Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்!
Posted By:peer On 4/25/2014 12:20:46 AM

 

மாலேகான், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் ஆகிய இடங்களில் 119 பேரைப் பலி வாங்கிய குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்.  ‘காவி பயங்கரவாதம்’ எவ்வளவு கொடூரமானது என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர்.

அசீமானந்தா துறவிதான் என்றாலும் அவர் தனிமனிதரல்லர்.  அவரும் அவருடைய கருத்தியலும் செயல்பாடுகளும் ஒரு மாபெரும் பயங்கரவாதச் சதித்திட்டத்தின் அங்கங்கள்.  காரவன் ஆங்கில இதழின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் லீனா கீதா ரெங்கநாத்திற்கு அசீமானந்தா அளித்த பிரத்யேகப் பேட்டியில் அச்சதித்திட்டத்தின் ப்ளூபிரின்ட் விரவிக் கிடக்கிறது.

அசீமானந்தாவின் சட்டபூர்வமான வாக்குமூலங்களிலும் பத்திரிக்கையாளர் லீனாவிற்கு அவர் அளித்த பேட்டியிலும் குறிப்பிட்டிருக்கும் சில நிகழ்வுகளையும் தொடர்புடைய சில சம்பவங்களையும் தேதிவாரியாக வரிசைப்படுத்திப் பார்ப்போம்.

1970 – 1990: அந்தமான் நிகோபார் தீவுகளில் வசிக்கும் ஏராளமான பழங்குடி மக்கள் கிருஸ்துவ மிஷினரிகளால் கவரப்படுவதைக் கண்டு 1970களில் ஆர்.எஸ்.எஸ் கவலைப்பட ஆரம்பித்தது.  அந்த முயற்சிகளை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு அசீமானந்தாவை ஆர்.எஸ்.எஸ் அந்தமானுக்கு அனுப்பி வைத்தது.  தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை அசீமானந்தா அந்தமானிலேயே முழுநேரம் வசித்து வந்தார்.  அதன்பிறகு அங்கிருந்து வெளியேறிய அவர் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்யவாரம்பித்தார்.

1996: வனவாசி கல்யாண் சார்பில் அசீமானந்தா சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தபோது 1996ல் முதன்முறையாக டாங்க்ஸ் பகுதிக்கு வந்தார். குஜராத்தின் தெற்குக் கோடியில் இருக்கும் மிகச் சிறிய, மக்கள் தொகை மிகவும் குறைவான மாவட்டம் டாங்க்ஸ்.  மொத்த மக்கள் தொகையான இரண்டு லட்சம் பேரில் 93 சதவிகிதம் பேர் பழங்குடியினர்.  மாவட்டத்தின் 75 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிப்பவர்கள்.  ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலிருந்து இங்குப் பல்வேறு கிறுஸ்துவப் பிரிவினர் இயங்கி வருகின்றனர்.  ‘தாம் முழுநேரம் தங்கியிருந்து, தமக்கு நன்கு தெரிந்த வேலையான பழங்குடியினரை இந்து மதத்தின் பக்கம் இழுப்பதைச் செய்வதற்கு டாங்க்ஸ் ஏற்ற இடம்’ என்பதை உணர்ந்த அசீமானந்தா 1998-ல் வாகாய் பகுதியில் தம் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார்.

1998 – 2000: டாங்க்ஸ் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கிருஸ்துவ அமைப்புகள் அசீமானந்தாவின் முதல் இலக்காயின.  ஜூன் 1998ல் ஒரு பேரணிக்காக வெளியிடப்பட்ட பிரசுரம், “ஹிந்துக்களே வருக.. திருடர்கள் ஜாக்கிரதை!” என்றது.  “நம் மாவட்டத்தின் எரியும் பிரச்னை என்பதே இங்கே கிறித்துவ போதகர்கள் நடத்தும் அமைப்புகள்தான்.  சேவை முகமூடி அணிந்துக் கொண்டு அந்த சாத்தான்கள் ஆதிவாசிகளைச் சுரண்டுகிறார்கள்.  பொய்யும் ஏமாற்றும்தான் அவர்களுடைய வேதம்” என்று இந்துக்களை உசுப்பேற்றியது அந்தப் பிரசுரம்.

