Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’!
Posted By:peer On 7/10/2015 12:58:57 PM

ஒரு பேருந்தின் நடத்துநர் எப்படி இருப்பார்? அவருக்கு தெரிந்த வார்த்தைகள் என்னவாக இருக்கும்?

கொஞ்சம் சிடு சிடு முகத்துடன், ‘சார்.. டிக்கெட்… டிக்கெட்… சில்லறையா கொடுங்க.. படிக்கட்டுல நிக்காதீங்க… உள்ள வாங்க… காலங்காத்தால 100 ரூபா நோட்டக் கொடுத்து இம்சை பண்ணா எப்படிங்க?’

ஆனால் கனகு சுப்பிரமணியைப் பார்த்தால், உங்கள் நினைப்பு அடியோடு மாறிப் போகும். பாட்ஷா பார்த்த பிறகு ஆட்டோக்காரர்களை பரிவுடன் பார்க்கத் தொடங்கியது போல, கனகுவைப் பார்த்த பிறகு கண்டக்டர்கள் என்றதும் ஒரு மரியாதை வந்துவிடும்.

அப்படி என்னதான் பெரிதாக செய்துவிட்டார் கனகு?

பெரிதாக அல்ல… தன்னால் முடிந்த ஒரு நல்ல விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.

எல் கனகு சுப்பிரமணியம் ஒரு அரசுப் பணியாளர். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநர் பணி.

கனகுவின் காலை திருக்குறளுடன் விடிகிறது. ஒரு குறளையும், அதற்கான விளக்கத்தையும் நன்கு படித்து வைத்துக் கொள்கிறார். ஓரிரு திருக்குறள் புத்தகங்களையும் உடன் எடுத்துக் கொண்டு மேட்டுப்பாளையும் பேருந்து நிலையத்துக்கு வருகிறார். காலையில் கிளம்பும் முதல் பேருந்தில் தன் பணியை ஆரம்பிக்கிறார். பயணிகளுக்கு சீட்டு கொடுத்துவிட்டு, அமர்கிறார்.

காலை 7.15 மணிக்கு பேருந்து கல்லார் என்ற இடத்தில் சில நிமிடம் நிற்கிறது. உடனே செயலில் இறங்குகிறார் கனகு. டிக்கெட் பையை வைத்துவிட்டு, பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணிகளை நோக்கி, “அன்பு பயணிகளுக்கு… காலை வணக்கம். உங்களுடைய இரண்டு நிமிடத்தை எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டுவிட்டு, ஒரு திருக்குறளையும் அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார் கனகு.

காலை நேர இதமான குளிரில், கனகுவின் திருக்குறள் விளக்கம் பயணிகளை சிலிர்க்க வைக்கிறது. அத்தோடு நில்லாத கனகு, அடுத்து பேருந்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், சாலையில் பாதுகாப்புடன் செல்லுங்கள் என பொதுவான விழிப்புணர்வு செய்திகளை சொல்கிறார்.

“பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், முடிந்த வரை மரங்கள் வளர்ப்போம், அட நட முடியாவிட்டாலும் பரவாயில்லை.. இருக்கும் மரங்களை அழிக்காமல் இருப்போம். ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்வோம், பல உயிர்களைக் காக்க அது உதவும்,” என்பதுடன் அவரது அன்றாட விழிப்புணர்வு பரப்புரை நிறைவடைகிறது.

அத்தோடு நில்லாமல், அடுத்து அவர் செய்வது பயணிகளை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அந்தப் பேருந்தில் பயணிப்பவர்களில் யாராவது பிறந்த நாள் அல்லது திருமண நாள் கொண்டாடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தைப் பரிசளிக்கிறார்.

அப்படி யாருமே கொண்டாடவில்லை என்றால், அந்தப் பேருந்தில் பயணிக்கும் ஒரு ஆசிரியர் அல்லது போலீஸ்காரருக்கு அந்தப் புத்தகத்தைக் கொடுத்து கவுரவிக்கிறார். அட, அலுவலகத்தில் ஓய்வு பெற்ற யாராவது வந்தாலும் இந்தப் பேருந்திலேயே பிரிவுபசார விழாவும் உண்டு!

இவ்வளவையும் மிகச் சில நிமிடங்களில் முடித்துவிட்டு, மீண்டும் பயணிகளுக்கு வாழ்த்துக் கூறுகிறார் கனகு. பேருந்து ஊட்டியௌ நோக்கிச் செல்ல, புது உற்சாகம், நிறைவான மன நிலையுடன் தொடர்கின்றனர் பயணிகள்.

