Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2)
Posted By:Hajas On 9/17/2013 4:21:59 AM

viagra

viagra lunchroomtasty.nl

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2)

 

1940 செப்டம்பரில், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய பாசிச நாடுகள் ஒன்றிணைந்து போர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. உலகம் முழுவதையும் மூவருமாக ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பதுதான் அவ்வொப்பந்தத்தின் ஒரே குறிக்கோள்.

ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டு, கிழக்கே சோவியத் தொடங்கி இந்திய எல்லை வரை உலகின் பாதியை ஜெர்மனியாகவோ ஜெர்மனியின் காலனியாகவோ மாற்ற நினைத்தார் ஹிட்லர். ஆஸ்திரியா, ரைன்லாந்து, மேற்கு போலந்து மற்றும் சோவியத்தின் ஸ்டாலின்கிராடு போன்ற பகுதிகளை ஜெர்மனியின் பூர்வீகப் பகுதிகள் என்று உரிமை கோரியது ஜெர்மனி. மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமித்து காலனிய நாடுகளாகவே வைத்திருக்க விரும்பினார். ஸ்லோவேக்கியா, குரோசியா மற்றும் உக்ரைன் போன்ற சில பகுதிகளில், உள்நாட்டு பாசிச சக்திகள் கேட்கிற பகுதிகளை அவர்களுக்கே அளித்து அங்கீகரித்தார். அப்பயணத்தினூடே யூதயினத்தை அழிப்பதையும் தனது குறிக்கோளாக அறிவித்துக் கொண்டும் முன்னேறியது ஹிட்லரின் நாஜிப்படை. யூதர்களை இனவழிப்பு செய்வது மட்டுமேயல்ல ஹிட்லரின் நோக்கம். கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத்தில் வாழ்கிற அனைத்து மக்களும் இனக்கலப்பில் பிறந்த ஸ்லாவியர்கள் என்றும் இனக்கலப்பை தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அதனாலேயே ஸ்லாவியர்களை இனவழிப்பு செய்வதையும் தனது லட்சியமாகக் கொண்டிருந்தார் ஹிட்லர். ஓரினம் மற்றொரு இனத்தோடு எவ்விதத் தொடர்பும் வைத்திருக்கக் கூடாது என்பது ஹிட்லரின் மிகமுக்கியமான கொள்கையாக இருந்தது. (இன்றைக்கும் உலகம் முழுக்க இயங்கிவரும் அதிதீவிர வலதுசாரிகள் ஹிட்லரை ஆதரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணம்).

சோவியத்தில் வாழும் மக்களனைவரும் இனக்கலப்பில் பிறந்த ஸ்லாவியர்கள் என்று தீவிரமாக நம்பிய ஹிட்லர், தான் சோவியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் மீறி ஆக்கிரமிப்பை தொடர்ந்தார். 30 லட்சம் பேர் கொண்ட ஜெர்மன் படை சோவியத் எல்லைக்குள் நுழைந்தது. கலப்பினங்களையும், பிற இனங்களையும் இனவழிப்பு செய்வதே தனது லட்சியம் என்று ஹிட்லர் அறிவித்திருந்தாலும் கூட, சோவியத்தின் பொருளாதார நகரங்களின் (மாஸ்கோ, ஸ்டாலின்கிராடு, பாக்கு) வளர்ச்சியினை திட்டமிட்டு சூறையாடவும், சோவியத்தில் குவிந்து/புதைந்துகிடக்கிற இயற்கை வளங்களையும் தனதாக்கிக் கொள்ளவும் துவங்கப்பட்ட ஆக்கிரமிப்புதான் அது என்பதனை பின்னாளைய வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

