Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (நிறைவு)
Posted By:Hajas On 5/21/2013

நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!

(நிறைவு)         

கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.

 

 ( தொடர்- 1 ),  ( தொடர்- 2 )  , ( தொடர்- 3 ) , ( தொடர்- 4 ) , ( தொடர்- 5 ), ( தொடர்- 6

வரலாற்றுச்சிறப்பு மிக்க மஸ்ஜிதுல்குபாவையும்,அதை எம்பெருமானார்(ஸல்)அவர்கள் உருவாக்கிய விதத்தையும் தற்போதைய அதன் செழிப்பையும் ஆச்சரியக்குறியோடு யோசித்தவனாகவே மஸ்ஜிதுல்குபாவை விட்டு தெற்குப்பகுதி வழியாக வெளியேறினேன்.

 

வெளியேறியதும் நான் கண்ட காட்சியும் தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிவாசல்களில்  கண்ட காட்சியின் அமைப்பும் ஒரேமாதிரியாக இருந்ததை நினைத்து ஆச்சரியப்பட்டேன்!!!!சுப்ஹானல்லாஹ்..........

 

பள்ளியின் தெற்குப்பகுதி வாசலிலிருந்த இரண்டு பக்கமும் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்யப்படும் மையவாடி அமைந்திருந்ததை கண்டதும் ஆச்சரியப்பட்டேன்.

 

காரணம் இதேபோன்ற அமைப்பில்தான் நமது தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிவாசல்களின் அமைப்பும் இருக்கிறது.மாஷா அல்லாஹ்..

 

எனதருமை சொந்தங்களே!இன்ஷா அல்லாஹ்...இனியொருமுறை நீங்கள் மதீனாசென்றால் கண்டிப்பாக மஸ்ஜிதுல்குபாவிற்கு போய் பள்ளியின் அமைப்பை நிதானமாக கவனியுங்கள்.

 

மஸ்ஜிதுல்குபாவின் தெற்குப்பகுதியில் இருந்து வெளிபுறத்தை பார்த்தால் நமது ஊரில் இருப்பதை போன்ற பிரம்மை ஏற்படும்.

 

தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் பழமைவாய்ந்த தொழுகைப்பள்ளிகளின் தோற்றங்கள் நபிகளாரின் காலத்து வாழ்க்கைச்சூழலை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

 

நான் மஸ்ஜிதுல்குபா பள்ளியின் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்தவர்களின் ஜியாரத்தை முடித்துவிட்டு,

 

 பள்ளியின் வராண்டாவில் மதீனத்து மக்கள் தங்களது வீட்டிலேயே தயார் செய்யும் பிடிமாவு டப்பா ஒன்று வாங்கினேன்.அதன்சுவை மிகவும் அற்புதம்.

 

நமது ஊரில் தாய்மார்கள் அரிசிமாவு,முட்டை,நெய்,கருப்பட்டி இவற்றை கொண்டு பிடிமாவு செய்து தருவார்கள்.இவை உடலுக்கு வலிமையை கொடுக்கும் சிறந்த உணவாகும்.

 

இன்றைய காலத்தில் நமது பெண்கள் அதையெல்லாம் மறந்துவிட்டாலும்,மதீனத்து மக்கள் மறக்கவில்லை.

 

அரிசிமாவு,பேரீத்தம்பழம்,சர்க்கரை,இவற்றால் பிடிமாவு செய்து அவர்களும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் அந்த சத்தான உணவை பறிமாறும் உணர்வுகளுக்கு கண்ணியம் செய்யும் வகையில்தான் நானும் வாங்கினேன்.

 

இந்த உணவை ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும்,மீண்டும் சாப்பிடத்தூண்டும் மாஷா அல்லாஹ்..

 

இப்போது மஸ்ஜிதுல்குபாவிலிருந்து மீண்டும் எம்பெருமானாரை நோக்கிய எனது பயணம் தொடர்கிறது...

 

திங்கட்கிழமை மஸ்ஜிதுல்குபா வந்துசேர்ந்த (ஸல்)அவர்கள் ஐந்தாவது நாளான வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மதீனாவை நோக்கிய தமது பயணத்தை தொடர்ந்த நிகழ்வுகள் என் உள்ளத்தில் இன்ப ஊற்றாய் பெருக்கெடுக்கிறது.

