Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1)
Posted By:Hajas On 9/17/2013 4:16:25 AM

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1)


1945 இல் அமெரிக்காவின் சங்க்ரே டி கிரேஸ்டோ மலைப்பகுதியில் ஒரு கட்டிடத்தில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விடியற்காலைப் பொழுதினை பதற்றத்துடன் எதிர்நோக்கியிருந்தனர். விஞ்ஞானி ஒப்பன்ஹைமரின் தலைமையில் மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய அணுவாயுதத்தைப் பரிசோதித்த நாள்தான் அது. அப்பரிசோதனைக்கு “டிரினிடி” என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேவேளையில், அவ்விடத்திற்கு சில மைல் தூரத்தில் விஞ்ஞானிகள் குழுவின் கண்காணிப்பில், பிரிகேடியர் ஜெனரல் லெஸ்லி க்ரோவ்சின் தலைமையில் அமெரிக்காவின் போர் தலைமையகம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. சூரியனை விட மிகப்பெரிய ஒளியினை எழுப்பி, காலை 5 மணி, 29 நிமிடங்கள், 45 வினாடிக்கு உலகின் முதல் அணுகுண்டு பரிசோதிக்கப்பட்டது.

“No I am become death, the destroyer of worlds”

 

என்கிற பகவத் கீதையின் வரிகளை நினைவுகூர்ந்து பரிசோதனைச் செய்தியினை வெளியிட்டார் ஒப்பன்ஹைமர். இன்றைக்கு முழுமையான இராணுவ அரசாக பரிணமிக்கும் அமெரிக்காவின் பயணத்திற்கு அன்றைய அணுகுண்டு பரிசோதனை மிகப்பெரிய அடிக்கல் நாட்டுவிழாவாக இருந்தது.

வேறுவழியில்லாமல் மிகப்பெரிய தயக்கத்துடனேயே இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் மீது அமெரிக்காஅணுகுண்டு வீசியதாக காலம் காலமாக உலகமக்களிடையே பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அதற்குப் பல ஆண்டுகள் முன்னாலேயே, தன்னுடைய உலக வல்லரசுக் கனவிற்காக அணுகுண்டு தொடர்பான ஆய்வினை தொடங்கிவிட்டது அமெரிக்கா. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற இந்த 70 ஆண்டுகளில், அமெரிக்கா தன்னுடைய அரசியலை உலக அரங்கில் எப்படியெல்லாம் நடத்தியிருக்கிறது என்கிற வரலாறு ஏறத்தாழ பெருவாரியான மக்களுக்கு சொல்லப்படாத கதைகள்தான். அவற்றை தமிழில் ஆவணப்படுத்த வேண்டுமென்ற ஆவலில் எழுதப்படுகிற தொடர்தான் இது. இதற்காக ஆலிவர் ஸ்டோன் எழுதிய “Untold stories of United States” என்கிற புத்தகத்தையும், அதனையொட்டி அவர் இயக்கிய தொலைக்காட்சித் தொடர்களையும், திரைப்படங்களையும், இன்னும் ஏராளமான கட்டுரைகளையும், வரலாற்று ஆவணங்களையும் மூலமாக வைத்துக்கொண்டு எழுதப்படுகிற தொடரிது.

இரண்டாம் உலகப்போர்:

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஜெர்மனிய நாசிசத்தையும், இத்தாலிய பாசிசத்தையும், ஜப்பானிய இராணுவமயத்தையும் ஒழித்துக்கட்டிய ஒரு “நல்லபோர்” என்றுதான் இரண்டாம் உலகப்போர் குறித்து வரலாறாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், 3 கோடி சோவியத் மக்களும், 1-2 கோடி சீன மக்களும் 60 லட்சம் யூதர்களும், 60 லட்சம் ஜெர்மனியர்களும், 30 லட்சம் யூதரல்லாத போலந்து மக்களும், 25 லட்சம் ஜப்பானியர்களும், 15 லட்சம் யூகோஸ்லாவியர்களும், 2.5-5 லட்சம் பிற நாட்டவர்களும் (ஆஸ்திரியா, பிரிட்டன், பிரான்சு, இத்தாலி, ஹங்கேரி, ரோமேனியா, அமெரிக்கா) உயிரிழந்த மிகமோசமான போர்தான் இரண்டாம் உலகப்போர். முதல் உலகப்போர் போன்றல்லாமல், மெதுவாகவும் படிப்படியாகவும் துவங்கியது இரண்டாம் உலகப்போர்.