“மதமாற்றத்தைத் தடுப்பது மிகவும் சுலபம்.  மத வழியைத்தான் பயன்படுத்த வேண்டும்.  ஹிந்துக்களை மதவெறியர்களாக ஆக்கினால் போதும்.  மீதியை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்” - அசீமானந்தா.

டிசம்பர் 1998-லிருந்து வன்முறை தொடங்கி விட்டது.  வனவாசி கல்யாணிலிருந்து உதயமான ஹிந்து ஜாக்ரன் மஞ்ச், பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரீஷத் ஆகியற்றின் உறுப்பினர்கள் 1998 கிருஸ்துமஸ் தினத்தன்று அஹ்வாவிலிருக்கும் டீப் தர்ஷன் உயர்நிலைப்பள்ளியைத் தாக்கினார்கள்.  பின் 30 கி.மீ. தள்ளி சுபீர் என்ற ஊரில் இருந்த பள்ளி, அங்கிருந்த தானியக் கிடங்கு, காத்வி கிராமத்திலிருந்த கிறிஸ்துவ தேவாலயம், பக்கத்து கிராமங்களிலில் இருந்த இரு தேவாலயங்கள் ஆகியவை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாயின.  அடுத்த நாளும் வன்முறை வெறியாட்டம் தொடர்ந்தது.  டாங்க்ஸ் பகுதியிலிருந்த ஆறு கிராம தேவாலயங்கள், கிருஸ்துவப் பழங்குடியினரின் வீடுகள், முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் நடத்தி வந்த கடைகள் ஆகியவை தாக்கப்பட்டன.  வெறியாட்டம் பத்து நாட்களுக்குத் தொடர்ந்து நடந்தது.  “மொத்தம் 30 கிறித்துவ தேவாலயங்களை இடித்துத் தள்ளிவிட்டு நாங்கள் கோயில்கள் கட்டினோம்.  கொஞ்சம் மோதல் இருந்தது.” என்று பெருமையுடன் சொல்கிறார் அசீமானந்தா.

“மதமாற்றத்தைத் தடுப்பது மிகவும் சுலபம்.  மத வழியைத்தான் பயன்படுத்த வேண்டும்.  ஹிந்துக்களை மதவெறியர்களாக ஆக்கினால் போதும்.  மீதியை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்” என்று பத்திரிக்கையாளர் லீனாவிடம் தெரிவித்தார் அசீமானந்தா.

இந்தக் கலவரங்கள் நிகழ்ந்த காலத்தில் குஜராத்தின் முதல்வராக இருந்தவர் பா.ஜ.க-வின் கேஷுபாய் பட்டேல்.  மத்தியில் வாஜ்பாய் பிரதமர்.  அசீமானந்தா நிகழ்த்திய கலவரங்கள் டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தின.  அஹ்வாவுக்கு நேரில் வந்த சோனியா இவை “இதயத்தை நொறுங்க வைக்கும் கொடுமைகள்” என்று வர்ணித்தார்.  எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காக அன்றைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, கேஷுபாய் பட்டேலை அழைத்து அசீமானந்தாவைக் கட்டுப்படுத்தச் சொன்னார்.  அவர் அசீமானந்தாவின் வேலைகளைத் தடுத்து நிறுத்தினார்.  அவருடைய ஆட்களை கைது செய்தார்.  

இந்தச் சூழ்நிலையில்தான் மோடி என்ட்ரி ஆகிறார்.  அகமதாபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்தத் தலைவர்கள் சந்திப்பில் அசீமானந்தாவைச் சந்தித்த மோடி “கேஷுபாய் உங்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.  நீங்கள் செய்வதுதான் அசல் வேலை.  இப்போது நான்தான் அடுத்த முதலமைச்சர் என்று தீர்மானமாகிவிட்டது.  நான் வந்ததும் உங்கள் வேலையை நானே செய்வேன்.  எல்லாம் சுலபமாகிவிடும்” என்று நம்பிக்கையூட்டினார்.

2001 - 2002: “நான் வந்ததும் உங்கள் வேலையை நானே செய்வேன்” என்ற மோடியின் வாக்குறுதி விரைவிலேயே நிறைவேற்றப்பட்டது.  அக்டோபர் 2001-ல் மோடி குஜராத்தின் முதல்வரானார்.  நான்கே மாதங்கள் கழித்து 27 பிப்ரவரி 2002-ல் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ராவில் கொளுத்தப்பட்டது.  தகவல் தெரிந்தபோது சட்டசபையில் இருந்த மோடி “இந்துக்கள் இப்போது விழித்துக் கொள்ள வேண்டும்” என்று சொன்னதாக அவருக்கு அருகில் இருந்த அமைச்சர் சுரேஷ் மேத்தா பிறகு ஒரு விசாரணையில் தெரிவித்தார்.