 

நபி(ஸல்)அவர்கள் மஸ்ஜிதுல்குபாவிலிருந்து மதீனாவை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும்போதுஸாலிம் இப்னு அவ்ஃப் கிளையினர் வசிக்கும் இடம் வந்தபோது ஜுமுஆ” தொழுகைக்கான நேரமும் ஆகிவிட்டதால் ‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்து நபி (ஸல்) ஜுமுஆ தொழுகை நடத்தினார்கள். 

 

(அந்த இடத்தில் இன்று பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது) மொத்தம் நூறு நபர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது) 

 

ஜுமுஆ தொழுகைக்குப் பின்பு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு, மதீனாவிற்குள் நுழைந்தார்கள். இதற்கு முன் ‘எஸ்ப்’ என்று பெயர் கூறப்பட்டு வந்த அந்த நகரம் அன்றிலிருந்து ‘மதீனத்துர் ரஸுல்’ - இறைத்தூதரின் பட்டணம்- என்று அழைக்கப்பட்டது.

 

இதையே சுருக்கமாக இன்று ‘அல்-மதீனா’ என்று கூறப்படுகிறது. 

 

நபி (ஸல்) மதீனாவிற்குள் நுழைந்த அந்நாள் அம்மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த நாளாக இருந்தது.

 

 மதீனாவின் தெருக்களிலும், வீடுகளிலும் இறைப்புகழும், இறைத்துதியும் முழங்கப்பட்டன. அன்சாரிகளின் சிறுமிகள் மிக ஆனந்தத்துடன் சில கவிகளைப் பாடி குதூகலமடைந்தனர்.

 

“நமக்கு முழு நிலா தோன்றியது.

ஸனியாத்தில் விதா என்னும் மலைப்பாங்கான இடத்திலிருந்து,

அல்லாஹ்வுக்காக அழைப்பவர் அழைக்கும்போதெல்லாம்

நாம் நன்றி செலுத்துவது கடமையாயிற்று.

எங்களுக்கு அனுப்பப்பட்டவரே!

பின்பற்றத் தகுந்த மார்க்கத்தைத்தான் கொணர்ந்தீரே! ”

 

அன்சாரிகள் மிகுந்த செல்வ செழிப்புடையவர்களாக இல்லையென்றாலும் நபி (ஸல்) அவர்களின் மீது அவர்கள் வைத்திருந்த பிரியத்தினால் ஒவ்வொருவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டில்தான் தங்கவேண்டுமென ஆசைபட்டனர்.

 

 ஒவ்வொருவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டைக் கடந்து செல்லும்போது நபியவர்களின் வாகனக் கயிற்றை பிடித்துக்கொண்டு “அல்லாஹ்வின் தூதரே! பாதுகாப்பும், ஆயுதமும், படைபலமும், வீரர்களும் நிறைந்த எங்களிடம் வந்துவிடுங்கள்” என்று கூறினார்கள். 

 

ஆனால், நபி (ஸல்) தன்னை அழைத்தவர்களிடம் “வாகனத்திற்கு வழிவிடுங்கள். அது பணிக்கப்பட்டுள்ளது” என்று கூறிக்கொண்டே வந்தார்கள். 

 

நபி (ஸல்) அவர்களின் வாகனம் தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தது. இறுதியில், தற்போது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அமையப் பெற்றிருக்கும் இடத்தில் மண்டியிட்டுக் கொண்டது. ஆனால், நபி (ஸல்) அதிலிருந்து இறங்கவில்லை.

 

 பின்பு சிறிது நேரத்தில் அந்த ஒட்டகம் எழுந்து சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தது பின்பு முதலில் மண்டியிட்ட அதே இடத்தில் மீண்டும் வந்து மண்டியிட்டு அமர்ந்தது.

 

தங்கள் ஒட்டகத்திலிருந்து நபி (ஸல்) இறங்கினார்கள். மேலும், அந்த இடம் நபி (ஸல்) அவர்களின் தாய்மாமன்களாகிய நஜ்ஜார் கிளையினருக்கு சொந்தமானதாகும். 

 

நபி (ஸல்) அவர்களின் விருப்பத்திற்கேற்ப அல்லாஹ் அவர்களின் தாய்மாமன்களின் வீட்டிலேயே தங்குவதற்கு அருள் புரிந்தான். 

 

நஜ்ஜார் கிளையினரில் ஒவ்வொருவரும் நபி (ஸல்) அவர்களிடம் ‘நீங்கள் எங்களது வீட்டில் தங்க வேண்டும்’ என்று அழைத்துக் கொண்டிருக்கையில் அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்கள் மட்டும் நபி (ஸல்) அவர்களின் பயணச் சாமான்களை தங்களது வீட்டிற்குள் எடுத்துச் சென்று விட்டார்கள். 

