Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஆர்வப்படு; ஆதங்கப்படாதே!
Posted By:sohailmamooty On 12/7/2009

prednisolon tabletta

prednisolon tabletta

ஆர்வப்படு; ஆதங்கப்படாதே!     

ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் சுறுசுறுப்பானவனாக இருக்க வேண்டும். முழுப் பிரபஞ்சத்தின் முக்கியமான அங்கமாகிய முஸ்லிம், பிரபஞ்சப் பொருட்களிடம் காணப்படுகின்ற சுறுசுறுப்பான இயக்கத்தைத் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவனிடம் இயலாமையும் சோம்பலும் இருக்கக் கூடது. உத்வேகமான செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி ஒரு மனிதனை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டு சென்று விடக் கூடிய கொடிய விஷமே இயலாமையும் சோம்பலுமாகும். இவ்விரண்டும் கண்டிக்கத்தக்க பண்புகள் ஆகும். இவ்விரு குண இயல்புகளிலிருந்தும் தன்னைப் பாதுகாக்குமாறு அண்ணலார் (ஸல்) இறைவனிடம் பாதுகாவல் தேடியுள்ளார்கள்.

"யா அல்லாஹ்! இயலாமை, சோம்பல் முதலானவற்றிலிருந்தும்; உலோபித்தனம், கோழைத்தனம், தள்ளாமை போன்றவற்றிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், நஸாயி).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயலாமையைக் களைந்தெறிந்து விட்டு பயன் தரும் விவகாரங்களில் பேரார்வத்துடன் செயற்படுமாறு பணிக்கிறார்கள். இங்கு நபியவர்கள் பொதுவாக பயன் தரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கூறுகிறார்கள். அதாவது, பயன் தரும் விவகாரங்களை அவர்கள் கூறுபோடவில்லை. நேரடியாக மார்க்கத்துடன் தொடர்புறுகின்ற விடயங்களாக இருந்தாலும் சரி, உலக விவகாரங்களாக இருந்தாலும் சரி, அவற்றில் நலன் தரும் நன்மைகளும் பயன்களும் இருந்தால் அவற்றைப் பேரார்வத்துடன் எடுத்து நடந்திட வேண்டும்.

"அக்கால அப்பாஸிய அரண்மனைகளில் அரச கருமங்களில் ஈடுபட்ட அமைச்சர்கள் தமது அரச கருமங்களிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு சிறிதளவு அவகாசம் கிடைத்தாலும் கூட, தங்களது சட்டைப் பைக்குள் இருக்கின்ற புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தவறுவதில்லை.
குறிப்பாக, ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் இளைஞர்களும் மாணவர்களும் இவ்விடயத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். பெறுமதியான மணித்துளிகளை அவர்கள் நாசப்படுத்திடக் கூடாது. கல்வித் தேடல் என்பது (பர்ழான) கடமையாகும். இக்கடமையின் தொடக்க நிலை வாசிப்பும் எழுத்துமாகும். வாசிப்புப் பழக்கம் இல்லாத சமூகம் வெற்றியின் ஏணிப்படிகளை எட்டிப் பிடித்திட முடியாது.

இன்று வாசிப்புப் பழக்கம் மெல்ல மெல்ல வழக்கொழிந்து வருகிறது. எல்லாவற்றையும் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்கின்ற நிலையும் அவற்றோடு தங்களது தேடலை மட்டிட்டுக் கொள்ளும் போக்கும் தொடருகின்றது. சுயமான தேடல் என்பது பயனுள்ள விடயமாகும். அதனைக் கைவிட்டு பொன்னை விடப் பெறுமதியான நேரத்தை நாசமாக்குகின்ற ஒரு பரம்பரையை நாம் சந்திக்கிறோம்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களில் அநேகர் பரீட்சையில் சித்திபெறுவதற்காக வாசிக்கிறார்கள், மனனமிடுகிறார்கள். பரீட்சை முடிவுற்றதும் வாசிப்புக்கு விடைகொடுத்து அனுப்பி விடுகிறார்கள். எழுத்துக்கும் எழுத்துச் சாதனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த குர்ஆனைச் சுமந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்ற நிலை மட்டும் ஆரோக்கியமாக உள்ளது.

