த காரியங்களில் சிக்கனத்தை கடைபிடிக்க முடியாது அப்படி செய்வது பாரோவிற்கு அவமானம்.

தன்னுடைய பிரமிட் மற்றும் கல்லறைக் கோயில்களை கட்டுவதும் அவைகளில் வருடம் முழுக்க உணவுப் படைக்க ஏற்பாடு செய்வதுமே ஒரு பாரோவிற்கு பெரும் பொருளாதார சுமையாக இருக்கும்போது தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஆளுநர்களுக்கும் இதை செய்வதென்றால் பாரோவின் அரச கருவூலம் தாக்குப்பிடிக்குமா? தாக்குப்பிடிக்கவில்லை. பாரோக்கள் ஆளுநர்களை அளவிற்கு அதிகமாக சாந்தப்படுத்த முயற்ச்சி செய்ததின் விளைவு, யாரை தங்களின் அதிகாரத்திற்கு கீழ் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவேண்டுமோ அவர்களையே பாரோக்கள் கையாளாகதாவர்களைப் போல மேலும் மேலும் சார்ந்திருக்கும்படியானது. இதுப் போதாது என்று பாரோவின் குடும்பத்தினரே பாரோவின் தனிப்பட்ட உரிமையில் (பிரமிடுகளிலும், சவப்பெட்டியிலும், கல்லறை கோவில்களிலும் எழுதப்படும் மறு வாழ்விற்கான மந்திரச் சொற்கள்) பங்கு கேட்டு பிரச்சனை செய்தார்கள்.

இதை முதலில் தொடங்கிவைத்தது ஆறாவது வம்சாவளியின் கடைசி பாரோவான Pepi II-வின் ஒன்றுவிட்ட சகோதரி Neith. இது நடந்தது கி.மு. 2200 வாக்கில். அவள் தன்னுடைய பிரமிடில் The Book of the Dead, The Book of the Breathing மற்றும் The Book of the Way ஆகியவைகளின் சடங்குப் பாடல்களையும் மந்திரச் சொற்களையும் எழுதிக்கொண்டால். பாரோவின் தனிப்பட்ட உரிமை பறிபோனது. பாரோவின் பலம் ஆதாள பாதாளத்திற்கு போய்விட்டது என்பதற்கான வெளிப்படையான மற்றும் வலுவான ஆதாரம் Neith இந்த நடவடிக்கை. இவளைத் தொடர்ந்து Nomarch-களும் தங்களுடைய பிரமிடுகளிலும் கல்லறைக் கோவில்களிலும் மறுவாழ்விற்கான மந்திரச் சொற்களை எழுதத் தொடங்கிவிட்டார்கள். வெந்தப் புண்ணில் உப்பை வைத்துத் தேய்க்கும் கதையாக பாரோ, Nomarch-களுக்கும் தன்னுடைய அரசவை சகாக்களுக்கும் சொந்த செலவில் கட்டித்தரும் பிரமிடுகளிலும் இந்த மந்திரச் சொற்கள் எழுதப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான்.

(புகைப்படத்தில் மணல்மேடாக இருப்பது பாரோ Ibi-யின் பிரமிடு)

பாரோக்களின் கருவூலம் தேய்ந்துக்கொண்டேப் போக Nomarch-களின் பலம் மீண்டும் வளர்ந்துக்கொண்டே வந்தது. இதன் விளைவு பாரோ Pepi II-க்கு பிறகு வந்த பாரோக்களால் அவர்களுடைய சொந்த பிரமிடுகளையே கட்ட முடியாமல்போனது. காரணம் பின்னால் வரும் பாரோக்கள் சேர்ந்தார்போல ஒரு வருடத்திற்கு ஆட்சியில் இருந்தாலே மிகப் பெரிய விசயமாக பார்க்கப்பட்டது. எகிப்திய கட்டிட வல்லுனர்கள் அந்த குறிப்பிட்ட பாரோவின் பிரமிடிற்கான அஸ்திவார பணிகளைக் கூட முடித்திருக்க மாட்டார்கள் நிமிர்ந்துப் பார்த்தால் அந்த பாரோவிற்கு பதிலாக ஆட்சியில் வேறு ஒரு பாரோ உட்கார்ந்திருப்பார். சரி இந்த பாரோவிற்கே இந்த பிரமிடை கட்டிவிடலாம் என்று சுற்றுச் சுவரை எழுப்பிவிட்டு உட்காரும் நேரத்தில் வேறு ஒரு பாரோ ஆட்சியில்.

எட்டாவது வம்சாவளி காலகட்டத்தின் (கி.மு. 2175 - 2125) இடைப்பட்ட ஆண்டுகளில் அஸ்திவாரம் எடுக்கப்பட்டு அந்த நிலையிலேயே கைவிடப்பட்ட பாரோகளின் பிரமிடுகள் நிறைய உண்டு. இந்த காலகட்டத்தை சேர்ந்த பாரோ Ibi மட்டுமே பிரமிடு கட்டும் அளவிற்கு முழுமையாக ஆட்சியிலிருந்தவன். இப்படி ஊசலாடிக்கொண்டிருந்த பாரோக்களின் வல்லமை எட்டாவது வம்சாவளியின் இறுதி பாரோ Neferirkara-வோட முடிவிற்கு வந்தது. Nomarch-களின் பலம் முழுமையாக பாரோனிக் சகாப்தத்தை சாய்த்துவிட்டது. முதல் பாரோ நார்மர் தொடங்கிவைத்த பாரோ வம்சம் மம்மியாகி பிரமிடிற்குள் போய்படுத்துக்கொண்டுவிட்டது. அது மீண்டும் உயிர்தெழவைக்கப்பட அடுத்த 100 வருடங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பல மாநிலங்களாக பிரிந்துக் கிடந்த எகிப்தில் மிகவும் பலம் பொருந்திய மாநிலமாக இருந்தது Herakleopolis (இன்றைக்கு இது Ihnasya el-Medina நகரம்) இது எகிப்தின் மத்தியப் பகுதி. இதன் அரசனாக இருந்தவன் Kheti. மிக கொடூரமான அரசனாக இருந்தவன் என்று எகிப்திய வரலாற்று ஆசியிரியர் Manetho பதிவு செய்கிறார். எகிப்தின் அடுத்த பாரோவாக வந்துவிடவேண்டும் என்கிற முனைப்பில் மற்ற மாநிலங்களின் ஆளுநர்களின் மீது படையெடுத்து அகப்படும் ஆளுநர்களை கொடூரமாக கொலை செய்துக்கொண்டிருந்தான். தன்னை எதிராக மூச்சுக் கூட விடக்கூடாது என்பதை மறைமுகமாக தெளிவாக்கியது அவனுடைய செயல்கள்.

அடுத்த தொடரிலும்......




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..