Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
தின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மது
Posted By:Hajas On 1/13/2015 3:17:23 AM

benadryl pregnancy rating

benadryl pregnancy second trimester

 

 

நெஞ்சைத் தொட்டவை!
நினைவுகளைச் சுட்டவை!

தின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மது அவர்கள் தன் முகநூல் தளத்தில் பதிந்த்துள்ள தகவல்கள் மிக அருமையாக இருந்தது.

தின்னைகளோடு தொடர்புடைய அத்தனை விஷயங்களையும் ஒன்று விடாமல் எழுதியிருப்பது நம்மில் பலரது பழைய நினைவுகளை நிச்சயம் நிழலாட வைக்கும்.

ஏர்வாடி பீர் முஹம்மது அவர்களுக்கு நமது பாராட்டுகளும், நன்றிகளும்......

இதோ நீங்களும், வாசிக்க........

‪#‎peer‬ mohamed

நம் முன்னோர்களின் பண்பாட்டு கலாச்சாரங்களில் ஒன்று தான் "திண்ணைக் கலாச்சாரம்"

நமது உணவில், உடையில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதைப் போலவே தற்போது நம் உறைவிடங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களிலும் வீடுகளின் அமைப்புகள் மாறிவிட்டன.

வீடு என்றால் வரவேற்பறை (தெரு வீடு), தார்சா அல்லது கூடம் (ஹால்) அதில் ஒரு முற்றம், தோடத்து வீடு அல்லது அறை வீடு (தானியங்கள் போட்டு வைக்கத் தனி அறை - குதுல் அல்லது உமல்), அதையொட்டி அம்மிக்கல், ஆட்டு உரல், உலப்படி (மாவிடிப்பதற்கென பிரத்தியேகக் கல்), அதற்கடுத்து அடுப்படி, அடுப்பாங்கறை அல்லது சமையல் அறை, அதையொட்டி விசாலமான பைப்படி - இதில் அடி பம்பு, குளிப்பதற்கு விசாலமான இடம், துணிகளை துவைப்பதற்கு கல், தண்ணீர் தொட்டி - அடுத்து ஒரு சிறிய தோட்டம், தோட்டத்தில் ஒரு கழிப்பறை, ஆடு, மாடு கன்றுகள் வசிக்கத் தொழுவங்கள், கோழி மாடம், அதோடு சேர்த்து வீட்டின் பின் பக்கத்தில் மாவு வறுப்பதற்கு ஒரு அடுப்பு, பெரிய அளவில் சமையல் செய்வதற்கு என விசாலமான ஒடு மேற் கூரையுடன் கூடிய ஒரு பிரத்தியேக இடம், புறவாசல் என பழங்காலத்தில் வீடு என்ற அமைப்பு விசாலமாக இருந்தது.

இவைகள் எல்லாம் போக ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதமாகத் திண்ணையையும் கொண்டிருந்தது. திண்ணைகளும் வீட்டுக்கு வீடு வித்தியாசமாக இருக்கும். அவரவர்கள் வசதி வாய்ப்புக்கு ஏற்பத் திண்ணைகளை அலங்காரமாகவும், விஸ்தாரமாகவும் கட்டினார்கள். ஓலைக்குடிசை கட்டினாலும் அதிலும் ஒரு சிறிய ஒட்டுத் திண்ணை வைத்துக் கட்டினார்கள். திண்ணைகள் இல்லாமல் கட்டப்பட்ட வீட்டை காண்பதென்பதே மிகவும் அரிதாக இருக்கும்.

திண்னை உள்ள வீட்டில் வாழ்ந்தவர்கள் பெற்ற அனுபவங்கள் பலவாகும். அந்தக் காலத்தில் திண்ணையில் மாலை நேரத்தில் அப்பாமார்கள் (வயதான தாத்தாக்கள்) உட்கார்ந்து குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். கதை சொல்லிகளுக்குத் திண்ணை ஒரு களமாகப் பயன்பட்டது. கதைகளைக் கேட்கும் பிள்ளைகளுக்கும் திண்ணை ஒரு தளமாகப் பயன்பட்டது. ஒவ்வொரு வீட்டுத் திண்ணையும் கதை சொல்லும் கலை மூலம் மறைமுகமான கல்விப் புலமாகத் திகழ்ந்தது.