1931 இல், ஜப்பானின் குவாண்டங் படைகள் சீனாவின் மஞ்சூரியா பகுதியில் குண்டுகள் பொழிந்து சீனாவை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அதே வேளையில், முதல் உலகப்போரின் தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக, ஐரோப்பாவில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனி ஒரு போர் பூதமாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. 1935 இல் இத்தாலிய பாசிஸ்ட் முசோலினியின் ஆணைப்படி, எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தது இத்தாலி. ஜெர்மனி ஐரோப்பாவிலும், ஜப்பான் சீனாவிலும், இத்தாலி ஆப்பிரிக்காவிலும் நிகழ்த்திய ஆக்கிரமிப்புப் போர்களைக் கண்டு பலம் வாய்ந்த பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்சு நாடுகள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனை நன்கு அறிந்து கொண்ட ஹிட்லர், ரைன்லாந்தின் மீது படையெடுத்தார். (ரைன்லாந்து என்பது ஜெர்மனிக்கு மேற்கில் மத்திய ஐரோப்பாவிலிருக்கும் ரைன் நதியச் சுற்றியுள்ள பகுதிகள்). முதல் உலகப்போரின் முடிவில், ரைன்லாந்திற்குள் நுழையக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையினையும் மீறி ஆக்கிரமிப்பை நடத்தியிருந்தது ஜெர்மனி.

ரைன்லாந்திற்குள் படையெடுத்த அந்த 48 மணிநேரம்தான் என்னுடைய வாழ்க்கையிலேயே பதட்டமான நேரம். பிரான்சு மட்டும் அப்போது சிறு எதிர்ப்பு காட்டியிருந்தால், எங்களது வாலை சுருட்டிக் கொண்டு ஓடியிருப்போம்”

என்று பின்னாளில் அதனை ஹிட்லர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் போதும் இதேதான் நடந்தது. குடியரசு நாடாக மாறியிருந்த ஸ்பெயினில், சில மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தத் துவங்கியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. அதன் காரணமாக, அமெரிக்க அரசியலில் உயர்

பொறுப்பில் இருப்பவர்களிடமும், மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளிடமும் வெறுப்பை சம்பாதித்தது புதிய ஸ்பெயின் அரசு.

1936 ஜூன் மாதத்தில், ஸ்பெயின் மக்கள் குடியரசை கைப்பற்றி இராணுவ ஆட்சியமைத்த ஜெனரல் பிரான்கோவிற்கு அமெரிக்கா மறைமுக ஆதரவையும், ஹிட்லரும் முசோலினியும் பல்லாயிரக்கணக்கான படைகளை அனுப்பி நேரடி ஆதரவையும் வழங்கினர்.