இன்று அரபு உலகைச் சேர்ந்த ஒரு மனிதன் ஒரு வருடத்திற்கு 1/4 பக்கம் வாசிக்கிறான். அதாவது 1/2 மணித்தியாலம் வாசிக்கிறான். ஆனால் ஒரு அமெரிக்கப் பிரஜை ஒரு வருடத்திற்கு 7 நூற்களை வாசித்து முடித்து விடுகின்றான். 1960 ம் ஆண்டுகளில் வாசிக்கத் தெரியாத சமூகம் என்று கேலி செய்யப்பட்டவர்களே அரபுகள். இன்று 1/4 பக்கம் வாசிப்பதானது வரவேற்கத்தக்க விடயமே.

1967 ம் ஆண்டு அன்றைய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயான் ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு யுத்த தந்திரோபாயங்களையும் வியூகங்களையும் விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவ்வாறு தெளிவுபடுத்தியது குறித்து அவர் விமர்சிக்கப்பட்டார். அப்பொது அவர் கீழ்வருமாறு கூறினார்:

"நான் யுத்த தந்திரோபாயங்களை ஏன் வெளியிட்டேன் என்றால், எனக்குத் தெரியும்; நிச்சயமாக அவற்றை அரபிகள் வாசிக்க மாட்டார்கள். அப்படி வாசித்தாலும் அவற்றை விளங்கி உள்வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு உள்வாங்கினாலும் அவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்த மாட்டார்கள்."

இஸ்லாத்தின் எதிரிகள் நமது பலவீனத்தை நன்குணர்ந்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நமது அறிவியல் பாரம்பரிய வரலாற்றை எடுத்து ஆராய்ந்தால் சுயமான தேடலுக்கான முன்மாதிரிகளைக் கண்டுகொள்ளலாம். இமாம் இப்னு ருஷ்த் அவர்கள் இரு சந்தர்ப்பங்களில் மாத்திரமே வாசிக்காது இருந்துள்ளார்கள். முதலாவது சந்தர்ப்பம் அவரது தாய் மறைந்த நாள். இரண்டாவது, அவர் திருமணம் செய்து மனைவியோடு இருந்த முதல் இரவு.

அக்கால அப்பாஸிய அரண்மனைகளில் அரச கருமங்களில் ஈடுபட்ட அமைச்சர்கள் தமது அரச கருமங்களிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு சிறிதளவு அவகாசம் கிடைத்தாலும்கூட, தங்களது சட்டைப் பைக்குள் இருக்கின்ற புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தவறுவதில்லை.

ஓர் அறிஞரை நோக்கி ஒருவர், "வாருங்கள்! சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்போம்" என்று கூறினார். அதற்கு அவ்வறிஞர், "சூரியனை நிறுத்தி விட்டு வாருங்கள். பேசிக் கொண்டிருக்கலாம்" என்று கூறினார்.