கோத்ராவில் பதட்டமான சூழ்நிலை நிலவியபோது முதலமைச்சர் மோடி குஜராத் வி.எச்.பி பொதுச் செயலாளரான ஜெய்தீப் பட்டேலை அழைத்து அவரை கோத்ராவிற்குப் போகச் சொன்னார்.  அவர் வி.எச்.பி தொண்டர்களையும் பிற இந்துக்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்டார்.

ஒரு சம்பவம் நடந்த உடனேயே அது பற்றிய விசாரணைகள் தொடங்குமுன்னரே அம்மாநில முதல்வர் ‘இது இந்துக்கள் மீதான முஸ்லிம்களின் தாக்குதல்’ எனத் தீர்மானித்து இந்துத்துவ மதவாத அமைப்புகளைத் தூண்டிவிட்டுக் கலவரத்தை உண்டாக்குகிறார் என்றால் அப்படி ஒரு சம்பவம் நிகழப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் அறிந்திருந்தாரா என்ற கேள்வி எழுகிறது.  எதிர்பாராத நிகழ்வு என்றால் யாராக இருந்தாலும் அதன் காரண காரியங்களைப் பற்றி விசாரிக்கத்தான் முனைந்திருப்பார்கள்.  ஆனால் மோடியின் நடவடிக்கைகளில் ‘விசாரணையில் உண்மை வெளிப்படுமுன் கலவரங்களை நிகழ்த்தி முடித்துவிட வேண்டும்’ என்ற அவசரம்தான் தென்படுகிறது.

கோத்ரா விபத்துப் பகுதி மதவாத விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் காரியங்கள் மளமளவென்று நடந்தன. சட்ட நடைமுறைகளுக்கு மாற்றமாக எரிந்தவர்களின் உடல்கள் மதவாத அமைப்பினர் வசம் ஒப்படைக்கப் பட்டன.  அந்த உடல்கள் அகமதாபாத் வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.  பதட்டநிலை மாநிலமெங்கும் பற்றவைக்கப்பட்டது.

28 பிப்ரவரி அன்று தொடங்கிய கலவரம் மாநிலமெங்கும் கொழுந்துவிட்டு எரிந்தது.  2000-லிருந்து 3000 வரை முஸ்லிம்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.  குஜராத் மாநில வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்திருந்த கலவரக்காரர்கள் முஸ்லிம்களையும் அவர்களின் வணிக நிறுவனங்களையும் சொத்துக்களையும் குறிவைத்துத் தாக்கினர்.  மோடியின் அலுவலகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இருந்த முஸ்லிம் வக்ஃப் போர்டு அலுவலகம்கூட தாக்குதலில் இருந்துத் தப்பவில்லை.  இவ்வளவையும் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது, அல்லது கலவரக்காரர்களுக்கு உதவி செய்தது. 

2002 இறுதியில் அசீமானந்தாவின் செல்வாக்கைப் பலப்படுத்துவதற்காக மோடி, டாங்க்ஸ் மாவட்டத்திற்கு வந்தார். அம்மாவட்டத்தில் ஒரு கோவிலும் ஆசிரமமும் கட்டும் வேலையை அசீமானந்தா தொடங்கினார்.  கட்டுமானப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ராமகதை இசை நிகழ்ச்சியில் மோடி வந்து கலந்து கொண்டார்.

2005: அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயலாளராக இருந்த மோகன் பகவத்தும் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருக்கும் இந்திரேஷ் குமாரும் டாங்ஸ் பகுதி கோவிலுக்கு வந்தார்கள்.  அவர்கள் அசீமானந்தாவையும் அவருடைய கூட்டாளி சுனில் ஜோஷியையும் சந்தித்தார்கள்.  அசிமானந்தாவின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் இந்த இரு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் அங்கீகரித்தார்கள்.  “நீங்கள் இதை சுனிலுடன் சேர்ந்து செய்யுங்கள். நாங்கள் நேரடியாக சம்பந்தப்பட மாட்டோம்.  ஆனால் இதைச் செய்வதில் நாங்களும் உங்களுடன் தான் இருக்கிறோம்” என ஊக்கமூட்டிச் சென்றார்கள்.  டிசம்பர் 2005-ல் கோல்வால்கர் நூற்றாண்டையொட்டி ஆர்.எஸ்.எஸ் ஒரு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள விருதை அசீமானந்தாவுக்கு வழங்கி கௌரவப்படுத்தியது.