 

இதைப் பார்த்த நபி (ஸல்) “மனிதன் அவனது சாமான்களுடன்தானே இருக்க முடியும்” என்று மற்றவர்களிடம் கூறினார்கள். அஸ்அத் இப்னு ஜுராரா நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார்கள். 

 

அவர் விருப்பப்படி நபி (ஸல்) அவர்களின் வாகனம் அவரிடம் இருக்க அனுமதிக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

 

அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) “நமது உறவினர்களின் வீடுகளில் எது நெருக்கமாக இருக்கிறது” என்று கேட்டார்கள். அதற்கு அபூ அய்யூப் “அல்லாஹ்வின் தூதரே! இதோ எனது வீடு. இதுதான் எனது வீட்டு வாயில்” என்று கூறினார்கள்.

 

 நபி (ஸல்) “சரி! எழுந்து சென்று படுக்கும் இடத்தை சரிசெய்யுங்கள்” என்று கூறினார்கள். “ரஸுலுல்லாஹ்வே! எல்லாம் தயார், அல்லாஹ்வின் பரக்கத்துடன் -அருள் வளத்துடன்- நீங்கள் இருவரும் எழுந்து வாருங்கள்” என்று அபூ அய்யூப் (ரழி) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

 

 

சில நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா (ரழி) அவர்களும் இரு மகள்கள் ஃபாத்திமா, உம்மு குல்தூம் மற்றும் உஸாமா இப்னு ஜைது, உம்மு அய்மன் ஆகியோர் மதீனா வந்தார்கள். 

 

இவர்களுடன் அபூபக்கர்(ரழி)அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அவர்களும் அபூபக்கர்(ரழி)அவர்களின்  குடும்பத்தாரையும் அழைத்து வந்தார்கள். இவர்களில் ஆயிஷா(ரழி) அவர்களும் இருந்தார்கள்.

 

நபி (ஸல்) அவர்களின் இன்னொரு மகள் ஜைனபுடைய கணவர் அபுல்ஆஸ் ஹிஜ்ரா செல்ல சந்தர்ப்பமளிக்காததால் ஜைனப் (ரழி) மதீனா வர இயலவில்லை. இவர்கள் பத்ர் போருக்குப் பின் மதீனா வந்தார்கள். (ஜாதுல் மஆது)

 

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: “நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அப்போது மதீனா அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் மிகுந்ததாக இருந்தது. மதீனாவிற்கு அருகிலுள்ள ‘புத்ஹான்’ என்ற ஓடையில் கலங்கிய நீர் ஓடிக்கொண்டிருந்தது.

 

மேலும், ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அபூபக்ர் (ரழி) , பிலால் (ரழி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. நான் அவர்களிடம் சென்று தந்தையே தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? பிலாலே தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? என்று கேட்டேன்.பொதுவாக அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால்,

 

“ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் கலந்திருக்க...

மரணமோ அவனது செருப்பு வாரைவிட மிகச் சமீபத்தில் இருக்கிறது”

 

என்ற கவிதையைக் கூறுவார்கள்.

 

பிலால் (ரழி) அவர்களுக்கு காய்ச்சலின் சூடு சற்று குறைந்தால் வேதனையுடன் குரலை உயர்த்தி,

 

“இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க,

அது போன்றதொரு பள்ளத்தாக்கில் ஓர் இராப்பொழுதையேனும் நான் கழிப்பேனா?

ம்மஜின்னா’ எனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா?

ஷாமா, தஃபீல் எனும் இரு மலைகள் எனக்குத் தென்படுமா?”

 

என்ற கவிதையைக் கூறுவார்கள்.

 

தொடர்ந்து ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் “இறைவா! ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபிஆ, உமையா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல், அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி விடுவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள். 

 

மேலும், “இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு!

 

 இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாவு, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ அருள் வளம் செய்! 

 

இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு!

 

 இங்குள்ள காய்ச்சலை ‘ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு மாற்றிவிடு!” என்று பிரார்த்தனை செய்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

 

அல்லாஹ்! நபி (ஸல்) அவர்களின் இந்த துஆவை ஏற்றுக் கொண்டான். ஒரு நாள் கனவில் தலைவிரிக் கோலமான கருப்பு நிறப்பெண் மதீனாவிலிருந்து வெளியேறி ஜுஹ்ஃபா சென்றடைந்ததைப் பார்த்தார்கள். 