பயனுள்ள விவகாரம் என்பது நாவல்களையும் சிற்றின்ப வேட்கைக்குத் தீனி போடும் புத்தகங்களையும் வாசிப்பது என்று பொருளாகாது. மாறாக, சிந்தனைக்கு விருந்தாக அமையக்கூடிய, உள்ளத்தைப் பண்படுத்தக்கூடிய, நடத்தைகளை நெறிப்படுத்தக்கூடிய நல்ல நூல்களை வாசிப்பதே பயன் தரும் செயலாகும். வேலைப்பளுவால் நேரத்தை நிரப்புவதும் பயன் தரும் விடயமல்ல. ஓய்வும் மனிதனுக்கு இன்றியமையாத, பயன் தரும் அம்சமே. உடல் ஆரோக்கியம் பேண வியர்க்க வியர்க்க விளையாடுவதும் பயன் தருவதே. மணித்துளிகளை வீண் விளையாட்டுக்களாலும் கேளிக்கைகளாலும் பாவங்களாலும் தீமைகளாலும் நிரப்புவது பயன் தரும் விடயமாகாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உனக்குப் பயன் தரும் விடயங்களில் பேரார்வம் கொள். அல்லாஹ்வின் உதவியைப் பெற்றுக் கொள். எதையும் செய்ய இயலாது என்று இருந்து விடாதே. உனக்கு துன்ப துயரம் ஒன்று ஏற்பட்டால் "நான் இவ்வாறு செய்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமே" என்று கூறாதே! மாறாக, " அல்லாஹ் திட்டமிட்டு தீர்மானித்தது நடந்திருக்கிறது" என்று கூறு. ஏனெனில், இவ்வாறு செய்திருந்தால், அவ்வாறு செய்திருந்தால் என்ற வார்த்தை ஷைத்தானினது செயற்பாட்டுக்குரிய வாயிலைத் திறந்து விடும்." (ஸஹீஹ் முஸ்லிம்)
நாம் பயன்படுத்துகின்ற கருவிகள்கூட நமக்குப் பயன் தரவேண்டும். அக்கருவிகள் வாழ்க்கை வசதியை இலகுபடுத்தி செக்கன் கருவூலங்களைச் சேமிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை. அவ்விலக்கை நாம் அடையாவிட்டால், நாம் பயனற்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளோம் என்பதே அர்த்தமாகும். அது நபி வழியுமல்ல. உதாரணமாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசியை எடுத்துக் கொள்வோம். அதன் மூலம் இன்றைய இளைய தலைமுறை பயன்பெறுகிறதா? இதன் மூலம் நலனைவிட தீமையையே அது அதிகம் சம்பாதிக்கிறது.

நமது அன்றாட முக்கிய கடமைகள் முடிவடைந்து மணித்துளிகளைச் சேகரம் செய்து வைத்துள்ளோம் என்றால், அவற்றை எமது வாழ்விடத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றை அமைப்பதற்குப் பயன்படுத்தலாம். இது எமது எமது பொருளாதார நெருக்கடி நீங்குவதற்கு வழிகோலலாம்.

நாம் ஒரு பிரசார சமூகம் என்ற வகையில் மார்க்கத்தைக் கற்றல், அதனை எத்தி வைத்தல் என்பது நமக்கு ஈருலகப் பயன்களைப் பெற்றுத்தர வல்லது. இதுவே உச்ச பயனுள்ள செயலாகும்.

விரிந்த சிந்தனையோடு செயற்படுகின்றவர் எப்போதும் பயனுள்ள செயற்பாட்டுக்கான ஊட்டத்தை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், எமது வாழ்வை வரைந்தவன் அல்லாஹ். அவன் சகலவற்றையும் நன்கறிந்தவன். (மனிதனுக்குப்) பயனுள்ளவை; பயனற்றவை முதலானவற்றை வேறு பிரித்து அறியும் ஆற்றல் அவனுக்கே உள்ளது. நாம் பயனுள்ளவை எனக் கருதுகின்றவை சிலபோது பயனற்றவையாக மாறிவிடுகின்றன. பயனற்றவை என்று தூர விலக்கி வைப்பவை சிலபோது உச்ச பயனைத் தந்து விடுகின்றன. ஆகவே, இவ்விவகாரத்தில் அல்லாஹ்வைச் சார்ந்திருப்பதே சாணக்கியமானதாகும். அவனில் முழு நம்பிக்கை வைத்துச் செயற்படுகின்றபோது அவன் சிந்தனைத் தெளிவை எமக்குத் தருவதன் மூலம் துணைநிற்கிறான். செயற்படுத்துவதற்கான தேகாரோக்கியத்தைத் தருபவனும் அவனே!