2006 – அசீமானந்தாவின் ஏற்பாட்டில் கட்டப்பட்ட சபரி ஆலய வளாகத்தில் 2006 பிப்ரவரியில் கும்பமேளா ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த விழா ஹிந்து வலதுசாரி சக்திகளை ஒருங்கிணைப்பதாகவும் இருந்தது.  மூன்று நாள் நடந்த திருவிழாவில் பிரபலமான இந்துத்துவ தலைவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.  மொராரி பாபு, அசரம் பாபு, ஜயேந்திர சரஸ்வதி, சாது ரிதம்பரா போன்ற ஹிந்து ஆன்மீகத் தலைவர்களும், இந்திரேஷ் குமார், பிரவீன் தொகாடியா, அசோக் சிங்கல், கே.எஸ். சுதர்சன், மோகன் பகவத் போன்ற மதவாதத் தலைவர்களும் சிவராஜ்சிங் சௌஹான் போன்ற பிஜேபி அரசியல் தலைவர்களும் இதில் அடங்குவர்.  மோடியும் இதில் கலந்துக் கொண்டார் என்பதை தனியே சொல்லத் தேவையில்லை.  இந்த விழாவிற்கு குஜராத் அரசு 50 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறது.  இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்குப் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடிக்கத் தொடங்கின.

ஏப்ரல் 2006-ல் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாந்தேட் என்ற ஊரில் லக்‌ஷ்மண் ராஜ்கொன்டாவர் என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் வீட்டில் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.  இதில் அவருடைய மகன் உட்பட இரண்டுபேர் இறந்தனர்.  மூன்றுபேர் படுகாயமடைந்தனர்.  பட்டாசு தயாரிக்கும்போது வெடித்து விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.  ஆனால் அது பொய், அங்கு தயாரிக்கப்பட்டவை வெடிகுண்டுகள்தான் என்ற உண்மை வெகுசீக்கிரமே வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், வி.எச்.பி ஆகிய இந்துத்துவ மதவாத அமைப்புக்களைச் சார்ந்தவர்கள்.  இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இந்தக் குண்டுத் தயாரிப்புப் பயிற்சியில் சுனில் ஜோஷிக்கும் தொடர்புண்டு என சிபிஐ அறிக்கை சொல்கிறது.  இந்த சுனில் ஜோஷி அசிமானந்தாவின் கூட்டாளி.  “நீங்கள் இதை சுனிலுடன் சேர்ந்து செய்யுங்கள்.” என்று  மோகன் பகவத்தும் இந்திரேஷ் குமாரும் 2005 சந்திப்பின்போது அசிமானந்தாவுக்கு அறிவுறுத்தினார்களே, அதே சுனில் ஜோஷி.  

நாந்தேட் அசம்பாவிதத்திற்குப் பிறகு செப்டம்பர் 2006 முதல் செப்டம்பர் 2008 வரை ஐந்து இடங்களில் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடித்தன. அவற்றில் மொத்தம் 119 அப்பாவிகள் உயிரிழந்தனர்.

  • · செப்டம்பர் 2006-ல் மாலேகானில் குண்டு வெடித்தது.  31 பேர் அதில்      கொல்லப்பட்டனர்.
  • · பிப்ரவரி 2007-ல் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது.  68 பேர் அதில் கொல்லப்பட்டனர்.
  • · மே 2007-ல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
  • · அக்டோபர் 2007-ல் அஜ்மீரில் வெடித்த குண்டு 3 பேரை பலிவாங்கியது.
  • · செப்டம்பர் 2008-ல் மீண்டும் மாலேகானில் குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.