1941 இல் உக்ரைனை பிடித்துவிட்டு, கீவ் நகருக்குள் நடத்திய போரில், 5 லட்சம் சோவியத் மக்களை கொன்று குவித்துவிட்டது ஜெர்மன் படை. அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டவுடன், மீதமுள்ளோர் ஜெர்மன் படைக்கு சேவை செய்ய அடிமைகளாக பிடித்து வைக்கப்பட்டனர். உக்ரைனின் தோல்வி, சோவியத்திற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. நிலக்கரி, இரும்பு, எரிவாயு மற்றும் தாதுப்பொருட்கள் அனைத்தும் சோவியத்திலிருந்து ஜெர்மனியர்களால் திருடப்பட்டன. உக்ரைனை வீழ்த்திவிட்டு, ஜெர்மன் படைகள் அனைத்தும் சோவியத்தின் இதயமான மாஸ்கோவை நோக்கி முன்னேறின. ஜெர்மனியின் தாக்குதலை சோவியத் யூனியனால் நான்கு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று பிரிட்டனும் அமெரிக்காவும் நினைத்தன. இருப்பினும் போரில், சோவியத் உடனே தோற்றுவிடுவதை அவர்கள் விரும்பவில்லை. ஜெர்மனியும் சோவியத்தும் நீண்ட நாட்கள் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால்தான் இருவரும் மீளமுடியாத அழிவைச் சந்திப்பார்கள். அதனை பயன்படுத்தி உலக வல்லரசாகிவிடலாம் என்பது அமெரிக்காவின் கனவாக இருந்தது.

http://upload.wikimedia.org/wikipedia/commons/9/92/Harry-truman.jpg

“ஜெர்மனி வெல்வது போலிருந்தால் சோவியத்திற்கும், சோவியத் வெல்வது போலிருந்தால் ஜெர்மனிக்கும் நாம் உதவ வேண்டும். அவ்வாறு செய்தால்தான், இருவரும் பெருமளவில் செத்துமடிவார்கள்”

என்று அமெரிக்க செனட்டர் ட்ரூமன் வெளிப்படையாகவே பேசினார் (இதே ட்ரூமன் தான் ரூசுவல்டின் மறைவுக்குப் பின்னர் அமெரிக்க அதிபராகி, பனிப்போருக்கு வித்திட்டவர்) அதேவேளையில், போருக்குப் பின்னால் பிரிட்டன் மீண்டும் உலகையே காலனியாக்கி மிகப்பெரிய சர்வாதிகார நாடாகிவிடுமோ என்கிற அச்சமும் அமெரிக்காவிற்கு இருந்தது. அதனாலேயே தனது கீழிருக்கும் காலனி நாடுகளை விடுதலை செய்யவேண்டுமென்று பிரிட்டனிடம் கூறியது அமெரிக்கா. இந்தோனேசியாவை விடுதலை செய்யச் சொல்லி, அதே நெருக்குதலை நெதர்லாந்துக்கும் கொடுத்தது அமெரிக்கா. இந்தியா, இந்தோனேசியா போன்ற முக்கியமான நாடுகளை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று நினைத்திருந்தது அமெரிக்கா.

போருக்குப் போகலாமா? வேண்டாமா? என முடிவெடுப்பதற்கு முன்னாலேயே, போருக்குப் பின் ஒட்டுமொத்த உலகின் மீது அதிகாரம் செலுத்தப் போவது யார்? என்கிற போட்டி அமெரிக்காவிற்கும் பிரிட்டனிற்கும் உருவாகியது. ஆனால், பிரிட்டன் மீது ஜெர்மன் நடத்திய வான்வழித்தாக்குதல்களால் லண்டன் மாநகர் உட்பட பிரிட்டனின் பலபகுதிகள் பெரும்சேதத்திற்கு உள்ளாகின. அதனால் பிரிட்டன் நிலைகுலைந்து போயிருந்தது. அச்சூழலினை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. எப்படியாவது பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்றே, தானும் ஒரு சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டுமென்று விரும்பியது ஜப்பான். அதனால் உலக எண்ணை வளத்தில் பாதியளவிற்கு தன்னுள் வைத்திருந்த அமெரிக்கா, ஜப்பானுக்கு எண்ணை தரமறுத்தது. இந்தோனேசியா ஒரு எண்ணை வளமிக்க நாடென்பதால், அதனைப் பிடித்துவிட துடித்துக் கொண்டிருந்தது ஜப்பான். சீனா, மலேசியா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் என ஒவ்வொன்றாக ஆக்கிரமித்துக் கொண்டே, 1941 ஜூலையில் இந்தோசீனாவிற்குள் நுழைந்து ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தது ஜப்பான். இந்தோனேசியாவில் எண்ணையைத் தவிர, ரப்பர் போன்ற இயற்கை வளங்கள் குவிந்து கிடப்பதையும் மனதில் வைத்தே முன்னேறியது ஜப்பான்.