கனகு சுப்பிரமணியத்துக்கு வேண்டியதெல்லாம் இந்த சந்தோஷமும் நிறைவும்தான். தன்னைப் பொறுத்தவரை, பயணிகளும் அவரது குடும்பத்தினரைப் போன்றவர்களே என்கிறார் கனகு. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரையிலான அந்த சிலமணி நேரப் பயணம் பயணிகளுக்கு பயனுள்ளதாக, விழிப்புணர்வு தருவதாக, மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என்பதுதான் அவரது இந்த பணியின் நோக்கம்.

எப்போதிலிருந்து இந்த சேவையை அவர் செய்கிறார்?

“ஒரு முறை இரு பயணிகள், பேருந்துக்குள் எழுதப்பட்டிருந்த குறள்களைக் காட்டி, இதுக்கெல்லாம் கண்டக்டருக்கும் டிரைவருக்கும் அர்த்தம் தெரியுமா?” என்று கிண்டலாகக் கேட்டனர். அன்று ஆரம்பித்ததுதான் இந்த திருக்குறள் பணி,” எனும் கனகு கடந்த 10 ஆண்டுகளாக திருக்குறள் புத்தகங்களைப் பரிசளித்து வருகிறார். பல நூறு பேர் இவரிடம் திருக்குறள் பரிசு பெற்றுள்ளனர்!

கனகுவின் இன்னொரு முக்கியப் பணி, தனது ஓய்வு நேரத்தில் கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு இலக்கிய வகுப்பு எடுப்பது. “சிறையில் உள்ள கைதிகள் விடுதலையாகி திரும்பும்போது மீண்டும் குற்றச் செயல்களுக்கு அவர்கள் மனம் செல்லக் கூடாது. அதற்கு இந்த வகுப்புகள் உதவக்கூடும். யார் கண்டார்கள், நாளை அவர்களில் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் கூட உருவாகக் கூடும்,” என்கிறார்.

இதுதவிர, இந்தக் கைதிகளுக்காகவே ஒரு இசை ஆசிரியரை தனது செந்தமிழ் அறக்கட்டளை மூலம் நியமித்துள்ளார். வாராவாரம் இவர் கைதிகளுக்கு இசை சொல்லித் தருகிறார். கைதிகளிள் திறமையுள்ளவரைப் பாட வைக்கவும் செய்கிறார்கள்.

வருகிற மகளிர் தினத்தன்று, சிறையில் உள்ள பெண் கைதிகள் இடையே ஒரு கருத்தரங்கமும் நடத்த திட்டமிட்டுள்ளார் கனகு.

பெண் கைதிகள் உள்ள பிரிவில் கனகுவை அடிக்கடி பேசச் சொல்லி கேட்பார்களாம். பழைய பாடல்கள், குறிப்பாக எம்ஜிஆர் பாடல்களை அருமையாகப் பாடுகிறார் கனகு. பெண் கைதிகள் மத்தியில் இவர் பாட்டுக்கு ஏக வரவேற்பு. குறிப்பாக ‘தாயில்லாமல் நானில்லை…’ என்ற பாடலைப் பாடும்போதெல்லாம், பாடும் இவரும், கேட்கும் பெண்களும் கண்ணீர் வடிப்பது வழக்கம் என்கிறார்.

தன்னுடைய இந்தப் பணிக்கு, சிறு வயதில் தான் கஷ்டப்பட்ட போது உதவிய ஆசிரியர் அற்புதராஜ்தான் காரணம் என்று நினைவு கூறும் கனகு, வாழ்க்கையில் தனக்கு வழிகாட்டியாகக் கூறுவது புரட்சித் தலைவர் எம்ஜிஆரைத்தான்.

“சின்ன வயதிலிருந்தே அவர் படத்தைத்தான் பார்த்து வளர்ந்தேன். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஒழுக்கம் தவறாமை, நல்ல பழக்கங்கள், பெரியவர்களை மதித்தல், முடிந்த உதவியைச் செய்தல் என எல்லாவற்றுக்கும் அவர்தான் எனக்கு வழிகாட்டி. எம்ஜிஆர் பாடல்களைப் பாடாமல் நான் என் பேச்சை ஒருபோதும் முடித்ததில்லை,” என்கிறார் உணர்ச்சிப் பொங்க!


-மணி நெல்லை






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..