நிலைமையினை சீர்செய்ய, சோவியத்தின் சார்பாக ஆயுதங்களையும் ஆலோசகர்களையும் ஸ்பெயின் அனுப்பி வைத்தார் சோவியத் அதிபர் ஸ்டாலின். ஆனால் பிரான்சோ, இங்கிலாந்தோ, அமெரிக்காவோ எவ்வித உதவியும் செய்யாமல் அமைதிகாத்தன. ரூசுவல்ட் தலைமையிலான அமெரிக்க அரசு, ஸ்பெயினில் யாருக்கும் உதவக் கூடாது என்ற உத்தரவிட்டது. அதைமீறி, ஜெனரல் மோட்டார்ஸ், பாயர்ஸ்டோன் மற்றும் அமெரிக்காவின் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் பலவும் ஸ்பெயினின் பாசிச இராணுவத்திற்கு டிரக்குகள், டயர்கள், மற்றும் இதர போர் ஆயுதங்கள் வழங்கி உதவின. டெக்சகொ எண்ணை நிறுவனம் ஒரு படி மேலே சென்று, ஸ்பெயினின் பிரான்கோ அரசிற்கு தேவையான அளவு எண்ணை எரிபொருளை கடனாக தருவதாகவும், கடனை எப்போது வேண்டுமானாலும் திருப்பி செலுத்தலாம் என்றும் அறிவித்தது. விவரமறிந்த ரூசுவல்ட், டெக்சகொ எண்ணை நிறுவனத்திற்கு அபராதம் விதித்ததும், பின்னாளில் அதே நிறுவனம் ஹிட்லருக்கு தொடர்ந்து எண்ணை வழங்கியதும் வரலாறு.

அமெரிக்காவிலிருந்து 2800 பேர் கொண்ட கம்யூனிஸ்ட் போராளிக்குழு ஒன்று ஸ்பெயின் சென்று பாசிச பிராங்கோ இராணுவத்தை எதிர்த்துப் போராடியது. ஆனால், அமெரிக்க பெருமுதலாளிகள், ஹிட்லரின் இராணுவம், பாசிச பிரான்கோ இராணுவம் போன்ற ஆயுத, பண பலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் 1939 இல் ஸ்பெயின் குடியரசு வீழ்ந்தது. ஜனநாயகமும், குடியரசும் நிலைக்க வேண்டுமென்று விரும்பிய 1 லட்சம் ஸ்பெயின் நாட்டு மக்களையும், உதவ வந்த 5000 அயல்நாட்டு தன்னார்வலர்களையும் கொன்று புதைத்து, அமைதியைத் திரும்பவிடாமல் பார்த்துக் கொண்டது பிரான்கோவின் பாசிச இராணுவம்.

 

ஸ்பெயின் உள்நாட்டுபோரின் போது அமெரிக்கா எடுத்த முடிவு மிகத் தவறானது என்று பின்னாளில் 1939 இல் அமெரிக்க அதிபர் ரூசுவல்டே கேபினட் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஸ்பெயின் போரிலிருந்தும், தனது பலத்தை பெருக்கிக் கொண்டது ஜெர்மனி இராணுவம்.

ஹிட்லரின் நாஜிப்படைக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டுமென்று ஸ்டாலின் பல வருடங்களாக விடுத்த வேண்டுகோளை நிராகரித்துக் கொண்டே வந்தன மேற்குலக நாடுகள்.

1937 இல் வலிமை வாய்ந்த ஜப்பானியப் படைகள் சீனாவின் ஒவ்வொரு நகரையும் ஆக்கிரமித்துக் கொண்டே முழுவீச்சுடன் போராக மாற்றியிருந்தது. 1937 டிசம்பர், சீனாவின் நேன்சிங் பகுதியைப் பிடித்து, 2-3 லட்சம் அப்பாவி மக்களை கொன்றதோடல்லாமல், பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்தது ஜப்பானிய இராணுவம். விரைவில், 20 கோடி மக்கள் வாழ்ந்த கிழக்கு சீனாவை முழுவதுமாக தன்வசப்படுத்திவிட்டது ஜப்பான்.