பயன் தரும் செயற்பாடுகளைச் செய்ய முடியும் என்ற திடஉறுதி ஒருவருக்கு முதலில் தேவை. முடியாது, இயலாது, சிரம சாத்தியமானது முதலாம் பதப் பிரயோகங்கள் எமது வாழ்வைத் துவம்சம் செய்துவிடக் கூடாது. நமது ஆற்றலை, ஆளுமையை முழுமையாக வெளிக்கொணர்ந்து செயற்களத்தில் குதித்திடல் வேண்டும். தனது சக்திக்கு மீறிய ஒன்றைத் தனித்து நின்று செய்ய முடியாதென்றால் அதுவே இயலாமை. செய்ய முடியுமான ஒன்றைச் செய்யாமல் இருப்பது சோம்பல்தனம். பிறரின் உதவியோடு தனது உச்ச ஆற்றலைப் பயன்படுத்தி இயலாமையை இல்லாமலாக்கி முன்னேற வேண்டும். சோம்பல் நம்மிடம் அறவே இருக்கக் கூடாது. இவ்விரு இழி குணங்களும் நமது அன்றாட வாழ்வில் தேக்க நிலையைக் கொண்டு வந்து விடும். எனவேதான், அன்றாடம் தொழுகைக்குப் பின்னர் இவ்விரு பண்புகளிலிருந்தும் நபியவர்கள் பாதுகாவல் தேடச் சொன்னார்கள்.

நாம் நமது வாழ்வில் ஏற்படும் துன்ப துயரங்கள், தோல்விகளினால் மனம் உடைந்து போய்விடக் குடாது. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் எழுத்தை, அவனது தீர்மானத்தை ஆழமாக நம்பி வாழ்பவன். அவனது திட்டத்தை நூறு வீதம் நம்புகின்றவன். அது வெற்றி காணாதபோது துவண்டு விடக்கூடாது. அது தொடர்பாக அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது. தனது செயற்பாட்டை விரக்தியின் விளிம்புக்கு நகர்த்தி விடக் கூடாது. தனது திட்டத்தைவிடப் பன்மடங்கு பெரியதொரு திட்டம் இருக்கிறது என்பதை நம்பாதவன் அல்லது அதில் பலவீனமானவனே வெறும் கற்பனையில் சஞ்சரிப்பான், ஆதங்கப்படுவான், பிரலாபிப்பான். இறுதியில் ஷைத்தானுக்குக் களம் அமைத்துக் கொடுப்பான்.

அல்லாஹ்வின் திட்டத்தையும் தீர்மானத்தையும் முழுமையாக ஏற்று அங்கீகரித்து அதனையே முழுமையாக விசுவாசித்து வாழுபவன், தனது வாழ்வில் ஏற்படும் துன்ப துயரங்களும் கஷ்ட நஷ்டங்களும் தோல்விகளும் வெற்றிக்கான ஏணிப்படிகள் என்று நினைக்கிறான். சோதனைகள் அவனைப் பொருத்தமட்டில், தான் நடந்து வந்த பாதையில் அறியாமையால், தான் செய்த தவறுகளையும் சறுக்கிய இடங்களையும் சுட்டுகின்ற மைல்கற்கள் என்று கருதுகின்றான். அந்தப் பாதையில் இனி வரப்போகும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் என்று புரிந்து கொள்கிறான். தொடர்ந்தும் விவேகத்துடனும் விழிப்புணர்வுடனும் பயணிப்பதற்கான அபாய அறிவிப்புகள் என்று அவன் விளங்கிக் கொள்கிறான். இந்த நம்பிக்கையை அவன் தனது நாவினால் மொழிகின்றபோது அந்த நம்பிக்கை வலுப்பெறுகிறது. قدّرَ اللَّهُ مَا شاَءَ فعَلَ - (அல்லாஹ் திட்டமிட்டு தீர்மானித்ததே நிகழ்ந்தது).

பயனுள்ள விவகாரங்களில் ஈடுபடுகின்றவர்கள் முழு உற்சாகத்துடன், இடையிடையே நின்றுவிடாது பயணிக்க இறைத்தூதர் அருளிய கத்ர் பற்றிய ஆழமான நம்பிக்கை அவசியம். இந்த நம்பிக்கையில் பலவீனமடைந்தவர்கள் மார்க்கப் பணிகளிலிருந்தும் விடுபட்டு காணாமல் போய் விடுகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் தங்களுக்கென சிலக் கோடுகளைக் கிழித்துக் கொண்டு கற்பனை வானில் தனியாக சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்!.

நன்றி: - அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ்(இஸ்லாஹி)

http://www.satyamargam.com/1189

 




Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..