 

இது மதீனாவிலிருந்து அந்த நோய் ஜுஹ்ஃபாவை நோக்கி வெளியேறிவிட்டது என்பதற்கான அறிவிப்பாக இருந்தது.

 

 அல்லாஹ்வின் அருளால் மதீனாவின் தட்பவெப்ப நிலையினால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்கள் முற்றிலும் சுகமடைந்தார்கள்.

 

எனதருமை மக்களே!கொடுமையான காய்ச்சலால் அவதிபட்டுக்கொண்டிருந்த மதீனத்து மக்களுக்கு கண்மணி(ஸல்)அவர்களின் வருகை நோய்தீர்க்கும் அருமருந்தாக இருந்ததை உலகம் உள்ளளவும் மதீனத்து மக்கள் மறக்கமாட்டார்கள் என்பதற்கு பெருமானாரின் மீதான அவர்களின் அன்பே போதுமானதாகும்.

 

நமதருமை நாயகம்(ஸல்)அவர்களின் மதீனத்து வருகையின் நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டே எம்பெருமானாரின் இல்லமான மஸ்ஜிதுன்னபவிக்கு வந்து சேர்ந்தேன்.

 

மீண்டும்(ஸல்)அவர்களை ஜியாரத் செய்துவிட்டு ஜன்னத்துல்பகீஃ சென்று சுவனவாசிகளையும் ஜியாரத் செய்தேன்.

 

பின்னர் பெருமானாரின் இடத்திலிருந்து வெளியேறி நான் தங்கிய வீட்டிற்கு வந்து எனது பொருட்களை எடுத்துக்கொண்டு தங்கியதற்கான வாடகையை கொடுக்கும்போதுதான் தெரிந்தது அந்த வீட்டின் உரிமையாளர் மதீனாவாசி என்று!

 

நானும் எனது குடும்பத்தாரும் அவரை விட்டு பிரியும்போது அவர் சொன்ன  வார்த்தையை பாருங்கள், 

 

மதீனத்து அரசரை காணவந்த உங்களுக்கு இடமளித்த எனக்கு துஆ செய்யுங்கள்.குறைகள் இருந்தால் மன்னியுங்கள்.

 

என்ற அவரது வார்த்தைகளில் இருந்த பண்புகள் நிச்சயம் எம்பெருமானாரால் கற்றுக்கொடுக்கப்பட்டதாகவே இருக்கவேண்டும்.

 

ஒவ்வொரு மதீனாவாசியும் தன்னைவிட அதிகமாக தாஹா நபியைதான் நேசிக்கிறார்கள் என்பதை பல்வேறு நிகழ்வுகள் எனக்கு உணர்த்தியது.

 

எம்பெருமானாரின் மீதான மதீனத்து மக்களின் அன்பு உதட்டில் உள்ளதல்ல,உள்ளத்து அன்பாகும்.

 

அதனால்தான் மதீனாவாசிகளை எம்பெருமானாரும் உள்ளத்தால் நேசித்தார்கள்.

 

அந்த உண்மையான நேசத்தின் அடையாளம்தான் மக்காவில் பிறந்த (ஸல்)அவர்கள் மதீனாவில் மறைந்து வாழ்கிறார்கள்!

 

ஆம்,மதீனத்து மக்களை விட்டு பெருமானாரையோ,பெருமானாரை விட்டு மதீனத்து மக்களையோ யாராலும் பிரிக்க முடியவில்லை!

 

மாநபி நேசித்த மாமதீனாவை நாமும் நேசிப்போம்!

 

(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம்)

 

அன்பிற்குரியவர்களே,எனது மதீனத்து பயணத்தின் அநுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருந்த tamil islamic media,nellai ervadi,mudukulathur,k-tic-group போன்ற இணைய தளங்களுக்கும்,

 

எனது அருமை சகோதரர்கள் மதிப்புக்குரிய மௌலவி கலீல்பாக்கவி,முதுவை ஹிதாயத்,பீர்முஹம்மது,ஹாஜா ஆகியோர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும் துஆக்களையும் உரித்தாக்குகிறேன்.

 

எனது எழுத்தாற்றலின் வளர்ச்சிக்கு அனைவரும் துஆ செய்யுங்கள்!

 

இன்ஷா அல்லாஹ் ..நீங்கள் விரும்பினால் மிகவிரைவில் தாயிப் நகரத்தை நோக்கிய எனது பயண அநுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

 

உங்களின் மேலான கருத்துக்களை jahangeerh328@gmail.comஎன்ற மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.வஸ்ஸலாம்!




Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..