மேற்கண்ட குண்டு வெடிப்புகள் பெரும்பாலானவற்றில் தொடர்புடைய சுனில் ஜோஷி 27 டிசம்பர் 2007 அன்று மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.  அவரைக் கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் பா.ஜ.க இளைஞர் பிரிவு தலைவர்களில் ஒருவரான ஜித்தேந்திர ஷர்மா தேசிய புலனாய்வு அமைப்பினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அசீமானந்தா மீது சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் ஆகிய இடங்களில் மொத்தம் 82 பேரைக் கொன்ற குண்டு வெடிப்புகள் தொடர்பாக கொலை, கிரிமினல் சதி, தேசத்துரோகம், ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.  இன்னும் இரண்டு குண்டு வெடிப்புகள் தொடர்பான குற்றப்பத்திரிக்கைகளிலும் அவர் பெயர் இணைக்கப்பட்டிருக்கிறது என்றபோதிலும் இன்னும் முறைப்படி குற்றம் சாட்டப்படவில்லை.  

இந்தியக் ‘கூட்டு மனசாட்சிச் சட்டப்படி’ சிம் கார்டு வாங்கிக் கொடுத்தவர்கள், பேட்டரி வாங்கிக் கொடுத்தவர்களுக்கெல்லாம் மரண தண்டனை விதிக்க முடியும் என்றால் பயங்கரவாதத் தாக்குதல்களை திட்டமிட்டு தொடர்ச்சியாகக் குண்டுகளை வெடிக்கச் செய்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அசீமானந்தாவை விசாரித்த அத்தனை புலனாய்வு அமைப்புகளும் இந்தத் தாக்குதல்களைத் திட்டமிடுவதில் அவர்தான் முக்கியப் பங்காற்றியவர் என்று சொல்லியுள்ளன.  டிசம்பர் 2010-லும் ஜனவரி 2011-லும் அசீமானந்தா போதிய அவகாசம் எடுத்து, சுயமாகச் சிந்தித்துக் கொடுத்த சட்டபூர்வமான வாக்குமூலங்களில், தான் தாக்குதல்களைத் திட்டமிட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.  தான் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களைப் பற்றி அவருக்கு எந்த வருத்தமும் இல்லை;  மாறாக ஒரு திமிரான பெருமிதம் அவருக்கு இருக்கிறது.  அவருடைய குற்றச்செயல்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கக்கூடும்.  அதைப் பற்றியும் அவருக்குக் கவலை இல்லை.  தனக்கு எந்தத் தண்டனை வழங்கப்பட்டாலும் அது ‘ஹிந்துக்களை பொங்கி எழச் செய்யும்’ அன்று அவர் நம்புகிறார்.

இந்தியக் ‘கூட்டு மனசாட்சிச் சட்டப்படி’ சிம் கார்டு வாங்கிக் கொடுத்தவர்கள், பேட்டரி வாங்கிக் கொடுத்தவர்களுக்கெல்லாம் மரண தண்டனை விதிக்க முடியும் என்றால் பயங்கரவாதத் தாக்குதல்களை திட்டமிட்டு தொடர்ச்சியாகக் குண்டுகளை வெடிக்கச் செய்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அசீமானந்தா மாவட்ட அளவில் நடத்திய கலவரங்களையும் குண்டுவெடிப்புகள் மூலம் நிகழ்த்திய கொடூரச் செயல்களையும், குஜராத் கலவரங்களின்போது மோடி மாநில அளவில் நடத்திக் காட்டினார்.  ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி காவல்துறையை செயலிழக்கச் செய்து, இந்துத்துவ மதவாத சக்திகளை தூண்டி, சிறுபான்மையினர் மீது ஏவி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றதன்மூலம் ‘தான் ஹிட்லர் போன்ற சர்வாதிகரிகளுக்கு நிகரான ஒரு வலிமையான தலைவர்’ என்று நிரூபித்திருக்கிறார் அவர்.

மோடியைப் பிரதமர் பதவியில் அமர்த்துவதன்மூலம் இந்துத்துவ மதவாத சக்திகள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நிகழ்த்திய ‘சாதனை’களை நாடு முழுக்க நிகழ்த்துவது எளிதாகி விடும்.  இதனால் பாதிக்கப்படப் போவது சிறுபான்மையினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சமூகத்தினரிடயே நிலவிவரும் நல்லிணக்கமும்தான்.

நன்றி: "மோடியின் ஆதரவு பெற்ற காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்"

-    இப்னு பஷீர்






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..