Japanese_attack_on_Pearl_Harbor,_Hawaiiஜப்பானுக்கு தடைபோடும் விதமாக, ஹவாய் அருகே பியர்ல் ஹார்பரில் தனது போர்க்கப்பல்களை நிறுத்தியிருந்தது அமெரிக்கா. உலகில் யாருமே எதிர்பாராத வண்ணம், 1941 டிசம்பர் 7 இல் பியர்ல் ஹார்பரில் அமெரிக்க கடற்தளத்தை கடுமையாக தாக்கியது ஜப்பான். 2500 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதுடன், அமெரிக்காவை அக்கடற்தளத்தில் செயலிழக்கவும் செய்தது.

மறுநாளே, அமெரிக்காவும் பிரிட்டனும் ஜப்பானுக்கு எதிரான போரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில், ஜெர்மனியும் அமெரிக்காவுக்கு எதிரான போரினை அறிவித்தது. ‘ஜப்பானை தோற்கடித்தால், வெறும் ஜப்பானை மட்டுமே வென்றதாக இருக்கும். ஆனால் ஜெர்மனியை வென்றால், உலகப்போரையே வென்றதாகிவிடும்’ என்று கருதிய ரூசுவல்ட், ஐரோப்பாவிலேயே கவனம் செலுத்தினார். ஜெர்மனியுடன் நேரடியாக போர்புரிவதை பெருமளவில் தவிர்த்திருந்தாலும், போரில் முன்னணியில் நிற்பது போன்ற தோற்றத்தை தருவதில் மட்டும் முனைப்புடன் செயல்பட்டது அமெரிக்கா.

இதனை நன்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜப்பான், உலகின் ஆறில் ஒரு பங்கு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு தொடர்ந்து கிழக்கே முன்னேறிக் கொண்டிருந்தது. தாய்லாந்து, மலேசியா, ஜாவா, போர்னியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், இந்தோனேசியா மற்றும் பர்மா வரை ஆக்கிரமித்தது. இவற்றில் பெரும்பாலான நாடுகளில், பிரிட்டன்-பிரான்சு-அமெரிக்கா போன்ற ஆதிக்க நாடுகளிலிருந்து தங்களை விடுவிக்க வந்தவர்கள் என்றே ஜப்பானியர்களை கருதி வரவேற்றார்கள். அதனால், ஆக்கிரமிப்பும் எளிதாகிப்போனது ஜப்பானுக்கு. இவற்றில் மிகப்பெரிய வெற்றியாக 1942 இல் சிங்கப்பூரில் பிரிட்டன் படைகளையே சரணடைய வைத்தது ஜப்பான்.

பிரிட்டனுக்காக போரிட்ட 55000 பிரிட்டிஷ்-இந்திய படைவீரர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். அவர்களில், 40000 பேர் காலனிய ஆதிக்க பிரிட்டன் மீதுள்ள கோபத்தினால், மனம்மாறி ஜப்பானுக்காக போரிடவும் சம்மதித்து விட்டனர். அதே வேகத்தில், ஜெர்மனியுடன் கைகோர்த்து இந்தியாவிற்குள் நுழைந்திருந்தால், இந்தியாவையே கூட அவர்கள் பிடித்திருக்கக்கூடும். சுபாஷ் சந்திரபோசின் படைகள் ஜப்பானின் உதவியுடன் பர்மா வழியாக ஊடுருவி முயற்சி செய்தும் பார்த்தன. ஆனால் இரண்டாம் உலகப்போர் முழுக்க, ஜப்பானும் ஜெர்மனியும் கூட்டாளிகள் போல எதையுமே திட்டமிட்டுக் கொள்ளவில்லை என்பதும், பிரிட்டனுக்கு இந்தியாவைக் காலனியாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தாலும், ஜப்பானால் இந்தியாவைப் கைப்பற்ற முடியவில்லை.