முன் இரவில் கண்ணுமாக்களும், வாப்பம்மாக்களும் (பாட்டிக்கள்) திண்ணையில் உட்கார்ந்து பேரப்பிள்ளைகளுக்கும், பேத்திகளுக்கும் கதைகள் சொல்லுவார்கள். அதிகாலையில் கோழிகளும் குஞ்சுகளும் திண்ணையில் கொஞ்சி விளையாடும். மாலைப் பொழுதில் சிறுவர்களுக்குத் திண்ணை விளையாட்டுக் களமாக மாறும். திண்ணையில் உள்ள தூண்களைச் சுற்றி விளையாடுவது, தொட்டுப்பிடித்து விளையாடுவது என்று மாலைப் பொழுது கலகலப்பாக இருக்கும்.

காலைச் சாப்பாட்டிற்குப் பிறகு சில வீட்டுத் திண்ணைகளில் வழக்கமாக வாலிபர்கள் கூடி தாயக் கட்டம், சோளி, பாரா முதலிய விளையாட்டுக்களை விளையாடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வெளியூரில் வேலை செய்து விடுப்பில் ஊர் வந்தவர்கள், படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், வேலை வெட்டியில்லா இளைஞர்கள் என இந்த பட்டியல் நீளும்.

பல லெப்பைமார்களின் வீட்டுத் திண்ணைகள் காலையிலும், மாலைப் பொழுதிலும் குர்ஆனை ஓதக் கற்றுத் தரும் மதரஸாக்களாக இருக்கும். பல ஆசிரியர் வீட்டுத் திண்ணைகள் மாலை வேளைகளில் (டியூஷன்கள்) வகுப்பறைகளாகும். வைத்தியர்கள் தங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தே நோயாளிகளுக்குக் கைப்பிடித்துப் பார்த்து சூரணம், லேகியம் கொடுத்து அனுப்பி விடும் மருத்துவமனைகளாக இருந்தன.

சிலர் திண்ணையிலேயே கடை வைத்து நடத்துவார்கள். இதற்குத் திண்ணைக் கடை என்று பெயர். அந்தக் காலத்தில் மாடு கன்றுகளை, ஆடுகளை, குட்டிகளைத் திண்ணையில் உட்கார்ந்து விலைபேசி விற்று விடுவார்கள். தெருவில் காய்கறி, மீன் முதலியவற்றை விற்பவர்கள் தங்கள் தலைச்சுமையைத் திண்ணையில் இறக்கி வைப்பார்கள். அந்தச் சிறு வியாபாரிகளிடம் திண்ணையில் உட்கார்ந்தபடியே தங்கள் வீட்டிற்குத் தேவையான பொருள்களைப் பேரம் பேசி வாங்கிக் கொள்வார்கள் வீட்டுப் பெண்கள். திண்ணையை ஒட்டியுள்ள சுவரில் பல குறியீடுகள், புள்ளிகள் காணப்படும். அவை பால் கணக்குகள் மற்றும் மோர்க் கணக்குகளாக இருக்கும். பால்க் காரர்கள் ஒவ்வொரு நாளும் பால் ஊற்றியதும் திண்ணையை ஒட்டிய சுவரில் ஒரு புள்ளியை இட்டுச் செல்வார். மாதக் கடைசியில் எத்தனை நாள் இந்த வீட்டுக்கு பால் ஊற்றினோம் என்று அந்த புள்ளிகளை வைத்துக் கணக்குப் பார்த்துச் சொல்லுவார்.

கோடைகாலத்தில் வெயிலோடு நடந்து வருகிற வழிப் போக்கர்களுக்குத் திண்ணையில் அமர்ந்திருக்கும் மூதாட்டிகள் நீர்மோர் கொடுத்து அவர்களின் தாகத்தைத் தீர்த்து வைத்தார்கள்.

சில முக்கியஸ்தர்களின் வீட்டு திண்ணைகளில் அடிக்கடி மக்கள் கூடி நிற்பார்கள். முக்கியஸ்தர் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து வாதியின் வாதத்தையும் பிரதிவாதியின் வாதத்தையும் கேட்டு அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை பைசல் செய்வார். (வழக்கிற்குத் தீர்ப்பு வழங்குவார்). இப்படிச் சில வீட்டுத் திண்ணைகள் நீதிமன்றங்களாகவும் திகழ்ந்தன.

பல வீடுகளின் திண்ணைகள் இசைமுரசுகளையும், இளையராஜாக்களையும், மேடைப் பேச்சாளர்களையும், பாடகர்களையும், கவிஞர்களையும், அரசியல்வாதிகளையும், மார்க்க அறிஞர்களையும் உருவாக்கி கொண்டு இருக்கும்.

மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு முதியவர்கள் திண்ணைக்கு வந்து கொஞ்ச நேரம் காத்தாடக் கட்டையைச் சாத்துவார்கள். வேனிற்காலத்தில் வீட்டில் உள்ள பெரியவர்கள் இரவில் திண்ணையில் படுத்துக் கொள்வார்கள். வீட்டுத் திண்ணையிலேயே படுத்து உறங்கத் தலைக்குச் சிறிய திண்டு வைத்துக் கட்டி இருப்பார்கள். அதில் தலை வைத்துப் படுத்துக் கொள்வார்கள்.

வயதுக்கு வராத இளம் பெண்கள் கருக்கல் நேரத்தில் திண்ணையில் கூடுவார்கள். அங்கே அவர்களுக்குப் பேசி மகிழ நிறையச் செய்திகள் இருந்தன. சில பெண்கள் பல்லாங்குழி விளையாட ஏற்ற இடமாக திண்ணையைத் தேர்ந்தெடுப்பார்கள்.

பெருநாட்கள், பண்டிகை காலங்களில் திண்ணைகளும் அலங்கரிக்கப்படும். பண்டிகைக் காலங்களில் சிறுவர்கள் திண்ணையை ஆக்கிரமித்துக் கொள்வார்கள். பெருநாட்களில் முன்னிரவு நேரங்களில் கம்பி மத்தாப்பு, தரை சக்கரம், புஸ்வானம் என்று பட்டாசுக்களை கொளுத்தி விளையாடுவார்கள் திண்ணைகளில். இரவு உணவை முடித்ததும் அதே திண்ணை (பெருநாட்கள்களின் இரவுகளில்) வயதிற்கு வந்த திருமணமாகாத இளம் குமரிகளுக்கு ஊஞ்சலாடும் கூடமாக மாறும்.

எல்லாவற்றிற்கும் மேலாகத் திண்ணைகள் கணவன் – மனைவியின் ஊடல் தீர்க்கும் வாயிலாகவும் பயன்பட்டது. கணவன் – மனைவிக்கு இடையே இரவில் சிறு சண்டை வந்தால், கணவன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு, வீட்டின் தலைவாசல் படியைத் தாண்டி வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொள்வான், அல்லது திண்ணையில் உள்ள திண்டில் சாய்ந்து படுத்திருப்பான். கோபத்தில் தெருவில் இறங்கி அவனை நடக்கவிடாமல் திண்ணை தடுக்கும்.
மனைவிக்கும், கணவன் திண்ணையைத் தாண்டிப் போய் இருக்க மாட்டார் என்று தெரியும். எனவே வீட்டை விட்டு வெளியே வந்து மனைவியும் திண்ணையில் உட்கார்ந்திருக்கும், கணவனைப் பார்த்து இப்ப என்ன சொல்லிட்டேன்னு இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க. அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க பார்த்தா என்ன நினைப்பாங்க? எதுவாக இருந்தாலும் வீட்டுக்குள்ள வச்சிப் பேசிக்கிடலாம், வீட்டுக்குள்ள வாங்க! என்று கூப்பிடுவாள். கணவனுக்கும் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது. ஊடல் தீர்ந்து வீட்டிற்குள் சென்று விடுவான்.

ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் என்று ஏதும் இல்லாத அந்தக் காலத்தில் திண்ணைகள்தான் தங்கும் விடுதிகளாகவும் வழிப்போக்கர்கள் உணவு உண்டு பசியாறும் ஹோட்டல்களாகவும் இருந்தன. வந்த வழிப்போக்கர் எந்த ஊரைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம், எந்த வண்ணத்தைச் சார்ந்தவராகவும் இருக்கலாம், முன்பின் அறிமுகமில்லாத அந்தப் புதியவருக்கும் விருந்து கொடுத்துப் பசியை அமர்த்தும் பண்பாடு நம் முன்னோர்களுக்கு இருந்தது.

திண்ணையோடு வாழ்ந்த மனிதர்கள் ஒரு விதத்தில் கொடுத்து வைத்தவர்கள்தான். மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்து இறப்பு வரை திண்ணையின் பயன்பாடு என்பது இப்படியெல்லாம் இருந்தது. நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்த திண்ணைகளை இன்று கிராமங்களில்கூடப் பார்க்க முடியவில்லை. நாம் இழந்துவிட்ட பண்பாட்டுச் செல்வங்களில் திண்ணைக் கலாச்சாரமும் ஒன்றாகும்.

 

 

https://www.facebook.com/permalink.php?story_fbid=430315913791956&id=386252861531595




Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..