1938 இல் ஆஸ்திரியா, செகஸ்லோவேக்கியாவின் ஒரு பகுதி என்று தனது ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தது ஹிட்லரின் ஜெர்மனி. 1939 மார்ச் மாதத்தில் செகஸ்லோவேக்கியாவை முழுமையாக தனதாக்கியது ஹிட்லரின் ஜெர்மனி. ஒவ்வொரு நாடாக ஆக்கிரமித்துக் கொண்டே, ஜெர்மனியென்னும் போர் பூதமொன்று தன்னை நோக்கி வருவதை உணர்ந்தது சோவியத் யூனியன். வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த சோவியத்தின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கும், போரினால் ஏற்படப்போகிற பேரழிவினை தடுக்கவும், தன்னால் இயன்றவரை போரினை தடுக்கவே முயன்றார் ஸ்டாலின். போரில்லா சமூகத்தை அமைக்க, பிரிட்டன், அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எவையும், ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு வரத் தயாராக இல்லை. அதனால், தன்னை நெருங்கி வந்து கொண்டிருந்த ஜெர்மனியிடமே, சோவியத் ஒரு ஒப்பந்தத்தினை ஒருங்கிணைத்து கையெழுத்திட்டது. ஜெர்மனியோ, சோவியத்தோ ஒருவரை ஒருவர் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதுதான் அவ்வொப்பந்தத்தின் சாராம்சம். 

ஒப்பந்தம் போட்ட இரண்டே வாரத்திற்குள், அதனை மீறிக்கொண்டு போலந்திற்குள் நுழைந்தன ஹிட்லரின் படைகள். பிரிட்டனும், பிரான்சும் விழித்துக் கொண்டு, போலந்துடன் இணைந்து ஹிட்லரை எதிர்த்து நின்றன. சோவியத்தும் போலந்திற்குள் நுழைந்து, தன்னுடைய எதிர்ப்பினைக் காட்டி, எஸ்டோனியா, லத்வியா, லித்துவேனியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் நுழைந்தது.

இரண்டாம் உலகப்போரும் ஏறத்தாழ துவங்கிற்று….

எதையும் கண்டுகொள்ளாமல், தன்னுடைய ஆக்கிரமிப்பை டென்மார்க், நார்வே, ஹாலந்து, பெல்ஜியம் என தொடர்ந்தது ஹிட்லரின் ஜெர்மனி. அந்நாடுகளின் தேசிய இராணுவங்கள் எல்லாம் பலம்பொருந்திய ஜெர்மன் இராணுவத்துடன் மோதமுடியாமல் பின்வாங்கின. மிக அருகாமையிலிருந்த பிரான்சும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை.

மேற்கு ஐரோப்பாவில் எல்லா நாடுகளையும் பிடித்த பின்னர் ஜெர்மனியின் பார்வை இங்கிலாந்தின் பக்கம் திரும்பியது. இங்கிலாந்தைப் பிடித்துவிட்டாலோ, பணியவைத்துவிட்டாலோ, அதன் பின்னர் சோவியத்தை மிரட்டுவது எளிதாகிவிடும் என்பது ஹிட்லரின் கணக்கு. இங்கிலாந்தை தாக்கியதற்கு இதனைவிடவும் முக்கியமான மற்றுமொரு காரணமுமிருந்தது. இங்கிலாந்தை பிடித்துவிட்டால், இந்தியா உட்பட அதன்வசமுள்ள ஒட்டுமொத்த காலணிகளும் தன்வசமாகிவிடும் என்றும் கணக்குப் போட்டது ஜெர்மனி.

ஆனால், வான்வழியாக பிரிட்டனைத் தாக்குவதா அல்லது கடற்படையினை வீழ்த்துவதா, அல்லது பிரிட்டன் நகரங்களை குண்டுபோட்டு அழிப்பதா என்பதில் ஹிட்லருக்கு இருந்த குழப்பங்களால், பிரிட்டனை வெற்றி கொள்ள முடியாமல் திரும்ப வேண்டியதாயிற்று.

அமெரிக்கா இப்போரிலிருந்து தள்ளியே இருக்க விரும்பியது. 1940 இல் நடந்த தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட முடிவு செய்த ரூசுவல்ட், “அமெரிக்காவிலிருந்து ஒருவர் கூட அயல்நாட்டுப் போர்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள்” என்ற வாக்குறுதியையே அளித்தார்.

(தொடரும்…)

 

இபா.சிந்தன்



General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..