ஜெர்மனியை நேருக்கு நேராக எதிர்க்க வேண்டிய நிலையில் இருந்த பிரிட்டன் சோவியத்துடன் நேரடியாக கைகோர்க்க விரும்பவில்லை. அமெரிக்காவும், பிரிட்டனும். ஜெர்மனியின் ஆதிக்கம் குறைவாக இருந்த தெற்கு இத்தாலியிலும், ஆப்பிரிக்காவிலும், மெடிட்டரேனியன் பகுதிகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலுமே கவனம் செலுத்தி ஜெர்மனியுடனான நேரடிப்போரில் இருந்து தப்பித்துக் கொண்டது. இந்தியாவின் மீதான ஆதிக்கத்தையும் வியாபாரத்தையும் தடையின்றி தொடரவும் இந்தப் பாதையினை பயன்படுத்திக் கொண்டது பிரிட்டன். இதனால் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை நம்பிமட்டுமே இப்போரில் வெல்வதென்பது கடினமான காரியம் என்பதனை ஸ்டாலின் நன்கு உணர்ந்து வைத்திருந்தார். சுயபலத்தோடு போரிடுவது மட்டுமே அப்போதைய ஒரே வாய்ப்பாக இருந்தது சோவியத்திற்கு. ஜப்பானும் சீனாவை ஆக்கிரமிப்பதில் தீவிரம் காட்டியதால், ஸ்டாலின் தன்னுடைய முக்கியமான படைத்தளபதி மார்ஷல் சுகோவை படைகளுடன் மாஸ்கோவிற்கு வருமாறு பணித்தார். சுகோவின் படைகளின் வீரத்தால் 4 லட்சம் ஜெர்மானிய படைகள் வீழ்த்தப்பட்டன. அதே வேளையில் 900 நாட்களாக நடைபெறும் கடுமையான சண்டையின் காரணமாக 10 லட்சம் மக்களை இழந்த பின்னும், ஜெர்மனிக்கு ஸ்டாலின்கிராடு என்னும் பகுதியினை விட்டுத்தராமல் போராடின சோவியத் படைகள்.

திணிக்கப்பட்ட போரினை எதிர்கொள்கிற வேளையில், வளர்ந்து வரும் சோவியத்தின் பொருளாதாரமும் சீரழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தது சோவியத். மிகப்பெரிய பொருளாதார மற்றும் தொழில் நகரமான மாஸ்கோவைச் சுற்றி போர்ச்சூழல் நிலவியதால், ஒரு கோடி  மக்களை மிக விரைவாக சோவியத்தின் கிழக்குப் பகுதிக்கு இடம் பெயர வைத்து, அங்கே இரண்டாவது பெரிய தொழில் நகரை உருவாக்கி, பொருளாதாரத்தை வீழாமல் பார்த்துக் கொள்ள முடிவு செய்தது சோவியத் அரசு. 2000 தொழிற்சாலைகள் அங்கே புதிதாக உருவாக்கப்பட்டன. ஏரளமான வீடுகள் கட்டப்பட்டன. இதனால் விரைவிலேயே உற்பத்தியில் ஜெர்மனியையும் மிஞ்சியது சோவியத். ஜெர்மனியை சமாளிக்க 40,000 T – 34 வகை போர் டாங்குகளும், 50,000 போர் விமானங்களும், ஜெர்மன் தரத்தை விடவும் சிறந்ததாக தயாரிக்கப்பட்டன. இவையனைத்தும் நிகழ்ந்தது இரண்டே ஆண்டுகளில். அம்மக்களின் அர்ப்பணிப்பும், தேசப்பற்றும் மிகப்பெரிய பங்காற்றின.

கிழக்கே தொழிற்சாலைகளை உருவாக்கி பொருளாதாரத்தை மேன்படுத்திக் கொண்டே மேற்கே ஜெர்மனியுடனான போரிலும் போராடிக் கொண்டிருந்தது சோவியத். பயிற்சி பெற்ற போர் படைகள் தவிர சாதாரண மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கு ஜெர்மன் படைகளுடன் போராடினர். அவர்களில் மட்டும் 40 லட்சம் முதல் 80 லட்சம் வரையிலான உக்ரேனியர்களும், 25 லட்சம் பெலேரசிய மக்களும் ஜெர்மன் படையினரால் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்ட நகரங்களும், 9000-க்கும் மேற்பட்ட கிராமங்களும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டன .

இப்படியாக லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தாலும், அம்மக்களின் போராட்ட குணம் காரணமாக ஹிட்லரின் ஜெர்மன் படையினரால் சோவியத்திற்குள் மேலும் முன்னேற முடியவில்லை. அதே இடத்திலயே பல மாதங்களாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.எப்படியாவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாஸ்கோவைக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதே நாஜிப்படைகளின் குறிக்கோளாக இருந்தது. தெற்கு சோவியத்தில் பாக்கு பகுதிகளைச் சுற்றி இருக்கும் எண்ணெய் வளத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டால், எண்ணை வளமும் கிடைக்கும், சோவியத்தையும் வலுவிழக்கச் செய்ய முடியும் என நினைத்து, ‘பாக்கு’ நகரை நோக்கி ஜெர்மன் படைகள் திரும்பின. எண்ணை வளமிக்க பாக்குவை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதற்காக சோவியத் மிகக் கடுமையாக போரிட்டது. ஒட்டுமொத்த இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும், பிரிட்டனும், இழந்த படைவீரர்களின் எண்ணிக்கையை விட, அதிக அளவில் பாக்குவில் மட்டுமே பறிகொடுத்தது சோவியத். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சோவியத் படைகளும் 2 லட்சம் மிகச்சிறந்த ஜெர்மனிய படைகளும், எண்ணிலடங்கா அப்பாவி மக்களும் உயிரிழந்தனர். மீதமுள்ள ஜெர்மன் படைகள் அனைத்தும் சோவியத்திடம் சரணடைந்தது. பாக்கு, ஸ்டாலின்கிராடு, குர்ஸ்க் என ஓவ்வொன்றாக போர்ச் சூழலிலிருந்து மீண்டு அமைதிக்கு திரும்பத் துவங்கின. உலகை ஆக்கிரமிக்கிற எண்ணத்தோடு வெகு விரைவாக முன்னேறிக் கொண்டிருந்த ஜெர்மன் போர் பூதத்தின் பயணம் தடுக்கப்பட்டது.

போரின் மிக முக்கியமான ஆண்டுகளில் எப்போதும் குறைந்தது 200 ஜெர்மன் படைகுழுக்களுடனாவது போரிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது சோவியத். ஆனால் அமெரிக்கவும், பிரிட்டனும், இணைந்தே வெறும் 10 ஜெர்மன் படைகுழுக்களுடன் தான் போரிட்டுக் கொண்டிருந்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அனைத்தும் இணைந்து, ஒட்டுமொத்தப் போரிலும் 10 லட்சம் ஜெர்மன் படையினரையே வீழ்த்தினர். மாறாக சோவியத் மட்டும் தனியாக 60 லட்சம் ஜெர்மன் படைகளை வீழ்த்தியது.

இரண்டாம் உலகப்போரை வென்றதே அமெரிக்கா தான் என்கிற மிகப்பெரிய பரப்புரை இன்று வரை செய்யப்பட்டு வந்தாலும், உண்மையில் சோவியத்தும் அத்தேசத்தின் மக்களும் தங்களுடைய வீரத்தினால் பெற்றுதந்த வெற்றியே அது என்பதை தீவிர வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.

முந்தைய பாகம்: சொல்லப்படாத அமெரிக்க வரலாறு 1

(தொடரும்…)

http://maattru.com/untold-history-of-america-2/




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..